தினமணி கொண்டாட்டம்

என்றும் இருப்பவர்கள்!

DIN


சொல் பரிபூரணமாக இருக்கணும். சொல்லுக்கும் பொருளுக்கும் இருக்கிற எல்லைக்கோடு அழிஞ்சு போகணும். சில சமயங்களில் இதைச் சாதிக்க முடியுது. தரிசனம் என்பது ஒரு தடவை தான் உண்டு. சுரீல். அவ்வளவுதான். அதிலேயே பாதி தழும்பேறி கருகிப் போய் உங்க சட்டை உங்களை விட்டு உரிஞ்சுப் போயிடறது. அப்ப உங்க பார்வையே அந்த பிரக்ஞை, அந்த சுகம், அந்த விழிப்புணர்வு தொடருகிறது.
-லா.ச.ராமாமிருதம்

தமிழில் வசீகரமான நடையில் சிறுகதைகள் நாவல்கள் எழுதிய பிரபலமானவர் லா.ச.ரா என்றழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். 1916-ஆம் ஆண்டில் பிறந்தவர். பதினேழு பதினெட்டு வயதில் ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் காலத்தில் தமிழ்நாட்டில் கதைகள் எழுத ஆரம்பித்தப் பல எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் தான் கதைகள் எழுதினர். ஆங்கில மொழியில் கதைகள் எழுதினால் பரவலான அங்கீகாரம் கிடைக்கும். தன்னுடைய ஆங்கில அறிவு கதைகள் எழுத போதுமானது என்று கருதினார்கள். ஆனால், விரைவிலேயே மொழியறிவு மட்டும் கதையெழுத காணாது என்றும், உணர்ச்சியைச் சொல்ல தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு தமிழில் எழுத ஆரம்பித்தார்கள்.

பி.எஸ்.ராமையா "மணிக்கொடி' கதைப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. ஆங்கிலத்தில் எழுதி வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொண்டவர்கள் எல்லாம் "மணிக்கொடி'க்குச் சிறுகதைகள் எழுதினார்கள். சிலர் "கலைமகள்' பத்திரிகைக்கும் எழுதினார்கள். 

லா.ச.ராமாமிருதத்தின் சிறுகதைகள் தொடர்ந்து "மணிக்கொடி'யில் வெளிவந்தன. அதோடு அவர் "சந்திரோதயம்' பத்திரிகையிலும் எழுதினார். தன் எழுத்துக்கு தி.ஜ.ரங்கநாதன் தான் மூலகாரணம் என்கிறார். ஆனால் எழுத்தாளார்கள் தன் எழுத்துப் பற்றியும், தன் எழுத்துகள் உருவாகக் காரணமானவர்கள் பற்றி எல்லாம் சொல்வதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளகூடாது என்பது அடிப்படை விதி. எழுதப்பட்டதுக்கும், வாசிக்கப்படுவதற்கும் இடையில் உள்ளதைத்  தான் அறிந்து கொள்ள வேண்டும்.

தி.ஜ.ரங்கநாதன் அடிப்படையில் யதார்த்தவாதி மிகையற்றப் படைப்பு எழுத்தாளர். சொல் அலங்காரம்; கருத்து அலங்காரம், காட்சி அலங்காரம் ஒழித்தவர். ஆனால் லா.ச.ரா அலங்காரப் பிரியர். சொல்லுக்கு மந்திர சக்தி இருக்கிறது என்று நம்பியவர். எனவே கதைகளைச் சொல்லால் கட்டமைக்க அதிகமான நேரம் எடுத்துக் கொண்டவர். ஒரு சிறுகதையை எழுதி முடிக்க ஆறுமாதம், ஒரு வருடம் கூட எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் கதைகளில் காத்திருப்பு தெரிவதில்லை. 

அவர் தமிழ் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஆதர்சமான எழுத்தாளராக இருந்தார். சங்கீதம் கமையல், குடும்பம், குடும்ப உறவுகள் தாண்டாத அவர் கதைகள் பெரிய பத்திரிகைகளில் வராவிட்டாலும் புத்தகங்களாக வெளியிடப்பட்டன. 

1952-ஆம் ஆண்டில் அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான "ஜனனி' வெளிவந்தது. அப்போது அவருக்கு முப்பதாறு வயதாகி இருந்தது. "கலைஞன்' மாசிலாமணி தன் பதிப்பகத்தின் சார்பில் இதழ்கள், "பச்சைக்கனவு', "கங்கா'," அஞ்சலி', "அலைகள்' என்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருந்தார். அவர் இலக்கியவாதியாக அறியப்பட்டு இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களுக்கு வந்து கொண்டு இருந்தார்.

