75 ஆண்டுகள் நிறைவுபெற்ற ஹவுரா பாலம்!

முன்பு கல்கத்தா என்றழைக்கப்பட்ட  இன்றைய  கொல்கத்தாவின் அடையாளமாக விளங்கும் ஹவுரா பாலம், கொல்கத்தா மற்றும்  ஹவுரா ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும்  வகையில் ஹூக்ளி நதியின் மேல்
75 ஆண்டுகள் நிறைவுபெற்ற ஹவுரா பாலம்!

முன்பு கல்கத்தா என்றழைக்கப்பட்ட  இன்றைய  கொல்கத்தாவின் அடையாளமாக விளங்கும் ஹவுரா பாலம், கொல்கத்தா மற்றும்  ஹவுரா ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் ஹூக்ளி நதியின் மேல் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொல்கத்தாவையும், ஹவுராவையும் இணைக்க தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஹூக்ளி நதியில் கப்பல்கள் வந்து சென்று கொண்டிருந்ததால், ஒவ்வொருமுறையும்  தற்காலிக பாலத்தை  அடிக்கடி அகற்ற வேண்டியிருந்தது. மேலும் கொல்கத்தா நகரம்  கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்ததால்,  தொலைதூர  வர்த்தகத்துக்கு யன்படும் வகையில் கடலுடன் கலக்கும் வகையில் ஹூக்ளி நதி அமைந்திருந்தது.

1911-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள்,  தங்கள் தலைநகரை  டெல்லிக்கு மாற்றும் வரை கொல்கத்தா  இந்தியாவின் தலைநகரமாக இருந்தது.  பழைய தற்காலிக பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டப்பட்டு, 1943- ஆம் ஆண்டு பொதுமக்கள்  பயன்பாட்டிற்காக  "புதிய  ஹவுரா பாலம்'  என்ற பெயரில் திறக்கப்பட்டது.

முதன்முதலாக இந்த பாலத்தின் மீது டிராம் கார் ஒன்று, நகரத்தின் மூலையிலிருந்து ஹவுரா ரயில் நிலையம் வரை முதல் வாகனமாக இயக்கப்பட்டது.  இன்று டிராம்கள் இயக்கம்  நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த பாலம் திறக்கப்பட்டபோது, உலகிலேயே மிக நீளமான  இரும்பு பாலமாக கருதப்பட்டது.

இன்று உலகில்  ஆறாவது மிக  நீளமான பாலமாக  கருதப்படும் ஹவுரா பாலத்தின் நீளம் 2313 அடி மற்றும் அகலம்  71-அடிகளாகும்.  இது  தவிர பாலத்தின் இருபக்கமும் 15 அடி  நடைபாதையும் அமைந்துள்ளது. மற்றுமொரு சிறப்பு  என்னவெனில்  26,500 டன் எடையுள்ள இந்த இரும்புப் பாலம் அமைக்க போல்ட், நட் ஏதும் பயன்படுத்தவில்லை. ரிவிட்ஸ் மூலமாகவே பாலம் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, இந்த புதிய பாலம் திறக்கப்பட்டதால், ஜப்பானியர்கள் எந்த நேரத்திலும் இந்த  பாலத்தின் மீது குண்டு வீசி தகர்க்கலாம் என்ற அச்சம்  இருந்தது.  அதேபோன்று  1942 மற்றும் 1944-ஆம் ஆண்டுகளில்  ஜப்பானியர்,  கொல்கத்தா மீது  குண்டு வீசியபோது, அதிர்ஷ்டவசமாக முன் கூட்டியே ஆங்கில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த பாலம் தனிப்பட்ட பொறியாளர் மூலமாகவோ, முன்பின் தெரியாதவர் மூலமாகவோ வடிவமைக்கப்படவில்லை.

1862-ஆம் ஆண்டு வங்காள அரசு, கிழக்கிந்திய ரயில்வே  கம்பெனியின் தலைமை பொறியாளர் ஜார்ஜ்  டர்ன்புல் என்பவரிடம்,  ஹூக்ளி நதியின் மீது பாலம் கட்டுவதற்கான  திட்டமொன்றை  வகுத்து தரும்படி  கேட்டது.  இதற்காக 1921-ஆம் ஆண்டு பொறியாளர்கள் அடங்கிய முகர்ஜி கமிட்டி அமைக்கப்பட்டது.

1926-ஆம் ஆண்டு ஹவுரா பாலம் சட்டமொன்று  இயற்றப்பட்டு, கட்டுமான பணிகள், பராமரிப்பு, புதிய பாலத்தை கட்டுப்பாட்டுக்குள்  வைப்பது போன்றவைகளுக்கான விதிகள் நிர்ணயிக்கப்பட்டது. உலக அளவிலான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. கூடவே உலக யுத்தம் வேறு அச்சுறுத்தியது. ஜெர்மனிய  நிறுவனமொன்று குறைந்த  தொகையில் பாலம் அமைத்துத்தர முன் வந்தது, ஆனால்,   யுத்தம்  காரணமாக  ஐரோப்பா முழுவதும் அரசு கொள்கைகள் நிலையாக இல்லாததால்  ஜெர்மனி  கோரிக்கையை ஏற்க முடியவில்லை.இறுதியில் ப்ரைய்தவெயிட் பரன் அண்ட் ஜோசப் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி விண்ணப்பத்தை  ஏற்று,  கொல்கத்தா  துறைமுக கமிஷனர்களே பாலம் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கம் கொல்கத்தா  துறைமுக டிரஸ்ட்  பொறுப்பில் உள்ள ஹவுரா பாலத்திற்கான  கமிஷனர்களை   நியமிக்கும் பொறுப்பு இன்றளவும் நீடிக்கிறது.

இந்த பாலம் கட்டிக் கொண்டிருந்த போதே சில உண்மை, சில  கற்பனை கதைகள் பரவின.  ஒருநாள்  இரவு கட்டுமான பணிக்காக  மண்ணை  அகற்றிக் கொண்டிருந்தபோது,  திடீரென  அதுவரை  கட்டிய பாலம்  அப்படியே இரண்டடி ஆழத்தில் இறங்கிவிட்டதாம். இதற்கு திடீரென ஏற்பட்ட பூகம்பமே காரணமென கூறப்பட்டது.  அதற்கேற்ப  கிதிர்பூரில்  நில நடுக்கம் ஏற்பட்டதாக பதிவாகியிருந்தது. பின்னர் மண்ணை அகற்றியபோது கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த  நங்கூரம்,   பீரங்கி, குண்டுகள், பித்தளை சாமான்கள், நாணயங்கள் போன்றவை  கிடைத்ததாக  அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவின் பல பகுதிகளை இணைக்கும் இந்த ஹவுரா ரயில் நிலையத்திற்கு வருபவர்கள், இந்த பாலத்தை  கடக்காமல் செல்ல முடியாது. அருகில்  உள்ள ஹவுரா ரயில் நிலையத்திற்கு புறநகர்  ரயில், பஸ், கார்களில் தினமும் லட்சத்து 50 ஆயிரம் பேர்களும், ஒரு லட்சம் வாகனங்களும் இந்த பாலத்தை கணக்கிட்டபோது,  உலகிலேயே மிகவும் பரபரப்பான  பாலம் என்ற புகழையும் பெற்றது. இந்த பாலத்தை  பராமரிப்பதும் சுலபமான பணியல்ல. பறவை எச்சங்கள், பாதசாரிகள் துப்பும் எச்சில் கறைகள் ஆகியவைகளை சுத்தம் செய்து, வர்ணமடிக்க லட்சக்கணக்கான ரூபாய்  செலவிடப்படுகிறது. 1965-ஆம் ஆண்டு, ரவீந்தரநாத் தாகூர்  பெயர் இந்த பாலத்திற்கு சூட்டப்பட்டாலூம், பழைய பெயரிலேயே  இந்த பாலம் இன்றும் அழைக்கப்படுகிறது.

ஹவுரா பாலத்தை மையமாக  வைத்து தயாரித்த  அசோக்குமார், மதுபாலா நடித்த  "ஹவுரா பிரிட்ஜ்'  திரைப்படம் 1958 -ஆம் ஆண்டு  வெளியானது. டொமினிக்   லாப்பியர் எழுதிய  "சிடி ஆஃப்  ஜாய்' என்ற ஆங்கில புத்தகத்தில் கூட இந்த பாலம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே  மிக பழமையான பாலமாக  கருதப்படும்  இதன் அருகில்  உள்ள ஹவுரா  ரயில் நிலையத்திற்கு, தவறான ரயில் ஏறி வந்திறங்கும்  ஏழைச் சிறுவனொருவன் ஆஸ்திரேலிய தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டு, பின்னர் நாடு திரும்பி தன்னுடைய உண்மையான பெற்றோரைத் தேடி கண்டுபிடிக்கும் உண்மை கதையை மையமாக வைத்து, 2016-ஆம் ஆண்டு  தயாரிக்கப்பட்ட  "லயன்'   என்ற திரைப்படம்  அகாதெமி விருதுக்காக  பரிந்துரை செய்யப்பட்டது.

கொல்கத்தாவுக்கு என்றும் பசுமையான நினைவு சின்னமாக விளங்கும் ஹவுரா பாலம், அண்மையில் 75-ஆவது  நிறைவு  நாளை  கொண்டாடிய  போது பாலம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது கண் கொள்ளா காட்சியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com