செண்டை மேளம் தமிழக இசை வாத்தியம்தான்!:

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்கு - குருவாயூரப்பன் கோயிலில் செண்ட மேளம்,  பஞ்சவாத்தியம்  இலவச பள்ளி நடைபெற்று வருகிறது.
செண்டை மேளம் தமிழக இசை வாத்தியம்தான்!:

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்கு - குருவாயூரப்பன் கோயிலில் செண்ட மேளம்,  பஞ்சவாத்தியம்  இலவச பள்ளி நடைபெற்று வருகிறது.  இப்பயிற்சி பள்ளியின் குரு, பள்ளிப்புரம் ஸ்ரீ கோபி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செண்டை மேளம் வாத்தியத்தில் மட்டுமின்றி  திமிலை, இடக்கை, தபேளா, ட்ரம்ஸ், டோலக், உடுக்கை, உருமி, தாளம், மத்தளம் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவர்.  இவரின் இசை நிகழ்ச்சிகள் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இடம் பெற்றுள்ளது. திமில - தாயம்பகா கருவிகளை உள்ளடக்கி இவர்  உருவாக்கிய இசைக்கு கேரளா இசை அகாதெமி அங்கீகாரம் அளித்துள்ளது. மேலும் இந்த இசையை உருவாக்கிய கோபிக்கு குருவாயூர் கோயிலில் அந்நிகழ்ச்சியை அரங்கேற்றி பொதுமக்கள் முன்னிலையில் விருது வழங்கி  கெüரவித்தது அகில இந்திய வானொலி நிலையம். செண்டை மேளம் குறித்து கோபி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""நான் கேரளாவில் பட்டாம்பி, பாலக்காடு, திருச்சூர், ஆலத்தூர், மலப்புரம், ஓங்கலூர், மங்களம் பகுதிகளில் இசை பள்ளி நடத்தி வந்தேன்.  ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் விளக்கு பூஜை சமயத்தில் செண்டை மேளம் வாசிக்க மட்டும்  சென்னை  மகாலிங்கபுரம் ஐப்பயன் கோயிலுக்கு வருவேன். இதற்கிடையில்,  இசை குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வந்தேன். ஒரு கட்டத்தில்  எனது தேடலுக்கு உகந்த இடம் சென்னை தான் என்று தோன்றியதால் ,  சென்னை மகாலிங்கபுரம் கோயிலில் பணிக்கு சேர்ந்தேன். 
இசை குறித்த ஆராய்ச்சியில் அறிந்தது நாதஸ்வரம் - தவில்  எப்படி தமிழக பாரம்பரிய வாத்தியமோ அதுபோன்று  கேரளாவின் பாரம்பாரிய இசையான செண்டை மேளமும் தமிழகத்தில் இருந்து வந்ததுதான்.  

குருவாயூர் கோயில் உள்ளிட்ட  பல கோயில்களில் நிரந்தரமாக  செண்டைமேளம் வாசிக்கும்  குடும்பத்தினர் பல தலைமுறைக்கு முன் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் தான். தமிழகத்தில் சென்னை அருங்காட்சியகத்தில் காணப்படும் பஞ்சமுக யாழ்,  நாகவீணை, மல்ச வீணை, ஜம்பதாளம், மயில் வீணை உள்ளன இது போல் ஏராளமான வாத்தியக் கருவிகளை காணலாம்.  ஆனால் அவற்றை வாசிப்பதற்கு தற்போது ஆட்களில்லை. சில வாத்தியக் கருவிகள் மற்ற மாநிலங்களில் உபயோகப்படுத்துகின்றனர். 

மேலை நாட்டு வாத்தியமான ட்ரம்ஸ், வயலினை நாம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். கிளாசிக்கல் நோட்ஸýக்கும் வயலினை நாம் வாசிக்கத் தொடங்கினோம். இசை என்பது மூச்சு மாதிரி,  உயிர் உள்ள அனைவரும் சுவாசிக்கலாம் அது தான் இசை. இசையை பொருத்தவரை உலகம் ஒன்று.  அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானதாக  இசை கருதப்பட்டது. அதை ரசிக்கும் மனோபாவம் இருந்தாலும் அதை வாசிக்க ஆசை இருந்தும் ஒதுங்கினார்கள். 

"செண்டா'  என்கிற வாத்தியம் பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவானது.  பாண்டியர்கள் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட போது  மஹா அரையர் என்ற பிரிவினர் இருந்தனர். அவர்கள் பூஜைக்கும், கோயில் திருவிழாக்களுக்கும்  உபயோகப்படுத்திய வாத்தியம் தான் "சண்டோல்'  அது இரண்டு பக்கமும் வாசிப்பார்கள்.

தமிழகத்துக்கு பின் தான் கேரளா உருவானது.  கோயில் விசேஷங்களுக்கும், பூஜைகளுக்கும் வாசிக்க  தமிழகத்தில் இருந்து தான் மஹா அரையர் பிரிவினரை கேரளாவுக்கு அனுப்பினர்.  மஹா அரையர் பிரிவினர் கேரளாவிற்கு வந்த பின்னர் அந்த மேளத்தை ஒரு பக்கம் வாசிக்க ஆரம்பித்தனர். அதனுடைய பெயரும்  "செண்டை மேளம்'  என்று மருவிவிட்டது.
ஆதிகாலத்தில் அதற்கு  "பாண்டி மேளம்'  என்ற பெயர் தான் இருந்தது.  அதுமட்டும்தான் இசை வாத்தியமாகவும் இருந்தது.  அதன்பிறகு,  பஞ்சாரி மேளம், தாயம்பக  என வித விதமான வாசிக்கும் இசைக்கருவிகள் கேரளாவுக்கு வந்தன.

இந்த வாத்தியம் எந்த கோயில் பூஜைக்கும்,  திருவிழாவுக்கும்,  மங்களகரமான அனைத்து விசேஷங்களுக்கும் வாசிப்பது சிறப்புடையது.  

செண்டை மேளம் பயிற்சி தொடங்கும் போது கல்லில் தான் அடிக்க ஆரம்பிப்பார்கள். அது ஓர் ஆண்டு பயிற்சி தொடரும், 2-ஆவது ஆண்டு மரக்கட்டையில்,  3 - ஆவது ஆண்டு பேஸ் செண்டா (சத்தம் இல்லாமல்) பயிற்சி, 4-ஆவது ஆண்டு தான் உண்மையான இசை வாத்தியத்தில் வாசிக்க ஆரம்பிப்பார்கள்.  

செண்டை மேளம் வாசிப்பவர்களின் அரங்கேற்றம் 4 ஆண்டுகள் கழித்துத்தான் நடைபெறும். இந்த நான்கு ஆண்டுகளில் கோயில் பூஜைக்கான செண்டை மேளம் வாசிப்பது எப்படி என்றும் பயிற்றுவிக்கப்படும். கோயில் பூஜையென்றால் பிரம்ம முகூர்த்தம் 3.30 மணிக்கு, நடை திறக்கும் போது சங்கு ஊதுவார்கள். 6.15-க்கு ஸ்ரீவேலி பூஜை நடக்கும்போது செண்டை வாசிக்கப்படும். அதன் பின் உச்ச பூஜை டைபெறும் போதும் செண்டை வாசிப்பார்கள். மாலை தீபாராதனைக்கும் செண்டை மேளம் வாசிப்பார்கள். இரவு அத்தாழ பூஜைக்கும் செண்டை வாசிப்பார்கள். இந்த ஒவ்வொரு பூஜைக்கும் வித்தியசமான தாளம் வாசிக்கப்படும்.

கோயிலுக்கு வெளியே இருப்பவர்களுக்கு இந்த தாளத்தைக் கேட்கும் போதே எந்த பூஜை என்று அறிந்துக் கொள்வார்கள். 

இந்த கோயிலில் நடைபெறும் பயிற்சி பள்ளியில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆர்வமுடையவர்கள் 7 வயதில் இருந்து 40 வயது உடையவர்களும் ஆர்வமுடன் வருகின்றனர்.

தற்பொழுது பயிற்றுவிக்கப்படும்  நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவர்களில் ஆர்வம் உள்ள பொறியாளர், டாக்டர், வங்கி மேலாளர்கள்,  ஐ.ஏ.எஸ் அதிகாரியும் படிக்கின்றனர். 

இங்கு பயிற்றுவிக்கப்படும் மாணவர்களின் 2 - ஆவது அரங்கேற்ற விழா வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி விஜயதசமி அன்று நடைபெறவுள்ளது.  ஐயப்பன்  - குருவாயூரப்பன் இரண்டு  சுவாமிகளின் பெயரிலும் புரஸ்காரம் (விருதுகள்) வழங்கப்படவுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற  செண்டை மேளக் கலைஞர்கள் நடிகர் ஜெயராம், மட்டணூர் சங்கரன்குட்டி மாரார் விருதுபெறவுள்ளனர்.

இவ்விழாவில் 101 பேர் செண்டை மேளம் வாசிக்கும் பிரமாண்ட  விழா நடைபெறவுள்ளது. 

பார்ப்பதற்கு அனுமதில்லை என்று மறுக்கப்பட்ட  "அனுஷ்டான கலா'   என்று கோயிலுக்கு உள்ளேயே வாசித்த  இசை கருவிகளுக்கு  தற்பொழுது அரசு இசை கல்லூரிகளை தொடங்கியதால் ஆகோஷ கலைகளாக அனைவருக்கும் பயிற்றுவிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது, வரவேற்கத்தக்கது''  என்கிறார் பள்ளிப்புரம் கோபி. 


சொல்கிறார்: பள்ளிப்புரம் ஸ்ரீ கோபி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com