பயணங்களில் அபூர்வம் நிகழ்கிறது!

சீனுராமசாமி... தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக, சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி.
பயணங்களில் அபூர்வம் நிகழ்கிறது!


சீனுராமசாமி... தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக, சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி. காலத்தைப் புகைப்படமாக்கி, அதில் கண்ணீரையும் புன்னகையையும் உறைய வைக்கும் கலைஞன். "தென்மேற்கு பருவக்காற்று' தொடங்கி "தர்மதுரை' வரை அத்தனைப் படங்களிலும் நிரம்பியிருந்தது வாழ்வின் எதார்த்த துளிகள். இந்த முறை சீனுவின் அடுத்தப் படைப்பு "கண்ணே கலைமானே.' 

"கண்ணே கலைமானே'... வசீகரிக்கும் தலைப்பு... என்ன எதிர்பார்க்கலாம்...?

என் கதைகளுக்கு நிலம்தான் அடிப்படை. மதுரையில் இருந்து சில மைல்கள் பயணித்தால் சோழவந்தான் கிராமம் வந்து விடும். அதன் அருகே வாடிப்பட்டி உள்ளிட்ட எல்லாப் பகுதிகளுக்குமே விவசாயம்தான் ஆதாரம்.  யானைக் கட்டி போர் அடித்த  மண்.  நீர், காற்று என எல்லாமே கொடுத்து வைத்த பூமி. உலக மயமாக்கலின் சுவடுகள் வந்தேறிய பின்பும், விவசாயத்தின் எச்சங்களை இன்னும் அப்படியே அடை காத்து வைத்திருக்கும் மண். இதுதான் களம். மதுரை விவசாயக் கல்லூரியில் படித்து விட்டு, சொந்த ஊரில் மண்புழு உர உற்பத்திப் பண்ணை நடத்தும் இளைஞன் உதயநிதி. அதே கிராமப் பகுதியில் வங்கியின் மேலாளர் தமன்னா. இந்த இருவரும் தான் கதையின் அடிப்படை. இருவருக்குமான அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு. விவசாய நிலம் என்பது கதையின் நெகிழ்வான பின்னணிதான். மனித உறவுகள் முதன்மையானது. உறவுகள்தான் மனித வாழ்வின் ஆதாரம். அதை விட்டு வெளியேற நினைக்கிற மனப்பாங்கு இப்போது பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும்,  அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களைத் தவிர வேறு எதையும் விட்டுப் போக கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்தச் சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. 

படத்தின் பேசு பொருள் என்ன...?

உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. பொருளையும், பணத்தையும் முதன்மைப்படுத்தாமல் வாழ்க்கைக்கு அன்புதான் முக்கியம் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்தாலே போதும், ஆரோக்கியமான தலைமுறை உருவாகி விடும். இதற்குத் தேவையில்லாத தியாகங்கள் அவசியமில்லை. என் கதையின் அடிநாதமாக அதன் கதாபாத்திரங்களுக்கு மன மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனதில், புத்தியில் ஏற்படுகிற  அதிர்வின் காரணமாக மனமாற்றம் நிகழ்ந்து ஒரு புது வாழ்வு பரிசாகக் கிடைத்து விடும். கர்ப்பகிரகத்தில் ஏற்றப்படும் தீபம் போல் அது மகத்தனாது.  இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அது போன்ற நம்பிக்கைகள்தான் இந்தப் படம். 

நிலம்தான் உங்களின் கதைகளுக்கு பெரும்பாலும் ஆதாரப் பின்னணியாக இருக்கிறது... என்ன காரணம்...?

அதுதான் பயணங்களின் பேரற்புதம். மறுபடியும் கண்டடைய முடியாத மனிதர்கள். முகங்கள், சொற்கள், நினைவுகள், காட்சிகள்.. என்னை ஒவ்வொரு முறையும் மீள் உருவாக்கம் செய்பவை பயணங்கள்தான். பயணங்களில் யாரோ நீட்டுகிற ஒரு வாட்டர் பாட்டில், புளியோதரைப் பொட்டலம், ஒரு புன்னகை, விசாரிப்பு, சினேகம், காதல் எல்லாவற்றுக்குமே ஒரு காவியத் தன்மை வந்து விடுகிறது. என் வாழ்க்கையில் சரி பாதி பொழுதுகள் பயணங்களுடன்தான் கழிந்திருக்கின்றன. விதவிதமான காட்சிகள் படிமங்களாக மனதில் கிடக்கின்றன. கவலைகளையும் எதிர்காலம் குறித்த பதற்றங்களையும் கடக்க முடியாதப் பிரிவுகளையும் துடைத்து வீசி விட ஒரே ஒரு புதிய நிலப்பரப்பின் காட்சியில் முடிந்து விடுகிறது. பயணத்தின் போதுதான் வெயிலும் மழையும் ஒளியும் இருளும் புதிதாக இருக்கின்றன. என் மனம் எதை நேசிக்கிறதோ, அது கதையில் வருகிறது அவ்வளவுதான்.  இதோ இப்போது கூட ஏதோ ஒரு பாரம். விமானம் பிடித்து காசிக்கு வந்து விட்டேன். அங்கிருந்துதான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். பயணங்களில்தான் அபூர்வம் நிகழ்கிறது. 

வைரமுத்து - யுவன் கூட்டணி உங்களுக்கு இன்னும் ஸ்பெஷல்...? 

எந்தச் சூழலையும் தனது வரியால் நிறைத்து விடுகிற மனிதர் வைரமுத்து சார். "கண்ணே கலைமானே' என்ற கண்ணதாசனின் வரிதான் தலைப்பு என்றதும், அவருக்கு அத்தனை பூரிப்பு. வெகுவாகப் பாராட்டினார். சூழல்கள் கேட்டுச் சிலாகித்தார். காதலையும், ப்ரியத்தையும், அன்பையும் வெளிப்படுத்துகிற சூழல் தாண்டி, மிச்சமிருக்கும் கிராமத்து வாழ்க்கையையும் இங்கே நிரப்பித் தந்திருக்கிறார்.  "காதலே மனித வாழ்வுக்கு ஆதாரம்...இது கதையில் வரும் ஒரு சூழல்...'' என்றேன்.

"காதல் என்றால் 
கெட்ட வார்த்தை என்றால்
இந்த கலகப்பூச்சிகள் 
பிறப்பது ஏது...?
சாதி கண்டே 
காதல் தோன்றும் என்றால்
பட்ஷி விலங்கு ஜாதிக்கு 
ஜாதகம் ஏது...? இப்படி எழுதினார். அதே பாடலில் இன்னொரு இடம் வரும்.  

உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை முத்தம் கொண்டே மூட வா...?  என்று எழுதினார். அதுதான் வைரமுத்து சார். என் இசை இளவல் யுவன் அதை இசையால் நிரப்பித் தந்திருக்கிறார். இந்தப் பாடல் கேட்கும் போது உங்கள் வாழ்வு நிரம்பியிருக்கும்.இந்தக் கதை பூர்த்தியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com