மரங்களின் மறு நடவு!

பெருகி வரும் மக்கள் தொகை,  அதற்கேற்ப கூடி வரும் கட்டடங்கள், அதிகரித்து வரும் வாகனங்களால் அகலப்படுத்தப் படும் சாலைகள்  உள்ளிட்ட  பல்வேறு பிரச்னைகளால் முதலில் பாதிக்கப்படுவது சாலையோரங்களில்
மரங்களின் மறு நடவு!

பெருகி வரும் மக்கள் தொகை,  அதற்கேற்ப கூடி வரும் கட்டடங்கள், அதிகரித்து வரும் வாகனங்களால் அகலப்படுத்தப் படும் சாலைகள்  உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் முதலில் பாதிக்கப்படுவது சாலையோரங்களில் உள்ள மரங்களே. மரங்கள் இல்லாவிட்டால் மனிதர்கள் இல்லை என்ற நிலையில், தொடர்ந்து சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருவது, வெப்பமயமாதலை மேலும் அதிகரித்து வருகிறது.  ஆனால், இதை சமாளிக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது ஆறுதலான விஷயமாகும். இது தற்போது பரவலாக நடைமுறைக்கு வந்திருந்தாலும்,  நமது முன்னோர்கள் உருவாக்கிய  திட்டமேயாகும்.  

மரங்களை வெட்டாமல், அவற்றை வேருடன் பெயர்த்து எடுத்து மறு நடவு செய்வதுதான் இத்திட்டமாகும். கோவையில் "ஓசை'  அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்,  மாவட்ட  மரப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான  "ஓசை' சையதின் பெரும் முயற்சியின் காரணமாக தற்போது இத்திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் முன்மாதிரி திட்டமாக மாறியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட  இத்திட்டப் பணிகளின் வெற்றியின் காரணமாக மத்திய அரசின்  "ஸ்காட்ச் விருது'க்கு மரங்களின் மறு நடவு திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டு மரங்களை ஊக்குவிப்பதைக் காட்டிலும்,  மண்ணின் மரங்கள் என அழைக்கப்படும் அரசமரம்,  ஆலமரம், புங்கைமரம், வேப்பமரம், நாவல் மரம் போன்ற மர வகைகளை இவ்வாறு வேறு பகுதிகளில் மறு நடவு செய்வதால் மரம்  மட்டுமின்றி இயற்கையும்  பாதுகாக்கப்படுகிறது.


கோவையில் தொடங்கிய இத்திட்டம் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 2,000 மரங்கள் இதுபோல மறு நடவு செய்யப்பட்டுள்ளன.  மும்பை, அஸ்ஸாம் போன்ற பகுதிகளிலும் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டாமல் மறு நடவு செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இத்திட்டம் குறித்து  ஓசை சையது  கூறியதாவது: 

""மரங்களின் மறு நடவு என்பது ஒரு நோயாளிக்குத் தேவையான உறுப்பை மற்றொருவரிடமிருந்து பெற்று பொருத்துவதைப் போன்றது. மரங்கள் இல்லாவிட்டால் மனிதர்கள் இல்லை என்பதை உணர்த்துவதோடு, மரங்களைப் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரைப் பொருத்தமட்டில் இத்திட்டத்துக்காக மாநகராட்சியும், வனத் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றன. பொதுமக்களும் முன்பு போல மரங்களை யாருக்கும் தெரியாமல் வெட்டி விடாமல், அவற்றை மறு நடவு செய்வதற்கான வாய்ப்புள்ளதா என்பதையறிந்த பின்னரே அடுத்தகட்ட  நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இத்திட்டம் கோவை மாநகருக்குள் மட்டுமின்றி பொள்ளாச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் அண்மையில் சாலையோரம்  வாரக்கணக்கில் விழுந்து கிடந்த ஒரு ஆல மரத்தை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு எடுத்துச் சென்று நடவு செய்ததில் தற்போது அந்த மரம் மீண்டும் துளிர்த்துள்ளது. அதேபோன்று, மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயிலில் கட்டடப் பணிக்காக அங்கிருந்த 35 ஆண்டு கால அரசமரம் அகற்றப்பட்டு மறு நடவு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த காரமடை சாய்பாபா கோயில் நிர்வாகத்தினர்,  தங்களுக்கு ஒரு அரசமரம் தேவையெனவும், எங்காவது வெட்டப்படும் நிலையில் அரசமரம் இருந்தால் அதை தங்களது கோயில் வளாகத்துக்குள் மறு நடவு செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மரங்களை மறு நடவு செய்வதற்கு காட்டி வரும் சிரத்தையைவிட  மரங்களை வெட்டாமல் பாதுகாப்பதில்தான் அதிக அக்கறை காட்டப்படுகிறது. அதேபோன்று, மரக்கன்றுகளை நட்டுவிட்டு சென்று விடுவதைவிட  அவற்றை தொடர்ந்து பராமரிப்பது குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.  இதன் காரணமாகவே அண்ணா பல்கலைக் கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், வனவியல் கல்லூரி போன்றவற்றில் மரங்களை மறு நடவு செய்வது குறித்து அவ்வப்போது செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டு வருகின்றன.

மும்பையில் விரிவாக்கப்படவுள்ள ஒரு சாலைக்காக  அங்குள்ள 50 ஆலமரங்களை மறு நடவு செய்வதற்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் ஆர்வம் காட்டிவருகின்றன.  இதற்கான இடத்தையும் தேர்வு செய்து அங்கு ஆலமரப் பூங்கா ஒன்றையும் அமைக்க தீர்மானித்துள்ளனர்.  ஆயிரம் ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய ஆல மரத்தை  வெட்டி அழித்து விடாமல் பாதுகாப்பதுதான் அவர்களது நோக்கமென்பதால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் ஓசை அமைப்பு தரத் தயாராக உள்ளது. அதைப்போலவே கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளியிலிருந்து ஹதக் நகர் வரை செல்லும் வழித்தடத்தில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை மறு நடவு செய்து தரக்கோரி அந்த மாநில அரசும் கோரிக்கை விடுத்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் சிரபுஞ்சி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்படும் அங்குள்ள அபூர்வ ரக மரங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதுக் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைவதோடு, பசுமையும் பாதுகாக்கப்படுகிறது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது மரங்கள் வெட்டப்படுவது வெகுவாக குறைந்துள்ளது. எனவே, வெளிநாடுகளில் உள்ளதைப் போல மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து மறு நடவுக்கு கொண்டு செல்லும் வகையிலான  நவீன இயந்திர வாகனங்களை தமிழக அரசு வாங்க வேண்டும். இயந்திரம்  வாங்குவதற்கு ஒரு  கோடி ரூபாய் செலவாகுமென கூறப்படும் நிலையில் அரசின் சார்பில் இத்தகைய இயந்திரங்களை வாங்கினால் பசுமை பாதுகாக்கப்படுவதோடு, வனப் பரப்பும் குறையாது'' என ஓசை சையது தெரிவித்தார்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com