சிறு வணிகர்கள்...ஆன்லைன் வர்த்தகத்தில்!

புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருள்களிலிருந்து சாப்பிடும் உணவுப் பொருள்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கிப் பயன்படுத்துவது என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது
சிறு வணிகர்கள்...ஆன்லைன் வர்த்தகத்தில்!

புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருள்களிலிருந்து சாப்பிடும் உணவுப் பொருள்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கிப் பயன்படுத்துவது என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், நேரத்தைச் செலவழித்து அலைந்து திரிந்து பொருள்களை வாங்குவதைப் பலர் விரும்புவதில்லை. இருக்கும் இடத்திலேயே எல்லாப் பொருள்களும் தங்களுடைய கைகளில் வந்து விழ வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இணையதளங்களிலேயே பொருள்களைப் பார்த்து, தேர்ந்து எடுக்கிறார்கள்.
இப்படியே ஆன்லைன் வியாபாரம் அதிகமாகிக் கொண்டே போனால் தங்களுடைய பிழைப்புக்காக சிறிய கடைகளை நடத்துபவர்களின் நிலை என்ன ஆகும்? என்று கவலையுடன் யோசித்து, அவர்களையும் ஆன்லைன் பக்கம் திருப்பி விட முயற்சி செய்திருக்கிறது இதயம் நல்லெண்ணெய் நிறுவனமும் பஞ்ச் குருகுலம் என்னும் தொண்டு நிறுவனமும். அவர்கள் தமிழ்நாடு முழுக்க உள்ள சிறிய வணிகர்களுக்கு ஆன் லைன் வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வையும் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்கள். சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஷா நிவாஸ் சோசியல் சர்வீஸ் சென்டரில் பயிற்சி அளித்தார்கள். அதில் அவர்களுக்குப் பயிற்சி அளித்த பி.ஜி.ராஜனிடம் பேசியதிலிருந்து...
"இன்று உலக அளவில் ஆன்லைன் வர்த்தகம் அதிகமாகி வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நமது சிறு வணிகர்களும் மாற வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான பயிற்சிகளைத்தான் நாங்கள் தமிழ்நாடு முழுவதும் 250 பயிற்றுநர்களைக் கொண்டு அளித்து வருகிறோம்.
முதலில் சிறுவணிகர்களுக்கு வணிகம் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று விளக்குகிறோம். தற்போது ஆன்லைன் வர்த்தகம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இதற்காக சிறு வணிகர்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் சொல்லித் தருகிறோம்.
இந்த ஆன்லைன் வர்த்தகத்தை நடத்த அவர்களுக்கு ஒரு செயலி தேவை. "செட்டியார் மளிகை' என்ற பெயரில் ஒரு செயலி தற்போது உள்ளது. தேவைப்பட்டால், வணிகர்கள் தங்களுடைய தேவைக்கேற்ப புதிய செயலியை அதற்கான தொழில்நுட்ப அறிவுள்ளவர்களின் துணையுடன் வடிவமைத்துக் கொள்ள முடியும்.
அந்தச் செயலியில் ஒரு வணிகரின் கடையில் உள்ள பொருள்களைப் பற்றிய எல்லா விவரங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள மக்களை எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப், மெயில் போன்றவற்றின் மூலமாக வணிகர்கள் தொடர்பு கொண்டு தங்களுடைய கடையில் உள்ள பொருள்களைப் பற்றிய விவரங்களை மக்களுக்குச் சொல்ல வேண்டும். இவ்வாறு "வணிகர்கள் - மக்கள் தொடர்பை' ஏற்படுத்திக் கொண்டால், மக்கள் தமக்குத் தேவையான பொருள்களை ஆர்டர் செய்வார்கள். வணிகர்கள் அவர்களுடைய வீட்டிலேயே பொருள்களைச் சப்ளை செய்ய வேண்டும். பொருள்களுக்கான தொகையை ரொக்கமாகவோ, பல்வேறு பண அட்டைகளின் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறுவணிகரால் இவற்றையெல்லாம் செய்ய முடியாது; அதற்கான வசதி அவரிடம் இல்லையென்று அவர் நினைத்தால், ஒருபகுதியில் உள்ள சிறுவணிகர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து செயலி, பொருள்களை வைத்திருக்கும் பெரிய இடம், வாகன வசதிகள் அனைத்தையும் கூட்டாகவே செய்து கொள்ளலாம்.
ஏனென்றால் இப்போது சிறுவணிகரின் போட்டியாளர் அருகில் உள்ள இன்னொரு சிறு வணிகர் அல்ல; மாறாக, உலகம் தழுவிய அளவில் வணிகம் செய்யும் ஆன்லைன் வர்த்தகர்கள்.
இந்த ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சிறுவணிகர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொடுப்பதோடு, வணிகர்களின் உடல் நலம், அவர்களின் வாழ்க்கை இலக்கு, சமூக நோக்கு பற்றிய அனைத்தையும் நாங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் சொல்லித் தருகிறோம்.
ஒரு கடையை நடத்துபவர் கடைக்குத் தேவையான பொருள்களை எப்படி வாங்குவது? எப்படி ஸ்டாக் வைப்பது? எப்படி அவற்றைப் பாதுகாப்பது, கடையில் வேலை செய்பவர்களை எப்படி நடத்துவது? வாடிக்கையாளர்களை எப்படி அணுகுவது? அவர்களிடம் எப்படி நடந்து கொள்வது? கடையில் வீணாகும் பொருள்களை எப்படி லாபகரமாகப் பயன்படுத்துவது? தரமான பொருள்களை வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதற்கு என்ன செய்வது? என வணிகம் தொடர்பான எல்லாவற்றையும் அவர்களுக்கு பேச்சின் மூலமாகவும், செயல்முறையின் மூலமாகவும் பயிற்றுவிக்கிறோம்'' என்றார்.
ந.ஜீவா


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com