சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 35: கனக்கும் கருடனும் கனக்காத கருடனும்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் சீனிவாச பெருமாள்  கோயில் உள்ளது. சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டிற்கு இரண்டு முறை தமிழ் மாதங்களான  மார்கழி மற்றும் பங்குனியில் நடைபெறும் கல்
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 35: கனக்கும் கருடனும் கனக்காத கருடனும்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டிற்கு இரண்டு முறை தமிழ் மாதங்களான  மார்கழி மற்றும் பங்குனியில் நடைபெறும் கல் கருடசேவை உலகப் பிரசித்தி பெற்றதாகும். சாதாரணமாக மற்ற பெருமாள் கோயில்களில் மரத்தினாலோ அல்லது உலோகத்தினாலோ ஆன கருட வாகனத்தின் மீது பெருமான் பவனி வருவார். ஆனால் நாச்சியார் கோயிலில் கல்லால் ஆன கருடன் மீது சீனிவாச பெருமாள் பவனி வருகிறார். கல் என்றால் எடை அதிகமாக இருக்குமே என்கின்ற எண்ணம் எழத்தானே செய்கின்றது. ஆனால் கல் கருடனின் கருவறையில் இருந்து அவரை வெளியே எடுக்கும்பொழுது நான்கு ஆட்களே தேவைப்படுகின்றனர். ஆனால் வாகன மண்டபத்தை நோக்கி கல் கருடனை சுமந்து செல்லும்பொழுது அவருடைய எடை அதிகரிக்க, 8, 16, 32, 64 என்று ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்து, விமான மண்டபத்தில் சீனிவாச பெருமாள் கருடனின் மீது நிலைகொண்ட பிறகு வெளியே வரும்பொழுது 128 ஆட்கள் சுமக்க வேண்டி வருகிறது. இப்படி நான்கு மாடவீதிகளில் ஆறு மணி நேரம் சுற்றிய பிறகு மீண்டும் கல் கருடன் கருவறைக்கு திரும்பும்பொழுது 128 ஆட்கள் என்பது 64, 32, 16, 8 என்று குறைந்து பிறகு வெறும் நான்கு ஆட்கள் மட்டுமே அவரை தூக்கி கருவறை மேடையின் மீது அமர்த்துகிறார்கள்.
இது எப்படி சாத்தியமாகிறது. இதுவரையில் விடை காணமுடியாத புதிராக உள்ளது. இந்த கல் கருடனையும், அவருடைய மார்கழி புறப்பாடையும் கண்டபின் கருடன்மீது எனக்கு இருந்த ஈர்ப்பு இன்னும் அதிகமானது. என்னுடைய மகன் சிதம்பரம் அண்ணாமலை மருவத்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அது, அவரைப் பார்ப்பதற்காக சிதம்பரம் செல்லும்போது எல்லாம், சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களை சென்று பார்த்து அங்குள்ள தெய்வங்களை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன். அப்படி ஒரு முறை சென்றபொழுது சிதம்பரத்திற்கு அருகில் உள்ள திருநாங்கூரில் 10-12 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பதினொரு பெருமாள் கோயில்கள் உள்ளன என்று கேள்விப்பட்டேன். விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களுக்குள் இந்த பதினொரு கோயில்களும் அடக்கம், இதைத்தவிர, 12 ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் இந்த கோயில்கள் பாடப்பட்டிருக்கின்றன என்றவுடன் அவைகளைச் சென்று பார்க்க ஆவல் கொண்டேன்.
இந்த கோயில்களில் சில சோழ அரசரான பராந்தகன் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த பதினொரு கோயில்களில் பல வயல்களுக்கு நடுவே இருந்தன. சோழநாடு சோறுடைத்து என்கின்ற பழமொழக்கு ஏற்ப எங்கும் பசுமையான நெற்கதிர்கள் சூழ்ந்திருக்க, விவசாய பெருமக்களின் சூழல்களுக்கு நடுவே ஆங்காங்கே இந்த பதினொரு திவ்ய தேசங்கள் கொலுவிருக்கின்றன. 

திருநாங்கூருக்கு உள்ளே இருக்கும் கோயில்கள் 

1.திருக்காவளம்பாடி -கோபாலகிருஷ்ண பெருமாள்
2.திருவண்புருஷோத்தமம் - புருஷோத்தம பெருமாள்
3.திருஅரிமேய விண்ணகரம் - குடமுடகோதன் பெருமாள்
4.திருச்செம்பொன் செய்கோயில் - பேரருளாளன் பெருமாள்
5.திருமணிமாடக் கோயில் - பத்திரி நாராயணப் பெருமாள்
6.திருவைகுண்ட விண்ணகரம் - வைகுண்டநாதப் பெருமாள்
திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள் :
7.திருத்தேவனார்த்தொகை - மாதவப் பெருமாள்
8.திருத்தெற்றியம்பலம் - பள்ளிகொண்ட பெருமாள்
9.திருமணிக்கூடம் - வரதராஜப்பெருமாள்
10. திருவெள்ளக்குளம்    - அண்ணன் பெருமாள்
11. திருப்பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி

உடல் சிலிர்க்க கண்கள் பனிக்க, உள்ளம் உருக இத்தனை பெருமாள்களையும் ஒரே நாளில் கண்டு களித்தேன். அங்கே இருந்த குருக்களில் ஒருவர் சொன்னார், "தை மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் இந்த பதினொரு கோயில்களில் உள்ள உற்சவ பெருமாள்கள் அனைவரும், பதினொரு கருட வாகனத்தின் மீது அமர்ந்து உலா வருவார்கள். திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சந்நிதிக்கு வெளியே போடப்பட்டிருக்கும் பந்தலின்கீழ் இந்த திவ்ய அணிவகுப்பை கண்ணாரக் காணலாம்' என்றார்.
சில்லென்று பனிக்காற்று, என்னுடலுக்குள் ஊடுருவிச் சென்று என்னை மெய் குளிரச் செய்தது. திருநாங்கூரில் ஒரு வீட்டின் திண்ணையில் நானும் என் கணவரும் சில நண்பர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். இந்த வீட்டின் வழியாகத்தான் கருட வாகனங்கள் செல்லும் என்று எங்களோடு வந்த  "கைட்'  சொன்னதினால் நாங்கள் அந்த திண்ணை
களில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தோம். அந்த வீட்டில் இருந்தவர்கள், டம்ளர்களில் சுடச் சுட "
சுக்கும், பனைவெல்லமும் கலந்த பாலைக் கொண்டுவந்து கொடுத்து, குடிக்கும்படி உபசரித்தனர்.
அந்த குளிருக்கு சூடான பால் தொண்டைக்கு இதமளித்தது. சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்குள்ளிருந்து எழுபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க தாத்தா ஒருவர் வெளியே வந்து எங்களுடன் அமர்ந்து கொண்டார்.
""எங்கிருந்து வர்றீங்க''
""தாத்தா, நாங்க சென்னையிலிருந்து வருகிறோம்'' என்றார் என் நண்பர்.
""பரவாயில்லையே பதினொரு கருட சேவையைப் பார்க்க நேரத்தை ஒதுக்கி வந்திருக்கிறீர்களே''என்றார்.
""எல்லாம் என் மனைவி சொல்லித்தான் நாங்கள் வந்தோம்'' என்று கணவர் கூற,
""சரி, இந்த திருநாங்கூர் கோயில்கள் எப்படி உருவாயின தெரியுமா?''  என்றார் தாத்தா.
""தெரியாது'' என்று பலமாக நாங்கள் தலைகளை ஆட்ட, தாத்தா சொல்லத் தொடங்கினார்.
""பராசக்தி பார்வதி தேவியின் தந்தையான தக்க்ஷன் தன் மாப்பிள்ளையான சிவபெருமானை, தான் நடத்திய யாகத்தில் கலந்துகொள்ள அழைக்கவில்லை. சிவன் இதனால் வெகுண்டெழுந்தார், கோபத்துடன் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார். இது (மக்ஷஹஹ்ஹ)
உபய காவேரி என்ற இடத்தில் நடைபெற்றது.
"இது எங்கு இருக்கிறது' என்று ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன்.  "தெற்கில் காவேரி நதிக்கும், மேற்கில் மணி ஆற்றிற்கும் நடுவே இந்த இடம் இருக்கிறது. சீர்காழிக்கு தென்கிழக்கில் சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது' என்றார்.
""பிறகு என்ன நடந்தது'' என்றார் என் கணவர்.
""கோபத்தோடு ஆடிய சிவனின் முடிகள் ஒவ்வொன்றாக தரையில் விழ, ஒவ்வொரு முடியும் ஒரு சிவனாகி, அந்த சிவன்களும் ருத்ர நடனத்தை ஆடத் தொடங்கினர். இப்படியாக பதினொரு முடிகள் உதிர பதினொரு சிவன்கள் ருத்ர நடனம் ஆட,  ஒரு ருத்ர நடனத்திற்கே இந்த பூமி தாங்காதே, பதினொரு சிவன்கள் ஆடினால் பூவுலகிற்கு அழிவுதான்''  என்று உணர்ந்த விஷ்ணு, சிவனின் முன்னால் தோன்றி பரமபத நாதனாகக் காட்சி அளித்தார்.
மனசாந்தி அடைந்த சிவன், விஷ்ணுவின் பல ரூபங்களைக் காண விருப்பம் கொண்டு தன் ஆசையை வெளியிட, விஷ்ணு பதினொரு, வேறு வேறு உருவங்களில் காட்சி அளிக்க, அந்த சம்பவம் நடந்தேறிய திருநாங்கூரிலேயே இந்தந்த உருவங்களுக்கான கோயில்கள் ஏற்பட்டன. பின்பு அவைகளே திவ்விய தேசங்கள் ஆயின'' என்றார். தொலைவில் டமர, டமர, டம் என்று சத்தம் கேட்க, அனைவரும் ஒரு எதிர்பார்ப்போடு எழுந்து நின்றோம்.
தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com