திருக்குறளும் காகிதப் பென்சிலும்!

பள்ளி சென்றவர்களில்   திருக்குறளை படிக்காதவர்கள்  இருக்க மாட்டார்கள். திருக்குறள்  படித்தவர்களிலும்  திருக்குறளை மறக்காதவர்கள்  அநேகர் இருப்பர்.
திருக்குறளும் காகிதப் பென்சிலும்!

பள்ளி சென்றவர்களில்   திருக்குறளை படிக்காதவர்கள்  இருக்க மாட்டார்கள். திருக்குறள்  படித்தவர்களிலும்  திருக்குறளை மறக்காதவர்கள்  அநேகர் இருப்பர்.  ஆனால்,   திருக்குறள்  நீதிகளைப்  பின்பற்றி  வாழ்பவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். அதுபோலவே திருக்குறளை  பரப்புபவர்களும், நினைவுபடுத்துபவர்களும்  குறைவாகத்தான் இருப்பார்கள். அந்தப் பட்டியலில் வருபவர்தான்  சித்தார்த்தன்.  மதுரை  ஹாரப்பாளையம் பகுதியில் வசிக்கும் சித்தார்த்தன்  "குறள் மொழி காகிதப் பென்சில்' களைத் தயாரித்து  விற்பனை செய்து வருகிறார். எழுதும்  பொருள் மூலம்,  உலகை இரு அடிகளால் அளந்த குறளைப் பரப்பி வரும்  சித்தார்த்தன்  மனம் திறக்கிறார்:

""எங்களுக்கு  திருநெல்வேலிதான் பூர்வீகம்.  அப்பாவுக்கு  அரசு வேலை. அதனால் பல இடங்களில்  வேலை பார்க்க  வாய்ப்புகள்  கிடைத்தன. நாங்கள் மதுரையில்  நிரந்தரவாசிகள் ஆனோம்.

அப்பா இசையிறை சேரலாதன். திருக்குறள்  வித்தகர்.   திருக்குறள் குறித்து கட்டுரைகள் பல  ஜன ரஞ்சக  பத்திரிகைகளில்  எழுதி வந்தார்.  தினமும்  பத்து திருக்குறள்  எங்களைச்   சொல்லக் சொல்வார்.  திருக்குறள் சொன்னால்தான் காலையில்  எலுமிச்சை பிழிந்து தேன் கலந்த  சர்பத்  கிடைக்கும்.  வீட்டில் காபி, தேநீர் பழக்கம் அப்போது இல்லை.  அதனால்,  எங்களுக்கு திருக்குறள் அத்தனையும்  மனப்பாடம்.  தனது  வாரிசுகளுக்கு  தூய்மையான  தமிழ் பெயர்களை   சூட்டினார். அப்பா  எங்களுக்கு  திருக்குறளை  மந்திரமாகச் சொல்லி  தமிழ் மரபுப்படி  திருமணம் செய்து வைத்தார்.  அப்பாவைப் பின்பற்றி  நாங்களும் எங்கள் பிள்ளைச் செல்வங்களுக்கு  தமிழ் பெயர்களை வைத்தோம்.

வளர்ந்ததும்  நான்  "குறள் நெறி பதிப்பகம்'  தொடங்கி பாடப் புத்தகங்களை வெளியிட்டு வந்தோம்.  காலக் கிரமத்தில்   விற்பனை குறைந்ததினால் அச்சகத்தைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை. ஆனாலும்,  குறளை பரப்ப ஒன்றும்  செய்ய முடியவில்லையே  என்ற ஏக்கம் என்னுள்ளே இருந்தது. மறைந்த அப்பாவின் படத்தைப் பார்க்கும்  போதெல்லாம்  குறள் நினைவுகள் அலை மோதும்.  அப்போதுதான்   காகிதப் பென்சில்  உருவாக்கலாம்  என்று தோன்றியது.

சாதாரணமாக குழந்தைகள் எழுதப் பயன்படுத்தும் பென்சில்கள் மரத்தில் செய்யப்பட்டதாக  இருந்தன.  அதற்கான மரங்கள்  வெட்டப்பட்டன.  இப்போது   செயற்கைப்  பொருள்களைக்  கொண்டும்  தயாரிக்கப்படுகிறது. பழக்கத்தில் இருக்கும்  செய்தித்தாள்கள்  இதர தாள்களைக் கொண்டு  "பால் பாயிண்ட்' பேனாக்கள் தயாரிக்கப்படுகின்றன. தொடர்ந்து எழுதும்போது வியர்வையால் பேனாவைச் சுற்றியிருக்கும்  தாள்கள்  விரியத் தொடங்கும். அதனால்  நாம்  வித்தியாசமாக  காகிதப் பென்சில்  தயாரிக்கலாம்.  அதில் குறளையும் பரப்பலாம்,  என்று முடிவு செய்தேன். பழைய காகிதங்களைக் கூழாக்கி  பென்சிலில் இருக்கும் கருநிற  கார்பன்  கோலினை  காகிதக் கூழால் மூடி உறுதிப்படுத்தி மேல்புறம்  திருக்குறள்களை   அச்சிட்டு  பென்சிலைச் சுற்றி ஒட்டி விற்பனை செய்வது  என்று முடிவானது.   இதனால்  பென்சில் உருவாக்க மரத்தின் தேவை குறையும்.  குறள்களையும்   தாங்கி  காகிதப் பென்சில்கள் வெளிவரும். 1330  குறள்களை அச்சிட்டு  காகிதப் பென்சில்களைத் தயாரித்தோம்.  பிறகு எளிதாகக் கணக்கு, வாய்ப்பாடு கற்க அதற்கான பென்சில்களைத் தயாரிக்க ஆரம்பித்தோம்.  தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள் கொண்ட பென்சில்களையும்  தயாரிக்கிறோம். 

அமெரிக்கா, கனடா, மலேஷியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் செயல்படும் பள்ளிகளில்  தமிழ் படிக்கும் குழந்தைகளுக்கும்,   தமிழ் ஆர்வலர்கள்  அந்த  நாடுகளில்  நடத்திவரும் பள்ளிகளுக்கும்   இந்தப் பென்சில்கள்  போய்ச் சேருகின்றன.  மதுரையில்  சில  பள்ளிகளிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.  கடைகளுக்கு  விற்பதில்லை''   என்கிறார் குறள்களை  காகிதப்  பென்சில்களில்  பரப்பி வரும்  சித்தார்த்தன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com