தினமணி கொண்டாட்டம்

பிடித்த பத்து: மனித குலத்தின் மாசற்ற ஒளிவிளக்கு!

DIN

இயக்குநர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு தென்னக மொழிப்  படங்களிலும் நடித்தவர்.  சின்னதிரையிலும் மின்னியவர். தனக்கு "பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார் "கடலோரக் கவிதைகள்' நாயகி ரேகா.


மரியாதை:  அன்று நான் நடிக்க வந்தபோது முன்னாலிருந்த நடிகைகள் எல்லோரிடமும் அன்பாக மரியாதையாக நடந்து கொள்ள யாரும் எங்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை.  ஸ்ரீவித்யாவையோ, ஸ்ரீ தேவியையோ பார்த்தால் நாங்கள் மரியாதை கொடுப்போம்.  ஆனால் இன்று வரும் நடிகைகள் பலருக்கும் அது தெரியாமல் போவது மிகவும் வருத்தமான ஒன்று. எண்ஸ்ங் Give respect and take respect என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது இப்பொழுதெல்லாம் சொல் அளவில் தான் இருக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது. 

சாப்பாடு: ஓணம் பண்டிகை வந்துவிட்டால் எனக்கு கொண்டாட்டம்தான். சக்கப் பிரதமன், அட பிரதமன், ஓலன், காலன், புளிச்சேரி என்று பல வகைகளை இந்த ஓணம் பண்டிகை நாக்குக்கு சுவை சேர்க்கும்.  இதில் சிறப்பு என்னவென்றால், இது போன்ற 27 வகை பதார்த்தங்கள் இருக்கும். நானும் எனது குடும்பத்தினரும் சந்தோஷமாக சாப்பிடுவோம். அதுமட்டுமில்லாமல், அசைவ வகைகளில் எனக்கு மிகவும் விருப்பமானது பிரியாணி. 

மலை வாசஸ்தலம்: எனக்கும் எனது கணவர் ஹரீஷுக்கும் விருப்பமானது மலையும் மலை சார்ந்த பிரதேசங்களும்தான். அவர் வாங்கிப் போட்டுள்ள இடங்கள் கூட  கொடைக்கானல், மூணார் போன்ற பல்வேறு மலையை சார்ந்த இடங்களில்தான். அங்கே உள்ள இயற்கை காட்சிகள், குறிப்பாக மேகங்கள் நம்மை தொட்டு செல்லும் அழகு, சில்லென கொட்டும் அருவி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று இருக்கும் மரம் செடிகொடிகள், இவை யாவும் என்னையும் எனது குடும்பத்தையும் மிகவும் சந்தோஷப்படுத்தும்.   

மதர் தெரசா: கருணை உள்ளம், ஈகை குணம், உதவும் மனப்பான்மை, அன்பு, மனிதரில் தெய்வமாக திகழ்பவர் மதர். தொழு நோய் வந்தவர்களை தொடுவதற்கே நாம் யோசிப்போம். அருவருப்பு என்றால் என்ன என்றே தெரியாதவர். ஆனால் அவரோ அவர்களை அணைத்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, மருத்துவ உதவியும் செய்து, காப்பாற்றும் மனித தெய்வம்.  இந்த மனித குலத்தின் மாசற்ற ஒளிவிளக்கு.  அவரை எவ்வளவு போற்றினாலும் தகும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: அவரை iron lady என்று சொல்வார்கள். அதை விட அவரை நான் "தங்க மங்கை' என்று அழைக்கவே விரும்புவேன். அவரை நடிகையாகவும் நான் விரும்புவேன். அரியாசனத்தில் அமர்ந்து நல்லாட்சி செய்தவராகவும்  அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் அவரை பற்றி கேள்விப்பட்ட வரைக்கும் அவரது உதவும் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது.  அவர் இன்னும் சில காலம் வரை நம்மோடு இருந்து மக்களுக்கு இன்னும் பல்வேறு நல்ல விஷயங்களை செய்ய ஆண்டவன் உதவி இருக்கலாம் என்பது என் விருப்பம்.

வீடு: என்னதான் வெளிநாடு,  உள்நாடு என்று பறந்து பறந்து சுற்றி திரிந்தாலும் எனது வீடு தான் எனக்கு சொர்க்கம். ஒவ்வொரு பொருளும் நான் பார்த்து, பார்த்து விரும்பி வாங்கிய பொருள்கள், எவ்வளவு வேலை இருந்தாலும், மன நிம்மதிக்காக நமது வீட்டைதானே  எல்லோரும் நாடுகிறோம்.  சுகமான தூக்கம் வருவதும் இங்கு மட்டும் தானே. இப்படி எல்லாவற்றிலும் முதன்மையானது நாம் ஒவ்வொருவர் வாழும் நம் வீடுதான். அதுவும் சொந்தமாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.  அந்த வீட்டை யார் தான் விரும்பாமல் இருப்பார்கள். My nest is the best. 

சமையல்: எனக்கு பெரிதாக இதுதான் தேவை என்று இல்லை. எனக்கு புளியும் உப்பும் சேர்ந்த கஞ்சி இருந்தாலும் போதும்.  ஆனால் கணவரும் குழந்தைகளும் இருந்து விட்டால் வீட்டில் சைவம், அசைவம்  என்று பல்வேறு உணவு பண்டங்களை செய்து அவர்களை அசத்தி விட நினைப்பேன். என்னதான் ஓட்டலில் சாப்பிட்டாலும் நானே சமைத்து என் கணவருக்கும், குழந்தைகளுக்கும் பரிமாறும் போது கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது.  குழந்தை பிறந்த பிறகு எனக்கு மட்டும் அல்ல என் கணவருக்கும் எல்லாமே என் மகள் தான். அவளுக்காக புதுசு புதுசாக சமையலை கற்றுக் கொண்டு மகிழ்விக்க நான் முயற்சி செய்கிறேன்.

பட்டுப் புடவை: பெண்ணாக பிறந்து விட்டால் பட்டுப் புடவை விரும்பாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?  எனக்கும் பட்டுப் புடவை மேல் விருப்பம் அதிகம்.  எனது  வார்ட்ரோபில் சுமார் 50 பட்டுப் புடவைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு புடவையை 10 தடவை உடுத்தினால் அதிகம்.  அதன் பிறகு அந்த புடவையை யாருக்காவது கொடுத்து விடுவேன். வாங்கிய புடவைகளை விட, இப்படி கொடுத்த புடவைகளே அதிகம். நாம் ஆசைப்பட்டு வாங்கிய புடவையை உடுத்திய பிறகு அதை ஆசைப்படும் நபருக்கு வழங்கினால் அவரது அசையும் தீரும் அல்லவா? இதுவே என் எண்ணம்.

குழந்தைகள்:  மனித இனத்தின் பொக்கிஷங்கள். கள்ளமில்லா உள்ளத்தின் சொந்தக்காரர்கள். நல்ல மனங்களின் கண்ணாடி.  அப்படி அவர்கள் உள்ள ஒரு வீட்டில் இருந்து விட்டால் அந்த வீடே சந்தோஷத்தின் இருப்பிடம், மகிழ்ச்சியின் சிறப்பிடம்.   அந்த சந்தோஷம் என் வாழ்க்கையிலும் ஆண்டவன் கொடுத்திருக்கிறார். என் மகள் அபி. அவளை நானும் எனது கணவரும் கண்ணுக்குள் மணியாக வளர்க்கிறோம். இன்று அவளுக்கு 19 வயதாகிறது. எஞ்ஜினீயரிங் நாலாவது ஆண்டு படித்து வருகிறார்.  எனக்கு எல்லாமே அவள் தான்.

அளவான ஆசை: ஆசை இருப்பதை தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அது அளவானதாக இருக்க வேண்டும். எனக்கு என்று ஆண்டவன் கொடுத்திருப்பதே அதிகம் என்று நான் நினைக்கிறேன். காரணம்  எப்பொழுது, என்ன எனக்கு கொடுக்க வேண்டும் என்றுஅவனுக்கு தெரியும். அதற்காக நாம் முயற்சியே செய்யாமலிருக்கவும் கூடாது. "முயற்சியுடையார்  இகழ்ச்சி அடையார்'  என்பது பழந்தமிழர் வாக்கு. என்னை பொறுத்தவரை நான் அளவான ஆசை உடையவள். என் விருப்பங்கள் கிடைக்க கூடியவை. கிடைத்தது நிறைவானவை என்ற எண்ணம் என்றும் என் மனதில் இருக்கும். அளவான ஆசையே வளமானது, இல்லையா.   


-  சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT