கூத்துக்கலையைக் காப்பாற்ற ஓர் இயக்கம்! - சா.கந்தசாமி

'கசடதபற' - இதழோடு அவர் நெருக்கமாக இருந்தார். அதற்குக் கதை, கட்டுரைகள் எழுதி கொடுத்ததோடு பிரசுரங்களின் தேர்விலும் பங்காற்றினார்
கூத்துக்கலையைக் காப்பாற்ற ஓர் இயக்கம்! - சா.கந்தசாமி

சென்ற வார தொடர்ச்சி...
'கசடதபற' - இதழோடு அவர் நெருக்கமாக இருந்தார். அதற்குக் கதை, கட்டுரைகள் எழுதி கொடுத்ததோடு பிரசுரங்களின் தேர்விலும் பங்காற்றினார். தமிழ் எழுத்தாளர்களிலேயே அவர் மனம் கவர்ந்தவர் என்றால், அது மெளனிதான். சிதம்பரத்திற்குச் சென்று அவரோடு உரையாடி வருவதையும் பழக்கமாகக் கொண்டிருந்தார். மெளனியின் "அழியாச் சுடர்' முதல் தொகுதியோடு மேலும் சில சிறுகதைகளையும் சேர்த்து தர்மு சிவராம் முன்னுரையோடு வெளிவர காரணமாக இருந்தார்.
மெளனியிடம் இருந்து ஒரு புதிய கதையை "தவறு' என்று பெயர் - அதனை வாங்கி வந்தார். அதனை உடனடியாகப் பிரசுரம் செய்வதில் ஆர்வமாக இருந்தார். ஆனால் "கசடதபற' அச்சுக்குப் போகும் நிலையில் இருந்தது. எனவே, "அடுத்த இதழில் வெளியிடலாம்'' என்றோம். 
அவரோ, "அப்படியானால் ஓர் அறிவிப்பு வெளியிடலாம். அடுத்த இதழில் மெüனியின் சிறுகதை'' என்றார். "கசடதபற' ஆசிரியராக இருந்த நா.கிருஷ்ணமூர்த்தியும், "இப்படி விளம்பரம் வெளியிடுவது நம் பழக்கமில்லை. அப்படிச் செய்தால் அதுவே ஒரு முன்னுதாரணமாகி விடும்'' என்றோம். 
"மெளனி மகத்தான எழுத்தாளர் அவர் நம் பத்திரிகையில் எழுதுவது நமக்கு பெருமை. எனவே அறிவிப்பு வெளியிட வேண்டுமென்று'' உறுதிபட குரலை உயர்த்திச் சொன்னார்.
மகிழ்ச்சியுற்றாலும் சரி; கோபம் கொண்டாலும் சரி அவர் உச்சத்தில் தான் பேசுவார். அது அவரது வழக்கம். அன்றும் அப்படித்தான் பேசினார். நாங்கள் அவர் சொன்னதை ஏற்க மறுத்து விட்டோம். 
"நீங்களெல்லாம் என்ன பெரிய கொம்பனா?'' என்று கேட்டுவிட்டு கோபத்தோடு வெளியில் சென்றார். அதிலிருந்து சில மாதங்கள் வரையில் அவரைச் சந்திக்க முடியவில்லை. "கசடதபற' செயல்பாடுகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. சென்னை கலைவாணர் அரங்கிலும், மாக்ஸ் முல்லர் பவனிலும் நடைபெற்ற புரிசை தம்பிரான் சகோதரர்கள் மகாபாரத கூத்துக்களைப் பார்த்து அவர் பரவசமுற்றார். அதனை கலையின் உச்சம் என்று கருதினார். கூத்தில் கற்கவும், வெளிப்படுத்தவும் நிறைய இருக்கிறது என்று கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். அவர் பாரம்பரிய கூத்துக் குடும்பத்தில் இருந்தோ; கூத்துக்கலைஞர்கள் வாழும் ஊரில் இருந்தோ வந்தவர் அல்ல. செவ்வியல் நடனமும்; செவ்வியல் இலக்கியங்களும் கொண்ட புஞ்சை அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் பாரம்பரிய கூத்துக் கலைஞர்கள் ஆடும் மகாபாரதக் கதை கூத்துக்களால் மிகவும் கவரப்பட்டார்.
கூத்துகலைஞர்களின் ஆட்டமும், பாட்டும், பேசும் பேச்சும், நடக்கும் நடையும், அவர்களின் வண்ணமயமான உடைகளும் செவ்வியல் நடனம், நாடகத்தை விட மேலான தரம் கொண்டதென்று நம்பினார். கூத்தின் அடிப்படை அம்சங்கள் நவீன நாடகத்தை முன்னெடுத்துச் செல்லத்தக்கது என்று கருதினார். அது எளிய மக்கள் ஆடுவதாலும் பாமர மக்கள் பார்த்து ரசிப்பதாலும் கலையென்பதில் இருந்து ஒதுக்கப்பட்டு விட்டது அவரை வருத்தமடைய வைத்தது. அழிவில் இருந்து கூத்தைக் காப்பாற்றி - அதற்கு இருந்த உயரிய இடத்தை அடைய செய்யவேண்டுமென உறுதி எடுத்துக் கொண்டார். அவரின் கலை மனமும், படைப்பாற்றலும் கூத்து சார்ந்து இருந்தது. புரிசைக்கு அடிக்கடி சென்று வந்தார்.
புரிசைக் கலைஞர்கள் ஆடும் கூத்தில் இடம் பெற்றிருக்கும் செவ்வியல் அம்சங்களை அவர்களுக்கே சொல்லிக் கொடுத்தார்.
கூத்தை நவீனப்படுத்துவது என்ற பெயரில் தன் இலட்சியத்தை அதன்மீது ஏற்றி மாற்றி அமைக்கவில்லை. இருப்பதற்கு அதன் அடிப்படையான அம்சங்களை மேலும் மெருகூட்டினார்.
கூத்துக் கலையைக் காக்கவும்; கலைஞர்களின் ஆடும், பாடும், பேசும் திறமைகளை சீர்படுத்தவும், கூத்தை கிராமிய கலை - நாட்டுப்புற கலையென ஒதுக்கப்படுவதைத் தவிர்த்து எல்லோரும் கண்டு ரசிக்கும் விதமாகச் செய்ய பயிற்சி அவசியம் என்று கருதினார். அவர் கூத்தை நவீனமாக்கவில்லை. அதில் சிறந்தது என்று கருதியதை நவீன நாடகத்திற்கு எடுத்துக் கொண்டார். 1977 -ஆம் ஆண்டில் நண்பர்கள் சிலரோடு "கூத்துப்பட்டறை' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 
அவர்தான் அதன் இயக்குநர், க்ரியா ராமகிருஷ்ணன் போர்டு பெளண்டேஷன் நிதி பெற உதவி செய்தார். நவீன ஓவியரான பி.கிருஷ்ணமூர்த்தி வண்ண உடைகள், திரை சீலைகள் வடிவமைத்துக் கொடுத்தார்.

