ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 71: பிடிக்காதப் பாடல் பிரபலமானது!

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் என் கட்டுரையை நிறைவு செய்வதாக இருக்கிறேன்.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 71: பிடிக்காதப் பாடல் பிரபலமானது!

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் என் கட்டுரையை நிறைவு செய்வதாக இருக்கிறேன். அதனால் என் பாடல்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் அதிகம் சொல்லாமல் எனக்குப் பிடித்த கவிஞர்கள் மூன்று நான்கு பேர் பாடல்களையாவது சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அதில் இன்றைய இளம் திரைப்படக் கவிஞர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர்களில் ஒருவர் யுகபாரதி. இதுவரை ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.

இவர் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். "கணையாழி' பத்திரிகையில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் எழுதிய முதல் கவிதைத் தொகுதி "மனப்பத்தாயம்' என்ற பெயரில் வெளியானது. இந்த நூல் 1998-ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதுபெற்ற நூல். அந்த நூலை இயக்குநர் லிங்குசாமியும், அவரது உதவி இயக்குநர் தியாகு என்பவரும் படித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அது பிடித்திருந்த காரணத்தால் யுகபாரதியைப் பாடல் எழுதவைக்கலாமென்று அவரை உதவி இயக்குநர் தியாகு சந்தித்திருக்கிறார்.

""நான் லிங்குசாமியின் உதவி இயக்குநர். என் பெயர் தியாகு. நீங்கள் சினிமாவுக்குப் பாடல் எழுதுகிறீர்களா? எழுத விருப்பமா?''  என்று கேட்டிருக்கிறார்.  ""எனக்கு விருப்பமில்லை. நான் சினிமாவுக்கு எழுதவேண்டும் என்று நினைத்ததும் இல்லை''  என்று இவர் சொல்லியிருக்கிறார்.

""இப்போது எழுத நினையுங்கள். வாருங்கள். டைரக்டர் உங்களைக் கூட்டி வரச் சொன்னார்'' என்று கூட்டிப்போய் அறிமுகப்படுத்தியிருக்கிறார் தியாகு. ""நீங்கள் மெட்டுக்கு எழுதுவீர்களா?''  என்று கேட்டிருக்கிறார் லிங்குசாமி. ""அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். மெட்டுக்கெல்லாம் எழுதிப் பழக்கமில்லை''  என்று சொல்லியிருக்கிறார் யுகபாரதி.  ""அப்போ நீங்களே பாடல் எழுதுங்கள் பாடலுக்கு மெட்டுப் போடச் சொல்லலாம்''  என்று சொல்லிவிட்டு பாடலுக்கானக் காட்சியை விளக்கியிருக்கிறார் டைரக்டர்.

""காதலன் காதலியைப் பிரிந்து வேலைக்காக வெளியூருக்குச் செல்கிறான். அப்படிச் செல்கின்ற நேரத்தில் உன் ஞாபகமாக எனக்கு ஏதேனும் ஒன்றைக் கொடுத்துவிட்டுப்போ என்கிறாள் காதலி. சட்டைப்பையில் தேடிப் பார்த்தான். ஒரே ஒரு ரூபாய் மட்டும் இருந்தது. இதுதான் இருக்கிறது. என் ஞாபகமாக இதை வைத்துக்கொள் என்று கொடுக்கிறான். அவள் வாங்கிக் கொள்கிறாள்.

இந்த ஒரு ரூபாயைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அவன் ஞாபகம் வருகிறது. ஒருமுறை அவன் ஞாபகம் வந்தபோது இந்த ரூபாயை மனதில் வைத்துப் பாடுகிறாள். இதுதான் காட்சி. எழுதுங்கள்''  என்று சொல்லியிருக்கிறார். என்ன எழுதுவதென்று இவருக்கொன்றும் புரியவில்லை. இருந்தாலும் இரண்டுநாள் கழித்து இவர் பாடல் எழுதிச் செல்கிறார். டைரக்டரிடம் காட்டுகிறார். அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. இவருக்கு சினிமாவுக்குப் பாடல் எழுத வராதோ என்று நினைக்கிறார்கள்.  ""அதனால் எங்களுக்கு இந்தப் பல்லவி நன்றாக இருப்பதாகத் தெரியவில்லை. வேறு பல்லவி ஏதேனும் எழுத முடிந்தால் எழுதி வாருங்கள் அப்புறம் சொல்கிறோம்''  என்று லிங்குசாமி சொல்லியிருக்கிறார்.

""அதுதான் நான் சொன்னேனே சார். எனக்கு சினிமாவுக்கெல்லாம் எழுத வராது என்று! நீங்கள்தான் வற்புறுத்தினீர்கள்''  என்று சொல்லிவிட்டு இவரும் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார்.

சில மாதங்கள் கழித்து இந்தக் காட்சிக்காகப் பாடல் ஒலிப்பதிவு செய்ய வேண்டியிருந்தது. இந்தப் படத்திற்கு இசை எஸ்.ஏ. ராஜ்குமார். யுகபாரதி எழுதிய இந்தப் பல்லவியைக் காண்பித்து  ""இப்படி ஒருவர் எழுதியிருக்கிறார். எங்களுக்கு அவ்வளவு சரியாக இது இருக்குமா என்று தெரியவில்லை. நீங்களே பாருங்கள்'' என்று லிங்குசாமி சொல்லியிருக்கிறார். பாடலைப் பார்த்துவிட்டு எஸ்.ஏ. ராஜ்குமார் டியூன் போட்டுப் பாடியபோது லிங்குசாமி முதல் எல்லாருக்கும் இது பிடித்துவிட்டது.

""இந்தக் காட்சிக்கு இதைவிட நல்ல பல்லவி எங்கே கிடைக்கும். இவரையே அழைத்து சரணம் எழுதச் செய்யுங்கள். மெட்டுப் போட்டுக் கொள்வோம்'' என்று ராஜ்குமார் சொல்லிய பிறகுதான் யுகபாரதி அந்தப் பாடலை எழுதி முடித்தார்.  படத்தில் நடிகை சிநேகா பாடுவதுபோல் அந்தப் பாடல் இருக்கும். இது இடம்பெற்ற திரைப்படம்  "ஆனந்தம்'. இதுதான் அந்தப் பாடல்.

"பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
ஒற்றை நாணயம்
புல்லாங் குழலின் துளைகள் பார்த்தேன்
ஒற்றை நாணயம்'

பாடல் மிகப் பிரபலமானது. படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது 2000-ஆம் ஆண்டில் வெளிவந்த படம். யுகபாரதி திரையுலகில் நுழைந்த கதை இப்படித்தான்.
ஆனாலும் அதன்பிறகு பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. பல மாதங்கள் கழித்து திருப்பதிசாமி இயக்கத்தில் "நரசிம்மா' என்ற படத்திற்கு எழுதினார்.  படம் முடிவதற்குள் இயக்குநர் திருப்பதிசாமி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் மணிசர்மா.  படமும் வெற்றி பெறவில்லை.
இந்தத் திருப்பதிசாமி ஆனந்தவிகடனில் முன்பு பணியாற்றியவர். 1991-ஆம் ஆண்டு எனக்குக் "கலைத்துறை வித்தகர்' விருதை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா வழங்கியபோது ஆனந்தவிகடனுக்காக என்னைப் பேட்டி எடுத்தவர் அவர். டைரக்டர் சிம்புதேவனும் இவரும் சமகாலத்தில் ஆனந்தவிகடனில் பணியாற்றியவர்கள் என்று நினைக்கிறேன்.
அதன்பிறகு வித்யாசாகர் இசையில்  "ரன்'  படத்தில் ஒரு பாடல் எழுதினார் யுகபாரதி. பாடலும் படமும் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

"காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ செளக்கியம் பரவாயில்லை
நானும் அவஸ்தையும் பரவாயில்லை'

என்ற பாடல்தான் வித்யாசாகர் இசையில் இவர் எழுதிய முதற்பாடல். இந்தப் படத்திற்கு இயக்குநர் லிங்குசாமி. இந்தப் பாடலை உதித்நாராயணன் பாடினார். நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. இது 2002- ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் பாடலில் இருந்துதான் யுகபாரதி திரைப்பாட்டுத் துறையில் ஏறுமுகமானார்.
கரு. பழனியப்பன் இயக்கத்தில்  "பார்த்திபன் கனவு'  படத்தில் வித்யாசாகர் இசையில்,

"கனாக்கண்டேனடி தோழி - நான் 
கனாக்கண்டேனடி தோழி'
என்ற பாடல். "திருமலை' படத்தில் வித்யாசாகர் இசையில்,
"நீயா பேசியது - என் அன்பே நீயா பேசியது' என்ற பாடல். 
375 நாட்கள் ஓடிய ரஜினிகாந்த் நடித்த  "சந்திரமுகி'  படத்தில்
"கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா'
என்ற பாடல்.
"கில்லி' படத்தில் 
கொக்கரக்கொக்கரக்கோ -
 ஏ விடிய கொக்கரக்கோ - 
இருந்த இருட்டெல்லாம் 
இனி மேலே கொக்கரக்கோ' 

என்ற பாடல். இவையெல்லாம் வித்யாசாகர் இசையில் யுகபாரதி எழுதிய பாடல்கள். வித்யாசாகர் இசையில் மட்டும் முந்நூறு பாடல்கள் எழுதியிருக்கிறார் என்றால் இவர் ஆற்றல் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள். சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் கூடப் பேசப்பட்ட பாடல்,

"மன்மத ராசா
மன்மத ராசா
கன்னி மனசக் கிள்ளாதே'

என்ற பாடல். இது  "திருடா திருடி'  என்ற படத்தில் "தினா' இசையில் யுகபாரதி எழுத மாலதி லட்சுமணனும் சங்கர் மகாதேவனும் பாடிய பாடல். தினாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்தின் மூலம்தான் வந்தது. இது நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படம். இந்தப் பாடலால்தான் படம் வெற்றிபெற்றது என்று கூடச் சொல்லலாம்.