1963-ஆம் ஆண்டில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தோம். க.நா.சுப்ரமணியம், கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்ரமணியம், தி.ஜானகிராமன் எல்லாம் கலந்து கொண்டார்கள். கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி - எல்லாம் கட்டுரை வாசித்திருக்கிறார்கள். சார்வாகன், அசோகமித்திரன் கூட அந்தப்பட்டியலில் இடம் பெற்று இருந்தார்கள்.

இலக்கியக்கூட்டம் முடிந்த பிறகு தேநீர் விடுதியில் அமர்ந்து ஒரு மணி நேரம் போல பேசிக்கொண்டிருப்போம். பல பிரபலமான இலக்கிய எழுத்தாளர்கள் எங்களோடு பேசிக்கொண்டும் தேநீர் அருந்திக் கொண்டும் இருப்பதுண்டு. அவர்களில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். ஒரு முறை க.நா. சுப்ரமணியம் என்னைப் பாதித்தப் புத்தகங்கள் என்று தமிழ், ஆங்கிலப்புத்தகங்கள் பற்றிக் கட்டுரை வாசித்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனவே மேலும் சில எழுத்தாளர்கள் என்னைப் பாதித்தப் புத்தகங்கள் பற்றி கட்டுரை வாசித்தால் பயனுள்ளதாக இருக்குமென்று கருதினோம். அது பற்றி லா.ச.ராவிடம் கேட்டோம்.

""என்ன தலைப்பு'' என்று  வினவினார்.

""என்னைப் பாதித்த புத்தகங்கள்?'' என்றதும் தலையை அசைத்துக் கொண்டார். "ஒரு வாரத்தில் கடிதம் எழுதுகிறேன்' என்றார். பத்து நாட்களுக்கு பிறகு பதில் வந்தது. அதில் எந்தப் புற்றில் இருந்து எந்தப் பாம்பும் என்னைக் கடிக்கவில்லை என்று இருந்தது.

லா.ச.ராமாமிருதம் தமிழ்ச் சிறுகதை,  இலக்கியத்தில் உயர்வான இடம் பெற்றிருந்தார். 1968-ஆம் ஆண்டு வாக்கில் பெங்குவின் நிறுவனம் நவீன இந்திய இலக்கியம் என்றொரு தொகுப்பைச் சிறுகதைகள், புதுக்கவிதைகளோடு கொண்டு வந்தது. அதன் ஆசிரியர் அடில்ஜஸ்ஸôவாலா. தமிழ் மொழி பெயர்ப்பில் பல கதைகளைப் படித்தார். இறுதியில் மெüனி லா.ச.ராமாமிருதம் கதைகளைத் தேர்ந்தெடுத்தார். 

1970-ஆம் ஆண்டில் நாங்கள் "கசடதபற" என்ற இலக்கியச் சிற்றேட்டை ஆரம்பித்து நடத்தி வந்தோம். அதில் புதிய எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள் வெளிவந்தன. அதோடு முதியவர்கள் கதை, கட்டுரைகள் வெளியிட விரும்பினோம். நான் தான் அவரிடம் ஒரு சிறுகதைக் கேட்டேன். 
""சன்மானம் உண்டா?'' என்று உடனே திருப்பிக் கேட்டார்.

""உண்டு. அதுவும் உங்களுக்குக் கண்டிப்பாக உண்டு''  என்றேன். ஆனால் அவர் சிறுகதை ஒன்றும் கொடுக்கவில்லை. மறுபடியும் அவரிடம் கதை கேட்கவில்லை. அவர் ஒரே கதையை}குடும்பத்தின் கதையைத்தான் மாறி மாறி எழுதி வருகிறார் என்று சொல்லப்பட்டாலும், வசீகரமாகவே எழுதி வந்தார்.

கஸ்தூரி ரங்கன் லா.ச.ராவின் எழுத்துகள் மீது அபிமானம் கொண்டவராக இருந்தார். அவர் "தினமணி' ஆசிரியரானதும், "தினமணி'கதிரில் தொடர் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அவருக்கு அறுபத்தெட்டு வயதாகி இருந்தது. தொடர் கதைகளை எழுதி பழக்கமும் இல்லை. அதோடு அவர் ஆற அமர மெதுவாகக் கதைகள் எழுதக்கூடியவர். எனவே தன் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைவு கூர்ந்து "சிந்தா நதி' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார். அதை நினைவு அலைகள் என்று தான் கூற வேண்டும். 1986}ஆம் ஆண்டில் புத்தகமாக வெளிவந்தது. மூன்றாண்டுகள்கழித்து "சிந்தா நதி'க்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

அவர் முந்நூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள் கட்டுரைத் தொகுப்புகள் கொண்டு வந்திருந்தார். சாகித்ய அகாதெமி வெகு தாமதமாகவே அவரை அங்கீகாரம் செய்திருக்கிறது என்ற விமர்சனம் கூட வைக்கப்பட்டது. ஏனெனில் அவருக்கு அப்போது எழுபத்து மூன்று வயதாகி இருந்தது. 

இது குறித்து அவர் எழுதியிருப்பது:
"ஓர் எழுத்தாளனுக்கு அங்கீகாரம் என்பது மற்றவர்கள் கொடுக்கும் பரிசுகள், விருதுகள் சம்பந்தப்பட்டது இல்லை. தானே கொடுத்துக் கொள்வதும், சக இலக்கியவாதிகள் கொடுப்பதும் தான். "சந்திரோதயம்' பத்திரிகை சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தது. ஆசிரியர் க.நா.சுப்ரமணியம்,  உதவியாசிரியர் சி.சு.செல்லப்பா. சந்திரோதயத்தில் என் கதை "அபூர்வ ராகம்'  அப்போது தான் வெளியாகி இருந்தது. பிற்பகல் பாலு செட்டி தெரு வழியாக போய்க் கொண்டிருந்தேன். புதுமைப்பித்தனும்,  ந.பிச்சமூர்த்தியும் ஏதோ அவர்களுக்கிடையே சுவாரஸ்யமாக  பேசிக்கொண்டு எதிர்நோக்கி வருகிறார்கள். முட்டிக்கொள்வது போல் நெருங்கிய பின்பு தான் அவர்கள் கவனம் என் மேல் பட்டது. 

புதுமைபித்தன் வெடிப்பான  சிரிப்பைச் சிரித்துவிட்டு என்னை அணைத்துக் கொண்டார்.

""ஊம். நீங்களும் நம்மவரோடு சேர்ந்தாச்சு''

பிச்சமூர்த்தி பார்த்துக் கொண்டு நின்றார். மீசைக்கும் தாடிக்கும் இடையே ஒளிந்து கொண்ட புன்னகை அவருடைய மூக்குத்துண்டு, வழியோரச் சுருக்கங்களில் வெளிப்படுகிறது. அவர் பார்வையே ஆசீர்வாதம். அவ்வளவுதான் போய்க்கொண்டு இருக்கிறார்கள் - போய்விட்டார்கள்.
வண்டி வாகனப் போக்குவரத்துக்கு இலக்காக நடுத் தெருவில் நான் நிற்பதுகூடத் தெரியாமல் நடுத்தெருவில் நிற்கிறேன். பாதம் பூமியில் இல்லை. சங்கப் பலகையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டேன்' என்பது. 

அந்த நிறைவு லா.ச.ராமாமிருதத்திற்கு  92-ஆவது வயதில் மரணமடையும் வரையில் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

ஓர் கலைஞன் எப்பொழுதும் ஒரே ஆளாக இருப்பது இல்லை. சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அவனைப் பாதிக்கிறது என்பது போலவே அவனும் ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கிறான். அதுவே வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் கொடுக்கிறது.

 காதர்ஷா முகமது ஷெரீப் 1914-ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் தமிழ் பேசும் குடும்பத்தில் காதர்ஷா முகமது ஷெரீப் பிறந்தார். ஏழ்மையான குடும்பம், பெரிய படிப்பு இல்லை. அரசியல் கலாசாரத்தில் ஈடுபாடு இருந்தது. "சிறுவயதில் கசாப்புக் கடைவைத்துக் கொண்டு கறி வெட்டி விற்றுக் கொண்டிருந்தேன்' என்று சொன்னார். நான் அவரை அடிக்கடி எல்லீஸ் தெருவில் இருந்த திண்ணை வைத்த வீட்டில் சந்தித்துக் கொண்டிருந்தேன்.
பெரியார், அண்ணாதுரையோடு சேர்ந்து அரசியல் கூட்டங்கள் போட்டு பேசினார். க.நா.சுப்ரமணியம் 1939-ஆம் ஆண்டில் நடத்திய "சந்திரோதயம்' பத்திரிகையில் கதை எழுதினார்.

1950-ஆம் ஆண்டில் சினிமா பாடலாசிரியரானார். சேலம் மார்டன் தியேட்டர்ஸ் எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் "பொன்முடி' என்கிற படத்தை தயாரித்தது.  கவிஞர் பாரதிதாசன் கதை வசனம். "பொன் முடி' யில்,  கா.மு. ஷெரீப் எழுதிய "ஆஹாகா ஆஹாகா வாழ்விலே' பிரபலமாகியது. "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே', "ஏரிக்கரையின் மேலே போறவளே', " அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை', "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா' போன்றவை அவர் எழுதி பிரபலமானவை. 1955-ஆம் ஆண்டில் கே.சோமு இயக்கி வெளிவந்த டவுன்பஸ்ஸில் ஒலித்த "சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' எல்லாம் அவரது பாடல்கள் தான்.

கா.மு.ஷெரீப் கலைஞனாகவும், சமூக, அரசியலில் ஈடுபாடு கொண்டவராகவும் இளமை பருவம் முதல் இருந்து வந்தார். இந்தியா சுதந்திரம் பெற்றப் பின்னர் நாடு மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பும், சமூக, கலாசார ஆன்மிக வரலாறும் கொண்ட திருப்பதி, திருத்தணி ஆந்திராவிற்கு என்று ஒதுக்கப்பட்டது. "சென்னை எங்களுக்கே' என்று தெலுங்கு பேசும் தலைவர் சென்னையில் இருந்து கொண்டே போராட்டங்கள் நடத்தினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல தாலுக்காகள் கேரளாவில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியே எல்லா மாவட்டங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றன என்று நியாயம் பேசியது. 

மா.பொ.சிவஞானம், நேசமணி , மொழிவழி மாநிலங்கள் நேர்மையாக அமைக்கப்பட வேண்டும் என்று போராடினார்கள்.

அசல் கலைஞராக கா.மு.ஷெரீப், ம.பொ.சிவஞானத்தோடு சேர்ந்து கொண்டு போராடினார். 1956}ஆம் ஆண்டில் அரசியல் பத்திரிகையான "தமிழ் முழக்கம்' நடத்தினார். அவர் நடத்திய இன்னொரு அரசியல் பத்திரிகை "சாட்டை'. சாட்டை உதவியாசிரியர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

1986-ஆம் ஆண்டில் "குங்குமம்' பத்திரிகைக்காக ஒரு நேர்காணல் செய்ய ஷெரீப்பை எல்லீஸ் சாலையில் இருந்த ஒரு பழங்கால திண்ணை வீட்டில் சந்தித்தேன். விரைவிலேயே அவரது அரசியல், இலக்கியம், சினிமா, எல்லைப் போராட்டங்கள் எல்லாம் வசீகரித்து விட்டன. அவரை அடிக்கடி சந்தித்து வந்தேன். ஒரு முறை சொன்னார்; "நான் இளம் வயதில் கசாப்புக் கடை நடத்தி வந்தேன். ஆனால் கறி தின்றதில்லை' என்றார். இன்னொரு முறை "கட்டுரை, கதைகள் எழுதும் அரசியல்வாதியில்லை. களத்தில் இறங்கி போராடுகிற அரசியல்வாதி. போலீஸ், தடிஅடி எதற்கும் பயந்தவன் இல்லை' என்றார். அப்போது அவருக்கு எழுபத்திரண்டு வயதாகி இருந்தது.

ஒரு முறை ஜெயகாந்தனிடம் ஷெரீப்பைச் சந்தித்ததுப் பற்றி சொன்னேன். அவர் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு "கா.மு.ஷெரீப் ஒரு நல்ல ஆத்மா. அவர் மனைவி இன்னொரு நல்ல ஆத்மா. சாது போல இருக்கும் ஷெரீப் பேனா பிடித்தால் சீறுவார். அவரோடு சேர்ந்து கொண்டு நான் பேயாட்டம் ஆடுவேன். எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு கட்சியோ; தலைவரோ, எதிரியோ கிடையாது. நியாயம் ஒன்று தான் எங்கள் கட்சி. அதற்காக எழுதுவோம். மாலைப் பொழுதில் பசியாற்றிக் கொள்ள, அவர் மனைவி புளியங்கொட்டைச் சுண்டல் கொண்டு வந்து கொடுப்பார். அதைத் தின்றுவிட்டு புத்துணர்ச்சி பெற்றது போல ஆவேசமாக எழுதுவோம்' என்றார். 

ஷெரீப் அடிக்கடி பேசியது அவர் தாயார் பற்றித்தான். அதிலும் ஒரு விஷயத்தை மறக்காமல் சொல்வார். "யார் இறைவனிடம் செல்வம், பணம் கேட்டு யாசிக்கிறார்களோ, அவர்கள் செல்வத்தைப் பெறுவதில்லை. வறுமையையே யாசிக்கிறார்கள்' என்று அது இன்றும் நினைவில் இருக்கிறது.


(அடுத்த இதழில்  கார்த்திகேசு சிவத்தம்பி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT