சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்

"என்னுடைய முகம், எல்லா நினைவுகளையும் ஏந்தி இருக்கிறது, எதற்காக நான் அவைகளை தேய்த்தழிக்க வேண்டும்.'
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்

"என்னுடைய முகம், எல்லா நினைவுகளையும் ஏந்தி இருக்கிறது, எதற்காக நான் அவைகளை தேய்த்தழிக்க வேண்டும்.'

- டயன்வான் பர்ஸ்டன்பர்க்
(Diane von furstenberg)

வானுயர்ந்த மலைகள், காடுகள், பள்ளத்தாக்குகள், அருவிகள், சிற்றோடைகள், மரங்கள், செடிகள், மிருகங்கள், பறவைகள் என்று இயற்கையின் படைப்புகளைக் காணும்பொழுது எல்லாம் மனிதன் மனம் மகிழ்ந்து போகிறான், இயற்கை அன்னையின் மடியில் மனசாந்தி அடைந்து புத்துயிர் பெறுகிறான்.

ஏன் இப்படி என்ற கேள்விக்கு, மனிதனைத் தவிர மற்ற படைப்புகள் எல்லாம் காலத்தின் கோலங்களை, அப்படியே தாங்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இவையே அவைகளுக்கு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகு தோற்றங்களைத் தருகின்றன. மொட்டையாக நின்று, துளிர் இலைகளைத் தாங்கி, பூத்துக் குலுங்கி, காய்த்து, பழுத்து, இலைகளை உதிர்த்து என்று எல்லா நிலையிலும், எல்லா காலங்களிலும், ஒரு மரம், தன்னை நம் கண்களுக்கு விருந்தாக்குகின்றது.

மனிதன் மட்டும்தான் தன் வயதை மறைக்க, தலைக்கு சாயம், முகத்துக்கு பலவிதமான கிரீம்கள், காஸ்மெட்டிக் சர்ஜரி என்று செய்து கொள்கிறான். தன்னை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள மெனக்கெடுகிறான்.

நான் சிறுமியாக இருந்தபோது, எங்களுடைய வீட்டுக்கு பக்கத்தில் எண்பது வயது பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு தலை முழுவதும் நரைத்து இருக்கும். சுமங்கலியான அவர், மஞ்சளை தினமும் தேய்த்துக் குளிப்பார். அவருடைய நெற்றியில் இருபுறங்களிலும் உள்ள முடிக்கற்றைகள், அவர் பூசிக் குளித்த மஞ்சளினால், அந்த நிறத்தை ஏந்தி இருக்கும். நெற்றியில் காலணா அளவு குங்குமப் பொட்டுடன், வேறு எந்தவிதமான ஒப்பனைகளும் இல்லாமல் அந்த பாட்டி நடந்து வரும்போது, பார்க்கும் கண்கள் எல்லாம் அந்த அழகு தரும் கம்பீரத்தில் இருந்து மீண்டு வர சிறிது நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

அப்படித்தான், ஜப்பானில் நவம்பர் மாதத்தில், இலையுதிர் காலத்தில் என் கண்களுக்கு விருந்தளித்து நின்ற பலவகையான மரங்களின் கோலங்களை, அவை தரையில் இறங்கிய வானவில்களாய் காட்டிய அழகு காட்சிகளை, நம் நாட்டிற்கு திரும்பிய பிறகும் மனக்கண்களால் கண்டு மகிழ்ந்து கொண்டே இருக்கிறேன்.

இலையுதிர் காலத்தில் டோக்கியோவும், அதைச் சுற்றி உள்ள இடங்களும், அங்கே வரிசை கட்டி நிற்கும் மரங்களும், அவைகளின் இலைகளும் வெளிப்படுத்தும் எண்ணங்களையும் கண்டு மலைக்காதவர்கள், ஆறு அறிவு படைத்த மனிதர்களாக இருக்க முடியாது.

டோக்கியோவில் இருந்து கவாகுசிகோவிற்கு போகும் வழியெல்லாம் இயற்கையின் ஆனந்த நடனத்தைப் பார்த்த என் மனமும் துள்ளி ஆட்டம் போட்டது. மலைகளில் வளர்ந்து இருந்த பலவகையான மரங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தாற்போல் வளர்ந்திருந்தது. சிகப்பு, ஆழ்ந்த பழுப்பு, மஞ்சள், ஊதா, பிங்க் என்ற பலவித நிறங்கள் காட்டும். இவைகளைக் கொண்ட மரங்கள், ஒன்று சேர்ந்து கதம்ப மலர்ச்செண்டுகளாக காட்சி அளித்தன. மேப்பிள், ஜப்பானீய சுமக் இதனை சைனீஸ் லேக்கர் மரம் என்கிறார்கள். வேக்ஸ், ஜப்பானீஸ் ரோவன், பர்னிங் புஷ், ரோடோடென்ரான் சிகப்பு வண்ணம் காட்ட, கிங்கோ (எண்ய்ந்ஞ்ர்), ஜப்பானீஸ் லார்க், எல்ம், பாப்லர் மரங்கள் மஞ்சள் நிறத்தோடும், ஜப்பனீஸ் பீச், ஓக், செஸ்நெட், ஜெல்கோவா போன்றவை ஆழ்ந்த பழுப்பு நிறத்தோடும் மலைகளை ஆக்கிரமித்து இருந்தன.
வீடுகளைச் சுற்றி இருந்த தோட்டங்களிலும், பார்க்குகளிலும், வேலிகளிலும், இலைகள் நிறம்மாறி அழகு காட்டின. எங்கே இப்படி  என்றால் கவாகுசிகோவில் என்பது என் பதிலாக இருக்கும்.

