தினமணி கொண்டாட்டம்

இது ஒரு நிறைவான பயணம்!

DIN

'துப்பாக்கி முனை'... ஒரு நல்ல ஒத்திசைவை, அலைவரிசையை எனக்கு கொண்டு வருகிற கதை. பெயருக்கு ஏற்றாற்போல் இது போலீஸ் கதை. அறிமுக இயக்குநர் தினேஷ் கதை சொன்னபோது என்னை உள்ளே போய் உட்கார வைத்தது. இதில் வித்தியாசம் காட்ட முடியும். வேறு ஓர் இடத்தை அடைய முடியும் என்று மனசுக்குப்பட்டது. ஒன்லைனில் சொன்னால் அன்றாட வாழ்க்கையின் மீது கொஞ்சம் கொஞ்சமாய் நாம் இழந்து கொண்டிக்கும் தருணங்களை மீட்டு தரும். "நாம சாப்பிடுகிற அரிசியில் நம்ம பெயர் இருக்கிறது உண்மை என்றால், என் துப்பாக்கியில இருக்கிற ஒவ்வொரு தோட்டாவுலேயும் குற்றவாளிகளோட ஜாதகமே இருக்கு என்பது என் நம்பிக்கை' டிரெய்லரில் வருகிற இந்த வசனம்தான் கதையின் மையம். ராமேஸ்வரம் நகரப் பின்னணியில் ஒரே நாளில் நடக்கும் கதை. எனக்கு 45 வயது போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். என் ஒரிஜினல் வயதை விட 15 வயசு அதிகமான கேரக்டர். பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இந்த முறையும் விக்ரம் பிரபுவிடம் அவ்வளவு தெளிவு.
 
 அடுத்தும் அறிமுக இயக்குநருக்கே வாய்ப்பு.... எப்படி வந்திருக்கிறது படம்...
 திரைக்கதையை படிக்கும்போதே ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த திருப்தி இருந்தது. சினிமா ஒரு கலை. நல்ல கதைகளுக்கு எப்போதுமே ரசிகனின் ஆதரவு உண்டு. ஒரு கதை என்பது எல்லாமே சேர்ந்தது. உணர்ச்சிகரமாகவும், மனசை உலுக்கவும், அதே நேரத்தில் மனித உணர்வுகளைத் தேடித் தருகிற படமாகவும் இருக்கும். என் இயல்பில் கதையின் போக்கில் வித்தியாசப்படுத்தி இருக்கிறேன். விற்பனை, வெற்றி என்பதை தாண்டி ஒரு நிறைவான படைப்பாக இது இருக்கும். அது எப்படி ரசிக்கப்படும் என்பதும் கவனத்தில் இருக்கிறது. நிச்சயம் ஒரு நல்ல படமாகவும் "துப்பாக்கி முனை' இருக்கும். இயக்குநர் தினேஷ், "அன்னக்கிளி' செல்வராஜ் சாரின் மகன். அப்பா-மகன் இருவரும் சேர்ந்துதான் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.
 கதை கிட்டத்தட்ட ஒரு நாவல் மாதிரி இருக்கும். அதை திரைக்கதையில் சுருக்கி சுவாரஸ்யம் தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவ்வளவு நேர்த்தி இருக்கும். கதையை சொல்லும் போதே நிறைய எமோஷன் வந்தது. காட்சிப்படுத்து ம் போது, பெரும்பாலான இடங்களில் அதை நான் உணர முடிந்தது. கதையின் கைகளைப் பிடித்துப் போகிற இயக்குநருடன் சேர்ந்து நடக்க வேண்டியது மட்டுமே என் கடமை. அதை நான் செய்திருக்கிறேன்.
 கதையை வெளிப்படையாக பேசுகிற நிலை இப்போது வந்திருக்கிறது... இந்த கதையின் உள்ளடக்கம் எப்படி...
 குற்றங்களுக்கான மூலம்? எங்கே என்று பார்த்தால் அது அங்குள்ளவர்களின் திட்டங்களால்தான் நிரம்பி இருக்கும். இதுவும் துரத்தல்கள் நிறைந்த கதை. எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் குற்றங்கள் குற்றங்கள்தான். எதுவுமே இங்கு புதிதாக உருவாகுவதில்லை. தொன்று தொட்டு எல்லா குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. காலக் கட்டங்களுக்கு ஏற்ப குற்றங்களும் நவீனமயமாக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. இதோ இப்போது அதிர வைத்த ரயில் கொள்ளை. சாதாரணமாக துளைக்க முடியாத ரயிலின் மேல்பாகத்தை சர்வ சாதாரணமாக துளையிட்டு போயிருக்கிறார்கள். இப்போது முதல் கட்ட துப்பு கிடைத்திருக்கிறது. இந்த மாதிரியான சம்பவங்களின் பின் தொடர்தல்தான் கதை. சாதாரணமாக கடந்து விட முடியாத படி இருக்கும் துப்பாக்கி முனை.
 போலீஸ் கதாபாத்திரம்தான் ஒரு நடிகனுக்கு பெரும் சவால் என்று சொல்லுவதுண்டு... இதில் எப்படி உருவம் கொடுத்திருக்கிறீர்கள்...
 ஏற்கெனவே "சிகரம் தொடு' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறேன். எந்த ஒரு ஹீரோவும் ஆக்ஷன் ஹீரோவாக திரும்பியதற்கு ஒரு போலீஸ் கதைதான் காரணமாக இருந்திருக்கும். அப்படித்தான் இதுவும். பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் ஏழெட்டு பேரை புதிதாக சந்தித்து பேசினாலே அதிகம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட செலவழிக்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். அதை சரியாக புரிந்து கதையில் கொண்டு வந்திருக்கிறோம். ரொம்பவும் சினிமாத்தனமாக போய் விடாமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து வந்திருக்கிறோம். வசனம், சூழல் என எல்லாமே கதையைப் புரிந்துக் கொண்டு, எடுத்து வந்திருக்கிறோம் நிறைவாக இருக்கும்.
 இவ்வளவு வெளிச்சம் இருந்தும், அதிகம் வெளியில் பார்க்க முடிவதில்லையே...
 எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கிற சினிமா பற்றி மட்டுமே எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானித்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல் கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக் கொண்டே இருக்கும். இது ஒரு நிறைவான பயணம்தான் எனக்கு. நான் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் அப்போதைய விலாசம். மனசுக்குள்ளேயே ஒரு வீடு. எனக்கு எந்தச் செய்தி அவசியமோ, அந்த விஷயம் என் காதுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. வீட்டிற்குப் போனதும் தொழிலிலிருந்து எப்படி துண்டித்து மற்றவர்கள் இருக்கிறார்களோ அதுதான் எனக்கும். இது செüகரியமா இருக்கு. வீடு, மனைவி, மக்கள் என ஒரு சேர இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறேன். இதுவே எனக்கு பிடித்திருக்கிறது.
 - ஜி.அசோக்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT