தினமணி கொண்டாட்டம்

அகராதி உலகில் புதுவரவு!

DIN

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பதிப்பகங்களில் ஒன்றாக "தமிழ்மண்' பதிப்பகம் இயங்கி வருகிறது. சைவ சித்தாந்த பதிப்பகம், உ.வே.சா. நூலகம், தஞ்சைப் பல்கலைக்கழக வெளியீடுகள் போன்று தமிழ் இலக்கியத்துக்கான நூல்களைப் பதிப்பிப்பது என்பது அரிய பணி. அந்தப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவர் தமிழ்மண் பதிப்பக வெளியீட்டாளர் கோ.இளவழகன். அவரது தமிழ் ஆர்வம் குறித்து பேசலாம்...

தமிழார்வம் ஏற்பட்டது குறித்து...?

எனக்கு தமிழ்மீது ஆர்வம் ஏற்பட வைத்தவர் எனது ஒன்றுவிட்ட மாமா புலவர் நக்கீரன்தான்.  பெரியார், அண்ணா, பாவேந்தர். பெருஞ்சித்தரனார், மறைமலையடிகள், பாவாணர் ஆகியோர்பால்  பற்று ஏற்பட்டதற்கும் அவர்தான் காரணம். 

தனித் தமிழ் இயக்கம் - திராவிட இயக்கங்களில் பற்று வைக்கவும் அவரே காரணமாக இருந்தார். 1965 -ஆம் ஆண்டில் எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றொரு காரணம். பள்ளியில் படிக்கிறபோதே எனது பிறந்த ஊராகிய உறந்தைராயன் குடிக்காட்டில் "ஊர் நலன் வளர்ச்சிக் கழகத்தை' புலவர் நக்கீரன் ஏற்படுத்தி, அதில் ஈடுபடவும், பின்னர் அதன் செயலாளராகவும் ஆக்கியதும் அவர்தான். தமிழ்ப்பற்று, தனிமனித ஒழுக்கம், தமிழ்த் தொண்டாற்றுவது என்பது குறித்தெல்லாம் என்னை நெறிப்படுத்தியவர் அவரே.

தனித்தமிழ் இயக்கத் தொடர்பு எப்படி ஏற்பட்டது...?

1967 - இல் திமுக ஆட்சியில் அமர்ந்தது.  எனக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் கமர்ஷியல் அசிஸ்டெண்ட்டாக பணி கிடைத்தது. அந்த வாரியத்தில் 18 ஆண்டுகள் பணிபுரிந்தேன். சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்தாலும் மனம் என்னவோ உரத்தநாட்டிலேயே இருந்தது. "தமிழர் உரிமைக்கழகம்', "பாவாணர் படிப்பகம்' போன்றவற்றை நிறுவினோம். இதன் பணி அடுத்தத் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றுவதுதான். அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை ஏற்று "உரத்தநாடு மதுவிலக்குக் குழு'வின் முக்கிய அமைப்பாளராக முன்னேறி 1975 -ஆம் ஆண்டில் "உரத்தநாடு திட்டம்' சட்டமன்றத்திலேயே குறிப்பிடப்பட்டது. "பாவேந்தர் தமிழ் இயக்க மாநாடு' 1980 -இல் தொடங்கி 1983 -ஆம் ஆண்டு வரை, இரண்டு நாள்கள் மாநாடு நடத்தினோம். இந்த கால கட்டங்களில் தமிழ்ப்பற்றாளர்கள் தலையாய அறிஞர்கள் எல்லாம் அறிமுகமானார்கள். 

பெருஞ்சித்திரனாரின் "தென்மொழி' தொடர்பு பல வகையிலும் உதவிற்று. இதனால் கிடைத்த பெரும் பேறு தேவநேயபாவாணரின் தொடர்பு. பெரியாரின் தொடர்பு அடுத்தடுத்து நேர்ந்தவை. 1960 - இல் "நாடும் நடப்பும்' என்ற மாநாட்டை உரத்தநாட்டில் நடத்தினோம். பெரியாரை திருச்சியில் சந்தித்து அவரை அழைத்து வந்தோம். ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

பதிப்புத்துறைக்குள் எப்படி நுழைந்தீர்கள்...?

மாணவப் பருவத்திலேயே தமிழர் பெருமை குறித்த நூல்களைப் படிக்கிற பழக்கம் இருந்தது. பாரி நிலையம், சைவசித்தாந்தக் கழகம் வெளியிட்ட நூல்களைத் தேடித்தேடி படிப்பேன். மின்வாரிய வேலையை விட்டதும், "பாவாணர்' பெயரில் அச்சகம் ஒன்றை ஆரம்பித்தேன். அதில் பெற்ற அனுபவங்கள் காரணமாக பதிப்புத்துறையில் நுழைய எண்ணம் ஏற்பட்டது. தமிழ் மண் காக்க, மொழி காக்க, பழந்தமிழ் நூல்கள் காக்க "தமிழ்மண்' என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கினேன். இதன் முக்கிய நோக்கம் 19 - ஆம் நூற்றாண்டில் வெளியான நூல்களையும், 20 -ஆம் நூற்றாண்டில் வெளியான நூல்களையும் தேடிப்பிடித்து பதிப்பது என்று முடிவெடுத்தேன். எனது யோசனைக்கு உடன் நின்று உழைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: அய்யா இளங்குமரனார், பேராசிரியர் விருத்தாசலம், பேராசிரியர்  இரா.இளவரசு முதலானோர்.

2000 -ஆம் ஆண்டு பாவாணரின் நூற்றாண்டு. அதை மையமாக வைத்து அவரது நூல்களை வெளியிட முனைந்தபோது என்மீது பற்றுக் கொண்டவர்கள், "பிழைக்கிற வழியைப் பாருங்கள், விற்பனையாகிற நூல்களாகப் போடுங்கள்' என்று அறிவுரை சொன்னார்கள். ஆனால் முன் வைத்த காலை பின் வைக்க விரும்பவில்லை. தி.கோபாலய்யரை பதிப்பாசிரியராகக் கொண்டு தொல்காப்பியம், மறைமலையம், அப்பாதுரையம், பாவேந்தம், திருவிகா, நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், 

நெ.சாமிநாத சர்மா, நா.சி. கந்தையா உள்ளிட்ட 45 அறிஞர் பெருமக்களின் நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. இந்த முயற்சிகளுக்கு எல்லா நிலையிலும் உதவிகரமாக இருந்தவர்- இருப்பவர் ஐயா இளங்குமரனார்தான். 92 வயதிலும் தமிழாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். "தமிழ் புகுந்த நெஞ்சுக்கு தளர்வில்லை- உடலுக்கும் முதுமை இல்லை'  எனும் பெருஞ்சித்தரனாரின் வரிகளுக்கு சான்றாக இருப்பவர். சங்க இலக்கிய நூல்கள், தி.கோபாலய்யரின் தமிழ் இலக்கண பேரகராதி பதிப்பிக்கப்பட்டது. இந்நூல் தமிழ் இலக்கியத்துக்கு புது வரவாகும். இந்நூல் போன்று இதற்கு முன்பு வந்ததில்லை. இந்நூல்கள் அனைத்தும் பொருள்வழி பிரிக்கப்பட்டது. காலவரிசை படுத்தப்பட்டது. ஒவ்வொன்றும் 15 தொகுதிகளுக்கு மேற்பட்டது. உதாரணத்திற்கு:  பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 53 தொகுதிகள், 9,120 பக்கங்கள். அப்பாதுரையம் 48 மொத்த தொகுதிகள், 98 நூல்கள், 15,532 பக்கங்கள். 

இளங்குமரனாரின் "செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்' குறித்து...

பதிப்பகம் தொடங்கியதும் வெளியிட முனைந்த தொல்காப்பியம் தொகுப்புகளுக்கு ஆலோசனை வழங்கியவர் தி.கோபாலய்யர் என்று சொன்னேன். அவரது நூல்களைப் பதிப்பிக்க உதவியவர் அய்யா இளங்குமரனார். திருச்சி சென்று அவரது உதவியை வேண்டினேன். அவரும் ஒத்துழைத்தார். பாவாணர் தொகுதி நூல்களுக்கு ஆலோசனை வழங்கினார், தொகுத்தும் வழங்கினார். அதன் வெளியீட்டுக்கும் வந்தார். அதனைத்தொடர்ந்து, "இளங்குமரனார் தமிழ் வளம் 40 தொகுதிகள்' வெளியிட்டோம். இப்போது செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 17 தொகுதிகள் வெளியாகி இருக்கிறது. சங்க இலக்கியத்தில் உள்ள அத்தனை சொற்களுக்கும் இதில் விளக்கங்கள் உள்ளன. இப்படியொரு தொகுதி இதற்கு முன்பு வந்தது இல்லை. அடுத்து அவர் எழுதிவரும் குறுந்தொகை சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை விளக்கவுரைகள் வெளிவர உள்ளன. தொடர்ந்து அண்ணாவின் படைப்புகளும் வெளிவர இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT