சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 39: சுருள் பிஸ்கட்டின்  சுவை!

"வாழ்வதற்காக சுவாசிக்காதீர்கள்.  உயிர்ப்போடு இருக்க நடனமாடுங்கள்'.
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 39: சுருள் பிஸ்கட்டின்  சுவை!

"வாழ்வதற்காக சுவாசிக்காதீர்கள்.  
உயிர்ப்போடு இருக்க நடனமாடுங்கள்'.
- ஷா அஜாட்  ரிஸ்வி

அழகான ஒரு கோப்பையை வாங்கிக்கொண்டு, கடையை விட்டு நாங்கள் வெளியில் வந்ததுமே, கண்களில் பட்ட  நிகழ்ச்சி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று சொல்லியிருந்தேன் அல்லவா! அது, விதவிதமாக, கண்களைக் கவரும் வகையில் உடைகளை அணிந்திருந்த நடனக் கலைஞர்கள், தெருவில் நடனம்  ஆடிக் கொண்டிருந்தனர்.  பலவிதமான வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன,  அவை எழுப்பிய இனிமையாக நாதத்திற்கு ஏற்றாற்போல அந்த கலைஞர்கள் கால்களைத் தட்டி, கைகளை ஆட்டி, விரல்களை அபிநயத்து முகங்களில் மகிழ்ச்சியை பரவவிட்டு ஆடிக் கொண்டிருந்தனர்.

அந்த நடனக் கலைஞர்களில் ஒரு பெண் திடீர் என்று என்னை நோக்கி வந்து என் கைகளை பிடித்துக் கொண்டாள்.  பிறகு என்னை, அவளோடு சேர்ந்து ஆடச் சொன்னாள். என் திருமணத்தில் கூட  நான் அவ்வளவு வெட்கப்படவில்லை. முகம் சிவக்க எப்படி, தெருவில் ஆடுவது என்று திகைத்தேன்.

என் நிலைமையை சாரா புரிந்து கொண்டாள்.  அவர்கள் மொழியில் அந்தப் பெண்ணிடம்  ஏதோ  சொன்னாள்.  அதற்கு அந்தப் பெண் பலமாக சிரித்துவிட்டு தன் பிடியை தளர்த்தினாள்.

என்னைச் சுற்றி ஒரு நோட்டம்  விட்டேன்,  ஆண்,  பெண்,  பெரியவர்,  சிறியவர் என்ற பாகுபாடுகளைக் கடந்து பல நாடுகளில் இருந்து வந்திருந்த  உல்லாசப் பயணிகளும்,  ஐரோப்பிய பிரஜைகளும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

""சாரா, நீ அவளிடம் என்ன கூறினாய்?'' என்று கேட்டேன்.

""நீ அவர்களை இக்கட்டில் மாட்டாதே''  என்றேன்,  என்றாள்.

ஒரு  எதிர்பார்ப்புடன் என் கைகளைப் பற்றி இருந்த அந்தப் பெண்ணின் அன்புப்பிடியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

""கமான்''  என்றபடி,   அவளை  நடனமாடச்  சொல்லி,  அவள் போட்ட ஸ்டெப்புகளைக் கூர்மையாகக் கவனித்து நானும் நடனமாடத் தொடங்கினேன். மனம் மகிழ்ந்துபோன அவளுடைய சக நடனக்காரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு ஆட, அதில் ஓர் ஆடவர் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் கணவரையும் கையைப் பிடித்து இழுத்து ஆட வைக்க, சாராவும் எங்களோடு இணைய, அந்த இடமே வேடிக்கைக் களமானது.

1996-இல் தான் இந்த கார்லோவி வாரி சர்வதேச நாட்டுப்புறக் கலைவிழா தொடங்கப்பட்டது.  இந்த ஊரின் நாட்டுப்புறக் கலைஞர்களாக  இருந்த  ஓமர் ஹன்காவும்,   இவா ஹன்காவோவும் தலைமை ஏற்று இந்தத் திருவிழாவை முதன்முதலில் வெற்றிகரமாக  நடத்திக்  காட்டினார்கள்.  உலகின் எல்லா கண்டங்களிலிருந்தும்  நாட்டுப்புறக் கலைஞர்களை இருகரம் நீட்டி வரவேற்று இந்த விழாவில் ஆட  வைக்கிறார்கள். செக் ரிபப்ளிக்கின் பல பாகங்களில் வசிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களையும்  இங்கே  ஒன்றிணைக்கிறார்கள். ஜெர்மன்,  போர்ச்சுகல்,  நெதர்லாந்து, சீனா, மெக்ஸிகோ, நியூசிலாந்து  மற்றும் இந்தியாவிலிருந்து கூட  நாட்டுப்புறக் கலைஞர்களை இங்கே வரவழைத்து ஆட வைக்கிறார்களாம்.

பலநாட்டு கலைஞர்கள் பங்குபெறும் ஃபேஷன் பரேடும் இங்கே அரங்கேறுகிறது.  "பிராமென் விரிட்லோ'  வெந்நீரூற்றுக்கு அழைத்துச் செல்லும் வீதிகளின் வழியாகத்தான் இந்த  ஃபேஷன் பரேட்  ஊர்வலம் சென்று பிறகு கிராண்ட் ஹோட்டல் பப்பை (Grand Hotel Pupp) அடைகிறது.

""சாரா, ஏன் இந்த நாட்டுப்புற நடனங்கள்,  அரங்கின் உள்ளே நடக்காமல் இப்படி தெருக்களில் நடக்கிறது''  என்றேன்.

650 வருடங்களுக்கும் மேலாக இங்கே வெளி உலகில் இருந்து வரும் மக்கள் இங்கே ஸ்பா ட்ரீட்மெண்டுக்காகத்தான் வருகிறார்கள். 30 டிகிரி - 70 டிகிரி சூட்டில் பல இடங்களில் வரும் இந்த ஊற்றுக்களின் தண்ணீரைக் குடிக்கவும்.  உடல் எடையைக் குறைத்து,  உடலில் சேர்ந்து போன நச்சுத் தன்மையைப் போக்கிக் கொள்ளவும் இங்கே இருக்கும் ஹோட்டல்களில் வந்து தங்குகிறார்கள்.

"சாந்தி, அதோ பாருங்கள்' என்று சாரா காட்டிய திசையில் வீதியின் நடுவில், பக்கவாட்டில் என்று பல குழாய்கள் நிறுவப்பட்டிருந்தன. அதில் தங்கள் கைகளில் கோப்பைகளை ஏந்திய மக்கள், தண்ணீரைப் பிடித்து குடித்துக் கொண்டிருந்தனர். நானும் என் கையில் இருந்த கோப்பையை எடுத்து ஒரு குழாயில் இருந்து அந்த மருத்துவ குணம் உள்ள தண்ணீரைப் பிடித்து மெதுவாகக் குடிக்கத் தொடங்கினேன்.

""எப்படி இருக்கிறது?''  என்றாள் சாரா. 

 ""பரவாயில்லை, குடிக்கும்படியாகத்தான் இருக்கிறது'' என்றேன்.

""இந்த தண்ணீர் கல்லீரல் நோய்கள், சர்க்கரை வியாதி, கணையத்தைப் பாதிக்கும் கேன்சர், செரிமானக் கோளாறுகள், மூட்டுவலிகள், மெட்டபாலிக் டிஸாடர்ஸ் முதலியவற்றில் இருந்து காக்கும்'' என்ற சாராவை என் கணவர் வியப்புடன் பார்த்தார்.

""என்ன டாக்டர் அப்படி பார்க்கிறீர்கள். (1875-1965) வாழ்ந்த மருத்துவர் பிரான்ஸ் ஸ்சேவர் மேயர் (Franz Xaver Mayr)  உண்ணாவிரத முறையோடு, வெறும் பால், ரொட்டி, ஹெர்பல் டீ மற்றும் இந்த கார்லோவி வாரியின் வெந்நீரூற்று தண்ணீரை மட்டுமே குடிக்க வைத்து பல நோய்களைக் குணப்படுத்தினார்.

பத்தொன்பதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ் ஸ்சேவர் மேயர் 90 வயதுவரை வாழ்ந்து சாதனை படைத்தார்.

இன்றளவும் இங்கே எம்.எக்ஸ் உண்ணாவிரதம் என்கின்ற புரோகிராம் மிகப் புகழ்வாய்ந்த வைத்திய முறையாக இருக்கிறது'' என்றாள் சாரா.

பாரம்பரியம் மிக்க, நாட்டுப்புறக் கலைகளான, இசையைக் காதாரக் கேட்டோம். நடனங்களைக் கண்டு மகிழ்ந்தோம். இதுமட்டும் அல்லாமல் இன்றைய நூற்றாண்டின் பல இசைகளையும், ஆடல்களையும் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது.

கார்லோவி வாரியின் பழமையான இனிப்பு பண்டமான  (TRDEL NIK) டர்டல் நிக்கை சாப்பிடும் பாக்கியமும் கிட்டியது. பிஸ்கட்  சுருளுக்குள், வெண்ணெய்யில் கலந்த சர்க்கரையை வைத்து அதனோடு பலவிதமான கொட்டைகளின் துண்டுகளை வைத்து இலவங்கப்பட்டை வாசனையை சேர்த்து அப்பப்பா அதை ஒன்று என்று சாப்பிட  ஆரம்பித்து நான்கில் முடித்துக் கொண்டோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்,  அதன் சுவை எப்படி இருக்கும் என்று.

இந்த பிஸ்கட்டின் சுருள்களை ஓப்பன் பிளேமில் (Open Flame) ரோஸ்ட் செய்து நம் முன்னேயே காட்டுகிறார்கள்.

கார்லோவி சர்வதேச நாட்டுப்புறத் திருவிழா மனதையும், வயிற்றையும் ஒருசேர நிறைவடைய வைத்து அசத்துகிறது.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com