இந்த வாழ்க்கையே அவர்களுக்கான நன்றி!

""பயணங்களே அற்புதம். ஏனென்றால் தேங்கி நிற்கிற குளம்.... எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் நிறைய அழுக்குதான் இருக்கும். ஓடுவது சின்ன ஓடையாக இருந்தாலும், அந்தத் தண்ணீர் கண்ணாடியாகி விடும்.
இந்த வாழ்க்கையே அவர்களுக்கான நன்றி!


""பயணங்களே அற்புதம். ஏனென்றால் தேங்கி நிற்கிற குளம்.... எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் நிறைய அழுக்குதான் இருக்கும். ஓடுவது சின்ன ஓடையாக இருந்தாலும், அந்தத் தண்ணீர் கண்ணாடியாகி விடும். வாழ்க்கையில் எந்த இடத்திலும் இதுதான்  நம் இடம் என நின்று விடக் கூடாது என்பது என் தீர்மானம். வெகு நேரம் பயணம் செய்யும் போது, கொஞ்சம் அலுப்பு வரலாம். ஆனால், அப்போது எடுக்கிற ஓய்வு கூட, ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கிற மாதிரிதான் இருக்க வேண்டும். ஏனென்றால் எந்த ஓய்வும் அடுத்தடுத்த பயணத்துக்கான ஆயத்தம்தான். 

பணம், புகழ், காதல், கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே இந்தப் பயணங்கள் மூலமாகத்தான் கிடைத்தது.'' - கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என வரிசையாக ஏறுமுகம் பற்றி பேச்சு எழுந்த போது, தனுஷ் அளித்த பதில் இது. 
வெற்றிமாறனின் "அசுரன்' ,கௌதம் வாசுதேவ்மேனனின் "எனை நோக்கி பாயும் தோட்டா', கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம், ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், மாரி செல்வராஜ், செல்வராகவன் இயக்கும் படங்கள் எனப் பெரிய பட்டியலுடன் காத்திருக்கிறார் தனுஷ்.  அவருடன் ஒரு சந்திப்பு: 

பாலிவுட் சினிமாவே பலருக்கு பெரும் கனவு... ஹாலிவுட் எப்படி சாத்தியமானது... நிறைய சவால்கள் நிறைந்த களமாயிற்றே...

"பக்கீர்' நிறைய வெளிநாட்டுக்காரர்கள் இணைந்து எடுத்தப் படம். அந்த படப்பிடிப்பு தளம், அரங்குகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவே எனக்கு சிரமமாக இருந்தது. காரணம், நான் ஆங்கிலத்தில் சிந்திப்பவன் அல்ல. நான் தமிழில் சிந்திக்கிறேன். இந்த வாழ்க்கை முறைதான் எனக்கு தெரியும். ஆனால் எனக்கு சினிமா அப்படியல்ல. பல மொழிகள் இருந்தாலும், எனக்கான ஒரே மொழி சினிமாதான். என் உலகமே அதுதான். 

எனக்கு நதி மாதிரி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அது என் இயல்பு. சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஓடி விட்டன. அதை அடைய வேண்டும்.  இது வேண்டும் என்ற எந்த யோசனையும் கிடையாது. எதுவும் எனக்கு விதிக்கப்படவில்லை. எல்லாமே தேடிப் போனதுதான். பக்கீர் படத்தைப் பொருத்தவரை நிறைய திட்டமிடல்கள் இருந்தன. அதுதான் எனக்கு அதில் பிடித்த விஷயம். 

ஸ்டோரி போர்டு, நடிப்புக்கான ஒத்திகை எல்லாமே சரியான விகிதத்தில் இருந்தது. அது தமிழுக்கும் வர வேண்டும். மொழிகள் கடந்து சுற்றி வரும் பாக்கியம் ஒரு கொடுப்பினை. அது எனக்குள் உருவாக்கும் தொடுவானங்கள் அதிகம். என் அனுபவங்கள் பெரிதாகிறது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் தெரிகின்றன. சில நேரங்களில் இங்கே எந்த மாதிரியான படங்கள் செய்ய வேண்டும் என்ற குழப்பம் கூட வரும். அதனால்தான் சின்ன சின்ன இடைவெளி. இப்போது அசுரன், அடுத்து கார்த்திக் சுப்புராஜ்  இயக்கும் படங்கள் என வரிசையாக வேலைகள் இருக்கின்றன. 

போன இடங்களில் எல்லாம் நம் சினிமாக்களை கவனிக்கிறார்களா....

ஆமாம், உலக அளவில் இந்திய சினிமாவும், சீன நாட்டு சினிமாக்களும் கவனிக்கப்படுகின்றன. இந்திய சினிமா மார்க்கெட், படங்களின் தன்மை, தனித்துவமான கதைகள் என எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். டிஜிட்டல் வழி படங்கள் வந்த பின்னர், உலகத்திலேயே இந்திய, சீன படங்களுக்குதான் தியேட்டர் மார்க்கெட் ஒன்றே இருக்கிறது. 

இரு நாட்டு படங்களுக்கும்தான் தியேட்டர் வருமானம் வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க சினிமாக்களில் இந்த நிலை இல்லை. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியப் படங்களை பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்கள் என்ற வித்தியாசம் இல்லை.  பாலிவுட் படங்களாகவே அனைத்து மொழி படங்களையும் பார்க்கிறார்கள். இந்திய படங்கள் தியேட்டர் வழியாக சில நூறு கோடிகள் சம்பாதிக்கிறது என்றால், சீன படங்கள் ஆயிரம் கோடி வரை சம்பாதித்து கொடுக்கின்றன. 

அடுத்து வருகிற "அசுரன்' எப்படியிருக்கும்....." வட சென்னை' இரண்டாம் பாகம் குறித்து பேச்சு உலவுகிறது...

லாக்கப் நாவல்  "விசாரணை' படமாக உருவானது. "நல்ல படம்' என்று எல்லாப் பக்கங்களில் இருந்தும் பாராட்டுகள். இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும். இதுவரைக்குமே 40 சதவீத காட்சிகள் தயார் நிலையில் கை வசம் இருக்கிறது. வெற்றிமாறன் சொன்னால், படப்பிடிப்புக்குத் தயார். அதற்குள் ஒப்புக் கொண்ட படங்களை  முடிக்க வேண்டியுள்ளது. பார்க்கலாம். அசுரன் இதுவரை வந்த என்னுடைய படங்களிலேயே தனித்துவம் பெறும். அடுத்து வர இருப்பதும் "அசுரன்' தான்சாதிய அமைப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, தண்டனை முறைகளின் நியாயமற்ற தன்மைகளைப் பேசும் படமாகவும் இருக்கும். விசாரணை மாதிரி இதுவும் நாவல் தழுவி உருவாகுகிற கதை. "வெக்கை' நாவல். அதில் சினிமாவுக்குத் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு கதையாக கொடுக்கிறோம்.  இது 60-களின் தொடக்கம், 80-களின் நடுவில் என்று இரண்டு காலகட்டங்களில் நகரும் கதை.

"ரௌடி பேபி...' பாடல்... எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமாகிறது...

எனது படங்களின் வெற்றியும், பாடல்களின் உலகளாவிய வெற்றியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது இல்லை. இதெல்லாம் தானாகவே அமைந்து கைக்கு வருகிறது. தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறேன். சில நேரங்களில் வெற்றியைப் பார்த்து பயப்படுகிறேன்.  காரணம், வெற்றி பெறும்போது பல விஷயங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே நடந்துவிடுகிறது. தோல்வி வரும்போது, இப்படி எல்லாம் நடந்து கொண்டோமே, இப்படி நடந்ததை கவனிக்காமல் விட்டுவிட்டோமே, எத்தனை பேரை அவமானப்படுத்தி இருக்கிறோம் என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் எப்போதும் தவிர்க்க முடியாது. அதையெல்லாம் கடந்து செல்ல பழகிக்கொள்ள வேண்டும். 

"துள்ளுவதோ இளமை" தொடங்கி, இப்போது வரைக்கும் ஒரே மாதிரியான உடலமைப்போடு இருப்பது எப்படி...  

என் தேவைக்கும் உடல் நிலைக்கும் தொடர்பு உண்டு. வயிறு பசிக்கிற போது சாப்பாடு அவ்வளவுதான். வேறு எதையும் திணிப்பதில்லை.  நான் சுத்த சைவம். சரியான உணவுகளைச் சாப்பிடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். எண்ணெயில் பொறித்த உணவுகளைச் சாப்பிடுவதில்லை. இனிப்பு சுத்தமாகப் பிடிக்காது என்பதால், அதைத் தொடுவதே இல்லை. இதனால் பல தொல்லைகள் இல்லை. 

புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் உணவுகளை எடுக்கிறேன். தினசரி உடற்பயிற்சி என்பது முதன்மையானது. சிலர் சின்ன வயதில் ஒல்லியாக இருப்பார்கள். 30 வயதுக்கு மேல் தொப்பை விழுந்துவிடும். தானாக எடை கூடுவார்கள். அந்த வயதில் உடல் மாற்றம் என்பது பொதுவானது. ஒல்லியாக இருந்தாலும், தொப்பை வரும். அந்த வயதில் உடற்பயிற்சி அவசியம். சரியானதை சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பது தவறு. 

17 ஆண்டு கால சினிமா வாழ்க்கை... எப்படி உணர்கிறீர்கள்...

ரொம்பவே அற்புதம். யாருக்கும் கிடைக்காத பயணம். அதில் வறுமை, வலி, சந்தோஷம் என நிறைய அனுபவங்கள் உண்டு. என் சிந்தனையை மாற்றிய பல விஷயங்கள் இருக்கின்றன. இதில், என் தனித்துவத்தை உணர வைத்த, உணர்ந்த நிமிடங்களும் உண்டு. இளமையில் வறுமை கொடியது என்பார்களே... அதை உணர்ந்து வந்தவன் நான். அதிகபட்சமாக ஒரு ரிமோட் கார் வாங்க வேண்டும் என்பதுதான் என் சிறு வயது கனவாக இருந்தது. 

ஆனால், இப்போது எல்லாம் வேறு மாதிரி. வாழ்க்கை எங்கும் போய் நிறுத்தும் என்பதற்கு நானே உதாரணம். தீர்க்கவே முடியாத நன்றிகளால்தான் நம் ஒவ்வொருவருக்குமான உலகம் உயிர்த்திருக்கிறது. யார் என்ன என்றே தெரியாமல் நம்மைத் தொட்டுத் தூக்கிய இதயங்கள் எவ்வளவு இருக்கின்றன. வலிகளோடும், தழும்புகளோடும் அணைத்துச் சிரித்தவர்கள் மட்டும் இல்லையென்றால், நானெல்லாம் என்னவாகியிருப்பேன்... அன்பாலும் கண்டிப்பாலும் இந்தப் பாதையைப் போட்டுத் தந்தவர்களுக்கு என்ன நன்றி செய்து விட முடியும். இந்த வாழ்க்கையே அவர்களுக்கான நன்றிதான் எனத் தோன்றுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com