தையலே... உயர்வு செய்! - சுகி. சிவம்

செல்போன் (Cell Phone), சினிமா, சீரியல் இவை யாவும் இருபதாம் நூற்றாண்டு சீதைகளைச் சிறை பிடிக்க உதவும் இராவண மாயமான்கள் என்கிறார்கள். செல்போனும், சினிமாவும் படிக்கிற பெண்களைப் பாழாக்க,
தையலே... உயர்வு செய்! - சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! -26
செல்போன் (Cell Phone), சினிமா, சீரியல் இவை யாவும் இருபதாம் நூற்றாண்டு சீதைகளைச் சிறை பிடிக்க உதவும் இராவண மாயமான்கள் என்கிறார்கள். செல்போனும், சினிமாவும் படிக்கிற பெண்களைப் பாழாக்க, சினிமாவும் சீரியலும் குடும்பப் பெண்களை நாசமாக்க, மூதாட்டிகளை இந்த மூன்றுமே வீணாக்க, பெண் குலம் இன்று ஆக்க பூர்வ முன்னேற்றம் அடைய முடியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் சங்கடப்படுகிறார்கள். இது ஓரளவு உண்மைதான். ஒரு காலத்தில் பெண் என்பவள் சமைபவள் மற்றும் சமைப்பவள் என்ற சிற்றெல்லையில் சிறை வைக்கப்பட்டவள். கட்டிலுக்கும், தொட்டிலுக்கும் காரணகர்த்தா. கோயில், குளம், ஜாதி சமயச் சடங்குகளின்
பாதுகாவலர், குடும்பத்தின் பசை அல்லது குடும்பங்களின் பகை என்பதாக மட்டுமே அறியப்பட்டவள். ஆனால் இன்று வீட்டிலும் நாட்டிலும் அவளது பணிகள், அவளது அடையாளங்கள், அவளது பங்களிப்புகள் பெருகி விட்டன. 
ஒரு குடும்பப் பெண்ணிடம் யார் யார், என்ன என்ன, எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு பட்டிமன்ற பெண் பேச்சாளர் வேடிக்கையாகச் சொன்னதைச் சொல்லவா? "அன்றைய குடும்பப் பெண்கள் படிக்கப் போகும் பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு சோறு, என்னவோ ஒரு காய், இரண்டு இட்லி மிளகாய்ப் பொடி, பொட்டலம் கட்டிக் கொடுத்தால் போதும், வாலைச் சுருட்டிக் கொண்டு வாயை மூடிக்கொண்டு வாங்கிக் கொண்டு போய்விடும். 
இன்றைய அம்மாக்களின் குறைந்த பட்ச குவாலிபிகேஷன் (Qualification) அமெரிக்கன், இத்தாலியன், தந்தூரி, சைனீஸ் இதெல்லாம் சமைக்கத் தெரியணும். பிள்ளைகளுக்கு யோகா, பாட்மிண்டன், மியூஸிக், பஜனை வகுப்புகளுக்கு டான்..டான் என்று "பிக் அப்' மற்றும் "டிராப்' செய்கிற கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்ய வேணும். இது வரைக்கும் யாருமே பண்ணாத வகையில், யோசிக்காத விஷயத்தில், கூகுளில் தேடி, மூளையைக் கசக்கி ஓர் எக்ஸலெண்ட் புராஜக்ட் பண்ணி, பசங்களுக்கு பள்ளிக் கூடத்திற்குக் கொடுத்து அசத்த வேண்டும். Principal என்ற விக்டோரியா மகாராணிகள் நம் பிள்ளைகளைப் பற்றி குற்றப் பத்திரிகை வாசிக்கும் போது கூச்சமேயில்லாமல்,
சிரித்துக் கொண்டு பணிவுடன் Yes Mam, Yes Mam என்று ஜால்ரா போட தெரியணும். நாம் காலேஜில் படிச்ச கணக்கை, இப்ப High School இல் படிக்கிற பிள்ளைகளுக்குப் பொறுமையாய், கோபப்படாமல் சொல்லிக் கொடுக்க தெரியணும். பன்னிரண்டாவது படிக்கிற பிள்ளைகள் இருந்தா, அதுகளை "நீட்' எழுத வைக்க நாம் தயார் ஆகணும்.
அவங்க மேலே என்ன படிக்கலாம், எதைப் படிச்சா வேலை கிடைக்கும்ணு. பக்காவா Analysis பண்ணத் தெரியணும். Husbandக்கு மாடர்னா இருக்கணும். ஸ்லிம்-ஆ இருக்கணும். அவங்க அம்மா, அப்பாவுக்கு அடிமையா பணிவிடை பண்ணத் தெரியணும். அம்மியில் மிளகாய் சட்னி அரைக்கத் தெரியணும். "ஐபோன்'இல் இருக்கிற Latest Technology தெரியணும். அப்ப அப்ப Husbandக்கு  Professional Advice பண்ற P.A வா இருக்கணும். பிள்ளைகளைப் பார்த்துக்கிற ஆயாவாவும் இருக்கணும். நாட்டு நடப்பும் தெரியணும், நாட்டு வைத்தியமும் தெரியணும். வேணும் என்கிற போது மஞ்சள் குங்குமம், மல்லிகைப் பூ என்று மாரியாத்தா பாணியில் மங்களகரமாக ஜொலிக்கணும். Husband உடன் Party க்கு போகும் போது Jeans Pants, T-Shirts போட்டு கலக்கணும். வீட்டை மியூஸியம் மாதிரி சுத்தமா வைச்சுக்கணும். ஆனால் பசங்களையும் திட்டக் கூடாது. எவ்வளவு வேலை செய்தாலும் முகத்தில சோர்வு காட்டாம "ஈ' ன்னு இளிச்சுக்கிட்டே இருக்கணும். எல்லா வேலையும் முடிச்சுட்டு
அப்பாடான்னு உட்கார்ந்து "செல்போனை கையில் எடுத்தால் "லைஃபை என்ஜாய்' பண்ணுற என்கிற "கமெண்ட்' டை காதுக் கொடுத்து கேட்குற பொறுமைசாலியாகவும் இருக்கணும். மொத்தத்தில் "அருவி' படத்து போஸ்டர்ல வர்ற மாதிரி உங்கள் பின்னாடி நூறு கை இருக்கணும். இந்தக் காலத்துல "அம்மா' என்ற பேர்ல All in All அழகுராஜாதான் எல்லாருக்கும் தேவைப்படுகிறது. இந்தப் பேச்சு விளையாட்டாகத் தெரிந்தாலும் இன்றைய பெண்களின் நிலைமையைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. 
இது நாள் வரை ஒரு முக காமாட்சி விளக்காக ஒளி வீசிய பெண் கோயில் அடுக்கு தீபாரதனை போல பன்முக விளக்காக ஆக்கப்பட்டுவிட்டாள். அவள் பயணிக்க வேண்டிய பாதைகள்... ஒன்றல்ல... இரண்டல்ல... ஆயிரக்கணக்கில் அவள் காலடிகளில் விரிந்து கிடக்கின்றன. அண்மையில் பதின்மூன்று வயது பள்ளி மாணவியைப் பாரதப் பிரதமர் இல்லம் அழைத்துப் பாராட்டினார் என்ற செய்தி படித்தேன். கணினி அறிவில் கை தேர்ந்தவளாகி கம்பெனி நிர்வாகிகளுக்கும், I.T மாணவர்களுக்கும் அநாயாசமாக வகுப்பு
நடத்துகிறாள் அவள். அவளது I.Q 225 என்கிறார்கள். ஐன்ஸ்டீனை விட அதிகம் என்றும் கணித்து இருக்கிறார்கள். விசாலினி என்கிற அந்தத் திருநெல்வேலிப்பெண் சிறுமி உலகெங்கும் உரையாற்ற வகுப்பு நடத்த அழைக்கப்படுகிறார். இது பெண்ணினத்திற்கே பெருமை அல்லவா? பெண் இப்படிப்பட்ட முன்னேற்றங்கள் காணவேண்டும்.
