தினமணி கொண்டாட்டம்

வட இந்திய நாடோடிக் கதை: நெருப்பைக் கொடுக்காதே!

DIN

விசாகை ஒரு செல்வந்தனின் மகள். சகல கலைகளிலும் வல்லவள். மகளுக்குப் பொருத்தமான ஒரு மணமகனைத் தேடி திருமணம் செய்து கொடுத்தனர்.
 விசாகை புகுந்த வீடு செல்லும்முன் அவள் தாயார் மகளுக்கு சில அறிவுரைகள் கூறினார். அப்போது அங்கு விசாகையின் மாமனார், மாமியார், கணவர் அனைவரும் இருந்தனர். அவர்களை வைத்துக் கொண்டேதான் கூறினாள்.
 வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே
 அயலார் வீட்டு நெருப்பை வீட்டுக்குள் கொண்டுவராதே
 கொடுக்கிறவர்களுக்கு மட்டும் கொடு
 கொடாதவர்களுக்குக் கொடாதே
 கொடுக்கிறவர்களுக்கும் கொடாதவர்களுக்கும் கொடு
 சிரித்துக் கொண்டே உட்காரு.
 சிரித்துக் கொண்டே சாப்பிடு
 சிரித்துக் கொண்டே தூங்கு.
 எரி ஓம்புக - குல தெய்வம் வணங்கு
 விசாகை மாமியார் வீடு சென்றாள். அவளிடம் அவள் மாமனார், மாமியார், கணவர் அனைவரும் "உன்னிடம் உன் தாயார் அறிவுரை கூறினாரே, அதற்கு என்ன அர்த்தம்?. எங்களுக்கு எதுவும் புரியவில்லையே'' என்று சந்தேகம் கேட்டனர்.
 "ஆமாம்!, வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே, அயலார் நெருப்பை வீட்டில் கொண்டு வராதே என்று கூறினாரே, நெருப்பு இல்லாமல் வாழ முடியுமா ? அண்டை அயலார் நெருப்புக் கேட்டால் கொடுக்காமல் இல்லை என்று சொல்ல முடியுமா? நம் வீட்டில் நெருப்பு இல்லையானால் அயலாரிடம் வாங்காமல் இருக்க முடியுமா? இதற்கு என்ன அர்த்தம்?''
 (தீக்குச்சியும், தீப்பெட்டியும் இல்லாத அக்காலத்தில் அண்டை அயலாராக உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் நெருப்பைக் கொடுப்பதும் கொள்வதும் வழக்கம்)
 இதற்கு விசாகை அவர்களிடம் கூறினாள், "வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே' என்றால் நெருப்பைக் கொடுக்காதே என்பது அல்ல, கணவன், மாமன், மாமி இவர்களிடத்தில் ஏதேனும் குறைகளைக் கண்டால் அக்கம்பக்கத்து வீடுகளில் அந்தக் குற்றங்களைச் சொல்லாதே என்பது அர்த்தம். "அயலார் வீட்டு நெருப்பை வீட்டுக்குக் கொண்டு வராதே' என்றால் புருஷசனைப் பற்றியோ, மாமன், மாமியைப் பற்றியோ அண்டை அயலில் இருப்பவர்கள் ஏதேனும் அவதூறு சொன்னால் அதைக் கேட்டுக் கொண்டு அவர்களிடம் உங்களைப் பற்றி இன்னார், இப்படி சொன்னார்கள் என்று வீட்டில் சொல்லாதே என்பது அர்த்தம். இவ்வாறு பேசுவது கலகத்துக்குக் காரணம் ஆகும். ஆகையால் அது நெருப்பு என்று பொருள்படும்'' என்றாள். இதைக்கேட்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
 "இது சரி, "கொடுகிறவர்களுக்கு மட்டும் கொடு, கொடாதவர்களுக்கு கொடாதே, கொடுக்கிறவர்க்கும், கொடாதவருக்கும் கொடு' இதற்கெல்லாம் என்ன அர்த்தம்'' என்று கேட்டார் மாமனார்.
 "கொடுக்கிறவர்களுக்கு மட்டும் கொடு' என்றால் உன் வீட்டு பொருளை யாரேனும் இரவல் கேட்டால் அதைத் திருப்பிக் கொடுக்கிறவர்களுக்கு மட்டும் கொடு என்பது அர்த்தம். "கொடாதவர்களுக்குக் கொடாதே' என்றால் உன் வீட்டு பொருளை இரவல் வாங்கிக் கொண்டுபோய் அதைத் திருப்பிக் கொடுக்காதவர்களுக்குக் கொடாதே என்பது அர்த்தம்.
 "கொடுக்கிறவர்களுக்கும் கொடாதவர்களுக்கும் கொடு' என்றால் உன் உற்றார், உறவினர்கள் உன்னிடம் ஏதேனும் உதவியைக் கோரினால், அதை அவர்கள் திருப்பிக் கொடுத்தாலும், கொடாவிட்டாலும் அவர்களுக்குக் கொடுத்து உதவிசெய் என்பது பொருள்'' என்றாள்.
 அதுபோன்று, ""சிரித்துக் கொண்டே உட்காரு' என்றால் மாமன், மாமி, கணவன் இவர்களைக் கண்டால் உட்கார்ந்திராமல் எழுந்து நில்; "சிரித்துக் கொண்டே சாப்பிடு' என்றால் மாமன், மாமி , கணவன் இவர்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிடு; "சிரித்துக் கொண்டே தூங்கு' என்றால், மாமன், மாமி, கணவன் இவர்கள் தூங்குவதற்கு முன்பு தூங்காதே, அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் செய்தபிறகு தூங்கு'' என்பது அர்த்தம்.
 "எரி ஓம்புக' என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைத் தீச்சுடர் போலக் கருதாமல், குல தெய்வங்களாக வணங்கு'' என்றார். மாமன், மாமி, கணவன் இவர்களை குடும்ப தெய்வம்போல எண்ணி போற்றி வழி படவேண்டும் என்பது அர்த்தம்'' என்றாள்.
 இவற்றைக் கேட்ட மாமனாருக்கும், மற்றவர்களுக்கும் திருப்தியும், மகிழ்ச்சியும் உண்டாக, அவர்கள் விசாகையின் அறிவைப் புகழ்ந்தார்கள். மாமனார் அன்று முதல் விசாகையிடம் நன்மதிப்புக் கொண்டார்.
 - மயிலை மாதவன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT