பிரிவோம்... சந்திப்போம்! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

வானில் மின்னிய நட்சத்திரங்களை எண்ணியபடி நாங்கள் சற்றே கண் அயர்ந்தோம். மெல்லிய தென்றல் காற்றும்,
பிரிவோம்... சந்திப்போம்! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! 52

வானில் மின்னிய நட்சத்திரங்களை எண்ணியபடி நாங்கள் சற்றே கண் அயர்ந்தோம். மெல்லிய தென்றல் காற்றும், புதிய பறவைகளின் ஓசையும் எங்களைத் தட்டி எழுப்பின. நானும் தமிழையாவும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நேரத்தில் எழுந்து "அதிகாலை வணக்கம்' என்று ஒரே குரலில் சொல்லிச் சிரித்துக் கொண்டோம். 
எங்களுக்கு முன்பாகவே தமிழ்மணியும், லெப்டினென்ட் செழியனும், இளைஞர் பட்டாளமும் எழுந்து பரபரப்பாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். கிழக்கு வெளுக்கத் தொடங்கியது. அக்காட்சியைக் கண்ட தமிழையா,
"கதிரவன் குண திசைச் சிகரம்வந் தணைந்தான்,
கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்'
எனும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சிப்பாடலை கம்பீரமாகப் பாடத்தொடங்கினார். எனக்கு உடனே,
"காலைப் பொழுதினிலே கண் விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே'
எனும் பாரதியாரின் காலைப்பொழுது கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. கடல்மேல் சூரியன் தோன்றும் காட்சியைக் கண்டு வியந்தவண்ணம் கரம்கூப்பி நாங்கள் நின்றோம். அப்போது மீசைக்காரர் வேகமாக ஓடிவந்து, "ஐயாமார் ரெண்டு பேரும் வாங்க, அந்த நல்ல தண்ணி கெணத்தப் பாருங்க'' என்று அழைத்துக்கொண்டு போனார். சிறிய உறைக் கிணறு போல இருந்த அந்த இடத்தில் நம்மவர்கள் விரைந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். இராமேஸ்வரம் கோவிலில் கோடித் தீர்த்தங்களில் நீரெடுத்து ஊற்ற பக்தர்கள் குளிப்பதைப் போல நாங்களும் அங்கே அந்தக் குளிர் நீரில் } நன்னீரில் குளித்தோம், குளிர்ந்தோம். 
ஹெட்போன் பாட்டியும், பேத்தியும் "வெடவெட' வென குளிரில் நடுங்கியபடி நாக்குழறப் பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் அனைவரும் ஆடை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாராக அந்த மணல்மேட்டில் வந்து அமர்ந்தவுடன், தமிழ்மணி பேசத்தொடங்கினார். 
"அனைவருக்கும் வணக்கம். இன்னும் சற்று நேரத்தில் நாம் ஊருக்குச் செல்ல இருக்கிற "சின்ன க்ரூஸ் கப்பல்' வரப்போகிறது. நம் செழியன்தான் அதனை ஏற்பாடு செய்திருக்கிறார். காலை உணவு அதோ தயாராகிக் கொண்டிருக்கிறது'' என்று அவர் சுட்டிக்காட்டினார். அந்த இடத்தில் கல்யாண சமையல் போல தடபுடலான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. 
உடனே நான், "நாம் ஊரைவிட்டுப் புறப்பட்டு இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் எங்கள் மாணவ, மாணவியர், கோமாளி நண்பரோடு வந்த இளைய இசை நாடகக் குழுவினர், நம் கேள்வியின் நாயகன் (மீசைக்காரர்), எல்லாச் செய்திகளையும் அறிந்துகொள்ள விரும்பும் பாட்டியாரும், பேத்தியும், கடல்சார் பொறியியல் பேராசிரியர், தமிழ் இலக்கியமாகவே வாழுகின்ற தமிழையா, இப்பகுதி மீனவ நண்பர்கள், நம்மையெல்லாம் ஒருங்கிணைத்த தமிழ்மணி அவர்கள், லெப்டினென்ட் கர்னல் செழியன் அத்தனை பேருக்கும் நானும் வணக்கம் சொல்லிக் கொள்கிறேன். விடைபெறப் போகிறோம் என்ற எண்ணமே எனக்கு வருத்தத்தைத் தருகிறது. இருந்தாலும் மகிழ்வோடு இணைந்து, மகிழ்வோடு உரையாடி, உணர்வோடு பிரிகிற இந்தச் சூழலுக்கு நிகரேது?'' என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு பேச்சை நிறுத்தினேன்.
