தமிழின் தொன்மையை ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளேன்!

ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்டவர்.  மூத்த வரலாற்று அறிஞர்,  நாணயவியல் ஆராய்ச்சியாளர், இதழியல் துறையில் முத்திரை பதித்தவர், தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவர்  "தினமலர்'  ஆசிரியர் டாக்டர்.
தமிழின் தொன்மையை ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளேன்!

ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்டவர்.  மூத்த வரலாற்று அறிஞர்,  நாணயவியல் ஆராய்ச்சியாளர், இதழியல் துறையில் முத்திரை பதித்தவர், தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவர்  "தினமலர்'  ஆசிரியர் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி. தென்னிந்திய நாணயவியல் துறையில் பெரும் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழ் வரலாற்றுப் பரப்பை விரிவுபடுத்திய பெருமைக்குரியவர். நாணயவியல் தொடர்பாக பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார்.  இதற்கென அவர் பெற்ற விருதுகளும் கெüரவங்களும் ஏராளம். சமீபத்தில், ன்னிந்திய நாணயவியல் சங்கத்தின் 29- ஆவது மாநாட்டில் இவருக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். நாணயவியல் துறை தொடர்பாக  கருத்துகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நாணயவியல் துறையில் தங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

கோடை காலத்தில், வழக்கமாக கொடைக்கானல் செல்வேன். அது, 1984-ஆம் ஆண்டு கொடைக்கானல் ஏரியைச் சுற்றி நடந்து கொண்டிருந்தேன். ஒரு கடையில் ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. நான் தமிழின் பழைய எழுத்து உருவங்களைப் படித்துள்ளேன். அந்த ஆர்வத்தால் அந்தக் கடைக்குப் போய்ப் பார்த்தேன்.  கடையில், பழைய நாணயங்களும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்துக் கொண்டிருந்தேன். நீள் சதுர செப்பு நாணயம் ஒன்று என்னைக் கவர்ந்தது. ஆர்வம் மிகுதியால் அந்த நாணயத்தை வாங்கினேன். அந்த நாணயம் போன்றே, ஒரு படம், லவொனந்தல் பாதிரியார் எழுதிய, "காயின்ஸ் ஆப் தின்னவேலி' (இர்ண்ய்ள் ர்ச் பண்ய்ய்ஹஸ்ங்ப்ப்ண்) என்ற நூலில் அச்சாகி இருந்தது. அது, பாண்டியரின் தொன்மை நாணயம் என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் தமிழகத்தில் கிடைக்கும் தொன்மை நாணயங்களைக் கூர்ந்து ஆராய்ந்தால், பயனுள்ள தகவல் கிடைக்கும் என்று நம்பினேன். 

சிறிது சிறிதாக, நாணயங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன்.  நாணய சேகரிப்பாளர்களுடன் அறிமுகமும், தொடர்பும் கிடைத்தது. அப்படி தொடங்கிய ஆர்வம், பின்னர் சங்க கால நாணயங்கள் மீது தீவிர ஈடுபாடாக மாறியது. சங்ககால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களைக் கண்டறிந்து உலகறியச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமாக உருவெடுத்தது.

"நாணயவியலின் தந்தை' என்று உங்களைச் சொல்கிறார்கள். இந்தத் துறையில் தங்களின் பங்களிப்பு பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

"தமிழ் மன்னர்கள் வாணிபத்தில் பண்டமாற்று முறையைத் தான் பின்பற்றினர். தமிழர்களுக்கு என, தனி எழுத்து முறை இல்லை. அவர்கள் அசோகர் பிராமி எழுத்துக்களைத்தான் பயன்படுத்தினர்' என்று வரலாற்று அறிஞர்கள் கூறிவந்தனர். இந்தக் கருத்தை மாற்றும் வகையில்  முறையான ஆய்வுத் தரவுகளுடன், தமிழின் தொன்மையை ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளேன்.  தொடர்ச்சியாக ஆய்வு நடத்தியதால்தான், "மாக்கோதை' என்ற பெயர் பொறித்த நாணயத்தைக் கண்டுபிடித்தேன். இது, சங்ககாலத்தில் சேர மன்னர் வெளியிட்ட  நாணயம்.  உலக நாணயவியல் அறிஞர்கள் குழு, இந்த ஆய்வு முடிவை ஏற்றுள்ளது. ரோமானியர் - தமிழர் இடையேயான வாணிபத் தொடர்பை உறுதிப்படுத்தும், ரோமானிய நாணயங்களை, தமிழகத்தில் கண்டுபிடித்தேன். 

கோட்டு வடிவ மீன் சின்னம் பொறித்த நாணயங்கள், சங்க கால பாண்டிய மன்னன், பெருவழுதி வெளியிட்டவை என்பதை நிரூபித்துள்ளேன். தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்த புறநானுறுநூலைப் புரட்டிய போது, பல உண்மைகள் புலப்பட்டன. "பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி பற்றிய குறிப்புகள் புறநானுôற்றில் உள்ளன.

"தமிழக மன்னர்கள், சிறிய பகுதிகளை மட்டுமே ஆட்சி செய்தனர். நாணயம் வெளியிடும் தேவை, அவர்களுக்கு இருக்கவில்லை. தமிழக சிற்றரசுகளில் பண்டமாற்று முறை தான் புழக்கத்தில் இருந்தது' என்று, வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவந்தனர். இந்த நாணயத்தைக் கண்டுபிடித்த பின், அந்தக் கருத்து தகர்ந்தது. தமிழகத்தில் பழங்காலத்திலே மன்னர்கள் அடைந்திருந்த பண்பாட்டு வளர்ச்சி பற்றிய செய்திகளைக் கண்டுபிடித்துள்ளேன். இதனால், வரலாறு மாற்றி எழுதப்படுகிறது. 

சங்காலத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள், கற்பனையாக இருக்கலாம் என்று ஒரு கருத்து இருந்தது. உண்மையில், இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் தாங்கிய மன்னர்கள் இருந்தனர் என்பதற்கு, அறிவியல் பூர்வ ஆதாரங்களை, தொல்லெழுத்து அறிஞர் கே.வி.சுப்ரமணிய அய்யர், சில குகைதளக் கல்வெட்டுக்களைப் படித்து, 1924-இல் கட்டுரை வெளியிட்டார். அப்போதும் கூட, குறுநில மன்னர் என்ற எண்ணம் தான் இருந்தது. நாணயங்களைக் கண்டுபிடித்த பின்தான் ஆதாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

உதாரணமாக, மதுரையைச் சேர்ந்த நண்பர் சையது இஸ்மாயில் ஒரு நீள் சதுர செப்பு நாணயத்தைத் தந்தார். அதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. தமிழ் பிராமி எழுத்துக்களை எனக்குப் படிக்கத் தெரியும் என்பதால் தான் அந்த நாணயத்தில், "பெருவழுதி' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது என்றும், அது, சங்க கால பாண்டிய மன்னர் வெளியிட்ட நாணயம் என்றும் அறிய முடிந்தது.

"பெருவழுதி' நாணயம் தான், முதலில் கிடைத்த சங்ககாலத்தில் பெயர் பொறித்த நாணயம். இது பற்றி, 1985-இல் வாரணாசி பல்கலையில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை படித்தேன். இந்த நாணயம் கி.மு., இரண்டு அல்லது மூன்றாம் நுôற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். 

இந்தத் தேடலில் உங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள்?

ஏராளமான அனுபவம் உள்ளன. நாணயங்களைத் தேடிய போது, எழுத்துகள் பொறித்தவை கிடைத்தால், எழுத்துகளின் அமைப்பும் அவை தரும் செய்திகளும் காலத்தை,  ஓரளவு கணக்கிட  உதவும். ஆனால், சங்ககால சோழர் நாணயங்களில், எழுத்து உருக்கள் இல்லாததால், இலச்சினைகளைக் கொண்டு தான் காலத்தைக் கணக்கிட வேண்டியிருந்தது. இதற்கு, பல வரலாற்றுப் புத்தகங்களைப் படித்து தரவுகளைத் திரட்ட வேண்டியிருந்தது. 

ஒரு நாணயத்தில், முன்புறம் வேலியிட்ட மரமும், பின்புறம் பாயும் புலியும் இருந்தன. மற்றொரு நாணயத்தில், முன்புறம் இடப்பக்கம் பார்த்து நிற்கும் யானையும் அதன் தலை மேல் ஒரு குடையும் இருந்தது. பின்புறம் பாயும் புலி சின்னம் இருந்தது. புலியின் முன்னே வேலியிட்ட மரம் காணப்பட்டது.

இந்த இரண்டு நாணயங்களுக்கும், வேலியிட்ட மரம் பொதுவான சின்னம். இம்மரச் சின்னங்கள், தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களிலும் காணலாம். இந்தியாவின் வடக்குப் பகுதியில், தற்போதுள்ள பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளில், 2000-ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. இந்த நாணயங்களில் காணப்படும் வேலியிட்ட  மரச்சின்னம் மிக முக்கியமானது. அச்சின்னம் தான், சங்ககால சோழர் நாணயத்தின், கால ஆராய்ச்சிக்குரிய அடிப்படைச் சான்றாக அமைந்தது. இது போல் பல அனுபவங்களைச் சொல்லலாம். 

கவுகாத்தியில் நடந்த சங்ககால சேரர் நாணயங்கள் குறித்த என் கட்டுரை பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தக் கட்டுரைக்கு டாக்டர் நாகசாமி, ஆட்சேபம் தெரிவித்தார். சில நாட்களிலே, அதே போன்ற ஒரு நாணயத்தை அவர் கண்டெடுத்தார்.  பின்னர், என் ஆய்வு முடிவை ஏற்றுக் கொண்டார். 

புதிய நாணயம் ஒன்றைக் கண்டடையும்போது எப்படியிருக்கும்?

தேடல் எப்போதும் புதிய நாணயங்களை நோக்கித்தான் இருக்கும். அது கிடைக்கும் போது அளவிட முடியாத மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு நாணயத்தையும் கண்டுபிடிக்கும்போது, அவற்றின் உண்மைத் தன்மையையும், வரலாற்றுப் பின்னணியையும் நிறுவ வேண்டும்.


உலோகங்களை உருக்கி. நாணயம் அச்சிடும் தொழில்நுட்பத்தையும், அதற்குத் தேவையான கருவிகளும் தமிழர் வசம் இருந்த தகவலால் மனம் பூரித்துப் போனேன். ரோம நாணயங்களைத் தமிழகத்தில் கண்டுபிடித்தபோது, மிகப் பழங்காலத்திலே கடல் கடந்த நாடுகளோடு, தமிழர்கள் வாணிபம் செய்துள்ள தகவல் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. 

தமிழகக் கடல் பகுதியில் கப்பல்கள், பெரும் படகுகள் நிற்பதற்கு ஏற்ற துறைமுகங்கள் அப்போதே இருந்துள்ளன என்பதும் பெருமிதம் கொள்ள வைத்தவை.

தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவராக துறையின் வளர்ச்சி குறித்து?

இந்தியாவின் வட பகுதியில் இந்திய நாணயவியல் கழகம் பல ஆராய்ச்சிகளை நடத்தி, வாரணாசியில் கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் நடத்தி வந்தது. அப்படி ஒரு கருத்தரங்கில் தான் எனது கண்டுபிடிப்பான சங்க கால மன்னர் பெருவழுதி என்ற பெயர் பொறித்த நாணயம் குறித்து, ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். என் கருத்தை அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்தியாவின் தென்பகுதியில் நாணயவியல் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இதனால்தான், 1990 -இல் தென்னிந்திய நாணயவியல் கழகம் தொடங்கப்பட்டது.  டாக்டர் ஐ.கே.சர்மா, டாக்டர் கே.வி.ராமன், டாக்டர் ஏ.வி.நரசிம்மமூர்த்தி போன்றோருடன் சேர்ந்து  சங்கத்தைத் தொடங்கினோம். அதுமுதல், ஆண்டு தோறும், இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடத்தி வருகிறோம். அதில், தரமான ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்படுகின்றன. அந்தக் கட்டுரைகளை, ஆய்வு நூலாக (நற்ன்க்ண்ங்ள் ண்ய் ள்ர்ன்ற்ட் ண்ய்க்ண்ஹய் ஸ்ரீர்ண்ய்ள்) வெளியிட்டு வருகிறோம். இந்த நுôல், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம், அமெரிக்க நாணயவியல் கழகம் ஆகியவற்றில் மாணவர்கள் பயில்வதற்காக வைக்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

தென்னிந்திய நாணயவியல் கழகம் நடத்தும் கருத்தரங்குகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என, தென்னிந்திய மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நாணயவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. தொன்மை நாணயங்களை உருக்கி அழிக்காமல் பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. 

"வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றது குறித்து ?

நாணயவியல் துறையில் ஆராய்ச்சி என்பது நீண்ட  பயணம்.  அதற்கு முடிவே இல்லை. கண்டுபிடிக்க வேண்டிய தகவல்கள் இன்னும் ஏராளம் உள்ளன. இதில் நானும் பயணம் செய்து வருகிறேன். என் பயணத்தின் தொடர்ச்சியாக, இளைஞர்கள் வருவார்கள்.  ஆய்வுகள் செய்து, புதிய தகவல்களைத் தமிழுக்குத் தருவார்கள். தமிழின் பழமையும் மேன்மையும் உயர உழைப்பார்கள் என நம்புகிறேன்.

இந்தத் துறையின் வளர்ச்சி வரலாற்று ஆய்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி... நாணயவியல் துறையில் ஏற்படும் ஒவ்வொரு வளர்ச்சியும், தமிழக வரலாற்றை விரிவுபடுத்தும்.  நாணயங்களை ஆய்வு செய்யும்போது கிடைக்கும் தகவல்கள், தமிழரின் பண்பாட்டுத் தொன்மையை மேலும் மேலும் நிறுவி வளப்படுத்தும்.
ஒரு நாட்டின் பொருளாதார நிலையை வெளிப்படுத்தும். ஒரு நாட்டின் உலோகப் பயன்பாட்டைச் சொல்லும். இலக்கியத் தொன்மையை அறிவியல் ரீதியாக நிரூபிக்கும். இவை எல்லாம் ஒரு நாணயத்தை ஆராயும் போது ஏற்படும் தாக்கங்கள் தான். 

நாணயவியல் துறை வளர புதியவர்களுக்கு உங்களின் செய்தி என்ன? 

நாணயவியல் துறை வளர, கல்லுôரிகளில், பல்கலைக்கழங்களில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சமீபத்தில் நடந்த நாணயவியல் ஆய்வரங்கில், 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சிறப்பாக இரண்டு கட்டுரைகள் படித்தார். அவரது தந்தை நாணயவியல் ஆர்வலர். அவர் கொடுத்த ஊக்கத்தால், அந்த மாணவி கட்டுரை வாசிக்க முடிந்தது.

பொதுவாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுôரிகளில் உள்ள வரலாற்றுத்துறைகளில், பழங்கால நாணயவியல் ஆய்வு என்ற பிரிவையும் இணைக்க வேண்டும். அப்போதுதான், இதில் அறிமுகம் கிடைக்கும். அடிப்படை அறிவு கிடைக்கும். அது மாணவர்களுக்கு இந்தத் துறையில் திறனை வளர்க்கவும், நிபுணத்துவத்தை வெளிப்படுத்தவும் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com