இசையறிஞர் ப. முத்துக்குமாரசாமி நினைவாக... இசையோடு வாழ்வு!

இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் ப.முத்துக்குமாரசாமி. இசையாகவே வாழ்ந்தவர். இவரின் தந்தை புளியங்கூடலைச் சேர்ந்த பரமசாமி
இசையறிஞர் ப. முத்துக்குமாரசாமி நினைவாக... இசையோடு வாழ்வு!


இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் ப.முத்துக்குமாரசாமி. இசையாகவே வாழ்ந்தவர். இவரின் தந்தை புளியங்கூடலைச் சேர்ந்த பரமசாமி சிவாச்சாரியார். யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில் பிரதம சிவாச்சாரியராக இருந்தவர்.

நல்லூர் முருகன்  வீதியுலா வருகிற வேளையில்,  தமக்கு ஆண் குழந்தை பிறந்ததால் முருகனின் பெயரான முத்துக்குமாரசாமி என்று பெயர் வைத்தாராம். 2 வயதில் சீராளனாக மேடையேறி பாடி நடித்தார். சீராளன் வாழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் பிறந்தவரே பின்னாளில் இவருக்கு குருவாக வாய்த்த தண்டபாணிதேசிகர். 

சிறு வயதில் தனது தந்தையை இழந்த போதிலும்,  இசையோடு வளர்ந்த இவர் வளர, வளர கவிதை, பேச்சு கட்டுரை நாடகம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தார். எங்கும் எப்போதும் முதல் பரிசுகளையே குவித்து வந்தார்.

பின்னர் தனது தாய்மாமன் மூலமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.  இசை பயிலும் போது பல சாதனைகளைப் புரிந்தார். அணுக முடியாத பல அறிஞர்களையெல்லாம் அழைத்து வந்து சிறப்பு பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்தார். மாணவர் மன்ற செயலாளராக இரண்டு தடவைகள் பணியாற்றி பெரும் சாதனைகளைச் செய்தார்.

"ஓவிய மன்னர்' என்று அழைக்கப்பட்ட மாதவனை, சிதம்பரம் அழைத்து வந்து  அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை அரங்கில் பிரமாண்டமான திரைச்சீலைகளை அமைத்து அனைவரையும் வியக்க வைத்தார். வரையும் இடத்தில் தமது மனைவியைக் கூட அனுமதிக்காத மாதவன் இவரை மட்டும் உள்ளேயே வைத்திருப்பாராம்.  

பின்னாளில் இவர் நடத்திய "இசை அருவி'  என்ற மாத இதழுக்கு கேட்காமலேயே அற்புதமான அட்டைப் படத்தை இவரது கண்முன்னே வரைந்து கொடுத்தாராம். படிப்பு முடித்து "நான்  யாழ்ப்பாணம் (இலங்கை) திரும்புகிறேன்' என்று சொன்ன போது வரைந்து கொண்டிருந்த தூரிகையை அப்படியே கீழே போட்டுவிட்டு "என்ன சொல்லுறீங்க' என்று கண் கலங்கி கட்டியணைத்துக் கொண்ட மாதவன், "நீங்க ஊருக்குப் போயிட்டு திரும்ப வந்துடுங்க. என் கூடவே இருந்துடுங்க.  நல்ல பொண்ணா பார்த்து நான் உங்களுக்கு திருமணம் பண்ணி வைக்கிறேன்' என்றாராம்.

இது போன்றே இவரது குருநாதரும் கேட்டு, தனது ஆவலையெல்லாம் வெளிப்படுத்தி, "நீ என் பிள்ளையப்பா' என்று கூறியிருக்கிறார்.

இலங்கை வானொலியில் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை வழங்கிய இவர். சென்னைக்கு வந்த பின் கற்காம்பாள் மீது பாடல்கள் எழுதி பாடி ஒலிப்பேழைகள் வெளியிட்டு இருக்கிறார். சிதம்பரம் நடராஜப் பெருமான் மீது தினம் ஒரு பாடல் எழுதியவர்.  

இவர், "தினமணி'  நாளிதழில் மார்கழி மாத சங்கீத சீசனில் தொடர்ந்து இசை கச்சேரிகளுக்கு விமர்சனங்கள் செய்துள்ளார். அவையனைத்தும் நடுநிலையான விமர்சனங்கள் என்று அப்போது பாராட்டப்பட்டது. 

இவரின் மகன் தான் ஓவியர் பத்மவாசன். இவரை மாதவனிடம் ஓவியம் கற்க வைக்க வேண்டும் என்று சென்னைக்கு அழைத்து வந்தார்.  ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இறுதியில் ஓவியர் சில்பியிடம் ஓவியம் பயிலவிட்டாராம். 

கடந்த 25 ஆண்டுகளாக தமிழிசைச் சங்கத்தில் குரல் இசை விரிவுரையாளராகப் பணியாற்றி 86 வயது வரை இசையோடு வாழ்ந்து பல மாணவர்களை தமிழ் பற்றோடு வளர்த்து எடுத்து உருவாக்கியவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com