இளைஞர்மணி

வீடுகளுக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி: இளைஞர்களின் புதிய சாதனை!

தினமணி

நம் நாட்டில் 60 கோடி மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்; குடிநீர் பற்றாக்குறை, அசுத்த தண்ணீர் காரணமாக ஏற்படும் நோய் பாதிப்புகளால், ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று கடந்த ஜூன் மாதம் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், இந்தியாவின் 21 நகரங்களில் வரும் 2020 இல் நிலத்தடிநீர் முழுமையாக வற்றிவிடும் எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு ஒன்றே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான ஒரு செயலாக இனியும் இருக்க முடியாது. மழை பெய்யாவிட்டால், மழைநீர்ச் சேகரிப்புத் திட்டம் எந்த பயனையும் அளிக்காது. எனவே, நாம் நாள்தோறும் பயன்படுத்தும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை முறைப்படி சுத்திகரித்து முழுமையான மறுசுழற்சிக்கு கொண்டு வர வேண்டும். மேலும் அன்றாடம் வெளியேற்றப்படும் கழிவுநீர், மறுசுழற்சிக்கு வராமலேயே ஆறு, குளங்களில் கலந்து வீணாவதோடு, சுற்றுச்சூழலையும் பாதித்து நோய்களைப் பரப்பி வருகிறது.
இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் மும்பையைத் தளமாகக் கொண்டு உருவாகியுள்ளது INDRA Water System என்ற புதிய ஸ்டார்ட்அப். மும்பை கே.ஜெ. சோமையா பொறியியல் கல்லூரியில் இளநிலை இயந்திர பொறியியல் பயின்ற க்ருனல் படேல், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கடந்த 2012 இல் இளநிலை இயந்திர பொறியியல் பயின்ற புவனேஸ்வரைச் சேர்ந்த அம்ரித் ஓம் நாயக் ஆகியோர் தங்கள் முதுநிலை இயந்திர பொறியியல் கல்வியை கடந்த 2015 இல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றனர். அப்போது, நண்பர்களான இருவர் மனதிலும் உதித்ததுதான், இந்த ஸ்டார்ட் அப்.
2017 இல் இருவரும் சேர்ந்து மும்பையில் "இந்த்ரா வாட்டர் சிஸ்டம்; என்ற ஸ்டார்ட்அப்-ஐ தொடங்கினர். இதன்மூலம், மின்உறைவிப்பு (electrocoagulation) முறையில் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் சிறிய இயந்திரத்தை உருவாக்கினர். இந்த இயந்திரம் தொழிற்சாலைகள், ஜவுளி, வேதியியல் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள், மருந்து தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், நகராட்சி நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இயந்திரத்தின் வழியாக செல்லும் கழிவுநீரில் மின்சாரத்தைச் செலுத்துவதன் மூலம் அதிலுள்ள அசுத்த வேதியியல் பிணைப்புகள் உடைக்கப்பட்டு தண்ணீர் தூய்மைப்படுத்தப்படுகிறது. 
இந்த தொழில்நுட்பம் சாதாரண வேதியியல் முறைகளில் தண்ணீரை சுத்திகரிப்பதைக் காட்டிலும் பலமடங்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இதற்காக, க்ருனல் மற்றும் அம்ரித் இருவரும் சேர்ந்து ஸ்மார்ட் மென்பொருள் அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். இந்த மென்பொருள், கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் வழியாக தண்ணீர் செல்லும்போது என்ன மாதிரியான வினைகள் நடைபெறுகின்றன என்பதை, இயந்திர கற்றல் வழிமுறைகள் (Machine Learning Algorithms) மற்றும் கணித்தல் மூலம் இயங்கி நமக்கு விளக்குகிறது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு முறை முழுக்க முழுக்க தானியங்கி முறை அல்லது ரிமோட் கன்ட்ரோல் அமைப்பு மூலம் மட்டுமே நடைபெறுகிறது.
50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு சோதனைக்குப் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வணிகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த இயந்திரம், மற்ற இயந்திரங்களைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்த இடத்தில் செயல்படுகிறது. மேலும், கழிவுநீரில் இருந்து 95 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட நன்னீரை வழங்குகிறது. 
இதையொட்டி, அனைத்திந்திய மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் மும்பை மேலாண்மை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய Digital Disrupt - The New Normal மாநாட்டில், Leading Startup-2018 என்ற அங்கீகாரத்தை இந்த்ரா வாட்டர் சிஸ்டம் பெற்றுள்ளது. 
மேலும், India Innovation Growth Program 2.0,  Lockheed Martin நிறுவனம், டாடா அறக்கட்டளை, மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து நடத்தும் IIG-2.0 திட்டத்தில் சிறந்த முதல் 50 ஸ்டார்ட் அப்-களில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
தொடங்கிய 6 மாதங்களில் ரூ. 1 கோடி வருவாய் ஈட்டியுள்ள இந்த்ரா வாட்டர் சிஸ்டம், அடுத்த 6 மாதங்களில் ரூ. 6 கோடி முதல் 7 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. 
இந்த ஸ்டார்ட்அப் குறித்து அம்ரித் கூறுகையில், "இந்த தொழில்நுட்ப மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள யோசிப்பதுதான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. தற்போதைக்கு எங்களது இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு'' என்கிறார். 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT