கஜுராஹோவில் ஆட கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

ஆண்டுதோறும் கஜுராஹோவில் நடைபெறும் நாட்டிய விழா, உத்திரப் பிரதேசத்தின் கலா பரிஷத்-சுற்றுலா வளர்ச்சித் துறையின் மிகப் பெரிய பங்களிப்பு எனலாம்.
கஜுராஹோவில் ஆட கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

ஆண்டுதோறும் கஜுராஹோவில் நடைபெறும் நாட்டிய விழா, உத்திரப் பிரதேசத்தின் கலா பரிஷத்-சுற்றுலா வளர்ச்சித் துறையின் மிகப் பெரிய பங்களிப்பு எனலாம். 2002-இல் தொடங்கப்பட்ட இக்கலைவிழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய கலாசாரம் மற்றும் மரபுகளுக்கு சாட்சியாக இருப்பது இத்தகைய வியத்தகு நாட்டிய விழா.
 ஏழு நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இக்கலைவிழா, கஜுராஹோவின் 1,000 ஆண்டு பழைமையான கலாசாரப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. உலகின் பல பாகங்களிலிருந்து ஆண்டு முழுவதும் கஜுராஹோவின் கலை பொக்கிஷத்தை கண்டுகளிக்க வருபவர்களின் வருகை பெருகினாலும், குறிப்பாக இந்த நாட்டிய விழாவைக் காணவும் பிரத்யேகமாகத் திட்டமிட்டு வருகிறார்கள்.
 கஜுராஹோவில் சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சித்ரகுப்த சிலையின் முன்பும், விஸ்வநாத் சிவன் கோயிலுக்கு முன்பாகவும் திறந்தவெளி கலை அரங்கில் நடைபெறுவது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்து கண்ணுக்கு விருந்தாக அமைவதில் ஆச்சரியம் இல்லை. புகழ்பெற்ற பல நாட்டிய கலைஞர்களின் நடன வகைகள் ஒன்றுக்கு ஒன்று போட்டிப் போட்டுக்கொண்டு விருந்தினர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை வழங்குகிறது.
 இந்திய புராண இதிகாசங்கள், காவியங்களில் இசை, இசைக்கருவிகள், நாட்டியம் போன்றவை தெய்வங்களுடன் சம்பந்தப்பட்டே தொன்றுதொட்டு அமைந்திருக்கின்றன. பல தெய்வங்கள் நாட்டிய நடனத்துக்கான கடவுளர்களாக வகுக்கப்பட்டிருக்கிறார்கள். சிவபெருமானின் ஆனந்ததாண்டவம், கிருஷ்ணர் கோயில்களில் காதல் ரசம் பொங்கும் ராஸ லீலா, புராண இதிகாசங்களில் "அப்சரஸ்' என்று பேரழகு தேவதைகளாக வர்ணிக்கப்பட்டுள்ள ரம்பை, ஊர்வசி, மேனகை போன்றவர்களின் வசியப்படுத்தும் நடனங்கள் போன்றவை எவ்வாறு மதிக்கப்பட்டு வாழ்க்கையின் பல தத்துவங்களை அனைத்து மக்களும் எளிய வகையில் புரிந்து கொள்ளுபடியாக நம் முன்னோர்கள் படைத்திருப்பதைக் காணலாம்.
 இந்திய பாரம்பரிய நாட்டிய வகைகளுடன் நவீன இந்திய நடனமும் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
 இந்த ஆண்டின் நாட்டிய விழாவை மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் தொடங்கி வைத்து, நடன கலைஞர்களுக்கு பரிசையும், பாராட்டையும் வழங்கினார். தமிழகத்தின் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் லஷ்மி விசுவநாதனுக்கு காளிதாஸ் சம்மான் விருதினை வழங்கி சிறப்பித்தார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி செட்டியாரும் பங்கேற்று சிறப்பித்து, தன்னை வாழ்த்த வேண்டும் என்று லஷ்மி விசுவநாதன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவரும் வந்திருந்தார்.
 விழா முடிந்ததும் லஷ்மி விசுவநாதனை சந்தித்தபோது, "இந்த விழா எனக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. இங்கே நடன நிகழ்ச்சி நடத்த அழைத்திருந்ததோடு, எனக்கு மத்திய பிரதேச அரசின் மாபெரும் விருதான காளிதாஸ் சம்மான் விருதையும் வழங்கி கெüரவித்தார்கள்.
 நான் சோழர்களின் கலையழகு மிளிரும் கோயில் சிற்பக் கலையின் மகத்தான இடமான தஞ்சாவூரை நேசிப்பவள். கஜுராஹோவைப் பார்த்ததும் பரவசத்தில் பிரமித்துப் போய்விட்டேன். இங்கே ராஜராஜன் போல், அங்கே இன்னோர் அரச குடும்பமான சந்தேலா மன்னர்கள் கட்டியவை அவை. மன்னர் ராஜராஜன் (985-1012), மன்னர் வித்யாதரர் (1003-1035) இருவரும் சம காலத்தவர் என்பது சுவாரசியமான தகவல். அவர்களுடைய ஆளுமை, அவர்கள் அடைந்த வெற்றிகள், சிவா-விஷ்ணு மீது அவர்களுக்கு இருந்த பக்தி, கோயில்கள் கட்டுவதில் அவர்களுக்கு இருந்த காதல் எல்லாவற்றையும் பார்த்தால் கஜுராஹோவும், தஞ்சாவூரும் தனித்தன்மை வாய்ந்தவை என்று கூற வேண்டும்.
 சோழ மன்னர்களைப் போலவே சந்தேலா மன்னர்களும் ஆற்றல் வாய்ந்த அரசர்களாக இருந்திருக்கிறார்கள். பல போர்களைச் சந்தித்திருக்கிறார்கள். செல்வத்தைக் குவித்திருக்கிறார்கள். பிரகதீசுவரர் கோயில் உயரம் 216 அடி என்றால் கண்டரிய மஹாதேவர் ஆலயம் கஜுராஹோ கோயில்களில் மிக உயரமானது 100 அடி! எல்லோரும் காண வரும் இந்த கஜுராஹோ கோயில் கைலாயத்தில் சிவபெருமானின் மலை முகடு போல் அமைந்துள்ளது. மாதகேசுவரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் மிக பிரம்மாண்டமானது. ராஜராஜன்தான் சிவலிங்க உருவை பவித்திரமான லிங்கமாக மக்களிடையே பரப்பினார் என்பார்கள். அவர் அமைத்த லிங்கம்தான் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தில் உள்ளது.
 கஜுராஹோவில் நடனமாட கொடுத்து வைத்திருக்க வேண்டும். கரும்பு தின்ன கூலி போல கூடவே மத்திய பிரதேச அரசின் பெருமைமிகு காளிதாஸ் சம்மான விருதை பெறுவது எனக்கு ரஸôனுபாவத்தின் அற்புதமான அனுபவம்'' என்று கூறினார்.
 படங்கள், கட்டுரை: யோகா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com