இந்தப் படம் வெளிவந்த 2003- ஆம் ஆண்டில்தான் நான் முதன்முதல்  குவைத் நாட்டிற்குச் சென்றேன். அங்கும் இந்தப் பாடலைப் பற்றித்தான், அப்போது பேச்சிருந்தது. எல்லாரும் பாடலைச் சொன்னார்களே தவிர அதை எழுதியவர் பெயரைச் சொன்னவன் நான் ஒருவன்தான்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் "பசங்க' என்ற படத்தில் யுகபாரதி எழுதிய

"அன்பாலே அழகாகும்வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கைசேரும்போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு'

என்ற பாடல் எல்லோரையும் ஈர்த்த பாடல். இந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பு; சங்கீத விற்பன்னர் பாலமுரளி கிருஷ்ணா இந்தப் பாடலைப் பாடியதுதான். இது தேசிய விருது பெற்ற படம்.

டி. இமான் இசையில் மட்டும் நானூறு பாடல்கள் இவர் எழுதியிருக்கிறார்.  அதில் "கும்கி'  படத்தில் இடம் பெற்ற,

"கையளவு நெஞ்சத்திலே
கடலளவு ஆசை மச்சான்
அளவு ஏதுமில்லை
அதுதான் காதல் மச்சான்'

இந்தப் பாடலைப் பாடியவரின் குரலாலும் இந்தப் பாடல் வெற்றி பெற்றதென்று நான் சொல்வேன்.   மகிழினி மணிமாறன் என்ற பாடகி பாடிய பாடல் இது.
இது அப்போது வித்தியாசமான குரலாகவும் இருந்தது. அதனால் ரசிகர்கள் மிகவும் விரும்பிய பாடலாகவும் அமைந்தது. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் யுகபாரதிதான் எழுதினார். பிலிம்பேர் விருது முதல் பல விருதுகளை இப்படம் பெற்றது. அதுபோல்  "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தின் எல்லாப் பாடல்களையும் இவர்தான் எழுதினார். அதில்,

"ஊதாக் கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்'

என்ற பாடல் இன்னும் சின்னஞ்சிறுசுகளின் தேசிய கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இது சிவகார்த்திகேயன் நடித்த படம். ஏ.ஆர்.ரகுமான் இசையைத் தவிர மற்ற எல்லா இசையமைப்பாளர்கள் இசையிலும் எழுதி இருக்கிறார். இவர் இதுவரை ஐம்பது படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இளங்கவிஞர்களில் இத்தனை படங்களுக்கு மொத்தப் பாடல்களை எழுதியவர் இவராகத்தான் இருப்பார் என்று எண்ணுகிறேன்.

நடிகர் பார்த்திபன் நடித்த  "மாவீரன் கிட்டு" என்ற படத்திற்கு வசனம் பாடல்கள் எழுதிய பெருமை இவரைச் சேரும். இது ஈழத்தமிழர்கள் பற்றிய படம்.

இடைவிடாமல் தொடர்ந்து கவிஞர் விவேகா போல் பாடல் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது பாடலைப் பற்றி மட்டுமே சொல்ல வேண்டுமென்றால் இரண்டு வாரங்களாவது எழுத வேண்டும். அதற்கு இப்போது இடமுமில்லை, எனக்கு நேரமும் இல்லை.

என் தலைமையில் சில கவியரங்கங்களில் பாடியிருக்கிறார். பல புத்தங்கள் எழுதியிருக்கிறார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு தமிழன்பன் தலைமையில் நடந்த கவியரங்கில் நானும் யுகபாரதியும் சேர்ந்து பாடியிருக்கிறோம். அப்போது அவர் வீட்டிற்கு என்னைச் சாப்பிட

அழைத்துச் சென்றார். தமிழன்பனையும் அழைத்தார். அவர் சைவம் என்பதால் வரவில்லை.  நான் அசைவமும் சாப்பிடுபவன். அதனால் விரும்பிச் சென்றேன். அவர் தாயார் மீன்குழம்பு சாப்பாடு போட்டார்கள். சாப்பிட்ட பிறகுதான் தெரிந்தது தஞ்சாவூர் பகுதியிலே பெரும்பாலான வீடுகளில் மீன்குழம்பில் மாங்காய் போடுவார்கள் என்பது! அது எனக்குப் புளிப்புக் கலந்த வித்தியாசமான சுவையாக இருந்தது. யுகபாரதிக்கு நன்றி.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com