ரஷ்ய நாட்டு நாடோடிக்கதை: கடல் அரசனின் மகள்!

ஒரு காலத்தில்  நவ்கோரோட் என்கிற கடல்  சூழ்ந்த  நகரில் சாட்கோ  என்கிற இளம் இசைக்கலைஞன் வாழ்ந்து வந்தான்.
ரஷ்ய நாட்டு நாடோடிக்கதை: கடல் அரசனின் மகள்!

ஒரு காலத்தில்  நவ்கோரோட் என்கிற கடல்  சூழ்ந்த  நகரில் சாட்கோ  என்கிற இளம் இசைக்கலைஞன் வாழ்ந்து வந்தான்.

அங்குள்ள செல்வந்தர்கள் சிலர்  தங்கள்  இல்லங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இசை விருந்தளிக்கும்படி, சாட்கோவை அழைப்பது வாடிக்கை.  அவன் தன் வசமுள்ள பன்னிரண்டு நரம்புடன் கூடிய இசைக்கருவியை  - அதன் பெயர்  கஸ்லி  - எடுத்துச் செல்வான்.

இறுதியில் அவனுக்கு  சொற்ப   காசுகளே பரிசாகக் கிடைக்கும்.

பெரும் பணக்காரர்கள் வசிக்கும் அந்த  ரஷ்ய நகரில் தானும் வாழ்வதை நினைத்துப் பெருமை  கொள்வான்.  

சிலசமயம், அவன் எதையோ  இழந்ததைபோல்  சோகமாகக் காணப்படுவான். விருந்துகளில் நடனமாடிய  இளம் மங்கையர்  சிலர்  இவனைப் பார்த்து புன்முறுவல் பூப்பதை நினைத்துக் கொள்வான்.  

ஒருநாள் மாலை,  அகண்ட  ஓல்கா நதிக்கரையோரம், சாட்கோ சோகமாய் நடந்து கொண்டிருந்தான்.  அவனுக்குப் பிடித்தமான  இடத்துக்கு வந்து சேர்ந்தான். முதுகின் பின்னே  அவனது  இசைக்கருவி  தொங்கிக் கொண்டிருந்தது.  

"என் அன்பான  ஓல்கா  நதி'  தனக்குள் முணு முணுத்துக் கொண்டான்.

""பணம் படைத்தவன், ஏழை மனிதன் யாவருமே  உனக்கு ஒன்றுதானே நீ மட்டும் ஓர் இளம் மாதுவாய் இருந்தால்,  உன்னை மணந்து கொண்டு நான் மிகவும், நேசிக்கும் இந்த நகரத்தில் நிம்மதியாய் வாழ்வேன்''.

இசைக்க ஆரம்பித்தான் திடீரென்று , அலைகள் ஆவேசமாய் சீறின.

""ஓ!  கடவுளே காப்பாற்று'' சாட்கோ பயந்து அலறினான்.

அப்போது, நீர்த்திரளிலிருந்து மிகப்பெரிய  ரோஜா மலரொன்று  மெல்ல விரிந்தது.  அதிலிருந்து  பூதம் போன்ற ஒரு மனிதன் மேலெழும்பினான்.

அவன் தலையில் முத்துகள் பதித்த ஒரு கிரீடம்  இருந்தது.  அதனைச் சுற்றிலும் கடற்பாசி வளையமிட்டிருந்தது.  அந்த மனிதன் பேசினான்:

""நான் இந்த கடலின் அரசன்.   ஓல்கா அரசி என் மகள்களில்  ஒருத்தி... அவளைப் பார்ப்பதற்காக வந்தேன்.  உன் இசையொலி  இந்த ஆற்றின் அடித்தளத்தில் கேட்டது.  என்னே! அற்புதமான பாடல்''

""நன்றி''  என்றான்  சாட்கோ.

"" விரைவில் நான் என் அரண்மனைக்கு வந்ததும்,  உம்மை அழைக்கிறேன்''.

""மகிழ்ச்சி உங்கள் அரண்மனை எங்கேயிருக்கிறது?   அங்கு நான் எப்படி வரட்டும்''.

""இதென்ன கேள்வி கடலுக்குகடியில்தான்.  உன்னால் எளிதில்  வழியைக் கண்டுகொள்ள முடியும்.  ஆனால், உனக்குக் கிடைக்கவேண்டிய பரிசுக்காகக் காத்திருக்காதே''

""இந்த உலகம் அதனைச் சரியாய்ப் புரிந்து  கொண்டிருந்தால்,  நீ என்றோ செல்வந்தனாகியிருப்பாய்'' என்றபடி அந்த மனிதன்  திடுதிப்பென்று நீருக்குள் குதித்து மறைந்து போனான்.

கப்பல்துறைக்கு வந்து சேர்ந்து அந்த கரையைவிட்டுப் புறப்படும் கப்பலில் ஏறினான்.

கப்பல் ஓல்கா நதிக்கப்பாலுள்ள லடோகா  ஏரியைத்தாண்டி,  பின்லாந்து வளைகுடாவைத் தாண்டி, பால்டிக் கடல்மீது சென்று கொண்டிருந்தது.

ஆடாமல்  அசையாமல்  சென்று கொண்டிருந்த அந்தக் கப்பல் திடீரென்று நிலைக்குத்தி  நின்றது.  அநேகமாக  அந்தக் கப்பலை  ஒரு பூதாகரமான, வலுவான  கரம் கவ்விப் படித்திருக்க வேண்டும். 

கப்பலில் பயணித்த சிலர் அச்சத்தில் அலறினர்.

சிலர் கடவுளை நோக்கிக் கும்பிட்டார்கள்.

""இது கடல் அரசன் வேலையாகத்தான் இருக்கும்'' என்றான் கப்பல் கேப்டன்.
""நம்மில் ஒருவனை அவன் தேடுகிறான் போலும்.  யாரும்  அஞ்ச வேண்டாம். அவன் யாரைத் தேடுகிறான் என்று நானறிவேன்''  என்றான்   சாட்கோ, எல்லாரும் அவனைப் பார்க்கும்போதே, சாட்கோ  பக்கவாட்டிலிருக்கிற தடுப்பின் மேல் ஏறினான்.

""அவனைப் பிடியுங்கள்!''  கேப்டன் அலறினான்.  ஆனால், சிலர் பாய்ந்து பிடிப்பதற்குள்,  சாட்கோ  பொங்கியெழும்  அலைகளுக்குள்  தொப்பென்று விழுந்து மறைந்தான்.
 
கடலின் ஆழத்தில் அவன் முன் ஒரு வெள்ளை மாளிகை தென்பட்டது. அதன் பவழ நிறக் கதவை  வலிக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.  உள்ளே  விரிந்து நீண்ட   அறையொன்று  இருந்தது.

விருந்தாளிகள் புடை சூழ, எண்ணற்ற இளம் நங்கையர்  கடற்கன்னிகள், கடலரசனின் புதல்விகள். சற்று  தொலைவில்  அரசனும், அரசியும் வீற்றிருந்தனர்.

"" நல்வரவு இசைக்கலைஞனே!  சரியான  நேரத்துக்கு  வந்துவிட்டாய்.  நடனம் தொடங்கட்டும்''  அரசன் உத்தரவிட்டான்.

 சாட்கோ, இசைக்கருவியை  மீட்டத் தொடங்கினான். இன்னிசைப் பொழிவில்   விருந்தாளிகள்  நயமாக ஆடினர்.

""உம்!  இன்னும் வேகமாக... வேகமாக வாசி!''

சாட்கோ  ஆர்வம் பொங்க பொங்க வாசித்தான்.  கடலரசனின் நடனத்தில்   ஆவேசம்.  மற்றவர்கள் யாரும் ஆடாமல்,  மன்னனையே பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.

அரசி திகைத்துப் போய்,  ""போதும் .. உன் இசையை நிறுத்து!''  என்றாள்.

""உன்னிசை இன்னும் இரண்டு நாட்களுக்கு  என்னை  ஆடவைக்கும்.  அற்புதம் கலைஞனே  இப்பொழுது உனக்கு ஒரு பரிசு ,  என் மகள்களில்  ஒருத்தியை நீ மணந்து கொள்ளலாம்.  நீ யாரை விரும்புகிறாய்''  என்ற கடலரசன், தன் மகள்களை அணிவகுத்து நிற்கச் சொன்னான்.

