தினமணி கொண்டாட்டம்

சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் - 47: வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி...!

சாந்தகுமாரி சிவகடாட்சம்
"ஒரு பெரிய, அழகான ஆற்றின் நடுவில், நீ சோகமாக இருக்க முடியாது'
- ஜிம் ஹாரிசன் (Jim Harrison)

தமிழ்நாட்டை  தன் பிறப்பிடமாகக் கொண்டு, கங்கையைப்போல வற்றாத ஜீவ நதியாக பொங்கிப் புறப்பட்டு பாய்ந்து கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு பொருநை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பொதிகை மலையில் தோன்றி, வங்கக்கடலில் கலக்கும் இந்த ஆறு 70 மைல் நீளமுடையது.

தாமிரபரணி என்று ஏன் பெயர் பெற்றது என்பதற்கு தாமிரம் என்றால் காப்பர் (Copper) இதனோடு நீரோடை  அல்லது ஆறு என்ற பொருளைக் குறிக்கும் "வருணி' என்ற வார்த்தை சேர தாமிரபரணி ஆயிற்று என்கின்றனர் சரித்திர வல்லுநர்கள். தாமிரபரணி உருவாகும் இடத்தில் செம்மண் நிறைந்து இருப்பதினால்,  அந்த வண்ணம் கொண்டு வரும் ஆற்றுக்கு இது பொருத்தமான பெயராகவே அமைந்துவிட்டது.

இதிகாசங்களும், புராணங்களும் தாமிரபரணி ஆற்றின் பெருமையைப் புகழ்ந்து பாடியுள்ளன.  திருநெல்வேலி ஸ்தல புராணத்தில் அகஸ்தியரின் கமண்டல நீரிலிருந்து உருவானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

சிவன், பார்வதியின் திருக்கல்யாணத்தின் பொழுது, கூடிய பெருங்கூட்டத்தின் சுமை தாங்காமல் வடக்கு தாழ அதை சமன் செய்யும் வகையில் சிவபெருமான் அகஸ்திய முனிவரை தென்திசைக்கு அனுப்ப, அந்த சமயத்தில் பார்வதி தேவி, அகஸ்தியரின் கமண்டலத்தில் பூஜைக்காக, கங்கை நீரை நிரப்பி அனுப்பினாளாம். தென்திசையை நோக்கி புறப்பட்ட அகஸ்தியர் பொதிகை மலையை அடைந்ததும், தன்னுடைய கமண்டலத்தில் இருந்த கங்கை நீரை, கவிழ்க்க அது தாமிரபரணி ஆறாக உருக்கொண்டதாம்.

வடமொழியில் உள்ள மகாபாரதத்தில், "குந்தியின் மகனே மோட்சத்தை அடைய கடும் தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்'  என்று ஒரு முனிவர் தர்மனை பார்த்து சொன்னதாக ஒரு பாடல் உண்டு.
காளிதாசரின் ரகுவம்சத்திலும் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து ரகுவின் காலடியில் பணித்ததாக ஒரு பாடல் உண்டு.

வால்மீகி ராமாயணத்தில் கிட்கிந்தா காண்டம் 41-ஆம் சருக்கத்தில் சில சுலோகங்கள் உள்ளன.  அதில் ஒன்று "அதஸ்யாஸ்னம் நகல் யாத்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத்' அதாவது மலை சிகரத்தில் (பொதிகை) அமர்ந்தவர் அகத்திய முனிவர்.  தாமிரபரணி ஆறு முதலைகள் நிறைந்தது என்று பொருளாகும்.

தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக் குறிப்புகள் சொல்கின்றன. அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை "தாம்ரபர்ணே' என்று குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் பெருவாரியான சொற்கள் திருநெல்வேலி வட்டார வழக்கு போன்றே இருக்கும். 

திருநெல்வேலி மாவட்டம்  ஆதிச்சநல்லூரில் கிடைத்த பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இது தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மக்கள் கூடி வாழ்ந்ததை அறிவுறுத்துகின்றது.

""அம்மா, தாமிரபரணி பெருமை வாய்ந்தவளே, பழமையின் சின்னமே, தமிழர் நாகரிகத்தின் வித்தே, காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு, சிற்றாறு போன்ற துணையாறுகளின் துணைகொண்டு வற்றாத ஜீவ நதியாக ஓடுபவளே, உன்னில் மூழ்கி எழ விழைகின்றேன்'' என்று என் கணவருடன் புறப்பட்டுவிட்டேன். இதில் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெற இருந்த தாமிரபரணியின் மகாபுஷ்கரம் விழாவாக அமைந்துவிட்டது எங்களின் பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்.

என் கணவர் மருத்துவர் என்பதால் ஓய்வு நாளாக ஞாயிற்றுக்கிழமையை புனித நீராடுவதற்கு ஏற்ற நாளாக தேர்ந்தெடுத்தோம். இது எனது ராசியான சிம்மத்துக்கு உகந்த நாளாக அமைந்துவிட்டது. ஏதேச்சையாக இப்படி நடந்தது இறையருளினால்தான் என்று நம்புகிறேன்.

தாமிரபரணி மகாபுஷ்கர விழாவிற்கு சென்று புனித நீராடுவது என்று முடிவு செய்தாகிவிட்டது. ஆனால் எங்கு சென்று நீராடுவது என்பது என் முன்னே பெரிய கேள்விக்குறியாக நின்றது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா நடைபெற இருந்தது.

நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோயில், மணிமூர்த்தீசுவரம், உச்சிஷ்ட கணபதி கோயில் படித்துறைகள் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளன என்றார்கள்.

அது மட்டுமா, 144 -ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய இந்த புஷ்கர விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உட்பட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக பூஜைகள், சிறப்பு யாகங்கள், தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மனித வாழ்வின் மேன்மைக்கு குரு பார்வை அவசியமாகிறது என்கின்றது சோதிட சாஸ்திரம்.  குரு பார்க்க கோடி புண்ணியம் மட்டுமல்ல கோடி நன்மைகளும் வந்து சேரும் என்பதினால் குருஸ்தலமான முறப்பநாடு சென்று அங்கே இருக்கும் கைலாசநாத பெருமானை வணங்க முடிவு செய்தோம். ஐந்தாவது கைலாசம், மற்றும் நடு கைலாச கோயில்களில் முதன்மையானதாக இந்த கைலாச நாதர் கோயில் விளங்குகின்றது.

அதுமட்டுமல்ல, ஒன்பது கைலாய கோயில்களில் முறப்பநாட்டுக்கு என்று ஒரு தனித்தன்மையும், புனிதத் தன்மையும் இருக்கிறது. இதற்கு காரணம், தாமிரபரணி ஆறு கைலாசநாதர் கோயிலுக்கு முன்பு ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே இரண்டு ஆறுகள்தான் வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி பாய்கிறது.  ஒன்று காசியில் கங்கை மற்றொன்று முறப்பநாட்டில் தாமிரபரணி ஆறு. ஆகையினால் தான் தாமிரபரணியை "தட்சிண கங்கை' என்கிறார்கள். ஆகையினால் இதில் நீராடுவது காசியில் புனித கங்கையில் நீராடுவதற்கு சமமாகப் போற்றப்படுகிறது. இங்கே தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளுக்கு "காசிதீர்த்தக் கட்டம்',  "சபரி தீர்த்தம்' என்ற சிறப்பு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

ஆகா, இவ்வளவு பெருமைகள் நிறைந்த முறப்பநாட்டுக்கு சென்று கைலாசநாதர் கோயிலின் முன்னால் ஓடும் தாமிரபரணி ஆற்றில் அதனுடைய 144-வது புஷ்கரம் விழாவில் குளிக்கப் போகிறோம் என்பதே என் மனதில் இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தியது.

விமானம் மூலம் தூத்துக்குடியை சென்று அடைந்தோம். அங்கே நாங்கள் தங்க இருந்த ஹோட்டலின் ரிசப்ஷனிஸ்ட் சொன்ன தகவல் எங்களை அதிரவைத்தது.  அட வெறும் 38 கி.மீ தொலைவில் உள்ள முறப்பநாட்டுக்கு இங்கே இருந்து காரில் எளிதாக போய்விடலாம் என்று வந்தோமே! தாமிரபரணியில் குளியல் சாத்தியப்படுமா.....? திகைத்தோம்.....!

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT