நூலகத்துக்கு உதாரணம் பென்னிங்டன்

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே சட்டென்று நினைவில் வந்து நிற்பது சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் கோயில். தமிழக அரசு முத்திரையில் இடம் பெற்றிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், தமிழகத்திலேயே  பெ
நூலகத்துக்கு உதாரணம் பென்னிங்டன்

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே சட்டென்று நினைவில் வந்து நிற்பது சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் கோயில். தமிழக அரசு முத்திரையில் இடம் பெற்றிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், தமிழகத்திலேயே  பெரிய கோயில்  தேர்,  அடுத்து பால்கோவா!.  

ஸ்ரீவில்லிபுத்தூரின் ஐந்தாம் பெருமையாக இருப்பது  143 ஆண்டுகளாக  நகர மக்களின் அறிவுத் தேடலுக்கு துணையாக நின்று தகவல்களைத் தந்து உதவிவரும் "பென்னிங்டன் நூலகம்'. தமிழகத்தின் பழமையான  நூலகங்களில் இரண்டாம்   இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகம் நிற்கிறது.  

அதுமட்டுமல்ல தமிழகத்தில்   143  ஆண்டுகளாகச் செவ்வனே நடத்தப்பட்டு வரும் நூலகம் மட்டுமல்ல, நல்ல வருவாய் உள்ள நூலகமும் பென்னிங்டன் நூலகம்தான். இதனால்தான்  இந்திய நூலக வரலாறு  ஒரு தனி இடத்தை இந்த நூலகத்திற்கு  வழங்கியுள்ளது.   

சென்னையில் 1829-இல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட சென்னை நூலகச் சங்கம் (ஙஅஈதஅந கஐஆதஅதவ அநநஞஇஐஅபஐஞச) தான் தமிழ்நாட்டில் முறையாகத் துவங்கப்பட்ட முதல் நூலகம்.  1860-இல் தொடங்கிய கன்னிமாரா நூலகம், தமிழகத்தின் இரண்டாவது நூலகம். தமிழகத்தின் மூன்றாவது நூலகம் 1870-இல்  துவங்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகம். 

இந்த நூலகம் ஆரம்பத்திலிருந்தே தேனீக்கள்  நிறைந்த  தேன்கூடாகச் செயல்பட்டுவருகிறது. தினமும் சுமார் 360  வாசகர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள். வாசிப்பு ஆர்வம் குறைந்திருக்கும் காலகட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மாதிரியான சிறிய  நகரத்தில்  360  வாசகர்கள் தினமும் வந்து போவது மிகப்பெரிய விஷயம். 

அதற்குக் காரணம்,  மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக்     கொண்டுவர பென்னிங்டன்  நூலகத்தைத்  தொடங்கிய சமுதாயப் பொறுப்புள்ளவர்களின் தொலைதூரப் பார்வைதான்.   

பழமையான பேரூராக   இருந்த போது,  பாண்டியர் ஆட்சி காலத்தில், "பிரம்மதேய குலசேகர சதுர்வேதி மங்கலம்', என்ற பெயரிலும், சோழர்கள் ஆட்சியின் கீழ் "விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்'  என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அழைக்கப்பட்டது. பாண்டியர், சோழர் ஆட்சியைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள், பூலித் தேவன், யூசுஃப் கான் (மருதநாயகம்), திருவிதாங்கூர்ராஜா, பிரிட்டிஷ் அரசு ஆளுமைக்குள்ளும் இருந்துள்ளது.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராணுவத் தளவாடங்களை வைத்து பாதுகாக்கும் மண்டலமாக விளங்கி வந்தது. ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், பிறகு திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் மாறி, பிறகு  இராமநாதபுரம் மாவட்டத்தின் பாகமாக மாறி...இப்போது விருதுநகர் மாவட்டத்தின் எல்லைக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளது.

இப்போது பல  ஆட்சிகளைக் கண்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு நூலகம் மிக மிக அவசியம் என்று  கருதினார்  தாசில்தார் சரவணமுத்து பிள்ளை. ஒத்த கருத்துடைய நண்பர்கள் ஒன்று சேர அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பென்னிங்டன் தன்னால் ஆன உதவியினைச் செய்தார். அதன் காரணமாக நூலகத்திற்கு அவரது பெயரையே வைத்தனர். நூலகம் அமைப்பதற்காக  ஒரு இடமும், நூலகத்தின் வாழ்வாதாரமாக  இருக்க கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதற்காகப் பெரிய மனை ஒன்றும் வாங்கிப் போட்டனர். 

வாங்கிப் போட்டதுடன் சும்மா இருந்துவிடாமல் சுமார் 240  கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டனர்.  அந்த  வளாகம், "பென்னிங்டன் மார்க்கெட்'  என்று அழைக்கப்படுகிறது. வாசகர்கள் அதிகரித்தாலும், வெறும் சந்தா பணம் வைத்துக் கொண்டு ஒரு நூல் நிலையத்தை  நடத்த முடியாது என்று  நன்கு தெரிந்திருந்ததால், கடைகளின் வாடகையில் நூலகத்தை நிர்வகித்து வந்தார்கள். 

கடை வாடகைக்கு  வந்தவர்கள் பெரும்பாலோர் வாடகையை மாதா மாதம் தந்து வர.. சிலர் மட்டும்  வாடகையை ஒழுங்காகத் தர வில்லை.  வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. பென்னிங்டன்  நிர்வாகக் குழு  சொத்து வரியாக ஆண்டு தோறும் ஆறு லட்சம்  ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்குக்  கட்டிவருகிறது என்றால்  பார்த்துக் கொள்ளுங்கள். 

தொடக்கக்காலத்தில் நகரில்  நூலகத்தின்  சார்பில் பன்னிரண்டு விளக்குத் தூண்கள்  நிறுவி, இரவில் எண்ணெய்  விளக்குகள் எரியவிடப்பட்டன. நூலகத்தில் பெண்கள், சிறுவர்-சிறுமியர், போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கென்று  தனிப் பிரிவுகள் உண்டு.  நாவல்கள்  எழுத்தாளரின் பெயர்களை வைத்துத்  தனித்  தனி  வரிசையாக  அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

இதனால், ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின்  குறிப்பிட்ட  புதினத்தை வாசிக்க , அந்த எழுத்தாளர்  பெயர் வரிசைக்குச் சென்றால் போதும். எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.  பென்னிங்டன் நூலகத்தில் 37 ,910   தமிழ் நூல்களும், 32,185  ஆங்கில நூல்களும்  உள்ளன. வாசகர்கள் வாசிக்க தினமும் தமிழ், ஆங்கில நாளிதழ்கள்  பதினேழு   வாங்கப்படுகின்றன.  வார, மாத இதழ்கள் தமிழில் மட்டும் 69  இதழ்கள் வாங்கப்படுகின்றன.  நூலகத்தைச் சுற்றி பள்ளிகள் பல இருப்பதால், பிராஜெக்ட் வேலைகளுக்காக  மாணவ மாணவிகள் வருகை  நூலகத்தில் இருந்து கொண்டேயிருக்கிறது. போட்டித் தேர்வுகளுக்காகத்  தயார் செய்பவர்களில்   பெண்கள்  தமிழகத்தில்  வேலை கிடைப்பதற்கு முக்கியத்துவம் தருவதால், தங்கள் கவனங்களை  தமிழ்நாடு பொது போட்டி தேர்வுகளுக்காக தகவல்கள் சேகரித்து  பொது அறிவை கூட்டிக் கொள்கிறார்கள். நூலகத்திற்கு வருகை தரும் சிறுவர் சிறுமியருக்குக் காணொளிகள் காட்டப்படுகின்றன.  

தென் தமிழகத்தின்  வழக்கறிஞர்கள்  பென்னிங்டன் நூலகத்தைத் தேடி வருகிறார்கள்.  இந்த நூலகத்தில் மட்டுமே,  1953-ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சொத்து, நிலா ஆர்ஜிதம் குறித்த  வழக்குகள்  என்றால், அந்தந்த ஆண்டுகளில் தமிழக அரசின் ஆணைகளைப் படித்துத் தெரிந்து கொள்ள  தென்தமிழகத்தில் இந்த நூலகத்தை விட்டால்  சென்னைக்குத்தான் போக வேண்டும்.  இந்த நூலகத்தை  நிர்வகிக்கும்  குழுவின்  தலைவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர். 

பென்னிங்டன் நூலகத்தின் தனிச் சிறப்பு  என்னவென்றால், அரிய பழமையான தமிழ் இலக்கிய நூல்கள் இருப்பதுதான்.   1887-இல் அச்சிடப்பட்ட  கலித்தொகை, 1900-இல்  வெளியான "த்ருவ சரித்திர கீர்த்தனை',  1904-இல் பிரசுரமான "இங்கித மாலை மூலமும் உரையும்',  1905-இல்   வெளிவந்த "தியாகராசலீலை', 1900-இல்  பிரசுரமான "வள்ளலார் சாஸ்திரம்',  1912-இல் வெளியிடப்பட்ட "திருமந்திரம்' ஆகியவை அப்படியே  பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1,344 சதுர அடி பரப்பளவுள்ள   கட்டடத்தில் இயங்கி  வருகிறது. இந்த நூலகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு குடியரசு தலைவராக இருந்த டாக்டர்.அப்துல்கலாம் நூலகத்திற்கு வருகை தந்துள்ளார்.  

பென்னிங்டன் நூலகத்தில் ரசாயன பூச்சி கொல்லிகளுக்குப் பதிலாக வாசனைத்திரவியங்கள்  அடங்கிய பொடி ஒன்றைத் தயாரிக்கிறார்கள். பச்சை கற்பூரம், மிளகு, வசம்பு, கருஞ்சீரகம், ஓமம், லவங்கப்பட்டை, கிராம்பு  உரிய அளவில் கலந்து பொடி தயாரித்துத் துணியில் பொட்டலம் கட்டி  நூல்களுக்கு மத்தியில் வைக்கிறார்கள். இதனால் புத்தகங்களில் பூச்சிகள் குடியிருப்பதில்லை. தின்று அழிப்பதில்லை. சுருக்கமாகச்  சொன்னால்  ஒரு நூலகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு அழகிய முன்மாதிரி பென்னிங்டன் நூலகம்.. தான்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com