கூத்துப்பட்டறை ந.முத்துசாமி முடிவின் தொடக்கம்!

சென்னை அண்ணாசாலையில் புதிதாக மத்திய நூலகம் செயல்பட்டு வந்தது. ஏராளமான தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க கிடைத்தன.
கூத்துப்பட்டறை ந.முத்துசாமி முடிவின் தொடக்கம்!

சென்னை அண்ணாசாலையில் புதிதாக மத்திய நூலகம் செயல்பட்டு வந்தது. ஏராளமான தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. அதோடு நூலகத்தின் மாடியில் இலக்கியக் கருத்தரங்குகள் நடத்த நான்கு மணி நேரத்திற்கு இரண்டு ரூபாய் வாடகைக்குக் கொடுத்தார்கள்.

நூலகத்தில் இலக்கியம், தத்துவம், சமயம், சமூகவியல், அரசியல் நூற்கள் படித்து வந்த நா.கிருஷ்ணமூர்த்தி, க்ரியா ராமகிருஷ்ணன், ம.ராஜாராம் எல்லாம் சேர்ந்து மாதம் இரண்டு கூட்டங்கள் போடுவது என்று தீர்மானித்தோம். நாங்கள் படித்து வந்த வெகுஜன பத்திரிகைகள் வெளியிட்டு வந்த சிறுகதைகள், தொடர்கதைகள் பலவும் சாரமற்று இருப்பதாக எண்ணினோம். அவை தமிழ் இலக்கிய மரபின் தொடர்ச்சியாக இல்லை, இந்திய மரபிலும் அவற்றுக்கு இடமில்லை என்று பட்டது.

இலக்கியக் கூட்டங்கள் சம்பிரதாய முறையில் பாராட்டுக் கூட்டங்களாகப் பட்டன. அந்தக் கூட்டங்களில் பேசப்பட்ட புகழுரைகள் சகிக்க முடியாததாகவும், வெட்கப்படத்தக்கதாகவும் இருந்தன. அவற்றுக்கெல்லாம் பதில் சொல்வது மாதிரி கூட்டங்கள் நடத்த இலக்கியச் சங்கம் என்றொரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டோம். அதில் முதல் அம்சம்: கூட்டத்தைக் குறித்த நேரத்தில் ஆரம்பிப்பது.  கட்டுரை படிக்க வேண்டும். கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டும்.  இரண்டாவது அம்சம்: நவீன சிறுகதை வாசிப்பு, புதுக்கவிதை வாசிப்பு அவற்றின் மேலான விமர்சனத்திற்குத் தாராளமாக இடம் கொடுக்கப்பட்டது.  மூன்றாவது அம்சம்: ஒரு படைப்பு எவ்வாறு இலக்கியமாகிறது. இந்திய நவீன இலக்கியங்கள் எவ்வாறு ஒவ்வொரு மொழியிலும் எழுதப்பட்டுவருகிறது.  இலக்கியத்தில் மொழியின் பங்களிப்பு - இப்படிப் பரந்து பட்ட தலைப்புகளில் பிரபலமான எழுத்தாளர்களையும், புதிய எழுத்தாளர்களையும் அழைத்தோம்.

க.நா.சுப்ரமண்யம், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா, சார்வாகன், நா.பார்த்தசாரதி  எல்லாம் கலந்து கொண்டு கட்டுரை வாசித்தார்கள்.

அசோகமித்திரன், ந.முத்துசாமி, ஞானக்கூத்தன், ஆர்.சாமிநாதன் என்னும் ஐராவதம், பதி என்று பலரும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டு விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டார்கள். தங்களின் சொந்த அபிப்பிராயங்களைச் சொல்ல ஒரு களம் கிடைத்து இருக்கிறது என்று கருதி ஒவ்வொரு கூட்டத்திற்கும் வர ஆரம்பித்தார்கள். 

இலக்கியச் சங்கக் கூட்டங்கள் தீவிரமாக இருந்தது என்றால், கூட்டம் முடிந்ததும்  தேநீர் விடுதியில் உட்கார்ந்து பேசியது இணக்கத்தை ஏற்படுத்தியது. வயது ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தது. அவர்கள் சொந்தமாகப் பேசினார்கள், அவர்கள் சொன்ன கருத்துகளும் சொந்தமாக இருந்தது. அது பல பிரபலமான எழுத்தாளர்களைப் பாதித்தது. கோபக்கார இளைஞர் வந்து இருக்கிறார்களா என்று கூட்டத்தில் தேடினார். நல்லதுக்குக் கோபப்படுவது குற்றமில்லை என்று செயல்பட்டார்கள்.  அதோடு இலக்கியம் என்பது எழுத்து மட்டுமல்ல. அது ஓவியம், சிற்பம், இசை, நடனம், நாடகம்,  சினிமா என்று நுண்கலைகளோடு நெருக்கமானது என்று நம்பினார்கள்.  தமிழ் நெடுங்கவிதையில் இருந்து புதுக்கவிதை பிறந்து வளர்ந்து வந்தது போல, ஓவியம், சிற்பத்தில் நவீனத்தைக் கொண்டு வந்த கே.எம்.ஆதிமூலம், சி.தட்சணாமூர்த்தி, பி.கிருஷ்ணமூர்த்தி, ஆ.பி.பாஸ்கரன் எல்லாம் சேர்ந்து கொண்டார்கள். அது சிறந்த கலைஞனாகவும், தரமான படைப்புகளை கொடுக்கவும்; கண்டு சொல்லக் கூடியவனாகவும், இருத்தல் என்பதுதான். அந்தக் கூட்டத்தில் முக்கியமான பங்களிப்பாளர்களில் ஒருவராக ந.முத்துசாமி இருந்தார். அவர் பெரும் உற்சாகமாகி எப்பொழுதும் தனக்கான உலகத்தில் உலாவக் கூடியவராகவே இருந்தார். ந.முத்துசாமி பல ஆண்டுகளாக சென்னைவாசியாக இருந்தாலும், அவர் மெருகு குலையாத கிராமவாசி. 1936- ஆம் ஆண்டில் நாகை மாவட்டத்தில் காவேரிப்பூம்பட்டினம் செல்லும் வழியில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தார்.  தந்தை நடேச ஐயர். மயிலாடுதுறை நகராட்சிப் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காகச் சேர்ந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாசறையாக இருந்தது. தலைவர்களின் வசீகர பேச்சால் கவரப்பட்டு கட்சியில் உறுப்பினரானார்,  "திராவிட கட்சிகளின் சிந்தனையால் தான் எழுத்தாளரானேன்'  என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர் வெளிப்படையாகப் பேசக்கூடியவர்.  சப்தமாகப் பேசுவார்; ஆனால் சண்டைக்காரர் இல்லை. தனக்கென்று இலக்கியக் கோட்பாடுகள் வைத்துக் கொண்டு இருந்தார். அதனை எதிர்த்து வாதம் புரிகிறவர்களை உதாசீனப் படுத்திகாட்டினார். அவர் கருத்துகளைப் பொதுவெளியிலும், தனி உரையாடல்களிலும் எதிர்த்துப் பேசியிருக்கிறேன்.

ஆனால் அடுத்த முறை அதனை மனத்திற்குள் வைத்துக் கொண்டு ஒதுங்கிப் போகமாட்டார். அது அவரின் பொது பண்பாகவே இருந்தது. முத்துசாமி சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் மனைவி அரசு பணியில் சேப்பாக்கத்தில் இருந்தார். காதல் கல்யாணம். மனைவியின் பெயர் அவையாம்பாள். மனைவியின் பொருட்டு திருவல்லிக்கேணி பகுதியிலேயே வசித்தார். அவரின் இளம் பருவத்து உற்றத் தோழர் சேலம் பழனிசாமி. பின்னால் சி.மணி என்று அறியப்பட்ட புதுக்கவிஞர். ஆங்கில பேராசிரியர். இவரோடு வி.து. சீனிவாசன்  என்ற ஒரு நண்பரும் இருந்தார். இலக்கியத்தில் புதுமையைத் தேடி அலைந்து கொண்டிருந்த அவருக்கு "எழுத்து' கண்களில் பட்டது. அதுவே தனக்கான இலக்கியப் பத்திரிகை என்று அடையாளம் கண்டு கொண்டார். அதோடு மெüனி கதைகள் அவருக்குப் பிடித்தமானவைகளாகவும் இருந்தன.

திருவல்லிக்கேணியில் வசித்து வந்த சி.சு.செல்லப்பாவோடு அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. செல்லப்பா இல்லத்தில் பிரமிள் என்னும் தருமு சிவராமை சந்தித்தார். பிரமிள் கவிதைகள், கட்டுரைகள் மீது மனம் பறி கொடுத்தவராகவே இருந்தார். அடுத்து அவருக்குப் பிடித்தமானவர் வெங்கட் சாமிநாதன். தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போடக்கூடிய எழுத்தாளர் என்றே நம்பினார். முத்துசாமிக்குப் படித்ததில் - பார்த்ததில் எது மனம் கவர்கிறதோ - எது புதுமையாகப் படுகிறதோ அதனை இன்னொரு படைப்போ - சினிமாவோ; நாடகமோ வந்து அப்புறப்படுத்தாத வரையில் மனம் திறந்து பேசிக் கொண்டிருப்பார். அவர்க்கு அடுத்தவர் கருத்து, விமர்சனம் என்பது முக்கியமே இல்லை. தனக்குப் படித்திருக்கிறது என்பதே அவர்க்குப் பெரும் பலமாக இருந்தது.

சி.சு.செல்லப்பாவோடு அவர் நெருக்கமாகவே இருந்தார். ஆனால் செல்லப்பா தன் இலக்கிய ஆளுமையின் படி முத்து சாமியை சீடர் போலவே கருதினார். இன்னும் படிக்கவும், பயிற்சி பெறவும் உள்ளது; எழுத அவசரப் படவேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டார்.  1958 - ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட  "எழுத்து' என்னும் சிற்றேடு 118 இதழ்களோடு நின்று போய் விட்டது.

1958-ஆம் ஆண்டில் அவர் நண்பர் கவிஞர் சி.மணி முத்துசாமி, கி.அ.சச்சிதானந்தம் கொடுத்த ஆதரவு, ஊக்கத்தின் அடிப்படையில் "நடை' என்ற இதழைத் தொடங்கினார். மணி  பேராசிரியராக அரசுப் பணியில் இருந்தபடியால் "நடை'க்கு உகந்த கவிதைகள், கதைகள், மொழி பெயர்ப்புக்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு முத்துசாமிக்கு வந்தது. பத்து இதழ்கள் வெளி வந்த நடையில் சி.மணியும்,  முத்துசாமியும் நிறையவே எழுதினார்கள். முத்துசாமியின் சிறுகதைகளான இழப்பு, நடப்பும் "நடை'யில் வெளி வந்தது. 

அதோடு அவர் "அப்பாவும் பிள்ளையும்',  "காலம் காலமாகி' என்று இரண்டு நவீன நாடகங்களையும் எழுதினார். நாடகத்தின் வசனமும், காட்சியமைப்பும் புத்தம் புதிதாக இருந்தன. மரபான நாடகம் படித்தவர்களுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. முத்துசாமி சிறுகதைகள் புரியவில்லை என்று சொல்லப்பட்டது போல அவர் நாடகங்களும்  சொல்லப்பட்டன.  புரியவில்லை என்று பலரும்  சொல்லிக் கொண்டு இருந்த  "காலம் காலமாகி',  "அப்பாவும் பிள்ளையும்',  "நாற்காலிக்காரர்'  ஆகிய நவீன நாடகங்களை எழுதப்பட்ட விதமாகவே அரங்கேற்றினார்.  பழைமையில் அவர் புதுமை கண்டார்.

- அடுத்த இதழில்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com