இரவு... பகல்... வேலை: எப்போதும் மகிழ்ச்சி!

கார்ப்பரேட் மயமான இன்றைய பணிச் சூழலில் தவிர்க்க முடியாத சில விஷயங்களில் சுழற்சி முறை பணி - ஷிப்ட்  முறை முக்கியமானதாகும்.
இரவு... பகல்... வேலை: எப்போதும் மகிழ்ச்சி!

கார்ப்பரேட் மயமான இன்றைய பணிச் சூழலில் தவிர்க்க முடியாத சில விஷயங்களில் சுழற்சி முறை பணி - ஷிப்ட்  முறை முக்கியமானதாகும்.

பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள், கால் சென்டர்கள் தொடங்கி உள்நாட்டு தொழிற்சாலைகள், ஊடகங்கள் என பல்வேறு துறைச் சார்ந்த பணிகளில் ஷிப்ட் அடிப்படையிலான வேலை என்பது தவிர்க்க இயலாததாகிறது.

காலையில் பணிக்குச் சென்று மாலையிலோ, இரவோ வீடு திரும்பும் பணியாளர்கள் அலுவலகம் புறப்படும்போதும், வீடு திரும்பும்போதும் பேருந்து, ரயில்களில் கூட்ட   நெரிசலில் சிக்கித் தவிப்பதும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அலுவலகத்திற்கு செல்வோர் சாலைப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னம் ஆவதும்  சென்னை போன்ற பெருநகரங்களில் சகஜமாகிவிட்டது.  

இவர்களைக் காணும்போது, காலையில் பீக் ஹவர்ஸ் நேரத்துக்கு முன்பாக   அதிகாலையிலோ, மதிய உணவுக்கு பின்போ, ஊரெல்லாம் அடங்கிய பிறகான இரவிலோ தொடங்கும் ஷிப்ட் முறையிலான பணி பரவாயில்லை என்றுதான் ஆரம்பத்தில் எல்லாருக்கும் தோன்றும்.

ஆனால், இப்பணி முறையின் காரணமாக தூக்கமின்மை, தலைவலி, மலச்சிக்கல் போன்ற  பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்போதும், குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும்  சரி வர நேரத்தைச் செலவிட முடியாமல் போகும்போதுதான் ஷிப்ட் பணி முறையால்  விளையும் பாதகங்கள் நமக்குப் புரிய வருகின்றன.

 ஷிப்ட் முறையில் பணிக்கு செல்வோர் அலுவல் சார்ந்த புறவாழ்க்கையையும், குடும்பம்  சார்ந்த அகவாழ்க்கையையும் சரியாக கையாள்வதற்கான வழிமுறைகளை இங்கே  காண்போம்.எந்த ஷிப்ட் சிறந்தது? 

பள்ளி, கல்லூரி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களில் அதிகாலையில் படிப்பவர்கள், இரவு முழுவதும் கண்விழித்து பயில்பவர்கள் என இரு  வகையினர் உண்டு. இதேபோன்று பணியிலும் காலை வேளையில் சிறப்பாகப்  பணிபுரிவோர், இரவில் நன்றாகப் பணியாற்றுபவர்கள் என இரு பிரிவினர் உண்டு. இந்த வகைப்பாட்டின்படி உங்கள் ஷிப்ட் பணி நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம். 

பணியாளர்களின் திறனை முழுமையாக, சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள தொழில் நிறுவனங்களும் இந்த வகைப்பாட்டின்படி செயல்பட தங்களது பணியாளர்களை அனுமதிப்பது   நல்லது.

நிர்வாகத்திடம் தெரிவியுங்கள்!

பணியின்தன்மையைப் பொருத்தோ, உங்களது திறனைப் பொருத்தோ கூடுதல் நேர பணியை உங்களிடமிருந்து அலுவலக நிர்வாகம் எதிர்பார்க்கலாம்.

அத்தகைய தருணங்களில், வழக்கமான பணி நேரத்துக்கு பிறகு,  உங்கள் பெற்றோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், நீங்கள் யோகா வகுப்புக்கு செல்வது உட்பட  அலுவலகத்துக்கு வெளியே உள்ள உங்களுக்கான பொறுப்புகளை நிர்வாகத்திடம் தயங்காமல் எடுத்துச் சொல்லுங்கள்.  இல்லையெனில், கூடுதல் நேர பணி அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. 
இளைப்பாற நேரம் ஒதுக்குங்கள்! 

பகல்பொழுதில் பணியாற்றுபவர்களை ஒப்பிடும்போது, ஷிப்ட் முறையில் பணிபுரிபவர்களுக்கு நாளடைவில் உடல்ரீதியான,  மனரீதியான பிரச்னைகள் வரும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. 

இப்பிரச்னைகளில்  இருந்து தற்காத்துக் கொள்ள உங்களின் அன்றாட மற்றும் அலுவலகப் பணிகளுக்கு இடையே மனதையும், உடலையும் உற்சாகமாய் வைத்துக் கொள்ளவதற்கான  வழிமுறைகளைக் கையாள்வது அவசியம். அதாவது அன்றாடம் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது நமக்கு பிடித்தான புத்தகத்தை படிப்பது, சமையல் செய்வது, பிடித்தமான இசையைக் கேட்பது போன்ற ஏதாவதொன்றில் நம்  மனதைச் செலுத்த வேண்டியது அவசியம். இதன் பயனாக நம் மனதும், உடலும் உற்சாகம்  அடைந்து, அதன் மூலம் கிடைக்கும் புத்துணர்ச்சி நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாய்  வைத்திருக்கும்.

இணையத்தில் கொஞ்ச நேரம்!

இன்று இணையமும், சமூக ஊடகங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னி பிணைந்துள்ளன. இதன் விளைவாக பலர் இணைய அடிமைகளாக, தங்களின் பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என சமூக  ஊடகங்களிலேயே செலவிடுகின்றனர். அவ்வாறு இல்லாமல், உங்கள் அன்றாட அலுவலகப்   பணிக்கு இடையே அவ்வப்போது சிறிது நேரம் சமூக ஊடகங்களை துழாவுங்கள். இதன் மூலம் சமூகம், அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்த பல்வேறு தகவல்கள் தெரியவருவதுடன், இந்த தளங்களில் வரும் நையாண்டி, நகைச்சுவைகள் உங்களை  மனஅழுத்தத்துக்கு உள்ளாகாமல் தடுக்கும்.  

முக்கியமானவர்களைச்  சந்தியுங்கள்!   

ஷிப்ட் முறையில் பணிபுரிபவர்களின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, வாரவிடுமுறை நாளின் பெரும் பகுதியும் தூக்கத்திலேயே  கழிகிறது என்பதுதான். இந்த  நிலையை மாற்றி, வார விடுமுறைகளில் குடும்பத்தினருடன் ஷாப்பிங், கோயில், திரையரங்கம் என வெளியில் செல்வதை தவறாமல்   பின்பற்றுங்கள், இதன் பயனாக குடும்ப உறுப்பினர்களுக்கு  உங்கள் மீதான பற்றுதல் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் அனைவரும் அவ்வப்போது சந்திக்க இயலாவிட்டாலும், அவர்களில்  உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களை, நீங்கள் முன்னுதாரணமாக கருதுபவர்களை  குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது சந்தித்துப் பேசுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com