1968 - 2018: சாதனைகளின் பொன்விழா ஆண்டு!

1968 - 2018: சாதனைகளின் பொன்விழா ஆண்டு!

தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்க இயலாத ஆண்டு 1968. தமிழ்த் திரைப்படங்கள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்த ஆண்டு இது.

தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்க இயலாத ஆண்டு 1968. தமிழ்த் திரைப்படங்கள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்த ஆண்டு இது. அந்த சாதனைகளின் பொன்விழா ஆண்டு 2018.
 இந்த காலகட்டத்தில் 46 படங்கள் வெளிவந்தன. அவற்றுள் "கலாட்டா கல்யாணம்', "ஒளி விளக்கு', "தாமரை நெஞ்சம்', "குடியிருந்தகோயில்', "உயர்ந்தமனிதன்', "எதிர்நீச்சல்', "பணமா பாசமா', "குழந்தைக்காக', "தில்லானா மோகனாம்பாள்' போன்ற படங்கள் 100 நாட்களைத் தாண்டி ஓடிய வெற்றிப்படங்கள். இந்த ஆண்டில் குடும்பக்கதையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் அதிகம் வெளிவந்தன.
 இந்த ஆண்டில்தான் "ஜீவனாம்சம்' படத்தின் மூலம் லட்சுமி நடிகையாக அறிமுகமானார். சின்னப்பா தேவர் தான் தயாரித்த "நேர்வழி' படத்தில் எம்.ஜி.பாலு என்ற புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தினார்.
 "புத்திசாலிகள்' படத்தில் இசையமைப்பாளர் வி.குமார், பின்னாளில் தனது மனைவியாக்கிக் கொண்ட ஒய். சொர்ணாவை பாடகியாக அறிமுகப்படுத்தினார். "குடியிருந்தகோயில்' படத்தில் இடம்பெற்ற "நான் யார்.. நான் யார்..' என்ற பாடல் மூலம் புலவர் புலமைப்பித்தன் தமிழ்ப்படவுலகிற்கு அறிமுகமானார். இதே படத்தில் பெண் கவிஞர் ரோஷானாரா பேகம் "குங்குமப் பொட்டின் மங்கலம்' என்ற பாட்டின் மூலம் அறிமுகமானார். இப்படி பல புதுமுகங்கள் திரைத்துறையில் நுழைந்த ஆண்டு இது.
 1968 -ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த படங்களுக்கான மூன்று விருதுகள் முறையே "உயர்ந்த மனிதன்', "தில்லானா மோகனாம்பாள்', "தாமரை நெஞ்சம்' ஆகிய படங்களுக்கு கிடைத்தன.
 திரைப்படத்திற்கான தேசியவிருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வந்தாலும் 1968-ஆம் ஆண்டில்தான் பாடல் ஆசிரியர்களுக்கு தேசிய விருதினை மத்திய அரசு வழங்க ஆரம்பித்தது. தமிழ் பாடலாசிரியர்களில் பாடலுக்கான முதல் தேசிய விருதை பெற்ற பெருமை நம் கவியரசர் கண்ணதாசனையே சாரும். "குழந்தைக்காக' என்ற படத்தில் இடம்பெற்ற "ராமன் என்பது கங்கை நதி, அல்லா என்பது சிந்து நதி, ஏசு என்பது பொன்னி நதி..' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலுக்காக அந்த விருது வழங்கப்பட்டது.
 இதே ஆண்டில்தான் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசியவிருதினை "உயர்ந்த மனிதன்' படத்தில் இடம் பெற்ற "பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்' என்ற பாடலுக்காக பி. சுசீலா பெற்றார். பிரிவினால் பெண்படும் விரக வேதனையை இந்த பாடலில் தன் வரிகள் மூலம் வாலி அழகாக வெளிப்படுத்த, அதற்கு தன் குரலால் மேலும் மெருகேற்றியிருப்பார் சுசீலா. இந்த விருதின் மூலம் தமிழில் தேசியவிருதுபெற்ற முதல் பின்னணிப்பாடகியானார் சுசீலா. இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் சுசிலாவின் நெருங்கிய உறவினர் காலமானார். எனவே இப்பாடலைப் பாடுவதற்கு அவரை அழைத்து வருவது கஷ்டமாக இருந்தது.
 உறவினர் காலமான துக்கத்தைத் தாங்கிக்கொண்டு பாடினார். ஆனால் பாடி முடித்தவுடன் மயக்கமாகிவிட்டார். சமீபத்தில் கண்ணதாசன் - விஸ்வநாதன் ட்ரஸ்ட் நடத்திய விழாவில் எம்.எஸ். விஸ்வநாதனின் உதவியாளராக இருந்த மதுரை ஜி.எஸ். மணி இச்சம்பவத்தைக் கூறி அந்தப்பாடலையும் பாடி பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். அவர் மேலும் கூறிய போது, "உயர்ந்த மனிதன்' படப்பிடிப்பு முடிந்து ரஷ் போட்டுப் பார்த்த ஏவி. மெய்யப்ப செட்டியார், இந்தப் பாடல் காட்சி முடிந்தவுடன், சுசிலாவை அழைத்து பாடலைப் அருமையாக பாடியுள்ளீர்கள், உங்களுக்கு நிச்சியமாக தேசிய விருது கிடைக்கும்'' என்றார். செட்டியாரின் வாக்கும் பலித்தது.
 "குழந்தைக்காக' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியவிருது பேபிராணிக்கு கிடைத்ததும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது "தில்லானாமோகனாம்பாள்' படத்தில் பணியாற்றிய கே.எஸ். பிரசாத்திற்கு கிடைத்ததும் இதே ஆண்டில்தான்.
 1968-ஆம் ஆண்டில் பதிமூன்று படங்களில் ஜெய்சங்கரும், இருபத்தி இரண்டு படங்களில் நாகேஷூம், பதிமூன்று படங்களில் ஜெயலலிதாவும் நடித்து புகழ்பெற்றது இதே ஆண்டில்தான். இத்தனைக்கும் 1967-ஆம் ஆண்டு மூன்றுக்கும் மேற்பட்ட விபத்துகளை சந்தித்தார் ஜெயலலிதா. அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போதும் தொடர்ந்து நடித்தது தொழில் மீது அவருக்கிருந்த அர்ப்பணிப்பைக் காட்டியது. அதற்குரிய பலனும் அவருக்குக் கிடைத்தது.
 எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த "குடியிருந்தகோயில்', "ஒளிவிளக்கு', "புதிய பூமி', "ரகசியபோலீஸ்' மற்றும் சிவாஜியுடன் நடித்த "கலாட்டா கல்யாணம்' போன்றபடங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படங்கள். இந்த வெற்றிகளின் மூலம் ஜெயலலிதா புகழின் உச்சிக்கே சென்றார்.
 "தாமரை நெஞ்சம்' கே. பாலசந்தர் இயக்கிய படமாகும். இவர் எதையுமே வித்தியாசமாக செய்பவர். முதலில் படத்திற்கு அழகான பெயரை வைத்தார். ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா மஞ்சம் "தாமரை நெஞ்சம்'. ஜெமினி கணேஷனை நடிக்க வைத்து பாலசந்தர் இயக்கிய முதல் படம். பின்னர் பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகனாக பல படங்களில் நடித்தார்.
 "தாமரை நெஞ்சம்' படம் சரோஜா தேவிக்கு திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைப் படம் என்றால் அது மிகையில்லை. அளவான நடிப்பை அற்புதமாக வெளிபடுத்தியிருப்பார்.
 ஜெமினி கணேஷனும் சரோஜா தேவியும் நடித்த மற்றுமொரு வெற்றிப்படம் "பணமா பாசமா'. வாழ்க்கைக்குத் தேவை "பணமா பாசமா' என்ற பிரச்னையை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு, அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இப்படத்தின் இறுதியில் பாசமே வெற்றி பெறும் என்று முடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜயநிர்மலா இப்படத்தில் "எலந்தபழம் எலந்தபழம்' என்ற பாடலைப் பாடி நடித்திருப்பார். இந்தப் பாடல் காட்சி அவர் திரை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தது. இதே 1968-ஆம் ஆண்டு "சோப்பு சீப்பு கண்ணாடி' படத்தில் நாகேஷுடன் ஜோடியாக நடித்து தனக்கு நகைச்சுவையும் வரும் என நிரூபித்துக்காட்டினார் விஜய நிர்மலா.
 அடுத்து 1968-ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படங்களில் ஒன்று "தில்லானா மோகனாம்பாள்' நாதத்திற்கும் நாட்டியத்திற்கும் நடந்த போட்டி என்றாலும், உண்மையாக சிவாஜிக்கும் பத்மினிக்கும் நடந்த போட்டியாக இன்றும் கருதப்படுகின்றது. இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களுக்குரிய கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நிற்கும்படி செவ்வனே செய்திருந்தார்கள். சிவாஜி, பத்மினி தவிர வாய்ச்சவுடால் பாத்திரத்தில் நடித்த நாகேஷையும் ஜில் ஜில் ரமாமணியாக நடித்த மனோரமாவையும் தலைமுறைகள் மாறினாலும் தமிழ் ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எந்த வயதினரும் ரசித்துக் கேட்கும் பாடல்களாக அமைந்தன. இப்படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் நாதஸ்வரத்திற்கு மதுரை எம்பி.என் சேதுராமன் - பொன்னுசாமி சகோதரர்களை பயன்படுத்தியிருப்பார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் "தில்லானா மோகனாம்பாள்' ஆவணப்படுத்த வேண்டிய படம்.
 பக்திப் படங்கள், குடும்பப் படங்கள் என்று அடுத்தடுத்து வெளிவந்த 1968-ஆம் ஆண்டில் முழுநீள நகைச்சுவையைச் சுமந்து வந்த படம் "கலாட்டா கல்யாணம்'. இப்படத்தில் மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்திருந்தனர். கோபுவின் வசனத்தில் சி.வி. ராஜேந்திரன் இயக்கிய சூப்பர் டூப்பர் வெற்றிப்படம். இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும்.
 எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் தவிர 1968-ஆம் ஆண்டில் ஜெய்சங்கர் நடித்த அனைத்துப் படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றன. இவர் நடித்த "நீலகிரி எக்ஸ்பிரஸ்' படத்தில் கதைக்குத் தகுந்தவாறு சிஐடி அதிகாரியாக நடித்திருப்பார். இப்படத்திற்கு சோ திரைக்கதை - வசனம் எழுதியிருப்பார். 1967-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த "கொச்சின் எக்ஸ்பிரஸ்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள். இப்படத்தை இயக்கியவர்கள் திருமலை - மகாலிங்கம் இரட்டையர்கள், இயக்குநர் ஏ.பீம்சிங்கிற்கு உறவினர்கள்.
 ஜெய்சங்கர் நடித்த "அன்பு வழி'படத்தில் தெள்ளூர் தர்மராசன் கீரைவகைகளையும் காய்கறிகளின் பெயர்களையும் மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் அருமையாக எழுதியிருப்பார்.
 இசை மனிதனின் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இவ்விசையின் மகத்துவத்தைக் "கல்லும் கனியாகும்' என்ற படத்தில்
 கல்லும் இசையில் கனியாகும்
 முள்ளும் அதனால் மலராகும்
 உள்ளம் உருகும் பண்பாடும் - அந்த
 ஓசையிலே நாதம் நின்றாடும் என்று கவிஞர் வாலி எழுதியிருப்பார்.
 தன் திரை வாழ்வில் எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம் "கணவன்'. அந்தக் காலகட்டத்தில் திமுகவின் முக்கிய பிரமுகரும் சிறுகதை மன்னன் என்றழைக்கப்பட்டவருமான எஸ்.எஸ். தென்னரசு வசனம் எழுதிய ஒரே படம் மற்றும் ஜேயார் மூவீஸ் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த ஒரே படம் "புதிய பூமி'.
 ஜெமினி நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த ஒரே படம் "ஒளிவிளக்கு' அதுவும் கலரில் தயாரிக்கப்பட்டது.
 கே. பாலசந்தர் இயக்கத்தில் சரோஜா தேவி நடித்த ஒரே படம் "தாமரை நெஞ்சம்'.
 பெண் கவிஞர் ரோஷானாரா பேகம் திரைப்படத்திற்கு எழுதிய ஒரே பாடல் "குங்குமப் பொட்டின் மங்கலம்' என்று தொடங்கும் பாடல்
 பின்னணிப் பாடகர்கள் டி.எம்.செüந்திரராஜன் மற்றும் ஏ.எல். ராகவன் செüந்தர் ராகவன்மூவீஸ் என்ற பேனரில் தயாரித்த ஒரே படம் "கல்லும் கனியாகும்'.
 மோகன் காந்திராமன் இயக்கத்தில் புகழேந்தி இசையில் வெளிவந்த ஒரே படம் "செல்வியின் செல்வன்' . இவர் இரண்டு தமிழ்த் திரைப்படங்களுக்குத்தான் இசையமைத்தார். மற்றொரு படம் "குருதட்சணை'. நடிகை எல்.விஜயலட்சுமியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் "குடியிருந்த கோயில்'.
 கவிஞர் பூவை செங்குட்டுவன், எம்.ஜி.ஆர் நடித்த "புதியபூமி' மற்றும் "காதல் வாகனம்' படங்களுக்கு பாட்டு எழுதினார். இரு படங்களும் 1968-ஆம் ஆண்டு வெளிவந்தன. அதன்பிறகு அவர் எம்.ஜி.ஆருக்கு பாட்டு எழுதவில்லை "உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜியின் நடிப்பைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
 சிவாஜி, செüகார் நடிப்பிற்கு இணையாக சிவகுமாரும் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி நடித்திருப்பார். இப்படத்தில் காந்தர்வக் குரலுக்குச் சொந்தக்காரரான டி.எம்.செüந்திரராஜன் தன் குரலில் வேற்றுமையைக் காட்டி சிவாஜிக்கும் சிவகுமாருக்கும் பாடியிருப்பார்.
 விநாயகா பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய முதல் படத்திற்கு "நீ' என்றும் இரண்டாவது படத்திற்கு "நான்' என்ற பெயரையும் மூன்றாவது படத்திற்கு "மூன்றெழுத்து' என்று பெயர்களை வைத்து திரைப்படங்களைத் தயாரித்தனர். 1968-ஆம் ஆண்டு வெளிவந்த "மூன்றெழுத்து' படத்தில் ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த ஆண்டு ரவிச்சந்திரன் நடித்த படங்கள் அனைத்தும் சுமாராக ஓடின.
 இந்த பொன்விழா ஆண்டில் (2018) அன்றைய படங்களில் நடித்து நம்முடன் வாழும் நடிகர்களையும், நடிகைகளையும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் போற்றுவோம். நடிகர் சங்கம் பொன்விழா ஆண்டு கலைஞர்களுக்கு விழா எடுத்தால் வரலாற்றில் வாழ்வார்கள்.
 - ரா. சுந்தர்ராமன், எம்.கண்ணன்
 படம்: ஞானம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com