இன்று மருத்துவ உலகில் மகத்தான சேவை செய்யும் EX-RAY, CT-SCAN, MRI-SCAN தெரியும். ஆனால் ரேடியத்தைக் கண்டு பிடித்த "மேரி கியூரி' அம்மையாரைத் தெரியாது. நன்றியுடன் நாம் நினைப்பது இல்லை. ஒரு குதிரை லாயம் போன்ற கொட்டகையில் இரவும் பகலும் அயராது உழைத்த மேரியின் கொடை ரேடியம். தன்சேவைக்கு மேரிக்குக் கிடைத்த துயரங்கள் எண்ணில்லடங்கா. ரேடியத்தின் விளைவு தெரியாமல் தொட்டதால், கை எங்கும் "தீ' க்காயம் போன்ற வடுக்கள். இரத்தப் புற்றுநோய், உடல் நடுக்கம். நியாயமாக யோசித்தால் ஓர் உலக அழகி மனித குலத்திற்குச் செய்யும் சேவை என்ன? உருக்குலைந்துப் போன மேரியைப் போன்ற பெண்கள்
உலகுக்கு அளித்த நன்மைகள் என்ன என்று பெண் குலம் மனச்சாட்சியோடு சிந்திக்க வேண்டும். அறிவுத் திறன் கொண்ட பெண்களே இன்றைய அவசர அவசியம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையில் பெண்களை உயர்த்திப் பிடிக்கும் பெண்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். நேதாஜியின் அழைப்பை ஏற்று கேப்டனாகவும், அவரது புரட்சி மந்திரிசபையின் பெண்கள் நல அமைச்சராகவும், விளங்கிய கேப்டன் லெட்சுமி அப்படிப்பட்டவர். எத்தனை பெரிய இசை மேதையாக இருந்தாலும் பெண்ணுக்கு பக்கவாத்தியம் வாசிக்க ஆண்கள் வரமாட்டார்கள் என்பதை உடைத்தெறிந்து மிகப்பெரிய பெண் இசை மேதைகள் பாரம்பரியத்தை உருவாக்கிய வீணை தனம்மாள் என்கிற பாலசரஸ்வதியின் பாட்டி இது போல் ஒரு சாதனைப்பெண். பண்டைய காலத்திலேயே பெண்கள் பெரியவர்கள் என்பதை நிரூபித்த இருவரைச்
சொல்லி முடிக்கிறேன்.
தமிழ் இலக்கிய மரபில் சிற்றிலக்கியங்கள் என்கிற ஒரு மரபை ஆதியில் தோற்றுவித்தவர், பல ஆண்கள் பாடுவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர். ஓர் எளிய குடும்பப்பெண்மணி என்றால் நம்ப முடிகிறதா? பிற்காலத்தில் நீள் கதை என்றும், நெடுங்கதை என்றும் பேசப்பட்ட மரபுக்கு (நாவல்) ஒரு தனித்த அடையாளமாக விளங்கிய வை.மு. கோதைநாயகி அம்மாளுக்கு முன்னோடி இந்தக் குடும்பப் பெண்மணியாகத் தான் இருக்க வேண்டும். பெண்கள் என்றாலேயே எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், போதுமான பொது அறிவு இல்லாதவர்கள் என்று இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இளக்காரமாகப் பேசப்பட்டது. ஆனால் கி.பி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர் என்று கருதப்படும் காரைக்கால் அம்மையார் மிகப் பெரிய கவிதாயினி, சிற்றிலக்கிய பாவகையின் முன்னோடி என்றால் அவர் எப்படி எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்திருக்க முடியும்? பெண்களுக்கு அழகுப் போட்டி வைத்து, பெண் இனத்தையே இன்று அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இருக்கிற உடல் அழகையும் உதறி, எலும்பு தோல் வடிவம் பெற்று, மொழியையும், சமயத்தையும் அழகுபடுத்தியது காரைக்கால் அன்னை அல்லவா, தமிழ்ப் பெண்களின் தலையாய
வழிகாட்டி. அந்தாதி என்ற பாடல் வகையையே தமிழுக்குத் தந்து அற்புதத் திரு அந்தாதி, திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகங்கள் திருவிரட்டை மணிமாலை, பாடிக் கொடுத்த இந்தப்பாவை அல்லவா, தமிழ்ப் பெண்களின் தனித்தலைவி, பின்னாளில் தேவாரம் பாடிய சம்பந்தர், சுந்தரர், அப்பர் என்கிற ஆண்களுக்கு எல்லாம் ஆதி வழி காட்டி இந்தப் பெண் அல்லவா? பெண் என்றதுமே உடல் கவர்ச்சியும், பாலுணர்ச்சியும் நினைவுக்கு வருகிற சமூகத்திற்குச் சரியான சாட்டையடி, இந்த காரைக்கால் தந்த கவிதாயினி. 
