வாங்க இங்கிலீஷ் பேசலாம் 167

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 167

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். நடாஷா எனும் பெண்ணும் மீசைக்காரர் எனும் போலீஸ்காரரும் அங்கு காத்திருக்கிறார்கள். அவர்கள் இடையிலான உரையாடலில் bark up the wrong tree எனும் சொற்றொடர் வருகிறது. கணேஷ் அதன் பொருள் என்ன என புரொபஸரிடம் வினவுகிறான்.

புரொபஸர்: டேய் தம்பி...
கணேஷ்: என்ன சார்?
புரொபஸர்: இன்னிக்கு உலகமே நமது விரல் நுனியில் வந்திடுச்சு. நீ மொபைலில் ஒரு தட்டு தட்டினால் இந்த கேள்விக்கான பதில் தெரிஞ்சுக்கலாமே. ஏன் எங்கிட்டயே கேட்கிறே?
கணேஷ்: அதில்ல சார், உங்களை மாதிரி அழகா புரியற மாதிரி விளக்குறதுக்கு கூகிளால முடியுமா சார்? அதான்..
புரொபஸர்: சரி அதை விடு, ஒருவேளை எனக்கு தெரியலேன்னா என்ன பண்ணுவே, அப்போ you are barking up the wrong tree. ஏன்னு யோசிச்சு சொல்லு. சரியா சொன்னேன்னா உனக்கு ஒரு சாக்லேட் தரேன்.
கணேஷ்: சாக்லேட் வேணாம் சார். இன்னிக்கு என் கெர்ல்பிரண்டை டின்னருக்கு அழைச்சிட்டு போறேன். அதுக்கு ரூ.500 கைமாத்தா குடுங்களேன்.
புரொபஸர்: சரி... பதில் சொல்லு.
கணேஷ்: சார் bark up the wrong treeன்னா தப்பான ஆள்கிட்ட கேட்குறது. நீங்க தான் மரம். சின்ன மரம். கூகிள் ஒரு பெரிய மரம். நான் ஒரு நாய். நான் எனக்குத் தேவையானதை உங்ககிட்ட அடையலாமுன்னு நினைச்சு உங்களைப் பார்த்து குரைக்கிறேன். ஆனால் நீங்க சரியான இலக்கு இல்லைன்னு எனக்கு அப்போ தெரியல. அதனால I was barking up the wrong tree. சரியா?
புரொபஸர்: அந்த சொற்றொடருக்கு கிட்டத்தட்ட மூணு அர்த்தங்கள் உண்டு. To make the wrong choice, to ask the wrong person, to follow the wrong course. தவறான முடிவெடுப்பது, தவறான ஆட்களிடம் கேட்பது, தவறான வாழ்க்கைப் பாதையைத் தேர்வது. நீ பாதிதான் சரியா சொன்னே... அதனால ரூ 250 மட்டும் தரேன்.
ஜூலி (கணேஷிடம்): போச்சா, 500 ரூபாய் போச்சா
கணேஷ்: ஆக்சுவலி எனக்கு 250 ரூபாய் போதும். அவர் கிட்ட 250 கேட்டா 100 தான் தருவார். அதனால தான்...
ஜூலி: மிச்ச 250?
கணேஷ்: அதை நீ தான் கொடுக்கப் போறே
ஜூலி: நானா? சரி ஆனால் அதுக்கு நீ ஒரு கேள்விக்கு பதில் சொல்லணும்.
கணேஷ்: சரி கேளு
ஜூலி: H-A-T-E- ஹேட்
கணேஷ்: ஆமா
ஜூலி: இதில ரெண்டு vowels உண்டு. எதெதென்னு சொல்லு. அதோடு இந்த vowels இன் வகைமை என்னென்னு சொல்லு.
கணேஷ்: ம்ம்ம்... vowel ன்னா உயிரெழுத்து மாதிரி. அ, இ, உ மாதிரி. இங்கிலீஷ்ல a, i, e, o, u எல்லாம் வவல்ஸா வரலாம். சரியா?
ஜூலி: ம்ம்...
கணேஷ்: Hateஇல் a மற்றும் e ரெண்டும் vowels. என்ன வகைன்னா தெரியல. இல்ல... இல்ல... இரு தெரியும் - short and long vowels.
ஜூலி: எது short எது long?
கணேஷ்: ஹேட்... ஹேட் - இதில ஹ தான் நீளமா வருது. அதனால அது long vowel. சரியா?
ஜூலி: ம்ம்... அடுத்தது?
கணேஷ்: e - அது short vowel.
ஜூலி: தப்பு...
கணேஷ்: இல்ல... சரி
ஜூலி: தப்புன்னா ஒத்துக்கிட்டு வாயை மூடு. இல்ல கடிச்சு வச்சிருவேன் கிர்ர்ர்...
கணேஷ்: சார்...
புரொபஸர்: ஜூலி இஸ் ரைட். அது short vowel இல்ல. அது ஒரு silent vowel.
கணேஷ்: இல்லையே சார். Hate என சொல்லும் போது கடைசி ஒலியில் e இருக்குதே.
புரொபஸர்: இல்ல. Pet, wet, met, get ஆகிய சொற்களில் வரும் e எழுத்துக்கு ‘G' எனும் ஒலி வருகிறது. Me என்பதில் அதே e ‘ஈ' ஓசை பெறுகிறது. ஆனால் இங்கே hateஇல் e என்பதற்கு "எ' / "ஈ' ஒலிகள் இல்லை கவனித்தாயா? ஹேட்டெ என்றோ ஹேட்டீ என்றோ நாம் சொல்வதில்லை. ஹேட் என நின்று போகிறது - பல்லி வால் போல ங் துண்டிக்கப்படுகிறது. அதனால் தான் இது silent vowel. இதுக்கு ஒரு தனி விதிமுறை உண்டு.
கணேஷ்: என்ன?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com