இளைஞர்மணி

நீ... நான்... நிஜம்! -44

சுகி. சிவம்

என்னைச் சந்திக்கும்  பலரும் அடிக்கடி   சொல்லி  வருத்தப்படும்  விஷயம் ஒன்று உண்டு.  அது இதுதான். 

""நானும்  என்ன என்னவோ பண்ணிப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில்  அரை அங்குலம் கூட முன்னேற்றம்  வரல சார்.  எனக்கு மட்டும்  ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது  சார்''  என்று புலம்புவார்கள்.  ""அப்படி என்ன பண்ணினீர்கள்?'' என்று எதிர்க்கேள்வி  கேட்டால்,   பல பேர்  மோன நிலைக்குப் போய்விடுவார்கள்.  சிலர் நமக்கு ஆறுதலாகப் பேச மாட்டேன்  என்கிறானே.. இவன்  என்று எரிச்சலுடன்  என்னை எரிக்கும் வகையில்  பார்ப்பார்கள். 

ஒருசிலர்  மட்டுமே என் கேள்வியின்  கனம் உணர்ந்து,  ""யோகா  செய்கிறேன். மூச்சுப் பயிற்சியும்  கூட... சுய முன்னேற்ற  புத்தகங்கள் படிக்கிறேன். வெற்றியாளர்கள் வாழ்க்கை வரலாறு படிக்கிறேன். எங்கு, யார் சுயமுன்னேற்றப் பயிற்சி  அரங்குகள் நடத்தினாலும்  பணம் கட்டி முதல் ஆளாகப் போய் பயிற்சி  எடுக்கிறேன்.  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்,  சத்குரு ஜக்கி வாசுதேவ், மனவளக்கலை  யோகா  எதையும்  விடறதே இல்லை சார்''  என்று சூப்பர்  மார்க்கெட்டுகளில் தரும் கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் பில் மாதிரி நீளமான பட்டியல் வாசிப்பார்கள்.

இத்தனை செய்கிறவர்கள் ஒன்றே ஒன்று செய்வதில்லை.  தான் வாழ்வில் செய்கிற தவறுகள் என்ன என்பதைத் தீர்க்கமாக  ஆராய்ந்து ஒப்புக் கொள்வதில்லை. தவறுகளை ஒப்புக் கொள்ளும்போது கூட  அவசர அவசரமாக மேலோட்டமாக ஒப்புக் கொண்டு,  அது ஒரு பெரிய  விஷயமே இல்லை என்கிற தோரணையில் அதைவிடுங்கள் என்கிற அழுத்தம் கொடுத்தபடி பேசுகிறார்கள்.  இது சரியன்று.  உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய  மாற்றம் நிகழ வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். 

தயவு தாட்சண்யம்  இல்லாமல்,  ""இது என் தவறுதான் இதுதான் என் தவறு. இதன் வழியை யார் மீதாவது போட்டுத் தப்பிக்கிற முட்டாள்தனமும் என்னுடையது.  நான்தான் பிழை..குற்றம் குறை எனதே'' என்று  உறுதிபட உணர்ந்து கொண்டால் மட்டுமே உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஞானமடைந்து உச்சம்தொட்ட மகான்கள் வாழ்வைக் கூர்ந்து கவனியுங்கள். தங்கள் பிழையைத் தயக்கமே இன்றி, சமாதானங்கள் சொல்லாமல்  ஒப்புக் கொண்டிருப்பார்கள்.வாழ்வில் தலைகீழ் மாற்றம் நிகழ வேண்டுமானால், நாம் செய்ய வேண்டிய  ஒரே வேலை,  உடனடி வேலை. ""ஆம். இவை எல்லாம் என் பிழைகள்'' என்று  தீர்க்கமாக  உணர்வதுதான். அதிரடி மாற்றம் அப்போதுதான் சாத்தியமாகும். பிறரிடம் ஒப்புக் கொண்டு அவஸ்தைப்படுங்கள் அவமானப்படுங்கள் என்பது என் அறிவுரை அல்ல. உங்களிடமே  நீங்கள் உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதால்தான் முன்னேற்றம்  தடைப்படுகிறது.

சீதாபிராட்டியை  இராவணன்  தூக்கிக் கொண்டு போன செய்தியை   ஜடாயு மூலம் அறிந்ததும் இராம, இலட்சுமணர்களுக்கு  அப்படி ஒரு கோபம் வருகிறது. ""கோதண்டம்  கொண்டு  மூதண்டம்  அளிப்பேன்''  என்று இராமர் வில் வளைக்கிறார். கிழட்டு ஜடாயு இராம பாணத்தை விட கூர்மையான வார்த்தைகளால் இராமனை வைகிறார். ""முட்டாள்தனமாக நடந்து கொண்டவர்கள் நீங்கள். காட்டில் ஒரு பெண்ணைத் தனியாக விட்டுவிட்டு மான்பின்னால் போகிற செயல் அறிவுடைமையா? பிழை செய்தவர்கள் நீங்கள். இப்போது  உலகையே  அழிப்பேன் என்று வில்லை எடுக்கிறீர்களே. வெட்கமாக இல்லையா உங்களுக்கு?'' என்று அவமானப்படுத்தி  ஏசுகிறார் ஜடாயு. கம்பன் பாடல் தருகிறேன் "கொம்பிழை மானின் பின் போய் குலப்பழி கூட்டிக் கொண்டீர். உம்பிழை என்பதல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ' என்று வில்லால் கொல்ல நினைத்தவனை, சொல்லால் கொல்கிறார் ஜடாயு. இராம, இலட்சுமணர்  தங்கள் தவறுணர்ந்து வில்லைக் கீழே போட்டு திருத்திக் கொள்கின்றார்கள். 

எல்லாரும்  தங்கள் தோல்விகட்கு உலகத்தை,  பிரபஞ்சத்சை, கடவுளைக் குறை கூறுகிறார்கள். தங்கள்  பிழை என்று உள்முகப் பார்வை  பார்த்தால்  உண்மை புரியும்.பிரபஞ்சத்தின் மையம் நீதான். அதன் பிழையே பிரபஞ்சம் முழுமையிலும் எதிரொலிக்கிறது. “THE SECRET' என்றொரு புத்தகம் பரபரப்பாகப்  பேசப்பட்டது. உங்கள் மையத்திற்கேற்பவே உங்கள் உலகம் கட்டமைக்கப்படுகிறது என்பதை அந்தப் புத்தகம்  அழுத்தமாகப் பேசியது. ஒரு HOMO SEXUAL நபர் தெருவில் இறங்கிய மறுகணமே அவனை விரும்பும், அல்லது வெறுக்கும் நபர்களின் வட்டம் உருவாகிவிடுகிறது. அவனுக்கான அவமதிப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. அவமானங்கள் வட்டம் சுற்றித் தொடங்கிவிடுகின்றன.  ஒவ்வொருவரும் அவரவருக்கான  உலகத்தை  அவர் அவரே  கட்டமைக்கிறார் என்கிற  பிரபஞ்ச  இரகசியம் பலருக்கும் இன்னும் புரிபடவில்லை.

ஒவ்வொரு  பிரச்சனையிலும் பிறர்  என்ன  செய்திருக்கலாம். எப்படி நடந்து கொண்டிருந்திருக்கலாம் என்பதைப் பற்றி விஸ்தாரமாகப் பட்டியல்  போடும் நாம்,  நாம் எப்படி நடந்து  கொண்டிருந்திருக்கலாம்  என்பதைப் பற்றி யோசிப்பதே  இல்லை.  

தன் பிழை  உணர்தலே  முன்னேற்றத்தின் தலையாய விதி  என்கிறேன். பிறர்தான் குறையானவர்கள், குற்றவாளிகள்  என்கிற நம் மனப்போக்கை விளக்க  தென்கச்சி  சாமிநாதன்  ஒரு  கதை   சொல்லுவார்.   தன் மனைவிக்குக் காது கேட்காது  என்று ஒருவருக்கு  எண்ணம்.  அதை மனைவிக்குப் புரிய வைக்க முடிவு செய்தார்.  

வாசலில் நின்றபடி, "" இன்று  என்ன சமையல்?'' என்று கேட்டார்.  சப்தமில்லை. ஹாலில் வந்து கேட்டார். அதற்கும் பதில் வந்த மாதிரி தெரியவில்லை. சமையல் அறைக்கே வந்து சத்தமாக, ""இன்று என்ன சமையல்?'' என்று கத்தினார். ""முருங்கைக்காய்  சாம்பார். முட்டைக் கோஸ் பொரியல்னு மூணு தடவை  சொன்னேனே... காதில  வாங்காம மறுபடி மறுபடி கேட்டா நான் என்ன பண்றது''  என்றாராம்  மனைவி.

இன்னொரு கதை சொல்கிறேன்.  உண்மைச் சம்பவங்களைச் சொன்னால் பலருக்கும் "சுருக்'கென்று  தைப்பதால் என் மீது  கடுங்கோபம்  வருகிறது. அதனால்  கதைகளாகச் சொல்லி  காயப்படுத்தாமல் நல்லது செய்ய முடியுமா? என்று பார்க்கிறேன்.  ஓர் அரசர் தன் பிறந்தநாளன்று  சிறைக் கைதிகளைச் சந்தித்து  உணவளிக்கப் போனார்.  ஒரு கைதி, ""ஐயா  நான் நல்லவன் திருடவே இல்லை. காவலர்கள்  என்னைக்  கைது செய்திருக்கிறார்கள்'' என்று  புகார்   சொன்னான். 

இன்னொரு கைதியோ ""என்னைக் கொலைக் குற்றம் சாட்டி உள்ளே வைத்துள்ளார்கள்.  நான் ஈ  எறும்புக்குக் கூட  தீங்கு   செய்யாதவன்''  என்றான். இன்னொருவனோ, ""மன்னா என்னைப் பார்த்தால் கற்பழிக்கிற பாவி மாதிரியா தெரிகிறது. நான் மகா உத்தமன்'' என்று நல்லவன் மாதிரி முகத்தைக் காட்டினான்.  ஒரே ஒருவன், ""அரசே  நானும்  இவர்கள் மாதிரிதான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால்  சிறிது நாட்களாக தீர்க்கமாக யோசித்தேன்.  நான்  வாழ்வில்  தவறுகள்  செய்த  அயோக்கியன். கைதான தண்டனை  சரிதான்'' என்று கை கூப்பி நின்றான். 

அரசர் மந்திரியை  அழைத்து,  ""இந்த அயோக்கியனை உடனே வெளியே அனுப்புங்கள். கெட்டவன். பாவி. மற்ற இவர்கள் எல்லாம் எவ்வளவு நல்லவர்கள். இந்த மோசமானவன் இங்கிருந்தால்  மற்ற  நல்லவர்களை எல்லாம் கெடுத்து விடுவான். இனி ஒரு கணம் இவன் இங்கே இருக்கக் கூடாது'' என்று உத்தரவிட்டார். இதுதான் தலைகீழ் மாற்றம் என்கிறேன். நாம் நமது தவறுகளையும் பிழைகளையும் சமாளித்து சமாதானம் சொல்லுவதை விட்டுவிட்டு  ஒப்புக் கொள்ளும் அந்த கணத்தில்  பிரபஞ்சம்  நம்மைச் சிக்கலில்  இருந்து  விடுவிக்கிறது.   இது புரிந்தால்  முன்னேற்றம்  சாத்தியம்.

"ஏதிலார்  குற்றம்  போல்  தம்குற்றம்  காணின்'  என்கிறார்  வள்ளுவர்.  எப்படி எல்லாம் உலகில் மக்கள் இருக்கிறார்கள் தெரியுமா? ஒருவருடைய தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய  கட்டாயம்,  குடும்ப நன்மை,  அலுவலக நிர்வாகம்  காரணமாக  ஏற்பட்டு  சுட்டிக் காட்டினால்,   சுட்டிக்காட்டியவர் மீது குற்றங் குறைகளைக் கண்டுபிடித்து,  கதை புனைந்து,  அவதூறு  பரப்பவும் பலர் தயாராகி விட்டார்கள்.  

அஞ்ஞானிக்கும் ஞானிக்கும் இருக்கிற  மிகப் பெரிய  வேறுபாடு  இதுதான். அஞ்ஞானி அடுத்தவர்  பிழைகளைப்  பட்டியல்  போடுகிறான்.  ஞானியோ தன் குறைகளைப் பட்டியல்  போடுகிறான். தன்பிழை இன்னது என்று துல்லியமாகக் கண்டறிந்து விட்டால் அவனது முன்னேற்றத்தை கடவுளாலும் தடுக்க முடியாது. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் புகாா்களுக்கு பாா்வையாளா்கள் எண்கள் அறிவிப்பு

கால்நடைகள் விற்பனை செய்யும் பணத்தை சிரமமில்லாமல் எடுத்துசெல்வதற்கு வழிவகுக்க கோரிக்கை

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

SCROLL FOR NEXT