சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 43: டோக்கியாவில் ஹாலோவீன் திருவிழா!- சாந்தகுமாரி சிவகடாட்சம்

மனித சமுதாயத்தின்,  மிகப் பழமையானதும், வலிமையானதுமான உணர்ச்சி பயம்.  மிகப் பழமையானதும்,  வலிமையானதுமான பயம் என்பது, தெரியாத, அறிவுக்கு எட்டாதவற்றைப் பற்றிய பயம். 
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 43: டோக்கியாவில் ஹாலோவீன் திருவிழா!- சாந்தகுமாரி சிவகடாட்சம்

மனித சமுதாயத்தின்,  மிகப் பழமையானதும், வலிமையானதுமான உணர்ச்சி பயம்.  மிகப் பழமையானதும்,  வலிமையானதுமான பயம் என்பது, தெரியாத, அறிவுக்கு எட்டாதவற்றைப் பற்றிய பயம். 

- எச்.பி. லவ் கிராஃப்ட் 


""ஆதி மனிதனிடம் ஆவிகளைப் பற்றியும் பேய்களைப் பற்றியும் இருந்த பயம், இந்த இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி உச்சியைத் தொட்டுவிட்ட நிலையில் கூட மனித சமுதாயத்திடம் இருக்கிறது என்பது, யாவரும் அறிந்ததே.

பேய் ஓட்டுவது, குறி கேட்பது, மந்திரித்த தாயத்துகளைக் கட்டிக்கொள்வது, இறந்துபோன முன்னோர்களின் மனதைக் குளிரவைக்க பல சடங்குகளைச் செய்வது, அவர்களின் ஆசியைப் பெற விரதம் இருப்பது என்பது இன்றளவும் நம் நாட்டில் நடைபெறுகிறது.  வயசுக்கு வந்த பெண்களைத் தனியே உட்கார வைக்கும்போது கூடவே சிறிது வேப்பிலையையும், ஒரு கத்தியையும் அவளுக்குத் துணையாக வைப்பது அவளைக் காத்து, கருப்பு அண்டக்கூடாது என்பதற்காகத்தான்.

இதுபோன்ற பழக்கங்கள் உலகம் முழுவதிலும், சிறிது மாறுபட்ட நிலையில் நிகழ்கின்றன. நான் சிறுமியாக இருந்தபோது  ஹாலோவீன் (ஏஹப்ப்ர்ஜ்ங்ங்ய்) திருவிழா என்று ஒன்று இருப்பதையே அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று அந்த திருவிழா அரங்கேறிய நாட்டிலிருந்து பரவி இந்தியா வரையில்,  ஹாலோவீன் கொண்டாடப்படுகிறது.

முதலில் ஹாலோவீன் என்றால் என்ன,  அது எதனால் கொண்டாடப்பட்டது, என்பதை அறிந்து கொண்டால்தான் நான் அமெரிக்காவிலும், பிறகு டோக்கியாவிலும் கலந்து கொண்ட ஹாலோவீன் திருவிழாவைப் பற்றியும், அதிலும் டோக்கியாவில், ஷிபுயா (நட்ண்க்ஷன்ஹ்ஹ) பகுதியில் தங்கள் கலாச்சாரத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஹாலோவீனைக் கொண்டாட ஒரு மில்லியன் ஜப்பானியர்கள் கூடியதைப் பார்த்து மிரண்டு, பிறகு மகிழ்ந்து, அவர்களோடு கலந்து கொண்டாடியதை சொல்லமுடியும்.

செல்ட்ஸ் (இங்ப்ற்ள்) என்று அழைக்கப்பட்ட பழங்குடி மக்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைக்கு அயர்லாந்து என்று அழைக்கப்படுகிற இடத்திலும், இங்கிலாந்திலும், வடக்கு பிரான்ஸ் நாட்டிலும் வாழ்ந்து வந்தார்கள்.  அவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதியைத் தங்களது புதிய வருடப்பிறப்பாகக் கொண்டாடினார்கள்.

இந்த நாள் கோடைக்காலம் மற்றும் அறுவடை முடிந்து குளிர்காலமும், இருளும் சூழ்ந்து கொள்ளும் காலமாக, மனித குலத்திற்கு அழிவைக் கொண்டுவரும் என்று நம்பினர். அதுமட்டுமல்ல புதிய வருடத்தின் முந்திய இரவு இறந்து போனவர்களுக்கும்,  உயிர்ப்போடு இருப்பவர்களுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு சுருங்கி,  ஆவிகள் பூமியில் உலாவரத் தொடங்கும் என நினைத்தார்கள்.

பூமியில் இப்படி நுழையும் ஆவிகள், மனிதர்களுக்கும், குளிர்காலத்திற்காக சேமிக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களுக்கும் அழிவை உண்டாக்கும், என்பதினால் மலை உச்சிகளிலும், தெருமுனைகளிலும், தீமூட்டி, அதில் காய்ந்த பயிர்களை எரித்து, மிருகங்களைப் பலி கொடுத்து ஆவிகளைத் திருப்திப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

ஆவிகள் பூமிக்குள் நுழையும்போது, மதகுருக்களுக்கு, எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் சக்தியைக் கொடுக்கின்றன. அதனால் குருமார்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளை இருளும், குளிரும் சூழ்ந்து துன்புறுத்தும் குளிர்காலத்தைத் தாங்க மனதுக்கும், உடலுக்கும் சக்தியைக் கொடுக்கும் என்று நம்பினார்கள்.

இப்படி, அக்டோபர் 31-ஆம் நாள் இரவை சாம்ஹேய்ன் (Samhain)  என்று கொண்டாடி தங்களை மிருகங்களின் தலைகளையும், தோலையும் கொண்டு அலங்கரித்துக் கொண்டார்கள். திருவிழா முடிந்ததும், அணைந்துபோன தீயை மீண்டும் மூட்டி அது தங்களைக் குளிர்காலத்தில் காப்பாற்றும் புனிதத் தீயாகக் கொண்டாடினார்கள்.

ஒன்பதாவது நூற்றாண்டில் செல்ட்ஸ் வாழ்ந்த பகுதிகளில் கிருஸ்துவ நம்பிக்கைகள் பரவத் தொடங்கியது. ஆல் சோல்ஸ் டே (All Souls Day) என்று எல்லா ஆன்மாக்களின் நாள் என்று இறந்தவர்களுக்காக தேவாலயங்கள் கொண்டாடிய நாள், சாம்ஹேய்ன் என்று செல்ட்ஸ் மக்கள் கொண்டாடிய இறந்துபோனவர்களுக்கான நாளோடு கைகோர்த்துக் கொண்டது. 

தீ மூட்டுதல், ஊர்வலங்கள், குருமார்கள், தேவதைகள் மற்றும் பிசாசு, பேய்களைப் போல உடைகளை அணிந்து கொள்வது, நடனமாடுவது என்று இரண்டு திருவிழாக்களுக்குமான ஒற்றுமை பிறகு பேரிலும் வந்துவிட்டது.

ஆல் சோல்ஸ் டே வை ஆல் ஹாலோஸ் (All Hallows) என்றும் அழைத்தனர். ஆங்கிலத்தில் இதற்கு ஆன்மா என்ற அர்த்தமும் இருந்ததால், செல்ட்ஸ் பகுதிக்கு, உரித்தான சாம்ஹேய்ன்ஸ் திருவிழா ஆல் ஹாலோஸ் ஈவ் என்று வழங்கப்பட்டு கடைசியில் ஹாலோவீன் என்று ஆனது.

செல்ட்ஸ் மக்கள், அமெரிக்காவில் குடிபுகுந்த போது தங்களோடு ஹாலோவீன் திருவிழாவையும், அதை ஒட்டிய நம்பிக்கைகளையும், கேளிக்கைகளையும் கொண்டு சென்றனர். அமெரிக்க குடிமக்களுக்கு ஹாலோவீன் திருவிழா ஒரு கேளிக்கை திருவிழாவாக மாறிப்போனது. அவர்களும் அந்தத் திருவிழாவைத் தீவிரமாகக் கொண்டாடத் தொடங்கினர்.

நான் ஒருமுறை அமெரிக்கா சென்ற சமயம் ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்படும் நாளுக்கு சற்று முன்னதாக அமைந்தது. எங்கு பார்த்தாலும் கரும் மஞ்சள் நிற பூசணிக்காய், அது பொம்மையாகவோ அல்லது சுவிட்சைப் போட்டால் எரியும் விளக்காகவோ அல்லது கடைத்தெருக்களில் பெரிய காயாகவோ கொலுவிருந்தது. மேலும், வைக்கோலினால் செய்யப்பட்ட தொப்பிகள், பொம்மைகள், வயல்களில் பறவைகளை விரட்ட வைத்திருக்கும் வைக்கோல் பொம்மைகள் என்று அசத்தின.  அதுமட்டுமா, பேய், பிசாசுபோல வேடம் போட்டுக்கொள்ளத் தேவையான உடைகளும் மற்ற உபகரணங்களும் விற்கப்பட்டன.

இந்த மஞ்சள் பூசணிக்காய்கள் எப்படி ஹாலோவீன் திருவிழாவின் முக்கிய அம்சமானது என்பதற்கும் ஒரு சரித்திர நிகழ்வை சொல்லுகிறார்கள். செல்ட்ஸ் பழங்குடியினர் சாம்ஹேய்ன் திருவிழாவைக் கொண்டாடியபோது சிகப்பு முள்ளங்கி காய்களை செதுக்கி அதில் பல ஓட்டைகளைப் போட்டு, பிறகு நடுவில் எரியும் அடுப்பு கரியை வைத்து அந்த விளக்கை முற்றத்திலும், ஜன்னல்களிலும், வாசல்படிகளிலும் வைத்திருக்கிறார்கள். இப்படி வைக்கப்பட்ட விளக்குகளில் இருந்து வெளியேறும் வெளிச்சமும், புகையும் வீட்டின் உள்ளே தீய சக்திகளை நுழைய விடாதாம்.

பின்னாளில் அமெரிக்காவில் குடியேறிய செல்ட்ஸ் அங்கே பயிராகும் பெரிய, பெரிய மஞ்சள் பூசணிக்காய்களின் அழகில் மயங்கி, சிகப்பு முள்ளங்கியை ஒதுக்கி மஞ்சள் பூசணியில், முகத்தைப் போல செதுக்கி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதிகளைக் களைந்து, அங்கே விளக்கை ஏற்றி வைக்க, அந்த வழக்கம் இன்று உலகெங்கிலும், ஹாலோவீன் என்றால் மஞ்சள் பூசணியில் எரியும் விளக்கு என்று அடையாளப்பட்டுப் போனது.


- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com