அதிகாரிச்சி... இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது யாரைக் குறிக்கிறது என்று தெரியுமா? ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் அரசு நிர்வாகப் பணியில் நியமிக்கப் பட்ட பெண்களுக்குத் தான் "அதிகாரிச்சி' என்று பெயர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரசுப்பணியில் பெண்கள்... இதைச் சாதித்துக் காட்டியவர் ஒரு பெண் என்றால் நம்பமுடிகிறதா? அவர் வேறு யாருமல்ல. வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜராஜசோழனின் பாசத்துக்குரிய சகோதரியார் குந்தவைப் பிராட்டியார் தான். 
ஆட்சி அதிகாரத்தில் நேரடியாகத் தலையிடாவிட்டாலும், அறம் சார்ந்த ஆட்சியை ராஜராஜசோழன் நடத்துவதற்கு அதிகம் உதவியவர் இவர் தான். தனது பிறந்த நாளான ஐப்பசி சதயத்தில் நடைபெறுகிற பெரு விழா போன்றே குந்தவைப் பிராட்டியின் அவிட்ட நட்சத்திரத்து அன்றும் பெரு விழா நடத்த வேண்டும் என்று ராஜராஜசோழன் உத்தரவிட்டிருந்தார். இதிலிருந்து அவர் மீது ராஜராஜசோழனுக்கு எத்தனை பெரிய மரியாதை என்பது நமக்குப் புரிய வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தனக்கென தனியான அரசியல் அங்கீகாரமும் ஆன்மீக அடையாளமும் தேடிக் கொண்ட பெண் குந்தவைப்பிராட்டி. அவரது அறக்கொடைகள், அமைத்துக் கொடுத்த ஆலயங்கள், செய்து கொடுத்த சிற்பங்கள் கணக்கிலடங்காது. 
ராஜராஜன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவதற்குக் கூட குந்தவையே பெரும் காரணம் என்கிறார்கள். பெருவுடையார் கோயிலில் வட மொழி விற்பன்னர்கள் பெற்ற ஊதியம், திருமுறை பாடுகிறவர்கள் பெறுகிற ஊதியத்தை விட கூடுதலாக இருப்பதை நுட்பமாகக் கண்டறிந்து, திருமுறை வாணர்களும், அவர்களுக்கு நிகரான ஊதியம் பெற, வழிவகுத்தவர் குந்தவை தான். இதிலிருந்து அவரது நிர்வாகத்திறன் நமக்குப் புரிய வேண்டும். கூர்த்த மதியும், கொள்கை முடிவுகளும், அறம் சார்ந்த ஆளுமைப் பண்புகளும் உடைய, "ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்' என்று வரலாறு கொண்டாடுகிற இரண்டாம் குந்தவையின் குண நலன்கள் வளர விரும்பும் இன்றைய பெண்களுக்கு ஒரு பாடத்திட்டம். 
"தையலை உயர்வு செய்' என்றான் பாரதி. நான் சொல்கிறேன்: "தையலே உயர்வு செய். உன்னை, உன் இனத்தை, உலகத்தைத் தையலே உயர்வு செய்'.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com