யோசியுங்கள்... வேலையை விடும் முன்!

ஒரே நிறுவனத்தில் வேலை செய்து பணி நிறைவு பெறுவது என்பது இக்காலத்தில் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே அங்கு திறமையை வளர்த்துக் கொண்டு
யோசியுங்கள்... வேலையை விடும் முன்!

ஒரே நிறுவனத்தில் வேலை செய்து பணி நிறைவு பெறுவது என்பது இக்காலத்தில் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே அங்கு திறமையை வளர்த்துக் கொண்டு, அதிக சம்பளத்தில் அடுத்த நிறுவனத்துக்கு தாவுகின்றவர்கள் அதிகம். ஆனால், அப்படி ஒரு வேலையை விட்டு இன்னொரு வேலைக்குச்
செல்ல நினைப்பவர்கள் ஏற்கெனவே செய்யும் வேலையை விடுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. 
அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள்: எல்லோருக்கும் மோசமான நாட்கள் என சில நாட்கள் இருக்க கூடும். குறிப்பாக உணர்ச்சிவசப்பட்டு சில முடிவுகளை அவசரத்தில் எடுத்து விடும்போது நமக்கு அது விரும்பத்தகாத பின்விளைவுகளைத் தரக்கூடும். எனவே எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் 2 முறை யோசிப்பது நல்லது. வேலையை விடுவதாக முடிவெடுத்து விட்டீர்களேயானால் அதற்கு முன் உங்கள் தற்போதைய மற்றும் புதிய வேலையில் உள்ள சில சாதக, பாதகங்களைப் பட்டியலிட்டு எழுதிப் பாருங்கள். 
பிறருக்குப் பயப்படாதீர்கள்!: நாம் நமது பணியின் மீது மிகுந்த பற்று கொண்டவராய் இருப்பதில் தவறில்லை. மேலாளர் மற்றும் உடன் பணிபுரிபவர் மீது உங்களுக்கு சிறு வெறுப்பு இருந்தால் அதை பூதாகரமாக்கி அதன் மூலம் பலன் அடைய சிலர் நினைக்கக் கூடும். அதனால் உங்களுக்குப் பல இடைஞ்சல்களை அவர்கள் செய்யக் கூடும். ஆனால் அவர்களுக்குப் பயந்து உங்கள் வேலையை விட வேண்டிய அவசியம் இல்லை.
காரணத்தைக் கண்டுபிடியுங்கள்: வேலையை விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் தோன்றுகிறது? அதற்கு என்ன காரணம்? வேறு எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் வெறும் வேலையை மட்டுமே நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், நாளடைவில் அது உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடும். அதனால் வேலையை விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றக் கூடும். எனவே உங்கள் வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். அதிலிருந்து விடுபட்டு வேலையை மகிழ்ச்சியோடு செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.
திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்: உங்கள் வேலை போரடிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் வேலை விட வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான நிறுவனங்களில் வேலைகளுக்கு இடையே சில பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவற்றில் கலந்து கொண்டு வேலையில் கூடுதல் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பணி தொடர்பான திறமைகள் உங்களுக்குக் குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்திருந்தால் உரிய பயிற்சி எடுத்து கொள்ளும் போது வேலையின் மீது தானாகவே ஆர்வம் ஏற்படும். 
வீட்டை மாற்றுங்கள்!: இந்த உலகில் யாரும் கூட்ட நெரிசல்களிலேயே நீண்ட தூரம் பயணிப்பதில்லை. உங்கள் அலுவலகம் செல்லும் பயண நேரம் மற்றும் தூரத்தைக் காரணம் காட்டி வேலையை மாற்ற வேண்டும் என்றும் நினைக்காதீர்கள். அலுவலகத்திற்கு அருகே உங்கள் குடியிருப்பை மாற்றுங்கள். அதுவும் முடியாது என்றால் பயண நேரத்தைக் குறைப்பதற்கான மாற்று
வழிகளைக் கையாளுங்கள். வாரத்தின் சில நாட்களுக்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறான வேலைநேரத்தை உருவாக்கிக் கொள்ள மேலாளரிடம் பேசுங்கள். அல்லது வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதையும் பயன்படுத்தலாம். 
- திருமலை சோமு 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com