தினமணி கொண்டாட்டம்

இசை தூறல்கள்!

DIN

மார்கழி வரும் முன்பே சென்னையில் இசைவிழா களைகட்ட தொடங்கிவிடும். அந்த வகையில், இந்த வருடம்  கண்ணில் பட்டு நெஞ்சில் நின்ற விஷயம் ஒன்று உண்டு. எங்கு பார்த்தாலும் என். ஆர். ஐக்களின் ஆக்கிரமிப்பு. டிசம்பர் 15 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா என்று அங்கிருந்து வந்து ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் நம்மவர்களின் கூட்டத்தைக் காணமுடிந்தது.  இவர்களின் பங்களிப்பு இசைவிழாவில் நிறையவே உண்டு. கச்சேரி மேடையிலும், அரங்கத்தில் பார்வையாளர்களாகவும் காணப்பட்டனர். பல சபாக்களில் கச்சேரி கேட்பவர்கள் கூட்டம் ஜனவரி 2-ஆம் தேதிக்குப் பின் கணிசமாக குறைந்து விடுவதற்குக் காரணம், இந்த இசையைப் பருக வந்த இந்தப் பறவைகள் தங்களது தொழில் நிமித்தமாக மீண்டும் பறந்து விடுவது தான். வெகு சீக்கிரம் நமது சங்கீதம், என்.ஆர்.ஐக்கள் வளர்க்கும் இசையாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் பலமாக தெரிகின்றது. சரி,  இனி கச்சேரிகளுக்கு வருவோம்.

டிசம்பர் 21-ஆம் தேதி மார்கழியின் ரம்யமான காலை வேளையில், நாரதகான சபா அரங்கத்தில் சின்மயா சகோதரிகளான உமா, ராதிகாவின் அருமையான கச்சேரி. அநாயசமாக, மேல் ஸ்ட்ஜத்திற்கு  மேலே சஞ்சாரம் செய்யும் சௌக்யமான  சாரீரம் இருவருக்கும். தேவகாந்தாரியும்,  பந்துவராளியும், ஹம்ஸநாதமும்  ஆஹா  போட வைத்தன. சாருகேசியில்  "க்ருபையா பாலய' க்ருதியும்  நிரவல்  ஸ்வரமும்  படு ஜோர். அரங்கம் நிரம்பியிருந்தது இறுதிவரை. கோபிநாத் வயலின், நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியம் மிருதங்கம், மடிப்பாக்கம்  முரளியின்  கடம் இவற்றுடன் மினி அரங்கத்தின் மைக் ஏற்படுத்திய "கீ'  என்ற ஒலியும் ஒரு பக்க வாத்தியமாக உடன் வந்தபடி இருந்தது.  என்றாலும்,  சின்மயா சகோதரிகளும், மற்ற  கலைஞர்களும் அதைப் பொருட்படுத்தாது தங்கள் பங்கை சிறப்பாகவே நிறைவேற்றினர். 

அன்று மாலை - ஸ்ரீகிருஷ்ணகான சபாவில் பாம்பே ஜெயஸ்ரீயின் இன்னிசைக் கச்சேரி வழக்கமான தென்றல் வீசுவது போன்ற மென்மையான குரல்.  அதிர வைக்காத இசை. அசாத்திய கற்பனைவளம்.  ஆனால் மனதில் நினைப்பதை வெளியிட முடியாத வகையில் அன்று மேல் ஸ்தாயியில் பாட மிகவும் சிரமப்படுவது தெரிந்தது. மார்கழி குளிரின் பாதிப்போ?அன்று பாடிய காம்போதி (சுப்ரமண்யாய), லதாங்கி  (மரிவேற திக்கெவரு)  அருமையிலும் அருமை.  அடுத்து வந்த ஹிந்தோளத்தில்  ராகம் தானம் பல்லவியாக  அமைந்த "ஆனந்த நடனம் ஆடினாள்  தத்திமததீம்  என கனகசபையில்' என்ற உருப்படி தான் நிகழ்ச்சியின் ஹைலைட்.  ஸ்வரம்  போடும்போது பாடிய ராகமாலிகை ஸ்வரங்கள் படுஜோர்.  அரங்கம் நிரம்பி வழிந்தது மட்டுமல்ல அசையாது அமர்ந்திருந்தனர்.  இறுதியாக வந்த  "வாஸந்தி'  ராக தில்லானா வரை!


டிசம்பர் 21-ஆம் தேதி தியாக ப்ரும்மகான சபையின் சார்பில் வாணி மஹாலில் கே.காயத்ரியின் கச்சேரி. மறைந்த போற்றத்தக்க விதூஷி சுகுணா புருஷோத்தமனின் பெயரைப் போற்றி காப்பாற்றும் முதல் தர சிஷ்யை அவர் அன்று பாடிய வரமு ராக ஆலாபனை இந்த சீசனில் நாம் எங்குமே கேட்கவில்லை.  மிகவும் நேர்த்தியான  ஆலாபனை. நேர்த்தியான கச்சேரி. 

அன்று அதே இடத்தில் மாலை 6 மணி அளவில் ரஞ்சனி காயத்ரி சகோதரிகளின் கச்சேரி. தீட்சிதரின் "கணநாயகம்' என்ற ருத்ரப்ரியாவில் அமைந்த பாடலில் தொடங்கி கச்சேரியை ஜமாய்த்துவிட்டார்கள். ஹால் ரசிகர்களாலும், அவர்களுடைய உயர்ந்த சங்கீதத்தாலும் நிரம்பி வழிந்தது. ரஞ்சனி பாடிய சுப பந்துவராளி ஆலாபனையும், காயத்ரியின் மோஹனமும் விவரிக்க வார்த்தைகள் இல்லை. இனிமை சொட்டச் சொட்டப் பாடும் இந்த சகோதரிகள் பல்லவி பாட எடுத்துக் கொண்ட  வார்த்தைகள்  "இனிய உளவாக இன்னாத கூறல்; கனியிருப்பக் காய்கவர்ந்தற்று' என்ற திருக்குறள். வள்ளுவர் கேட்டிருந்தால் பூரித்துப் போயிருப்பார்.

23-ஆம் தேதி பந்துள ரமாவின் பாட்டு பார்த்தசாரதி சபாவில்.  வழக்கம்போல் அவரது கணவர் மூர்த்தி வயலின்.   இந்த ஜோடி சற்று அலுப்பு தட்டுகிறது. மாற்றி பார்க்கலாமே! அமைதியான,  தெளிந்த நீரோடை போல் சென்றது கச்சேரி.  கல்யாணி,  ஆபேரி,  ஸ்ரீரஞ்சனி ஆகிய ராக ஆலாபனைகள் சீராக இருந்தன. ப்ருகாவும் இனிமையும் கலந்த சாரீரம் இவருக்கு. இசையில் முன்னணியில் இருக்கும் இரு கலைஞர்கள் தம்பதிகளாக இருக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதால்,  முயற்சி  இவர்கள்  இசைக்கு மேலும் மெருகூட்டும்.

23-ஆம் தேதி மாலை பார்த்தசாரதி சபாவில் இப்போது முன் வரிசையில் வைத்துக் கருதப்படும். இரட்டையர்களான இசைக்கலைஞர்கள் திருச்சூர் சகோதரர்களின் விறுவிறுப்பான கச்சேரி நடைபெற்றது. ஆரம்பம் முதலே சுறுசுறுவென்ற பாட்டு. ப்ரோவபாரமாவில்  மத்யம காலத்தில்  ஸ்வரம்  படு வேகம்.  ரசிகர்களை குஷிப்படுத்த முடிந்தது.

தொடர்ந்து பாடிய நாராயணாவும் ( சுத்த தன்யாஸி), அக்ஷய லிங்க விபோவும் அழகோ அழகு.   வயலின் அனுசரணையாகத்  தொடர்ந்த எம். ஏ. சுந்தரேசன் அருமையாக வாசித்தார்.  இருவருக்கும் -  ஸாரி - மூவருக்கும்-  நல்ல கெமிஸ்ட்ரி.  

அன்றைய தினம் காலை  மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில்  ரித்விக் ராஜா கச்சேரி, ஒரு தம்பூரா பார்ப்பதே அபூர்வம். ஆனால்,  இரண்டு தம்பூராக்களை வைத்துக் கொண்டு இந்த இளைஞர் தைரியமாக பாடினார். அசாத்தியமாக சுருதி சேர்ந்தது. அன்றைய அவரது கச்சேரியின் ஹைலைட். அவர் பாடிய கரஹரப்ரியா. சீனியரான ஸ்ரீராம் குமாரும், மனோஜ் சிவாவும்  அவருக்கு அருமையான பக்கபலம். புருஷோத்தமனின்  கஞ்சிரா  வெகுசிறப்பு. மொத்தத்தில்  கச்சேரி களைக்கட்டியது.

அன்று மாலை அதே இடத்தில் மஹதியின் கச்சேரி.  என்ன தைரியம் இவருக்கு? சுகன்யா ராம்கோபால்  போன்ற லய சிம்மத்தைத் தமக்கு கடம் வாசிக்க வைத்துவிட்டார். மஹதியின்  லய வேலைப்பாடுகள்  அப்பப்பா!  இவருக்குள் இவ்வளவு திறமையா? ஹிந்தோளம்  மற்றும் வசந்தா என்று இரு ராகங்களில் ராகம்-தானம்-பல்லவி அதுமட்டுமா அதீத எடுப்பு ஹிந்தோளத்யுதி ஹீர மணிமயாபரணே வசந்தருது ஸ்மபலதாயினி என்ற பல்லவி கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.

மஹதியின் கச்சேரி முடிந்த பிறகு நாம் கேட்டது மல்லாடி சகோதரர்களின் கச்சேரி.  இந்த சீசனில் இம்மியளவும் இலக்கணம் மாறாமல் நாம் கேட்ட கச்சேரி என்று இதனைக் கூறலாம்.  இவர்கள் அத்தனை  பாடல்களையும் ராகம், தாளம் மற்றும் இயற்றியவர் பெயருடன் ரசிகர்களுக்குத்  தெரிவித்துப் பாடினது மிகுந்த சிறப்பு. 

இதனை ஏன்? மற்ற வித்வான்கள் செய்யவில்லை என்பது இன்று வரை நம் மனதில் உள்ள கேள்விக்குறி. மல்லாடி சகோதரர்கள் அன்று பாடிய  "கலாவதி' ராக ஆலாபனையைக் கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  இந்த  அபூர்வ ராகத்தினை  இத்தனை  நேரம்  இவர்களால்தான் பாட முடியும்.  அன்று ஸ்ரீ ராம் பிரசாத் பாடிய சாமா ராகமும்,  ரவிக்குமார் பாடிய சுருட்டி ராக ஆலாபனையும் மிகவும் சிறப்பாக இருந்தது.

இரண்டு தமிழ்ப் பாடல்களை மிகவும் சரியான  உச்சரிப்புடன் பாடியது (வருவாரோ வரம் தருவாரோ; ஆனந்த நடேசா)மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது. 

ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில் நாம் இரண்டு இளைஞர்களின் கச்சேரிகளைக் கேட்டோம்.  ஒருவர் விவேக் சதாசிவம். மற்றொருவர் ஜி.ரவிகிரண். விவேக் சதாசிவம் பூர்வி கல்யாணியில் தீஷிதரின் ஏகாம்பரநாதம்  என்ற  க்ருதியை நிரவல் சுரங்களுடன்  வழங்கினார்.  ஜி.  ரவிகிரண் பேகடையை முக்கியமாக எடுத்துக்கொண்டு  "சங்கரி நீயே' என்ற சுப்பராய   சாஸ்திரிகளின் பாடலை அருமையாகப் பாடினார்.  இரண்டு இளைஞர்களுக்கும் நிச்சயமாக நல்ல எதிர்காலம் இருக்கிறது.

24- ஆம் தேதி மாலை 4 மணி அளவில் பிரம்ம கான சபைக்காக  சிவகாமி பெத்தாச்சி அரங்கில் பாலக்காடு ராம் பிரசாத்  பாடினார்.  இவர் சங்கீதம் தெளிந்த நீரோடையைப்  போல் இருந்தது.  அன்று இவர் பாடிய ஆரபி ராக ஆலாபனை இவரது ஆடம்பரமற்ற சிறப்பான சங்கீதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.  நிரவல்,  கல்பனை சுரம் என்று "சாலகல்லலாடு  கொன்ன' என்ற தியாகராஜ சுவாமிகளின் க்ருதியில் அசத்திவிட்டார். திருச்சூர் நரேந்திரனின் மிருதங்க இசை நல்ல பக்கபலம்.  எல். ராமகிருஷ்ணன் வயலினிலும், ஸ்ரீராம் கஞ்சிராவிலும், ராம் பிரசாதிற்கு ஈடுகொடுத்து வாசித்தனர்.

மறுநாள் பார்த்தசாரதி சுவாமி சபாவில் ஜெயஸ்ரீ வைத்தியநாதனின் கச்சேரி. வித்யாபாரதி கல்யாண மண்டபத்தில்.  முத்துத்தாண்டவரின் "அருமருந்து ஒரு தனி மருந்து'  என்ற  காம்போஜி ராக பாடல்தான் அன்றைய இவரது ஸ்பெஷல். மேலும்  "ஜனனி ஜகத் காரணி நீ பரிபூரணி ஆனந்தமயி"  என்று இவர் ஹேமவதி ராகத்தில் பாடிய ராகம் - தாளம்- பல்லவி மிகச்சிறப்பாக அமைந்தது.

அன்று மாலை அதே இடத்தில் சிக்கல் குருசரண் கச்சேரி இவரிடம் நமக்கும் பிடித்தது என்ன தெரியுமா?  பத்ததி மாறாமல் பல சிறப்புகளைப் பாடுவது. தோடி ராகத்தை  அன்று அருமையாக ஆலாபனை செய்தார்.  கரஹரப்பிரியா அதைவிட அருமை. "ராமா நீ சமானமெவரு' என்ற தியாகராஜரின் வரிகளையே பல்லவியாக எடுத்துக்கொண்டு பாடினார்.  குருசரணின் பாட்டு முதலில் இருந்து கடைசிவரை மிகவும் ரசிக்கக் கூடியதாக எப்போதும் அமையும். அன்றும் அப்படித்தான். ரசிகர்கள் அவராகக் கச்சேரியை முடிக்கும்வரை எழுந்திருக்கவே இல்லை.  அப்படி நம்மைக் கட்டிப் போட்டது அவரது சங்கீதம்.

சென்னை கல்ச்சுரல் அகாதெமி சார்பில் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற அபிஷேக் ரகு ராமின் கச்சேரிக்கு ஆர்வத்துடன் சென்றோம். கம்பீரமான சாரீரம் இவருக்கு. அன்று அவர் பாடிய வராளிக்கு தனியே ஒரு பட்டமே கொடுக்கலாம். மறைந்த மாமேதை ஜி. என்.பியையும்,  மதுரை சோமுவையும் நம் கண் முன் நிறுத்தியது அவரது ஆலாபனை.

அசாத்தியக் கூட்டம் அலைமோதும் இவரது கச்சேரிகள் ஒவ்வொன்றுமே சிறப்பானதுதான். தனது தனித்துவமான இசையை இந்த இளைஞர் பல்லாண்டு வழங்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

22-ஆம் தேதி சனிக்கிழமை காலை கருவி இசை ஒன்று கேட்போமே என்று பிரபஞ்சம் பாலசந்தரின் புல்லாங்குழல் இசையைக் கேட்டோம்.  யார் ஐயா சொன்னது மாலி, ரமணி இவர்கள் மறைந்து விட்டனர் என்று. அவர்களின் பாணியை தமதாக்கிக்கொண்டு இசைத்து ரசிகர்களை அசத்திவிட்டார் பிரபஞ்சம் பாலசந்தர். லதாங்கி ராக ஆலாபனை கண்களில் நீரை வரவழைத்தது.

விசாரித்ததில் புல்லாங்குழல் வித்வான் ரமணியின் பிரதான சிஷ்யர் என்று தெரியவந்தது.  மேலும், ஆல் இந்தியா ரேடியோவின் ‘அ’ டாப் கலைஞர் என்பதை அறிந்ததும் அவரது இசையின் அடித்தளம் புரிந்தது.

22-ஆம் தேதி காலை பார்த்தசாரதி சபாவில் பாடிய மகாராஜபுரம் ராமசந்திரனின் கச்சேரி கனஜோர்.  நல்ல வளமான சாரீரம் இவருக்கு.  தந்தை மகாராஜபுரம் சந்தானத்திடமிருந்து  ஸ்வீகரித்துக் கொண்ட  இசை ஞானமும், மெல்லின வல்லின ப்ரயோகங்களும் மேலும் மேலும்  மெருகேறி வருகின்றன. அன்று அவர் பாடிய  ஆரபியும், அதிலே  அமைத்த சுவையான ஸ்வரங்களும், அடுத்து  வந்த  கமாஸ், சிந்தாமணி, விஸ்தாரமான கல்யாணி எல்லாமே நல்ல சுகானுபவம் தந்தன.  உடன்  வாசித்த  வயலின் விற்பன்னர்  பரூர் எம்.ஏ. கிருஷ்ணஸ்வாமி,  "கோல்டன் வாய்ஸ்'  என்று சிலாகித்தார்.  

அன்று மாலை வாணி மஹாலில் சஞ்சய்  சுப்ரமணியம் வழங்கிய சூப்பர் டூப்பர் கச்சேரி.  எந்தக் கூட்டணி எப்படியோ? சஞ்சய் -வரதராஜன் கூட்டணிக்கு என்றுமே வெற்றிதான்!  அருமையான நவரஸ கன்னடா, ஹுசேனி, கல்யாணி, ப்ருந்தாவன ஸாரங்கா  ராக  ஆலாபனைகளும் க்ருதிகளும் ஒன்றையொன்று மிஞ்சின இனிமையில் - புதுமையில்! ராகம் தானம் பல்லவியை  "பட்தீப்'  என்ற ராகத்தில் அமைத்து பட்டாசு கொளுத்திப் போட்டார்ய்யா.

ஸ்வரங்களின் கேதாரம், காபி நாராயணி, அடாணா, பிலஹரி,   ஸ்ரீராகம் எனப்பாடி  ஒரு  வர்ணஜாலம் செய்தார்.  கச்சேரிக்குக் கச்சேரி புதுமை புகுத்தி, தன் இசையை இளமையாக  புதுமையாக  வைத்திருப்பதில் இவருக்கு நிகர் இவரே.

ஸ்ரீ பார்த்தசாரதி சபாவினர் "பத்ததி இசைவிழா' என்று இந்த வருடம் புதுமையாக  "வேதாந்த தேசிகர் ஹால்'  மயிலாப்பூரில் கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.  நாம் இங்கு ஹால் எப்படி இருக்கிறது என்று பார்க்க 28-ஆம் தேதி டிசம்பர் அன்று அங்கு நடைபெற்ற ப்ரீதி நரசிம்மன் கச்சேரிக்கு சென்றிருந்தோம்.  நமக்கு முதலில் தோன்றியது  ஏன் இத்தனை ஆண்டுகளாக யாருமே இந்த ஹாலை கச்சேரிகளுக்குப்  பயன்படுத்தவில்லை என்பதே. சாய்பாபாவின் கோயில் அருகே இருக்கும் இந்த ஹாலில் இடமோ அருமை. கார்கள் நிறுத்தவும் இடம் இருக்கிறது. சரி, ஒலி ஒளி அமைப்பு எப்படி? அதுவும் நன்றாக இருந்தது. 

ப்ரீதி  நரசிம்மனின் கச்சேரிக்கு வருவோம்.  அன்று அவர் பாடிய சாருகேசி ராக ஆலாபனை மிக  அருமையாக  இருந்தது.  கல்பருஸ்வரமும் அபாரம். சசிகிரண் இவருக்கு  நன்றாகவே  இசையைப் பயிற்றுவித்து உள்ளார்.  இவருக்கு  வயலின் வாசித்த டாக்டர் பரூர் ஹரிணி ஸ்ரீவத்சா சாருகேசியின் அத்துணை பரிமாணங்களையும்  மிகவும்  அழகாக  எடுத்து வாசித்தார்.  அதனால் தானோ என்னவோ அருணா சாய்ராம் இவருடைய வாசிப்பைப்பற்றி இந்த  ஆண்டு மியூசிக்  அகாதெமியில்  மிகவும் சிலாகித்து  பேசினார்.  

மனோகரன் என்ற இளைஞர் நன்றாக மிருதங்கம் வாசித்தார்.  இந்த ஹாலில் மேன்மேலும் இசைக் கச்சேரிகள் நடக்க வேண்டும்  என்பது  நமது அவா. இந்த சீசனில்  நாம்  சீர்காழி டாக்டர் சிவசிதம்பரம்  கச்சேரியைக் கேட்டோம். முதலில் இருந்து  கடைசிவரை  ரசிகர்கள் கேட்ட அனைத்தையும் சளைக்காமல் பாடினார்.  தந்தையாரின் குரல்வளம் அப்படியே இவருக்கு அமைந்தது ஒரு வரம்.

அருணாசாய்ராம்   அகாதெமியோடு ஐக்கியமாகிவிட்டதால்  அவரது கச்சேரியை  இந்த சீசனில்  மற்ற  சபாக்களில் கேட்க முடியாதது நமக்கு ஒரு குறையே. 

24-ஆம் தேதி நாரதகான சபாவின் ஆதரவில் சித் ஸ்ரீராமின் பாட்டுக் கச்சேரி. காதில் அறையும்  சங்கீதம்!  கொஞ்சம் இனிமையை கூட்டுங்கள் தம்பி! 

மனதில் நின்றது உமையாள்புரம் மிருதங்கம்  மற்றும் கடம் கார்த்திக்கின் தனி ஆவர்த்தனம்தான்.  வயலின் எல். ராமகிருஷ்ணன் என்று அறிந்தோம், ஆஹா அருமை.  மென்மையும், இனிமையும் குழைத்து அடிக்கும்  இவர் வாசிப்பை இந்த சீசனில் பல மேடைகளில் கேட்டு ரசிக்க முடிந்தது.

சில தேர்ந்த பாடகர்கள், இந்த சுழிக்காற்று போன்ற சூறாவளி சங்கீதத்தின் நடுவே, பெரிதும் கையாளப்படாத அபூர்வ  க்ருதிகள், ராகங்கள் இவற்றை ஆத்மார்த்தமாகப்  பாடி,  அதற்கென்றே ஏற்பட்ட  ரசிகர்களை தமது பிடியில் வைத்திருப்பதையும் பார்க்க முடிந்தது.  இந்த வகையில் டாக்டர். சுபாஷினி பார்த்தசாரதி, டாக்டர். நிர்மலா சுந்தரராஜன், பிரேமா ரங்கராஜன், வரலட்சுமி அனந்தகுமார் போன்வர்களை அவசியம் குறிப்பிட வேண்டும்.

அதே நாள் மாலை 4 மணிக்கு வாணி மஹாலில் நடைபெற்ற ஜெயஸ்ரீ ஜெய ராமகிருஷ்ணனின் கச்சேரி இந்த வகையைச் சேர்ந்தது.  பந்துவராளி  அடதாள வர்ணத்தில்  தொடங்கி, தீட்சிதரின் அசாவேரி ராகக் க்ருதி,  லதாங்கியில் கோடீஸ்வரய்யரின் தமிழ் க்ருதி,  "துர்கா லட்சுமி சரஸ்வதி' என்ற நளினகாந்தி ராக க்ருதி,   மனோரஞ்சனி ராகத்தில் தியாகராஜரின்  "அடுகானரா  தனி பல்க' என,   எல்லாமே நல்ல பாடாந்தரமான இசை கேட்ட நிறைவு ஏற்பட்டது.

ஆபேரி  ராக  ஆலாபனை முடிந்து  "தானம்'  மட்டும் பாடிய பிறகு  "ஈஸ்வரி ராஜேஸ்வரி'  என்னும்  ஹரிகேசநல்லூர் இயற்றிய உருப்படி பாடிய ப்ராசீன முறையையும் காணமுடிந்தது.  நிரவல்,  ஸ்வரம்,  தொடர்ந்து வந்த கர்ணரஞ்சனி விருத்தம்,  தேஷ் ராகத்தில்  அமைந்த  "ராம நாமமே துதி'  அனைத்துமே திருப்திகரமான இசைக்கச்சேரியாக  இருந்தது.