கூத்து புது அர்த்தம் பெற்றது. அவரின் வாழ்நாள் நாடகச் சாதனையை அங்கீகரித்தது. சங்கீத நாடக அகாதெமி. விருது வழங்கி உள்ளது. இந்திய அரசு பத்மஸ்ரீ கொடுத்து பாராட்டி இருக்கிறது. புரிசை கூத்துக் கலைஞர்களின் கூத்தை அவர்கள் சொந்த பூமியில் பார்க்க வேண்டும் என்று ஒரு முறை என்னை புரிசைக்கு அழைத்துச் சென்றார். துரியோதனன் படுகளத்தைக் காட்டினார். புரிசையில் கூத்துக்கலைக்கான ஒரு நவீன வளாகத்தை அமைக்க வேண்டுமென திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். கூத்து வளாகத்தின் அருகில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு வசிக்க வேண்டுமென்றார்.
அவர் உற்சாகம் மிகுதியில் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தேன். முத்துசாமி சென்னையில் அமைத்த கூத்துப் பட்டறை, பெண், ஆண் என்ற பேதமின்றி கலைஞர்கள் என்ற ஒரே தன்மையில் பயிற்சி அளித்தார். நடிகர்கள், நடிகைகள் உடல்மொழி, வசனம் பேசுவது, நிற்பது, நடப்பது, பார்ப்பது, என்று உடலை பயிற்சிக் களமாக ஆக்கினார். உடல் என்பது அவர் பார்வையில் ஒரு கலைப் படைப்பாகவும், கலையை வெளிப்படுத்துவது போலவும் மாறியது. அவர் தமிழ்நாட்டிலோ; இந்தியாவிலோ; பிற நாடுகளிலோ எந்த நாடக, சினிமா பயிற்சிப் பள்ளியிலும் படித்தவர் இல்லை. அதுவே அவர்க்கு பெரும் பலமாக இருந்தது. கூத்துப் பட்டறையின் நாடகங்களுக்கு ஒலி ஒளியை ரவீந்திரன் என்ற புதுதில்லி பேராசிரியர் இதமாகவும், அனுபவிக்கும் படியும் செய்து வந்தார். கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகைகள், நடிகர்கள் நாடகக்கலைஞர்களாக மிளிர்வார்கள். தமிழ்நாட்டில் நவீன நாடகங்கள் உருவாக்கி நாடு முழுவதும் பரப்புவார்கள் என்று தான் அவர் கூத்துப்பட்டறையை ஆரம்பித்தார். ஆனால் சமூக யதார்த்தம் வேறு மாதிரியாக இருந்தது. கவர்ச்சிகரமான புகழ், பணம், அந்தஸ்து கொடுக்கும் சினிமாவிற்குச் செல்லும் ஆர்வத்தோடு பலரும் கூத்துப் பட்டறையில் சேர்ந்தார்கள். நாடகம் இல்லாதத் தமிழ்நாட்டில் சினிமா ஜொலித்துக் கொண்டிருப்பது அவர்க்குத் தெரிந்துதான் இருந்தது. கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்களின் சிலர் சினிமாவில் பிரகாசிப்பது - அவர் பெயர் சொல்வது, அவர்க்குப் பிடித்து தான் இருந்தது. நாற்பதாண்டு காலம் கூத்துப் பட்டறையே வாழ்க்கை என்று செயல்பட்டு வந்தவர் முதுமையடைந்து உடல் நலிவுற்றார். அது தான் அவர்க்குத் தாள முடியாததாக இருந்தது. 
2018- செப்டம்பர் 24-ஆம் தேதி தன் எண்பத்து இரண்டாவது வயதில் சென்னையில் காலமானார். அவர் இறுதி ஊர்வலத்தின் போது கூத்துப்பட்டறை நாடக, சினிமா நடிகர்கள் வீதியில் பறையடித்துக் கொண்டு, குத்தாட்டம் போட்டுக் கொண்டு பரவசமுற்றிய நிலையில் சென்றார்கள். அது ஒரு சினிமா காட்சி போலவே இருந்தது. கலைஞர்கள் மரணமுற்று இல்லாமல் போகிறார்கள். ஆனால் கலையென்பது எப்பொழுதும் ஜீவிதமாகவே இருக்கிறது. அதில் கூத்துப்பட்டறை முத்துசாமியும் சேர்ந்து போகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com