தினமணி கொண்டாட்டம்

ரசிகர்களின் எதிர்பார்ப்பே நடிகைகளுக்கு நிர்பந்தம்!

ஜி. அசோக்

தமிழ், ஹிந்தி, தெலுங்கு,  கன்னடம் என பல மொழி சினிமாக்களில் 15 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார் ஸ்ரேயா சரண். ரஷ்ய டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆன்ட்ரியை காதல் திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, திருமணத்துக்குப் பின் தேர்வு செய்திருப்பது தமிழ் சினிமாவை.  கார்த்திக் நரேன் இயக்கும்  "நரகாசூரன்'  படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக நடித்து முடித்திருக்கிறார்.  அவருடன் ஒரு சந்திப்பு...

சமீப சினிமாக்களில் "நரகாசூரன்' படத்துக்கு எழுந்துள்ள எதிர்பார்ப்பு முக்கியமானது... இதில் எப்படி கை சேர்ந்திருக்கிறது உங்கள் கதாபாத்திரம்....

எந்த இயக்குநரும் 100 சதவீதம் முழுமையான படம் எடுக்க முடியாது. அப்படி எடுத்து விட்டேன் என்று சொன்னால்,  அது பக்குவப்பட்ட இயக்குநரின் வார்த்தைகளாக இருக்க முடியாது.  ஆனால் இந்தப் படத்தை பொருத்தவரை இயக்குநர் கார்த்திக் நரேனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  அதிகமாக கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தாலும், கதையை தாங்க கூடிய முழுமையான கதாபாத்திரத்தில் இதுவரை நடித்ததில்லை.  இது எனக்கு முதல் வாய்ப்பு.  நான் படம் பார்த்து விட்டேன். வியந்துபோனேன்.

கலைத்துப் போட்ட காய்களை, ஒவ்வொன்றாக எடுத்து சரியாகப் பொருத்தும் புதிர் விளையாட்டு போன்றதுதான் இந்தப் படமும்.  காய்களை சரியாகப் பொருத்தாவிட்டால் முழுமையான படம் கிடைக்காது.  அப்படித்தான் இந்தப் படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும். எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. எந்தக் கதாபாத்திரத்தையும் தனியே பிரித்து எடுக்க முடியாது.  முதல் ஐந்து நிமிடங்கள் மிக முக்கியம். அப்போதுதான் உங்களுக்கு கதை புரியும். ஹாலிவுட் சினிமாக்களில் இது போன்று நிகழும்.  இப்போது தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறது.  கார்த்திக் நரேன் திறமையான இயக்குநர்.  

அரவிந்த்சாமி... எந்தக் காலக்கட்டக் கதையிலும் பொருந்தி நடிக்கிற நடிகர்... எப்படி இருந்தது அனுபவம்?

எனது கதாபாத்திரத்தால்தான் கதையில் முக்கிய திருப்பம் நடக்கிறது. அரவிந்த்சாமி துருவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   நான் அவரது மனைவியாக, கீதா என்ற கதாபாத்திரம்.  மிகவும் வெகுளியானப் பெண். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத நகைச்சுவை உணர்வுமிக்க பெண்.  
அரவிந்த்சாமியின் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். சினிமாவின் அனைத்துத் துறைகளைப் பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரியும் என்பதைத் தெரிந்து கொண்டேன். 

இந்தக் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று பரிந்துரைத்தது அவர்தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை உண்மையாக்க இந்தப் படத்தில் உழைத்திருக்கிறேன். அவருடன் இணைந்து வரும் காட்சிகளில் நான் இன்னும் அழகாகத் தோன்றுகிறேன் என்று படம் பார்க்கும்போது உணர்வீர்கள். தெலுங்கில் நடித்த  "மனம்'  தெலுங்குப் படத்துக்குப் பிறகு நான் மிகவும் காதலிக்கும் இன்னொரு படம் என்றால், அது இதுதான்.  அரவிந்த்சாமிக்கு நன்றி. 

கமர்ஷியல் கடந்து சிறந்த நடிகை என்கிற எல்லைக்கு எல்லோரும் வருவார்கள்... அப்படி ஒரு முயற்சிகளில் இறங்குவீர்களா?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஏதோ ஒரு பெரிய வாய்ப்பு வரும் என்று வீட்டில் யாருமே சும்மா இருக்க முடியாது.  அதுதான் காரணம்.  அதே சமயம், நீங்கள் நினைக்கிற மாதிரி சீரியஸான படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பது மாதிரியான எண்ணம் எல்லாம் எனக்கு இருந்தது இல்லை.  

ஒரு நடிகை இந்தப் பாத்திரங்களுக்குத்தான் சரி என்று தீர்மானிக்கப்படுவது எந்த விதத்திலும் நல்லது இல்லை. சொல்லப்போனால், தெலுங்கு மசாலா படங்களில் நடிப்பது எனக்குக் கூடுதல் சந்தோஷம்.  அது நான் புறப்பட்ட இடம் என்பதால்.  

ஒரு படத்தில் ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கு மட்டும்தான் ஆடப்போகிறேன் என்றால், இன்னும் சந்தோஷம்.  ஏனென்றால், எனக்கு என்று எந்தப் பொறுப்பும் அந்தப் படத்தில் இருக்கப்போவது இல்லை; ஒரு விருந்தாளி மாதிரி வந்து போகலாம். 

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், திட்டமிட்டு வாழ்வது என்பதே என்னுடைய இயல்புக்குச் சரிவராத விஷயம். என்ன நடக்கிறது பார்க்கலாம். ஒரு நடிகையாக இருப்பதன் பெரிய சவால் என்ன...?

படம் இருக்கிறதோ, இல்லையோ... நடிகையாகவே இருக்க வேண்டி இருப்பது. முக்கியமாக உணவுக் கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி.   உடலை அப்படியே பராமரிக்க வேண்டும். பொழுது போகும்; ஆனால், சுவாரஸ்யமே இல்லாத விஷயங்கள் இவை.

எப்போதுமே ஒரு நடிகை அழகாக இருக்கத்தான் வேண்டுமா... அப்படியான நிர்பந்தத்தை உங்களுக்கு யார் உருவாக்குகிறார்கள்... 

ரசிகர்கள். அவர்களுக்காகத்தானே படம் எடுக்கிறார்கள்? சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்புதான். நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதுவே எங்களுக்கான நிர்பந்தம் ஆகிறது.

ரஜினி, விஜய் தொடங்கி சிம்பு வரை ஹீரோயின்... 15 வருட சினிமா வாழ்க்கை... ஆனால் இன்னும் தமிழ் சரியாக பேச வரவில்லை... இது வருத்தமாக இல்லையா?

ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அதில் தொடர்ந்து உரையாடவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அப்படி உரையாடுவதற்கு சரியான தருணங்கள் அமையவில்லை.  அதற்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாதது ஒரு காரணம்.  

தமிழில் பிறர் பேசுவதை ஓரளவுக்குப் புரிந்து கொள்வேன்.  படப்பிடிப்பில் வசனங்களின் அர்த்தம் தெரிந்துகொண்டு ஒத்திகை செய்து, பேசி நடிப்பேன்.  
இந்தப் படத்தில் எனக்கு மான்சி என்ற பாடகி குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் எனது உதட்டசைவுகளைக் கொண்டு நானே குரல் கொடுத்திருப்பதுபோல் நீங்கள் உணர்வீர்கள். 

அதிக எண்ணிக்கையில் தெலுங்குப் படங்களில் நடித்ததால் ஓரளவு தெலுங்கில் பேச முடியும். என்னைப் பொருத்தவரை திரைக்கதையை எழுதுபவர்களுக்கும் படத்தை இயக்குபவர்களுக்கும் கட்டாயம் மொழி தெரிந்திருக்க வேண்டும். 

என்னைப்போன்ற ஒரு நடிகைக்கு மொழி தடையாக இருக்கப்போவதில்லை. நடிகருக்கு கதாபாத்திரம் பொருந்துகிறதா என்பதுதான் முக்கியம். விரைவில் நல்ல தமிழில் பேசுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT