தொண்டன் முன் செல்ல... எம்பெருமான் உலா வர...

தை அமாவாசையின் இரண்டாவது நாள் என்பதால் எங்கும் இருள் கவ்வியிருந்தது.
தொண்டன் முன் செல்ல... எம்பெருமான் உலா வர...

தை அமாவாசையின் இரண்டாவது நாள் என்பதால் எங்கும் இருள் கவ்வியிருந்தது. இரவு மணி 1.30 என்று என் கைக்கடிகாரம் காட்டியது. சூழ்ந்திருந்த இருளைத் தற்காலிகமாக,  நிறுத்தப்பட்டிருந்த டியூப் லைட்டுகளும், லாந்தர் விளக்குகளும், வீடுகளின் வெளிவாயிலில் ஒளிவீசிக் கொண்டிருந்த எலெக்ட்ரிக் பல்புகளும் விரட்டிக் கொண்டிருந்தன. திண்ணையை விட்டு இறங்கி வீதிக்கு வந்தோம். கண்களுக்கு எட்டியவரை இருந்த வீட்டு வாசல்களில் எல்லாம் தண்ணீர் தெளிக்கப்பட்டு, பெரிய, பெரிய கோலங்கள் போடப்பட்டிருந்தன. பட்டுப்புடவையில் சில பெண்கள், மடிசாரில் சிலர், பட்டுப் பாவாடை கட்டிய சிறுமிகள், நெற்றியில் திருமண், இடுப்பில் பஞ்சகச்சத்தோடு ஆண்கள், தங்கள் இல்லங்களின் முன் குழுமி இருந்தனர். வீட்டின் தலைவிகளின் கைகளில் ஏந்தி இருந்த பெரிய தாம்பாளங்களில், தேங்காய்கள், பழங்கள், கற்கண்டு, காய்ந்த திராட்சை, முந்திரி என்று வருகின்ற பெருமாள்களுக்கு காணிக்கையாக்க வைத்திருந்தனர்.

டமர, டமர, டம் என்று ஊர்வலம் நாங்கள் நின்றிருந்த தெருவுக்குள் நுழைந்தது. முதலில் மணவாள மாமுனிகள் பல்லக்கில் அமர்ந்து பவனி வந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய மனதுக்கினிய, திருமங்கை ஆழ்வாரும், அவருடைய மனைவி குமுதவல்லியும் ஹம்ச வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். தன் தொண்டரான திருமங்கை ஆழ்வாரை முன்னே நிறுத்தி, பின்னால் பதினொரு கருட வாகனத்தில் எம்பெருமான் நாராயணன் வந்துகொண்டிருந்தார்.

இதைக் கண்டதும் என் கண்கள் பனித்தன. அவ்வையார் சொன்ன, காலத்தால் அழியாத வரிகள் மனக்கண் முன் ஓடின.

"இறைவரோ தொண்டர் உள்ளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே.' திருமங்கை ஆழ்வாரை ஆட்கொள்ள பெருமாளே, பிராட்டியோடு இந்த பூவுலகத்திற்கு வந்ததை சரித்திரம் மறக்குமா? சோழ மன்னரிடம், படைத்தலைவனாக இருந்து, பிறகு ஒரு சிறு பகுதிக்கு அரசனாகினார்.  திருமங்கை என்பது அவருடைய ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இருந்ததால் திருமங்கை மன்னன் என்று அழைக்கப்பட்டார். திருவெள்ளக்குளம் என்று அழைக்கப்படுகிற அண்ணன்கோயில் ஊரைச் சேர்ந்த குமுதவல்லியைக் காதலித்து, அவள் ஒரு வருடம் வைஷ்ணவ பக்தர்கள் 1000 பேருக்கு உணவு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி, பிறகு குமுதவல்லியை மணந்து, செய்த கைங்கர்யத்தை நிறுத்த மனமில்லாமல், தொடர்ந்து செய்து, ஸ்ரீரங்கம் கோயில் மதிற்சுவரைக் கட்ட நிதி கொடுத்து, கையில் பொருள் அனைத்தும் தீர்ந்தபின், செய்யும் நல்ல சேவைக்காக, கள்வராகி, வழிப்பறி செய்து, அதில் வந்த செல்வத்தைக் கொண்டு திருப்பணிகள் செய்யும்பொழுது, மணமக்களாக வந்த பெருமாளிடமும், தாயாரிடமுமே கொள்ளையடித்து தாயாரின் மெட்டியை கழற்றமுடியாமல், திகைத்து அவரின் அருட்பார்வை பட்டு தெளிந்து, உணர்ந்து, நல்வழிப்பட்டு   செல்லும் இடந்தோறும் அந்தத் தெய்வத் தம்பதியரைப் போற்றிப் பாடுவதையே, எடுத்த ஜென்மம் கடைத்தேறி அந்த பரம்பொருளை அடையும் மார்க்கம் என்று உணர்ந்தார், திருமங்கை ஆழ்வாரானார்.

இங்கே திருநாங்கூரின் அத்துணை அதாவது பதினொரு திவ்ய தேசங்களில் உறையும் பெருமானைப் போற்றிப் பாடியிருக்கிறார். இந்தப் பாசுரங்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பன்னிரெண்டு ஆழ்வார்களில், கடைசியாக இடம் பெற்றிருக்கும் திருமங்கையாழ்வார் மீது எம்பெருமான் கடைசி பிள்ளையின் மீது தாயின் அன்பு அதிகமாக இருக்கும் என்பதைப்போல செயல்பட்டிருக்கிறார் என்று எண்ணி மகிழ்ந்தேன். மூன்று நாட்கள் திருநாங்கூரில் நடைபெறும் இந்த விழாவில் திருமங்கை ஆழ்வாருக்கே அதிக அளவில் மரியாதை செய்யப்படுகிறது.

திருநாங்கூர் பதினொரு கருடசேவையின் முதல்நாள் நடுஜாமம் 1.30 மணிக்கு திருநகரி கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வாரின் புறப்பாடு தொடங்குகிறது. அவரைத் தூக்கிச் செல்லும் பக்தர்கள், ஓடுகின்ற ஓட்டத்தைக் கண்டு முதல் முதலில் அங்கே செல்பவர்கள் அதிர்ந்து போவார்களாம். அப்படி சரியான பாதைகள் இல்லாத நிலையில், கல்லிலும், முள்ளிலும் பாதங்கள் புண்பட அவருடைய திருவிக்கிரகத்தைச் சுமந்து சென்று ஆழ்வாரின் பிறப்பிடமான திருக்குறையலூருக்கு எடுத்துச் செல்கிறார்கள். அங்கே அவருக்கு மரியாதைகள் செய்யப்படுகிறது.

பிறகு, அவருடைய மனைவி குமுதவல்லியின் பிறப்பிடம் நோக்கி திருமங்கை ஆழ்வார் பயணிக்கிறார். மாமனார் வீடு ஆயிற்றே. அங்கே அவருக்கு ராச உபசாரம் நடைபெறுகிறது. திருநாங்கூரின் பதினொரு கோயில்களுக்கும் திருமங்கை ஆழ்வார் சென்று மறுநாள் நடக்க இருக்கும் கருடசேவைக்கு அங்கே குடிகொண்டிருக்கும் எம்பெருமான்களை எல்லாம் அழைக்கிறார்.

இங்கே ஒரு வேடிக்கை  என்னவென்றால், வயல்களின் நடுவே எல்லாம் ஆழ்வாரை சுமந்துகொண்டு ஓடுகிறார்கள். திருமங்கை ஆழ்வார் கள்வராக செயல்பட்டபொழுது, இப்படித்தான் குதிரையில் வேகமாக வயல்களுக்கு இடையே புகுந்து சென்று கொள்ளையடிப்பாராம். இதுபோல இன்றும் அவரை வயல்களுக்கு இடையே சுமந்து சென்றால் தங்கள் வயல்களில் அமோக விளைச்சல் விளையும் என்று அந்த ஊர்களின் கிராமத்து மக்கள் நம்புகிறார்கள்.

இப்படியாக ஓடி திருமங்கை ஆழ்வாரை மணிகரணி கரை என்கின்ற காவேரி ஆற்றின் கிளை நதியில் மூழ்கி குளிக்க வைத்த பின் அவருக்கு, கும்பகோணம், ஸ்ரீரங்கம் கோயில்களில் இருந்து கொண்டு வரப்படும் மாலைகள் மற்றும் பட்டு பீதாம்பரங்கள் சாற்றப்படுகின்றன. பிறகு அருகில் இருக்கும் ஒரு மண்டபத்தில் திருமங்கை ஆழ்வாருக்கும், அவருடை மனைவி குமுதவல்லிக்கும், அவர் வணங்கிய விக்கிரகம் "சிந்தனைக்கு இனியன்' என்று அழைக்கப்பட்ட அந்த பெருமாளுக்கும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தகைய அபிஷேகம் பன்னிரெண்டு நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது.

பகல் மூன்று மணிக்கு திருமணிமாடக் கோயிலை அடைந்து அங்கே ஆழ்வார் அன்றைய இரவைக் கழிக்கிறார். மறுநாள் தொடர்ந்து 100 வருடங்களாக அரங்கேறும் கருடசேவை தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் நான்கு மணிவரை திருநாங்கூரின் சுற்று வட்டாரங்களில் இருந்து பதினொரு பெருமாள்கள் வந்து சேர்கிறார்கள். அவர்களை வாயில்வரை சென்று திருமங்கை ஆழ்வாரும், குமுதவல்லியும், மணவாள முனிகளும் வரவேற்கின்றனர். எல்லா பெருமாள்களுக்கும், அபிஷேகம், ஆராதனை ஆகியவை முடிந்தபின், அவரவருடைய கருட வாகனங்களில் சென்று அமர்கிறார்கள். அத்தனை பெருமாள்களையும் ஒருசேர ஒரே பந்தலின்கீழ் கண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று நம்பப்படுகிறது.

திருமங்கை ஆழ்வாருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன, பதினொரு பெருமாள்களின் அன்பளிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டபின், திருமணிமாடக் கோயிலின் மாட வீதிகளில், தன் தொண்டன் முன் செல்ல எம்பெருமான், பதினொரு ரூபங்களில் 11 கருட வாகனங்கள் மீது தனித்தனியாக உலா வருகிறார். ஒவ்வொரு வீட்டின் முன்னும் நின்று ஆராதனைகளை பெற்றுக்கொள்கிறார்.

பதினொரு கிராமத்து மக்களும் ஒற்றுமையோடு ஒன்றுகூடி, வரும் பக்தர்களுக்கு போதும், போதும் என்ற அளவில் உணவு படைத்து, அவர்கள் இந்த அற்புத பதினொரு கருடசேவை விழாவைக் கண்டுகளிக்க வைக்கிறார்கள். அன்று கண்முன் கண்ட காட்சிகளும், ஜென்மம் கடைத்தேற பெற்ற புண்ணியமும் அனைவரும் பெற வேண்டுகிறேன்.
தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com