ஒழுக்கமே உன்னத மேன்மை! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

பாண்டவர்கள் சூதாட்டத்தில் நாட்டை இழந்த பின்பு, கெளரவர்களின் ஆணையின்படி பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் சென்றனர். பதின்மூன்று நாட்கள் மட்டுமே முடிந்திருந்தது

தன்னிலை உயர்த்து! 20

பாண்டவர்கள் சூதாட்டத்தில் நாட்டை இழந்த பின்பு, கெளரவர்களின் ஆணையின்படி பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் சென்றனர். பதின்மூன்று நாட்கள் மட்டுமே முடிந்திருந்தது. பதினான்காம் நாளில் பீமனும், அர்ஜுனனும் ஆயுதங்களைக் கையிலேந்தி போர்க்கோலத்துடன் தங்களது அண்ணன் தருமர் முன் வந்தனர். தருமர் அவரது தம்பிகளின் போர்க்கோலம் கண்டு திகைத்தார்.
"ஏன் இந்த போர்க்கோலம்?'' என்றார் தருமர். அதற்கு பீமன், "அண்ணா! சிறப்பு வாய்ந்த தருணங்களில் ஒரு நாள் என்பது ஒரு வருடமாக கருதப்படுவது உண்மைதானே?'' என்றார். "ஆம்'' என்றார் தருமர். 
"அப்படியானால், நாம் வனவாசம் மேற்கொண்டு நேற்றுடன் பதின்மூன்று நாட்கள் முடிந்துவிட்டது. சாஸ்திரப்படி இதனை பதின்மூன்று ஆண்டுகளாக கணக்கிடலாம். எனவே புறப்படுங்கள்! அஸ்தினாபுரத்தின் மீது படையெடுத்து, கெளரவர்களைச் சிதறடிப்போம். உங்களை நாட்டின் மன்னராக்குவோம்'' என்றார். 
அதற்கு தருமர், ""சூதாட்டத்தில்தான் நாட்டை இழந்தோம், சூதாடியபோது சிறப்பு வாய்ந்த தருணம் எதுவுமில்லை. எனவே சாஸ்திர விலக்குகளை இங்கு கையாள முடியாது. இங்கு, ஒரு வருடம் என்றால் அது ஒரு வருடம்தான். ஒரு வருடத்தை ஒரு நாளாக எண்ணுவதற்கு இடமில்லை. பதவி ஆசைக்காக தருமத்தைப் புறக்கணிக்க முடியாது. பதின்மூன்று ஆண்டுகள் முடிவதற்கு முன்பாக ஆயுதம் எடுக்க என் மனம் இடம் தராது'' என்றார். 
உண்மையான தருமம் என்பது உண்மையின்படி வாழ்வது; நேர்மையாக வாழ்வது. மொத்தத்தில் மனித ஒழுங்கில் வாழ்வது. எனவே தான், தருமர் ஒழுக்கத்தின் அடையாளமானார். ஒழுக்கமே தருமத்திற்கு அடிப்படையானது. அறத்தின் ஆரம்பமும், முழுமையும் ஒழுக்கமேயாகும். 
ஒழுக்கத்தை மறந்திருப்பது விலங்கு. ஒழுக்கம் பழகுவது மனிதம். ஒழுக்கம் நிறைந்திருத்தல் புனிதம். சூரியனைச் சுற்றும் பூமியும், பூமியுடன் சேர்ந்து சுழலும் சந்திரனும் ஒழுங்கின் நிலைப்பாடுகள். பருவ காலங்கள் ஒழுங்கின் சிறப்பியல்புகள். பருவ காலங்கள் ஒழுங்கின்றிப் போனால் ஐந்திணை ஒழுக்கங்கள் அஸ்தமித்துவிடும்.
ஒழுக்கமுடையவர்கள் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள். சாதிப்பவர்கள் ஓர் ஒழுங்கின் அடிப்படையில் வாழ்பவர்கள். 
அமெரிக்க நாட்டின் கொலராடோ பல்கலைக் கழகத்தில் பயின்றவர் பில் டூமி. அவர் கல்லூரி நாட்களில் ஒரு முன்னணி விளையாட்டு வீரர் அல்ல. ஆனால் ஓர் ஆர்வமுள்ள ஒட்டப்பந்தய வீரர். பல்கலைக் கழகத்தில் அவர் பயிற்சியில் இருக்கும்போது, மாலையில் பயிற்சி முடித்தவுடன் அனைவரும் கடுமையான பயிற்சியின் காரணமாக தளர்வுற்று ஓய்வுக்குச் சென்றுவிடுவர். ஆனால் பில் டூமி மட்டும் சுமார் இருபது நிமிடம் மட்டும் பயிற்சி மைதானத்திலேயே ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் ஒருமணி நேரம் அதே பயிற்சியை மேற்கொள்வார்.