இலையுதிர் காலத்தில், இலைகளை உதிர்க்கும் மரங்களையும், அப்படி இலைகள் தரையை முத்தமிடும் முன் அவை காட்டும் பல நிறங்களையும் பார்க்க டோக்கியோவிலும், அதனுடைய சுற்று வட்டாரங்களில் பல இடங்கள் இருந்தாலும் கவாகுசிகோ ஏரியைச் சுற்றி இருக்கும் இடங்களே முதன்மை பெறுகின்றன.

அதுமட்டும் அல்லாமல் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து, இருபத்து மூன்றாம் தேதிவரை (ஊன்த்ண்) பியுஜி கவாகுசிகோ  இலையுதிர்கால இலைகளின் திருவிழா நடைபெற இருந்ததினாலும், அந்த நேரத்தில் அங்கே நானும் என் கணவரும் தங்கியிருந்ததாலும், கவாகுசிகோவை நோக்கி எங்களுடைய பயணத்தைத் தொடங்கினோம்.

மிகப் புகழ்வாய்ந்த ஜப்பான் நாட்டு மக்களால் போற்றப்படும் (ஊன்த்ண்) பியுஜி மலையை பின்னணியாகக் கொண்டு இருக்கும் கவாகுசிகோவில் தங்கவேண்டும் என்றால் அந்த ஏரியைச் சுற்றி இருக்கும் ஹோட்டலில் அறைகளை முன் பதிவு செய்திருக்க வேண்டுமாம். நாங்கள் அப்படி செய்திருக்கவில்லை, அதைத் தவிர எங்களுக்கு ஒரு நாளை மட்டுமே அந்த பயணத்திற்காக ஒதுக்க முடிந்திருந்தது. ஆகையினால் டோக்கியோவில் இருந்து காலையில் கவாகுசிகோவிற்கு சென்றுவிட்டு இரவுக்குள் திரும்ப முடிவு செய்தோம்.

டோக்கியோவிலிருந்து கவாகுசிகோ 96 கி.மீ தொலைவில் இருந்தது. (ஒத) ஜப்பான் ரயில்வே பேருந்து கான்டோ (ஓஹய்ற்ர்), முப்பது நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பேருந்தை கவாகுசிகோவுக்கு போக வைக்கிறார்கள் என்றும் பயணிக்கும் நேரம் இரண்டு மணி நேரம், 1800 - 2500 என்கள் (வங்ய்) கொடுத்தால் போதும் என்று நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் டிராவல்ஸ் டெஸ்கில் இருந்த பெண்மணி ஒருவர் சொல்ல நாங்களும் பேருந்து நிலையத்தை நோக்கி புறப்பட்டு சென்றோம்.

ஜப்பான் நாட்டில் மற்ற நாடுகளில் செல்வதுபோல வெறும் 93 கி.மீ. தொலைவில் தானே இருக்கிறது டாக்ஸியில் போகலாம், அல்லது வாடகை காரில் செல்லலாம் என்று நினைத்து பயணிக்க முடியாது. மிகவும் காஸ்டிலியான ஊர் என்பதால், பர்ஸ் பழுத்துவிடும்.

ஒன்று ரயிலில், அல்லது பேருந்தில் பயணிப்பதே சாலச் சிறந்தது. பேருந்து நிலையத்தை மெட்ரோ ரயிலைப் பிடித்து அடைந்தோம். பேருந்தை அடையவே இருபது நிமிடங்கள் நடக்க வேண்டி இருந்தது. ஒருவழியாக அங்கே சென்றோம். நாங்கள் ஏறவேண்டிய கவாகுசிகோவுக்கு அழைத்துச் செல்லும் பேருந்தும் இருந்தது. ஆவலோடு அதில் ஏறப்போன எங்களை ஏறவிடாமல், பேருந்து ஓட்டுநர் தடுத்தார், ஏன் என்றோம், டிக்கட் என்றார், கொடுங்கள் என்று பணத்தை நீட்டினோம், இங்கே இல்லை என்றார், எங்கே என்றோம், அவர் சொன்னதைக் கேட்டு மலைத்தோம்.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com