உடனே தமிழையாவும்,
"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் 
என்பது வள்ளுவர் வாக்கு. நூலறிவு மிக்கவர்கள் உவகை (மகிழ்ச்சி) கொள்ளுமாறு ஒன்று கூடுதலும் மீண்டும் எப்போது காண்போம் எனும் ஏக்கத்தோடு பரிவு கொள்ளுமாறு பிரிதலுமே புலவர்களுக்குரிய தொழில் என்று அவர் கூறுவது உண்மைதான். எந்தெந்த ஊர்களிலோ, எந்தெந்த வீடுகளிலோ பிறந்த நாம் இன்றைக்கு இங்கே நெய்தல் நிலத்தில் ஒன்றுகூடி இருந்தோம். நம் இலக்கியங்களில் நெய்தல் நிலத்திற்குரிய ஒழுக்கமே இதுபோல இரங்கி, ஏங்கி இருத்தல்தான் நமக்குக் கிடைத்த இந்த அனுபவம் அனைவருக்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் நாம் தெரிவிப்போம். கற்றதை மற்றவருக்குக் கூறுதலும், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என அள்ளி வழங்குவதும்தான் மானுடர் இயல்பு, நாமும் இதனை எங்கும் சொல்லுவோம்'' என நெகிழ்வோடு கூறினார். 
இளைஞர்களை நோக்கி லெப்டினென்ட் கர்னல் கூறும்போது, "உங்களைப் பார்க்கிறபோது எனக்குப் பெருமையாக இருக்கிறது. வீட்டுக்கு உழைப்பதோடு நாட்டுக்கு உழைக்கவும் வாருங்கள். நம் தேசத்தின் மண் மீதும், மொழி மீதும் எப்போதும் பற்று வையுங்கள். அதைக் காக்கப் போராடுங்கள். உங்களுடைய போட்டி உங்களோடுதான் இருக்க வேண்டும். உங்களை நீங்கள்தான் ஜெயிக்க வேண்டுமே தவிர உங்களை வேறு யாரும் வெல்லக் கூடாது. என்னுடைய செல்போன் எண்ணை உங்களுக்குத் தந்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள். உங்களில் ஒருவன் நான், உங்களுக்கான ஒருவன் நான்'' என்று அவர் சொல்லி முடிக்க எல்லோரும் படபடவென கைதட்டினோம். 
"இட்ஸ் எ கிரேட் ஆபர்சூனிட்டி. நானும் என் பேத்தியும் கடலையும், தீவையும்தான் பார்க்க வந்தோம். பட் நெள வீ நோ த லிட்ரரி வேர்ல்டு (but now we know the literary world) தாங்க்ஸ் டூ காட் (thanks to god)'' என்று ஹெட்போன் பாட்டியும் தன் பேத்தியை ஒரு கையால் அணைத்துக்கொண்டு மகிழ்வோடு சொன்னார். 
"எல்லாருக்கும் வணக்கம். என்னுடைய ஹாலிடே முடிஞ்சு அடுத்த வாரம் அமெரிக்கா போறேன். எங்க ஸ்கூல்ல, எங்க பிரெண்ட்ஸ்ட்ட எல்லாம் இதச் சொல்லுவேன். இந்த எக்ஸ்பீரியன்ஸ (experience) சின்ன ப்ராஜெக்டா போட்டோஸோட வெப்சைட்டுல வெளியிடுவேன். "ஓகேயா கிரான்ட்மா?'' என்று பேத்தியும் தன் பங்குக்கு மழலைத் தமிழிலும், அமெரிக்க ஆங்கிலத்திலும் கொட்டி முழக்கியது. எல்லோரும் விடாமல் கைதட்டினோம். 
இளைஞர்கள் சார்பாகக் கோமாளி நண்பர் தொடங்கினார். "நாங்க இங்க சும்மா பொழுதுபோக்கு நிகழ்ச்சிய நடத்தத்தான் ஐயா தமிழ்மணி அவர்களால் அழைத்து வரப்பட்டோம். ஆனால் எங்கள் பொழுதை நல்ல பொழுதாக மாற்றிய பெருமை இங்கிருக்கிற அறிஞர் பெருமக்களைத்தான் சாரும். நாங்கள் எப்போதும் ஒரு தீர்மானத்தோடு இயங்குவோம். ஒரு நிலையில் மேடைக்குக் கீழே இருந்து கைதட்டும் ரசிகனாக, பின் மேடையில் பிறர் கைதட்ட பரிசு பெறும் கலைஞனாக, வருங்காலத்தில் அந்தப் பரிசினைத் தரும் சிறப்பு விருந்தினராக நாம் மாற வேண்டும் என உறுதியோடு நடைபோடுகிறோம். இந்த உறுதி எங்கள் இளைய சமுதாயத்தின் இதயங்களின் ஓசை. நாம் மீண்டும் சந்திப்போம். இன்னும் சிறப்போடு'' என்று உற்சாகமாய் பேசினார்.
கடல்சார் பொறியியல் பேராசிரியர் அதே உற்சாகத்தோடு தொடங்கினார். "நான் வகுப்பறைகளில் பேசுவதைப் போல வெளியில் அதிகம் பேசுவதில்லை. கருத்தரங்குகளில், ஆய்வரங்கங்களில் கட்டுரை வாசித்திருக்கிறேன். எத்தனையோ நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக் கடற்கரை மணலும், உங்களைப் போன்ற நண்பர்களும் கேள்விகளால் நம்மை திகைக்க வைத்த இளைய சமுதாயத்தாரும் (மீசைக்காரர் உட்பட) என்னை பேச வைத்தீர்கள். எனக்குத் தெரியாததை கற்றுக்கொள்ள வாய்ப்பு தந்தீர்கள். எனக்குத் தெரிந்து கல்வி என்பது வகுப்பறைகளில் மட்டும் இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அறிவியல் மேதையும் மனித குல வரலாற்றின் பரிணாம வளர்ச்சியும் பற்றி ஆராய்ந்த "சார்லஸ் டார்வின்' என்ற விஞ்ஞானிக்கு அவர் தந்தை அமைத்துக்கொடுத்த மூன்றாண்டு கால கடல்பயண அனுபவமே அவருக்குப் பெரும் பயனைத் தந்தது என்று படித்திருக்கிறேன். இந்த அனுபவமும் அதுபோலதான்'' என்றார் மகிழ்வோடு. 
இப்போது நாங்கள் அத்தனை பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள கேள்விகளால் மட்டுமே எங்களை ஈர்த்துக் கொண்டிருந்த மீசைக்காரர் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு சற்றே கலங்கிய குரலில், "எல்லாருக்கும் வணக்கங்க, நான் ஒரு சாதாரண வியாபாரி, நேரங்கெடச்சா எழுத்துக்கூட்டிப் படிப்பேன், ஆனா யார்ட்டா வேணாலும் கேள்வி கேட்பேன். பலர் பதில் சொல்லுவாங்க, பலர் பகையாளி ஆவாங்க, என்னப் பல பேர் கேலி கூட செய்திருக்காங்க, ஆனா இங்கதான் நான் ஒரு புது ஒலகத்தப் பார்த்தேன். நான் எதுல கேள்வி கேட்டாலும் அதுக்குப் பதில் சொல்ல ஆள் இருந்தீங்க, இந்தச் சின்ன குழந்தை கூட எனக்கு வாத்தியாருதான், இன்னும் கொஞ்ச நேரத்துல நாமெல்லாம் பிரியப் போறோம், இனி எப்ப சந்திப்போம்? நான் யார்ட்ட இதெல்லாம் கேட்பேன்'' என்று சொன்னவர் சற்றே குலுங்கி அழத் தொடங்கினார். உடனே தமிழ்மணி அவர் அருகே சென்று அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு, "கவலைப்படாதீர்கள் ஆண்டுக்கொரு முறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாம் மீண்டும் மீண்டும் சந்திப்போம், இம்முறை கடற்பகுதியில். அடுத்த தடவை மலை முகடுகளில் அதைத் தொடர்ந்து வனாந்திரத்தில், ஏன் பாலைவனமாக இருந்தாலும் நம் போன்றோருக்கு அது சொர்க்கமே!'' என அவர் முதுகில் தட்டிக்கொடுத்தார். 
காலை உணவு முடிந்தது. கப்பல் வரும் ஓசை கேட்டது. அத்தனை பேரும் வரிசையாக அதில் ஏறி அந்தத் தீவுக்கு, அங்கிருந்த பறவைகளுக்கு, கடல் தாமரைக்கு, மீனவ நண்பர்களுக்கு நன்றி சொல்லி கையசைத்தோம். க்ரூஸ் மெதுவாக நகரத் தொடங்கியது. 
"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் 
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்' 
என்று இளைஞர்கள் பாட எங்கள் பயணம் தொடர்ந்தது. மீண்டும் சந்திப்போம்.
(முற்றும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com