போலந்து நாடோடிக் கதை! சிட்டுக்குருவியின் நட்பு!

ஒரு மாந்தோப்பில் சிட்டுக்குருவி ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது பக்கத்து ஊருக்குப் பறந்து சென்றது.
போலந்து நாடோடிக் கதை! சிட்டுக்குருவியின் நட்பு!

ஒரு மாந்தோப்பில் சிட்டுக்குருவி ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது பக்கத்து ஊருக்குப் பறந்து சென்றது.

 அங்கு ஒரு சாலை ஓரத்தில் இறைச்சிக் கடை ஒன்று இருப்பதை அது கண்டது. அங்கு குட்டிநாய் ஒன்று பசியோடு அந்த இறைச்சித் துண்டுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் குருவி கவனித்தது.
 கடைக்காரன் அயர்ந்த நேர்த்தில் ஓர் இறைச்சித் துண்டைக் கொத்தியது. அதைக் குட்டிநாயின் அருகே போட்டது. ஆசையுடன் இறைச்சித் துண்டைக் கவ்விய நாய்க்குட்டி ஒரு மரத்தின் பின்னால் அமர்ந்து உண்டது. குருவியைப் பார்த்து "நன்றி'' என்றது.
 நாளடைவில் இரண்டும் நண்பர்களாகின. தினமும் குருவியும் நாய்க்குட்டியும் சந்தித்து மகிழ்ச்சியாக விளையாடின. ஒருநாள் குடிகாரன் ஒருவன், குதிரை வண்டி ஓட்டிக் கொண்டு அந்த வழியில் வந்தான். வேண்டுமென்றே சாலை ஓரத்தில் அவன் வந்தான்.
 "ஓரமாக வராதே'' எனக் குருவி எச்சரித்தது. இருந்தாலும் அவன் கேட்வில்லை. சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி மீது வண்டி ஏறியது, சிறிது நேரத்தில் நாய்க்குட்டி இறந்தது.
 இதைக் கண்டு வருந்திய குருவி, வண்டிக்காரன் மீது, கோபம் கொண்டது. இனிமேல் உனக்குக் கேடு காலம்தான் எனக் கத்தியது. அவன் வந்த வண்டியில் இரண்டு பீப்பாய்களில் தேன் இருப்பதைக் கண்டது.
 ஒரு பீப்பாயின் மூடியைப் பலங்கொண்ட மட்டும் கொத்திக் கொத்தி இழுத்தது. அதனால் பீப்பாயில் இருந்த தேன் தெருவில் கொட்டி பிறகு காலியானது.
 மீண்டும் குருவி பறந்துசென்று மற்றொரு பீப்பாயின் மூடியைக் கொத்தி இழுத்தது. அதிலிருந்த தேனும் சாலையில் கொட்டியது.
 பிறகு வண்டியின் முன்னால் சென்ற குருவி, முதல் குதிரையின் கண்களைக் கொத்தியது. வேதனையால் குதிரை துள்ளியது; கனைத்துக் கொண்டே திமிறியது.
 வண்டிக்காரன் மிகுந்த கோபத்துடன், சவுக்கை எடுத்து குருவியின் மீது வீசினான். குருவி சட்டென்று பறந்துவிட்டது. அதனால், சவுக்கின் நுனி குதிரையின் நெற்றியில் பட்டு வலி உண்டாக்கியது. வலி பொறுக்காத குதிரை அந்த இடத்திலேயே விழுந்து இறந்துவிட்டது.
 குருவி பறந்து வந்து இரண்டாவது குதிரையின் கண்களைக் கொத்தத் தொடங்கியது. மீண்டும் வண்டிக்காரன் சவுக்கை எடுத்தான். முன்பு போலவே சவுக்கடி குதிரையின் மீது பட்டு, அந்தக் குதிரையும் இறந்தது.
 வண்டிக்காரன் தன் மனைவியிடம் நடந்த நிகழ்ச்சிகளை மிகவும் வருத்தத்துடன் கூறினான். " என் கையில் குருவி அகப்படட்டும்... அதன் கழுத்தை இறுக்கிக் கொன்று விடுகிறேன்'' என்றான்.
 அந்த நேரம் குருவி, ஜன்னலின் மீது வந்து அமர்ந்தது. "இதுதான் நமக்கு கஷ்டத்தைத் தந்த குருவி'' என்று கத்தினான். உடனே அவன் மனைவி, கொள்ளிக்கட்டையை எடுத்து வந்து குருவி மீது வீசினாள்.
 குருவி தப்பித்தது. ஆனால் ஜன்னலில் இருந்த திரைச்சீலையில் தீப்பிடித்தது. அது "சரசர'வெனப் பரவி வீட்டையே எரிக்கும் அளவுக்கு வந்தது.
 "என் நண்பனைக் கொன்ற உனக்கு, இந்த தண்டனை போதுமென்று நினைக்கிறேன்; இனிமேல் தீங்கு செய்யும் எண்ணத்தை அடியோடு விட்டுவிடு'' என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து பறந்து சென்றது குருவி.
 - குடந்தை பாலு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com