ஓய்வு நேரத்தையும் தனது வளத்திற்காக பயன்படுத்தி, வாழ்க்கையை முழுவதுமாக விளையாட்டுக்கே அர்ப்பணித்ததால் 1966- இல் "டெக்காத்லான்' போட்டியில் உலக சாதனை படைத்தார். 1968-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார். 1984-இல் டெக்காத்லான் போட்டியில் வென்றதற்காக புகழாரம் சூட்டப்பட்டார். அவருடைய சாதனைகளை முறியடிக்க இதுவரை எவரும் பிறக்கவுமில்லை என்பதுதான் வரலாறு. ஒழுக்கத்தின் அடிப்படையில் அமைகின்றவரின் வாழ்க்கை இவ்வுலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு.
உண்மையில், "ஒழுங்கு என்பது திறமையைச் செயல்திறனாக மாற்றுகின்ற பதமான நெருப்பு' என்கிறார் அமெரிக்க நாட்டு அறிஞர் ராய் எல்.ஸ்மித். தனக்கென்று சுய ஒழுக்கத்தினை ஏற்படுத்தத் தயங்குபவர்களும், அஞ்சுபவர்களும் வெற்றியடைவதில்லை. மாறாக தனக்கென சுய ஒழுங்கைக் கடைபிடிப்பவர்கள்தான் உயர்நிலைக்கு உந்தப்படுகிறார்கள்.
உலகின் மிகச்சிறந்த நகரங்களில் முதன்மையான நகரம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரமாகும். அங்கு ஒரே பாதையில் பேருந்துகள், மகிழுந்துகள் (Cars) மின்சார தொடர் வண்டிகள் பயணிக்கின்றன. வனத்திலே நீர் அருந்தச் செல்ல யானை முதல் மான் வரை ஒரே பாதையைத்தான் பயன்படுத்துகின்றன. அவற்றுக்குள் எவ்வித இடர்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ளாததுபோல், இந்நகரத்தில் வாகனங்கள் பயணிக்கின்றன. அதற்கு அவர்கள் ஒழுங்கினை முதன்மைப் படுத்திகொண்டதே காரணமாக அமைகிறது.
சரியான நிமிட நேரத்திற்கு கிளம்பி, சரியான நிமிட நேரத்திற்கு சேரும் எல்லா மின்சார இரயில்களும் கடிகாரத்தின் முட்களைச் சரிப்படுத்துகின்றன. ஆம்! ஒழுங்கு ஓர் அழகு! ஒழுங்கு ஓர் அற்புதம்! ஒழுங்குபடுத்தப்பட்ட பூக்கள் ஓர் அழகிய மாலை. ஒழுங்கமைக்கப்பட்ட கற்களே உயரிய கோபுரங்கள். ஒழுங்கமைக்கப்பட்ட சொற்கள், கவிதை. ஒழுங்கான மனிதமே, உன்னதம். சறுக்கல் வாழ்க்கை சரித்திரமாவதில்லை. கிறுக்கல் வாழ்க்கை நேர்ப்படுவதில்லை. ஒழுக்கமான வாழ்க்கையே பிறரும் பயணிக்கத் துடிக்கும் பண்பான வாழ்க்கைப் பாதையாகும். 
நாடக ஆசிரியரும், சிந்தனையாளருமான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, "மனதை சுறுசுறுப்பாகவும், சவால்களை ஏற்றுக்கொள்ளவும், சரியானவைப் பற்றி மட்டுமே தொடர்ந்து சிந்திக்கவும் பழகிக் கொள்பவர்கள், தங்களுக்கு உதவக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனையை வளர்த்துக்கொள்கிறார்கள்' என்கிறார். மனதைச் சரிப்படுத்தவில்லையெனில் இழுக்கமே வந்து சேரும். ஒழுக்கம் மறந்தால் இழுக்கம். ஒழுக்கம் மீறினால் ஆபத்து. ஒழுக்கமே உயர்வு. ஒழுக்கமே ஆனந்தம். ஒழுக்கமே மதிப்பாகும்.
அலைபாய்கின்ற மனது ஓர் ஒழுங்கிற்குள் அடைபட மறுக்கும். ஒழுக்கத்தினை எள்ளி நகைக்கும். ஆனால், இலட்சியத்தை அடைவதற்காக விரும்பாதவற்றையும், விரும்பி செய்வதுதான் ஒழுங்கு. அவ்வொழுக்கமே ஒருவரை மேன்மைப்படுத்தும். ஒழுக்கத்தை மறுக்கும் இழுக்கமோ அவரைக் கீழ்மைப்படுத்தும். மேலும், ஒழுக்கம் இல்லாதவர்கள் அவர்கள் செய்யாத தீங்கிற்கும் ஆளாவார்கள் என்பதை 
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவர் எய்தாப் பழி
என்று ஒழுக்கத்தின் மாண்பினை பாராட்டி, இழுக்கத்தினை எச்சரிக்கிறார் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
ஒழுக்கமே மனிதத்தின் அடிப்படை. ஆதலால்தான் அமெரிக்க கவிஞர் பில்லி கிரஹாம், 

