காற்றில் மாசை குறைக்கும் கருவி!

நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. காற்றில் கலக்கும் வாகனப் புகையின் அளவும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தில்லி போன்ற பெரிய நகரங்களில் மக்கள் மூச்சுவிடவே சிரமப்பட வேண்டியுள்ளது.
காற்றில் மாசை குறைக்கும் கருவி!

நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. காற்றில் கலக்கும் வாகனப் புகையின் அளவும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தில்லி போன்ற பெரிய நகரங்களில் மக்கள் மூச்சுவிடவே சிரமப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில் வாகனங்களில் இருந்து வரும் புகையில் உள்ள காற்றை மாசுபடுத்தும் கார்பனின் அளவைக் குறைத்தால் என்ன என்று தோன்றியது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த தினகரனுக்கு. அதற்கான முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்குத் துணையாக நின்றவர்கள் இருவர். ஒருவர் அந்த மாணவரின் அப்பா கெஜவரதன். இன்னொருவர் அப்பாவின் நண்பர் துக்காராம். அவர்களிருவரும் சென்னையில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். வாகனங்களின் என்ஜின் இயங்குவதைப் பற்றிய தொழில்நுட்பங்கள் அவர்களுக்குத் தெரியும் என்பதால், அவர்களுடைய துணையுடன் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையில் மாசின் அளவைக் குறைக்கும் ஒரு கண்டுபிடிப்பை அந்த மாணவரால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. தற்போது வெளிநாட்டில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து...
"நான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது புராஜெக்ட் வொர்க் செய்ய வேண்டியிருந்தது. என்னுடன் பயின்ற பல மாணவர்கள் பல புதுபுது ஐடியாக்களுடன் "அதைச் செய்ய வேண்டும்; இதைச் செய்ய வேண்டும்' என்று ஆர்வமாகப் பேசிக் கொள்வார்கள். அப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த ஒரு விஷயம்தான், தண்ணீரில் ஓடும் கார்களைத் தயாரிப்பது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமற்றது என்று எனக்குத் தோன்றினாலும், தண்ணீரை எரிபொருளாக மாற்ற முடியுமா என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது. 
அதன் விளைவாக பல ஆராய்ச்சிகள் செய்து தண்ணீரை எலக்ட்ரோலைஸிஸ் (electrolysis) முறையில் ஆக்ஸி - ஹைட்ரஜனாக மாற்ற முடியும் என்று கண்டறிந்தேன். இந்த ஆக்ஸி - ஹைட்ரஜனை வாகனங்களில் ஏற்கெனவே உள்ள பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் வாயுக்களுடன் சேர்த்துச் செலுத்திப் பார்த்தால், என்ன விளைவு ஏற்படும் என்று ஆராய்ச்சி செய்தேன். விளைவு அற்புதமாக இருந்தது. 
வாகனத்தில் உள்ள ஏர் ஃபில்டர் பகுதியில் இருந்து வெளிவரும் பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் வாயுக்களுடன் இந்த ஆக்ஸி -ஹைட்ரஜனைச் சேர்த்துவிட்டதும், என்ஜினுக்குள் படிந்திருக்கும் மொத்த அழுக்கும் வெளி வர ஆரம்பித்தது. 
வழக்கமாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள் நூறு சதவீதமும் அதன் என்ஜின் இயக்கத்தின்போது பயன்படுத்தப்படுவதில்லை. இந்த ஆக்ஸி - ஹைட்ரஜன் அதில் சேர்ந்ததும் எரிபொருள்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கார்பன் போன்ற அழுக்குகள் என்ஜினின் உள் பகுதியில் படிவதில்லை. புகையில் கலக்கும் கார்பனின் அளவும் இதனால் பெரிய அளவில் குறைந்துவிடுகிறது. இதனால் என்ஜினின் இயக்கம் எளிதாகி முழுத்திறனுடன் இயங்கத் தொடங்குகிறது என்பதைக் கண்டுபிடித்தேன். 
அதன் பிறகு எனது அப்பா மற்றும் அவரின் நண்பரின் உதவியுடன் ஆக்ஸி - ஹைட்ரஜனை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்தேன். இந்த இயந்திரம் பேட்டரியால் இயங்கக் கூடியது. இந்த இயந்திரத்திலிருந்து வெளிவரும் ஆக்ஸி - ஹைட்ரஜனை வாகனத்தின் எரிபொருள் வாயுக்களுடன் இணைத்துவிட்டு, வாகனத்தின் என்ஜினை இயக்கினால், கார், வேன் போன்ற வாகனங்கள் 20 நிமிடங்களிலும், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் 45 நிமிடங்களிலும் தூய்மையாகி விடுகின்றன. இதனால் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையின் அளவும் குறைந்துவிடுகிறது. வாகனங்களின் இயங்கும் ஆற்றல் அதிகரிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எரிபொருள் செலவு குறைகிறது.
இப்போது இந்த ஆக்ஸி - ஹைட்ரஜன் இயந்திரத்தைத் தயாரிப்பது, தேவையானவர்களுக்கு அவற்றைத் தருவது, கார், லாரி போன்ற வாகனங்களைத் தூய்மைப்படுத்துவது ஆகிய பணிகளை என் தந்தையும், அவரின் நண்பரும் செய்து வருகிறார்கள். 
வாகனங்களில் இருந்து வரும் புகையைக் குறைப்பது மிகத் தேவையான ஒன்றாக மாறிவிட்ட இக்காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை'' என்றார். 
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com