""ஏன்  என்னாச்சு, இசைஞானியே  யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கவலையா?  சரி நானே  உனக்கு  அளிக்கிறேன். ""அவள்தான் ஓல்கா  இளவரசி''. 

 இளவரசி அழகு ததும்ப இறங்கி வந்தாள். விழிகள்  மின்னின. அதரங்களோரம்  புன்முறுவல் இழையோடியது.

"" அன்புக்குரிய!  சாட்கோ நாம் இணைவதற்கு  இவ்வளவு காலம் ஆகிவிட்டது. நீ கரையோரம்  இசைத்த பாடல்களை நான் பல ஆண்டுகள் ரசித்து என்னையே  இழந்திருக்கிறேன்'' என்றாள் இளவரசி.

""ஓ, ஓல்காவே இந்த நதியைப் போலவே  நீ மிருதுவானவன்''

அப்போது க, டல் அரசி அவன்  செவிகளுக்குள் கிசுகிசுத்தாள்,   ""நீ ஒரு நல்ல மனிதன் சாட்கோ  உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன்.  நீ அவளை ஒருமுறை தழுவி, முத்தமிட்டால் போதும் நீ உன் நகரத்துக்குத் திரும்பவே முடியாது' என்றாள்.

அன்று இரவு.  சாட்கோ மணப்பெண்ணுடன் இருக்க,  அவள் பேரழகில்  மயங்கினான்.

ஆனால்,  கடல் அரசி சொன்ன  வார்த்தைகள் அவனை  முடமாக்கிப்போட்டது. "நீ ஒருபோதும் உன் நகரத்துக்குத் திரும்பவே முடியாது'

இளவரசி கெஞ்சினாள்.  ""அன்புக்குரியவரே,  ஏன் என்னைத் தழுவத் தயங்குகிறீர்''.

அதற்கு, சாட்கோ,  ""எங்கள் நகரத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது.  முதல் இரவு அன்று, அணைக்கவோ, முத்தமிடவோ  கூடாது'' என்றான்.

""அப்படியென்றால், உங்களால் என்றும் அப்படிச் செய்ய முடியாது'' என்று விரக்தி மேலிட  அந்த இளவரசி  கடந்து போனாள்.

அடுத்தநாள் சாட்கோ கண்விழித்தான். எதிரே,  இளவரசி ஓல்கா  இல்லை.   அது ஓல்கா நதி! அதனை ஒட்டித் தெரிந்தது, நவ்கோரோட்  நகரின் எல்லை!

""ஆகா  என் வீடு!''   சாட்கோ ஆனந்தக் கண்ணீர் உகுத்தான். 

அது..  தன் சொந்த இடத்துக்கு வந்துவிட்டதாலோ,  அல்லது  இழப்பின் துயரத்தினாலோ  அல்லது  இரண்டுமே கூட காரணமாக இருக்கலாம்.

பின்னாட்களில், சாட்கோ  மிகப்பெரிய தனவந்தனாக  மாறினான்.  ஒரு கப்பலை  விலை கொடுத்து வாங்கி,  நவ்கோரோட் நகரிலேயே பெரிய வணிகனான்.  ஓர் இளம் பெண்ணை  மணம்புரிந்து, பிள்ளைகளுக்குத் தந்தையானான்.

அநேக  விருந்துகளில் "கஸ்லி'யை இசைக்க தன் பிள்ளைகள் நடனமாட வாழ்க்கை இனிதே  நகர்ந்தது.

அவ்வப்போது,  மாலைப் பொழுதுகளில் நதிக்கரையோரம் அமர்ந்து, தனிமையில் இசைக்கருவியை  மீட்டிக் கொண்டிருப்பான்.  சில சமயங்களில், ஆற்றின் நடுவே  யாரோ  எழும்புவதும், பாடலை ரசிப்பதும், மறைந்து விடுவதுமாகத் தோன்றும்.

அது நிலவொளியில் ஒளிரும் ஓல்கா இளவரசியாகத்தான் இருக்கும்.

ஆங்கில வழி தமிழில் சந்திரா மனோகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com