பிடித்த பத்து: நான் மிகப் பெரிய ரசிகன்!

நாடக, திரைப்பட நடிகர், இயக்குநர், கதாசிரியர், டிரம்ஸ் வாசிப்பவர் இப்படி பல்துறை வித்தகர் ஒய்.ஜி.மகேந்திரன். அவர் தனக்கு "பிடித்த பத்து' பற்றி கூறுகிறார்
பிடித்த பத்து: நான் மிகப் பெரிய ரசிகன்!

நாடக, திரைப்பட நடிகர், இயக்குநர், கதாசிரியர், டிரம்ஸ் வாசிப்பவர் இப்படி பல்துறை வித்தகர் ஒய்.ஜி.மகேந்திரன். அவர் தனக்கு "பிடித்த பத்து' பற்றி கூறுகிறார்: 
உருளைக்கிழங்கு: எல்லோருக்கும் இதன் மீது விருப்பம் என்றாலும் எனக்கு அதன் மேல் ஒரு வெறி என்றே சொல்லலாம். சின்ன வயதில் என் பாட்டி வீட்டில், அதாவது என் அம்மாவின் அம்மா, எனக்காக ஆசையாக உருளைக் கிழங்கை சமைத்து என்னை கூப்பிட்டு சாப்பிட செய்வார். அவர்கள் அம்மா, அதாவது என் கொள்ளுப் பாட்டி என்னை பற்றி எல்லோரிடமும் என்ன சொல்வார் தெரியுமா? "மகேந்திரா முன் ஒரு உருளைக்கிழங்கு மூட்டையை வைத்தால் நாம் என்ன சொன்னாலும் கேட்பான்'' என்று கூறுவார். உண்மை, இன்றும் உருளைக் கிழங்கு மீது உள்ள என் ஆசை மாறவில்லை. காரணம், உருளைக் கிழங்கு என்  favorite.
காபி: சுடச் சுட காபி என்றால், ஆகா! ஒரு நாளைக்கு எவ்வளவு முறை கொடுத்தாலும் காபி மட்டும் உள்ளே இறங்கிக் கொண்டே இருக்கும். இதற்கும் நான் எனது பாட்டியைதான் சொல்லவேண்டும். இது அப்பாவின் அம்மா. சிறுவயதில் பாட்டி வீட்டின் உள்ளே நுழைந்தாலே ஃபில்டர் காபியின் மணம் வீசும். நானும் சரி, என் அப்பாவும் சரி, காபியின் aficionados, அதாவது பிரியர்கள். காபி மட்டும் குடித்துக் கொண்டே நான் உயிர் வாழ்ந்துவிட முடியும். சமீபத்தில் நான் டிராமா போட USA சென்றேன். அங்கு ரங்காவின் வீட்டில் அவரது மனைவி வித்யா என்னை பற்றி சொன்னது இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, "ஒய்.ஜி.எம்முக்கு. வேறு likes and dislikes எதுவும் கிடையாது. அவ்வப்போது சுவையான காபி மட்டும் கொடுத்தால் போதும் சந்தோஷமாக இருப்பார்'' என்றார். 
மேடை நாடகம்: அது ரத்தத்திலேயே கலந்தது. எனது தந்தையார் ஒய்.ஜி.பி. தான் மேடை நாடகத்தின் மீது ஒரு வெறி அல்லது ஒரு அக்கறையை ஏற்படுத்தினார். எங்கள் நாடகக் குழுவான யு.ஏ.ஏ. ஆரம்பித்தது 1952 - ஆம் ஆண்டு. அப்போது எனக்கு வயது 2. அன்றிலிருந்து எனக்கு நாடகம் என்றால் என்ன என்று உணர்த்தி, இன்றுவரை அதன் மீது ஒருவிதமான ஈர்ப்பை விதைத்தது என் தகப்பனார் தான். அவருக்கு என் இதய பூர்வமான நன்றி. இன்று வரை நான் சுமார் 300 படங்களில் நடித்திருக்கலாம். ஆனாலும் என்னை உலகம் முழுவதும் தெரிந்த நபராக மாற்றியதற்கு இந்த மேடை நாடகத்திற்கு ஆயுள் முழுக்க நன்றி சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். தமிழ் மொழி போல் சிறந்தமொழிஒன்று உலகிலேயே கிடையாது. எனது தந்தையார் மேடையில் தான் இறக்கவேண்டும் என்று விரும்பினார். கிட்டத்தட்ட அப்படிதான் நடந்தது. அவரை விட நான் இன்னும் பேராசைக்காரன். நாடகம் என் உயிர் என்று சொன்னால் மட்டும் போதாது. என் உயிர் நாடகம் நடித்துக் கொண்டு இருக்கும்போதே போனால் அதை விட சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை.
தாயார் ஒய்.ஜி.பி.: உலகத்திற்கே பிடித்த ஒருவரை எனக்கு பிடிக்காமல் இருக்க முடியுமா? அவர் வேறு யாருமல்ல என் தாயார் ஒய்.ஜி.பி. தான். அவர் அன்றும், இன்றும் ஒரு சிறந்த நண்பனாக என்னை வளர்த்து ஆளாக்கினார். எங்க கண்டிக்கணுமோ அங்கு கண்டிப்பாங்க, எங்க தட்டிக் கொடுக்கணுமோ அங்கு தட்டிக் கொடுப்பாங்க. அதுதான் அவரின் சிறந்த பண்பு. நான் நாடகத்தில் வெறியனாக இருந்தாலும் படிப்பை முடிக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அப்பா நாடகம் என்றால், அம்மா பல்வேறு கலைகளில் என் விருப்பத்தை வளர்த்தார். அவர் போகும் கர்நாடக இசை கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் என்று பலவற்றுக்கும் என்னை அவருடன் அழைத்துச் செல்வார். அன்றே செம்மங்குடி மாமா, அரியக்குடி, பாலசரஸ்வதி, வைஜயந்திமாலா நடன நிகழ்ச்சிகளை பார்த்து என் இசை அறிவை வளர்க்க உதவினார். இன்னுமொருவர் இருக்கிறார் அவர் சீதா ராஜசந்திரன். அவர் எனது சித்தி. அவர் இன்று இல்லை என்றாலும் அவரை நான் என்றும் மறக்கமாட்டேன். என் இளமை காலம் முழுவதும் அவரது வீட்டில்தான் நாங்கள் எங்கள் விடுமுறையை கழிப்பொம். சிறந்த கல்விமான். சிறப்பாக சமையல் செய்பவர். அவர் மறைந்தாலும் இன்றும் அவர் என்னுடன் வாழ்கிறார். 
நகைச்சுவை: நான் நகைச்சுவை நடிகனாக இருக்கவேண்டும் என்று விரும்பியதற்கு காரணம் இரண்டு. ஒன்று நான் பார்த்து ரசித்த ஆங்கிலபட நகைச்சுவையாளர்கள் சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி. அடுத்து, நான் மானசீக குருவாக நினைக்கும் நமது நாகேஷ் தான். அவர் துரோனாச்சாரியார் என்றால் நான் ஏகலைவன். நாகேஷ் எங்க குழுவிலேயே இருந்ததனால், பக்கத்திலிருந்தே பார்த்துப் பார்த்து கற்றுக் கொண்டேன். வசனம் பேசும்போது எப்படி நேரம் (timing) சிறப்பாக இருக்கவேண்டும் என்று அவரைபார்த்துதான் புரிந்து கொள்ளவேண்டும். ஒருமுறை அவரிடம் என் நடிப்பை பற்றி கேட்டபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா? "உன்னிடம் டைமிங் நன்றாக இருக்கிறது, போதும் டா'' என்றார். இதை விட எனக்கு வேறென்ன பாராட்டு வேண்டும்.
