நாடோடிக் கதை: ஏமாளிகளும் திருடனும் 

கிராமத்தில் ஒரு கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நல்ல உழைப்பாளிகள். சிக்கனமானவர்கள். ஆனால், விவரம் மட்டும் போதாது. யாரையும் சுலபமாக நம்பி விடுவார்கள்.
நாடோடிக் கதை: ஏமாளிகளும் திருடனும் 

கிராமத்தில் ஒரு கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நல்ல உழைப்பாளிகள். சிக்கனமானவர்கள். ஆனால், விவரம் மட்டும் போதாது. யாரையும் சுலபமாக நம்பி விடுவார்கள்.

மனைவி காட்டு வேலை, வீட்டு வேலை எல்லாம் செய்து பணம் சம்பாதிக்கிறாள். அவர்களிடம் நிறைய ஆடு, மாடுகள் உண்டு. கணவன் அவற்றை மேய்ப்பான். ஒரு நிமிடம் உட்கார மாட்டான். மாடு மேய்க்கும் கம்பை எட்டக் கொடுத்து நின்றபடியே மாடு மேய்ப்பான்.

இந்தக் குடும்பத்தின் மீது ஒரு திருடனுக்குக் கண். ஆனால், வீட்டுக்குள் காசு எங்கே இருக்கிறது என்று அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதற்கான வழியை யோசித்தான். நியாயமாய் காசு சேர்க்கத்தான் வழிகள் குறைவு. திருடுவதற்கு ஏராளமான வழிகள் உண்டே!

வீட்டுக்காரன், ஒருநாள் காட்டில் நின்றபடி ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் திருடன் சென்று, "அண்ணாச்சி! ஒங்க வீட்டுல வச்சிருக்கற காசு திருடு போயிடுச்சாமே'' என்றான். பொய்தான். ஆனால், கேட்டவன் பதறினான்.

"அம்மிக்கு அடியில் காசு வைக்காதே! அம்மிக்கு அடியில காசு வைக்காதேன்னு சொன்னேன். கேட்டாளா? கேக்கல. இப்ப பாருங்க! எல்லாம் போச்சு!'' என்று அரற்றினான்.

இப்படி அவன் அவசரமாய் உண்மையைக் கக்குவான் என்றுதானே திருடன் எதிர்பார்த்தான். திருடனுக்குக் காசு இருக்குமிடம் தெரிந்துவிட்டது. உடனடியாக அது அவனுக்குத் தானே சொந்தம்? இப்படி முதலில் காசு பறிபோனது.

பிறகு ஒருநாள் திருடன் அந்த வீட்டம்மாளிடம் சென்றான். "அக்கா! காட்டுல அண்ணாச்சி மேய்ச்ச ஆடு, மாடுகளையெல்லாம் யாரோ களவாடிட்டு போயிட்டாங்களாமே'' என்றான்.

அந்தம்மாவும் எதிர்பார்த்தபடியே பதறிக் கொண்டு ரகசியத்தைக் கொட்டினாள். "நின்னுக்கிட்டே தூங்காதீங்க! நின்னுக்கிட்டே தூங்காதீங்கன்னு ஆயிரந்தடவை சொல்லிட்டேன். மனுஷன் கேக்கணும்லப்பா? தூரத்துல போறவங்களுக்கு வேணும்னா மனுஷன் பொறுப்பா நின்னு ஆடு, மாடு மேய்க்கறாரேன்னு தோணும். பக்கத்துல போய்ப் பார்த்தவனுக்கு பவிசு தெரியாமப் போகுமா? நின்னுக்கிட்டே தூங்குறதைப் பார்த்துட்டான். ஆடு, மாடுகளை ஓட்டிட்டுப் போயிட்டான்'' என்று தெள்ளத் தெளிவாக விளக்கிப் புலம்பினாள் அவள்.

இவ்வளவு போதாதா திருடனுக்கு! நேரே காட்டிற்குப் போனான். நின்று கொண்டே உரிமையாளன் தூங்குகிற நேரம் பார்த்து ஆடு, மாடுகளை ஓட்டிப் போய்விட்டான்.

("நாட்டுப்புற கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து)
தகவல்: எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com