When wealth is lost,  nothing is lost,
When health is lost,  something is lost,
When Character is lost, all is lost

என்ற வரிகள் மூலம் வாழ்வின் இலக்கணத்தை உணர்த்துகிறார். நம்மிடமுள்ள செல்வத்தை இழப்பின், ஒன்றும் இழப்பில்லை. உடல் நலம் இழப்பின், சிறிது இழந்திருப்பது உண்மை. பண்பினை இழந்தால், வாழ்வில் எல்லாம் இழந்துவிட்டோம். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்றுணர்த்துகிறது இப்பாடல்.
ஒரு தந்தை, தனது மகனுக்கு பட்டம் விட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பட்டம் அழகாக மேலே பறந்து கொண்டிருந்தது. "மகனே! கையிலிருக்கும் நூல் என்ன செய்கிறது?'' என்றார் தந்தை. உடனே மகன், "அப்பா... இந்த நூல்தான் பட்டத்தின் சுதந்திரத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது'' என்று சொன்னான். 
"இல்லை மகனே! நூல்தான் அதனை உயர பறக்க வைத்துக் கொண்டு இருக்கிறது'' என்றார் தந்தை. தந்தை சொல்வதில் உண்மையில்லையென மகன் சிரித்தான். 
பிறகு, தந்தை ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். பட்டம் விடுபட்டு தாறுமாறாய் காற்றில் பறந்தது. பின்னர் சற்று தூரத்தில் வேகமாய் கீழே விழுந்தது. மகன் தந்தையை ஆச்சரியமாய்ப் பார்த்தான். 
"மகனே! இந்த பட்டத்தின் நூலைப் போன்றதுதான் ஒழுக்கம். அது தங்களது சுதந்திரத்தை பறித்துக் கொண்டிருப்பதாக நினைத்து அதிலிருந்து விடுபடுபவர்கள் கீழே விழுந்த பட்டத்தைப் போன்று விரைவில் வீதியில் கிடப்பர். ஒழுக்கம் ஒன்றே ஒருவரை பட்டம்போல் உயரப் பறக்க வைக்கும்'' என்றார் தந்தை. ஒழுக்கத்தால் உயர்கின்ற வாழ்க்கையே உயர்வான வாழ்க்கை.
ஒழுக்கமே உயரிய வாழ்வு!
ஒழுக்கமே உன்னத மேன்மை!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com