பாடகர்: பிரபல இந்திப் பாடகர் முகமத் ரஃபிக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அந்த குரலுக்கு ஈடு செய்ய, ஒரு குரல் கூட இதுவரை வரவில்லை. இவர் எனது தந்தையாரின் நெருங்கிய நண்பர். என்னுடைய சிறுவயதில் அவர் ஒரு வாரம் எங்கள் வீட்டில் தங்கினார். அன்று தான் இந்த மாபெரும் பாடகர் எவ்வளவு குழந்தை உள்ளம் கொண்டவர் என்று தெரிந்து கொண்டேன். அவருக்கு பின் வந்த பல்வேறு குரல்களை நான் ரசித்திருக்கிறேன் என்றாலும் அவரது குரல் அமரத்துவம் பெற்றது. 
இசையமைப்பாளர்: நான் கேட்டு வளர்ந்த இன்னிசை, மெல்லிசை மன்னார் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைதான் தான். அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவரது சிறப்பு அவருக்கு முன்பு இருந்த சங்கீதத்தையும், வரப்போகும் சங்கீதத்தையும் இணைத்து ஒரு புதிய சங்கீதத்தை தந்ததோடு , அந்த இரண்டுக்கும் மிகப்பெரிய பலமாக இருந்தார். நான் அவரை எம்.எஸ்.விஸ்வநாதர் என்றுதான் சொல்வேன். இன்னும் சொல்லப் போனால் விஸ்வநாதருக்கு முன் அவருக்கு பின் என்று சங்கீத்ததை பிரிக்கவேண்டும். நான் பல்வேறு இசையமைப்பாளர்களை ரசிக்கிறேன். ஆனால் எம்.எஸ்.வி. அவர்களை பூஜிக்கிறேன். 
பேரன்: என் மகள் மதுவந்தியின் மகன் ரித்விக். அவன் மேல் எனக்கு அவ்வளவு பாசம். எனது முதல் பேரன் என்பதனால் மட்டும் அல்ல, அவனது பேச்சு, செயல் என எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சி இருக்கும் . வயது 13 தான் ஆகிறது. இது அவனுக்கு கடவுள் கொடுத்த ஒரு பரிசுன்னு நினைக்கிறேன். அந்த அளவிற்கு சிறு வயதிலேயே பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டவன் ரித்விக். 
கவிஞர் கண்ணதாசன்: தமிழ் மீது ஒரு பாசம் , மரியாதை வந்ததற்கு காரணம் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந்த எளிமை, தமிழின் செழுமை. எவ்வளவு பெரிய விஷயத்தையும் எவ்வளவு சாதாரணமாக சொன்னார். இன்னும் சொல்லப் போனால் நான் கண்ணதாசனை படிச்ச பிறகுதான் பாரதியாரையே படிக்க ஆரம்பித்தேன். தேச பக்தியை எவ்வளவு வீரியதுடன் (Fire) பாரதியார் சொன்னார். வாழ்க்கை தத்துவங்களை எவ்வளவு எளிமையுடன் இவர் சொல்லியுள்ளார் என்று படித்த போது கண்ணதாசனின் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகிறது. 
சிவாஜி கணேசன்: நான் யாரை சுவாசிக்கிறேன், யாரை உளமாற நேசிக்கிறேன் என்று பலருக்கும் தெரியும். அவர் வேறு யாருமல்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நான் பார்த்த அவரது முதல் படம் "படிக்காத மேதை' அதன் பின் அவர்மீது பாசம் வளர்ந்து பின் மோகம் ஏற்பட்டு, பக்தியாக கனிந்து, வெறியாக உருவெடுத்து இன்று அவரைபற்றி பேசாமல் என்னால் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கிறேன். "கட்டபொம்மன்'னில் பார்த்த சிவாஜியை, "தில்லானா மோகனாம்பாள்'-இல் பார்க்க முடியாது. இன்றும் என்றுமே சிவாஜிதான் முழுமையான நடிகன். சிவாஜிக்கு நிகராக உலக நடிகர்களில் ஒருவருமே இல்லை. 
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com