 டிசம்பர் 25-ஆம் தேதி காலை என்றாலே ஒவ்வொரு ஆண்டும் மனம் பரபரக்க தொடங்கும் வருடந்தோறும் 10 மணிக்கு கிருஷ்ணகான சபையில்,  சுதா ரகுநாதனின் கிட்டத்தட்ட 4 மணி நேரக் கச்சேரி நடைபெறும்.  குரு எம்.எல்.வி  இதே நேரத்தில் இந்த சபாவில் பாடி வந்த இடம் இது.  குருவிடமிருந்து ஸ்வீகரித்துக் கொண்ட இசைப்புலமையை மேலும் மேலும் மெருகேற்றி ரசிகர்களைத்  தன் வசப்படுத்துவதில்  தேர்ந்தவர் சுதா!

 அன்று ஸ்ரீராம் குமார் வயலின்,  கே.வி. பிரசாத் மிருதங்கத்துடன் ஒரு மறக்க முடியாத கச்சேரியாக அமைந்தது.  "தாரிணி தெலுசு  கொண்டி' யில் துரிதகால ஸ்வரம்  போட்டு பிரமிக்க வைத்தார்.  குருவை நினைக்க வைத்தார்.  அடுத்து பாடிய  வராளி  ராக ஆலாபனை,  அதில் அமைந்த தீட்சிதர் க்ருதி, "சேஷாசல நாயகம்'  (தியாகராஜர்)  கரஹரப்ரியா விஸ்தார ஆலாபனை, ஸ்ரீனிவஸ தவசரணம் க்ருதி, நிரவல், ஸ்வரம், அம்ருத வர்ஷிணியில்  ராகம் -தானம் - பல்லவி என இசை மழை பொழிந்துவிட்டார்.  தொடர்ந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி  "பாற்கடல் அலை மேலே' ,  "என்ன தவம் செய்தனை' போன்ற  துக்கடாக்களையும்  விஸ்தாரமாகப் பாடி  ஆடாது அசங்காது அமர்ந்திருந்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.  குரலின் இனிமை மாறாமல் காத்து வருவதைப் பாராட்ட வேண்டும்.

எத்தனை சபாக்கள் பெருகினாலும், சென்னையில் குறிப்பாக மயிலை தி. நகர் பகுதிகளில் இசையை வளர்க்கும் (ரசிக்கும்) ரசிகர்களும்,  கலைஞர்களும் இருக்கும் வரை இந்த தெய்வீக இசைக்கு தொய்வு  என்பதே  இருக்கமுடியாது. இளைஞர்களும் ஆர்வமாக, முழுநேர  வேலையாக  இந்தக் கலையில் ஈடுபட்டிருப்பதே  இதற்கு  சான்றாக  இருக்கிறது. 

அடுத்த  ஆண்டு சந்திப்போம்!


இந்த சீசனில் நாம் கேட்ட  ஓர் அருமையான கச்சேரியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். ஆம் அது காயத்ரி வெங்கட் ராகவனின்  பாட்டுதான். தியாகப்ரம்ம கான  சபாவிற்காக வாணி மஹாலில் அவர் பாடிய போது நாம் மெய்மறந்துதான் போனோம். கல்யாணியில் இவ்வளவு இருக்கிறதா?   அவரது ஆலாபனையில்தான் அது தெரிந்தது. "அருள வேண்டும்  தாயே' என்ற பாடலில் சாருகேசியின் அத்தனை பிடிகளும் நமக்குப் புலப்பட்டது.  "தத்வமறிய தரமா' என்ற ரீதி கௌளை ராகப் பாடலில் தொடங்கி  "மைத்ரீம் பஜத' என்று  எம்.எஸ். அம்மாவுக்கு அர்ப்பணமாக  பாடிய கடைசிப் பாடல் வரை  தொய்வே இல்லாமல்  சென்றது  அவரது கச்சேரி. குரலில்  அவ்வளவு இனிமை. அபார ஞானம் என எதை சொல்வது, எதை விடுவது  தெரியவில்லை. மிகவும் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT