நீ... நான்... நிஜம்! -40: அடிமையின்... அடிமையா...  நீ?

நான் ஏற்கெனவே பலமுறை எழுதியும், பேசியும் வருகிற விஷயம் பற்றி இப்போதும் சொல்கிறேன்.
நீ... நான்... நிஜம்! -40: அடிமையின்... அடிமையா...  நீ?

நான் ஏற்கெனவே பலமுறை எழுதியும், பேசியும் வருகிற விஷயம் பற்றி இப்போதும் சொல்கிறேன். உலகத்தின் சிந்தனைப் போக்கை உலுக்கிய இருபெரும் மனிதர்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் சிக்மன்ட் ஃபராய்டு. ஆனால் இருவரும் ஒரே உண்மையின் இருவேறு பக்கங்களைப் பார்த்து விட்டு அதுமட்டுமே உண்மை என்று கருதிவிட்டார்கள். உலகையும் நம்ப வைத்துவிட்டார்கள். இருவரும் உண்மைதான் சொன்னார்கள். ஆனால் முழு உண்மையைச் சொல்லவில்லை அல்லது உண்மையின் அடி ஆழத்தைத் தொடவில்லை. 

இந்த உலகில் பிறக்கும் கோடிக்கணக்கான மனிதர்களும் கோடிக்கணக்கான தவறுகள் செய்கிறார்கள். காரணம் என்ன என்று ஆராய்ந்த கார்ல் மார்க்ஸ் சமூக அமைப்புதான் காரணம் என்றார். அது பொய்யல்ல. சமூகம் தான் தனி மனிதனை வடிவமைக்கிறது, செதுக்குகிறது, அடக்குகிறது. கொப்பளிக்க வைக்கிறது. எனவே சமுதாயம் பொதுவுடமைச் சமுதாயமாக வடிவமைக்கப்பட்டால் தனிமனித ஒழுங்கீனங்கள் மறைந்து விடும் என்று மார்க்ஸ் சிந்திக்கிறார். இது உண்மை. ஆனால் முழு உண்மையல்ல. சுதந்திரச் சமுதாயத்தில் அடிமை மனிதர்களும் அடிமைச் சமூகத்தில் சுதந்திர மனிதர்களும் தோன்றியது உண்டு. சமூகம் எப்படி இருந்தாலும் வீர்யமான வித்துக்களாக விழுந்து முளைத்த தனிமனித இயல்புள்ளவர்கள் இருக்கிறார்கள். 

மார்க்ஸýக்கு நேர்மாறாக ஃபராய்டு சிந்திக்கிறார். "ஒவ்வொரு மனிதனும் அவனது ஆழ்மனத்தால் மட்டுமே இயக்கப்படுகிறான். தன்னுணர்வற்ற அவனது ஆழ்மனம் அவனது நடத்தைகளைத் தீர்மானிக்கிறது. ஆழ்மனத்தை எதிர்த்து இயங்கும் ஆற்றல் மனிதர்களுக்கு இல்லை' என்கிறார் சிக்மண்ட் ஃபராய்டு. 

இருவரும் சேர்ந்து உலகிற்கு ஒரு நல்ல காரியம் செய்துவிட்டார்கள். எவனும் அவனவன் தவறுக்கு அவன் பொறுப்பல்ல என்று பிரகடனப்படுத்திவிட்டார்கள். கூட்டம் கூட்டமாகச் சிந்திப்பவர்களுக்கும், வெறும் தகவல் அறிவு மட்டுமே உள்ளவர்களுக்கும், கட்சி கட்டிக்கொண்டு பேசுபவர்களுக்கும் நான் சொல்வது பிடிக்காது. காரணம் அவனவன் தவறுகளுக்கு அவனவன் தான் பொறுப்பாளி. மார்க்ஸின் மனிதன் கூட்டத்தை, சமூகத்தைக் கைகாட்டி விட்டு நழுவி ஓடுகிறான். ஃப்ராயிடின் மனிதன் தன்னுணர்வற்ற ஆழ்மனத்தின் இருண்ட பகுதியைக் கைகாட்டி விட்டு தப்பித்து ஒளிந்து கொள்கிறான். யாருடைய தவறுக்கும் அவரவர் பொறுப்பில்லை என்பது மேலோட்டமான உண்மை. ஆனால் நான்தான் என் சகல குழப்பங்களுக்கும் தோல்விகளுக்கும் பிழைகளுக்கும் பொறுப்பு என்பதை உணர்வதே விழிப்புணர்வு. 

பொறுப்பான மனிதனின் முதல் பிறப்பு. முதலில் சிக்கலைப் பேசுகிறேன். பின்னர் தீர்வைப் பேசுகிறேன். ஒரு கதை சொல்லுகிறேன். ஓர் அருமையான அரசர். அவருக்கு நெருக்கமான ஓர் அடிமை. அப்படி ஒரு பணிவு. அப்படி ஒரு தொண்டு. அவன் ஊழியம் அரசரை உருக்கிவிட்டது. இவனுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்துவிட வேண்டும். தனக்குச் செய்த பணிவிடைகளுக்குப் பரிசாக அவன் விரும்பியதைத் தரவேண்டும் என்று தீர்மானித்தார். 

""உனக்கு என்ன பரிசு வேண்டும்.. தயங்காமல் கேள். நீ எனக்குச் செய்த பணிவிடைகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்'' என்று அடிமையிடம் கேட்டார். 

அவனோ ""எதுவும் வேண்டாம்.. அரசர் அண்மையே போதுமானது. பரிசு பெற்றால் என் ஊழியமே வணிகமாகி விடும்.. அன்பைக் கொச்சைப்படுத்தாதீர்கள்'' என்று மன்றாடினான். 

அரசர் நெகிழ்ந்து போனார். பிடிவாதமாகப் பரிசு பெற்றே தீரவேண்டும் என்று வற்புறுத்திப் போராடி ""உனக்கு என்ன ஆசை.. ? வாழ்நாள் ஆசை? கேள்... கேள்'' என்று கட்டாயப்படுத்தினார். 

கண்ணீருடன் மறுத்த அடிமை ""சரி.. நீங்கள் இவ்வளவு சொல்வதால் சொல்கிறேன்.. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. நான் இந்தப் பேரரசின் அரசனாக அமர ஆசைப்படுவதுண்டு. அப்போதும் உங்களைப் பிரியமாட்டேன். நீங்கள் தான் என் இடத்தில் என் அடிமையாய் மெய்க்காப்பாளனாக இருக்க வேண்டும்''  என்று உருகி உருகி கண்ணீர் விட்டான். 

""ப்பூ.. இவ்வளவுதானா? இதென்ன ப்ரமாதம்..'' என்றவர் நேரே கொலு மண்டபம் வந்து அடிமைக்கு பட்டாபிஷேகம் செய்தார். சிம்மாசனத்தில் அமர்த்தி தானே சாமரம் வீசினார். கூனிக்குறுகி அமர்ந்திருந்தவனை கம்பீரமாக உட்காரச் சொல்லி சேனாபதி, அமைச்சர்களை நோக்கி கர்ஜித்தார். ""இவர் இன்று உங்கள் அரசர். வணங்குங்கள். இவரது எல்லா உத்தரவுகளையும் மதிக்க அதன்படி நடக்க நீங்கள் கடமை உடையவர்கள். மீறுவது ராஜ துரோகம்'' என்றார். 

மதிய விருந்து, நாட்டியம், என்று ஒரு நாள் ராஜா கொண்டாடப்பட்டார். மாலை புது அரசர் சேனாபதியை அழைத்தார். ""இந்த அடிமையைக் கைதுசெய்யுங்கள்'' என்று முன்னாளை இன்னாள் கை காட்டினார். பேச வாய் திறந்த மாஜி மன்னரைப் பார்த்து ""அடிமையே மூடு வாயை'' என்று உறுமிவிட்டு ""இரவுக்குள் இந்த அடிமையைத் தூக்கிலிடுங்கள்'' என்று ஆணையிட்டார். ராஜ உத்தரவுக்கு எப்போதும் கட்டுப்பட்டுப் பழகிய சேனாபதி, அமைச்சர்கள் எல்லோருமே வாய்மூடி அரச ஆணையை நிறைவேற்றினர். 

இப்போது அடிமை நிரந்தர அரசராகி விட்டார். எல்லா அடிமைகளும் எப்படியாவது எஜமானன் ஆவதற்கு அவரவர் சக்திக்கேற்ற குறுக்கு வழிகளை எப்போதும் வைத்திருக்கிறார்கள். இது ஏதோ அரசியல் கதை என்று எண்ணினால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். நம் கதை... சொந்தக்கதை.. சோகக்கதை. மனம் தான் நமது விசுவாசமான அடிமை. அதை அடிமையாக வைத்து வேலை வாங்கத் தெரிய வேண்டும். எப்போதும் அது எஜமானராகக் காத்துக்கொண்டே இருக்கும். என்றாவது எப்போதாவது ஒருமுறை மனம் என்ற அடிமையை நீங்கள் அரசராக்கிவிட்டால் அது உங்களைக் கொன்றொழித்து விடும். நீங்கள் மீண்டும் பிழைக்கவே முடியாது. மனத்தை நீங்கள் வேலை வாங்க வேண்டும். அது உங்களை ஆட்டி வைக்க எப்படி அனுமதிக்கலாம்? 

""நான் மனமல்ல.. மனம் என் அடிமை''  என்கிற ஞான மந்திரத்தை உங்களுக்குத் தருகிறேன். இதை ஜபிக்காதீர்கள். உணருங்கள். மனதுக்கு உத்தரவு போடுங்கள். மனதின் உத்தரவுகளை நிறைவேற்றும் மடத்தனமான அரசராக ஆகிவிடாதீர்கள். மார்க்ஸýம் ஃப்ராய்டும் உங்கள் எஜமானப் பதவியைப் பிடுங்கிவிட்டார்கள். சமூகம்  உங்களை ஆட்டிப் படைக்கிறது. ஆழ்மனம் உங்களை இயக்குகிறது.. என்றால் நீங்கள் யார்? அடிமைகளா? நீங்கள் அடிமைகளல்ல... எஜமானர் என்று அறியுங்கள். 

என் பெறா மகள் ரேகா அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று குறித்துச் சொல்லுகிறேன். இளைஞர்களை மனம் புகைபிடிக்கச் சொல்லும்... சினிமா பார்க்கச் சொல்லும்... காமம் ஒருபுறம் கண்ணடித்து அழைக்கும்... அரட்டை அடிக்க விரட்டும்... நேரம் கொல்ல, உழைக்க மறுக்க சோம்பல் செய்ய தூண்டும்... நண்பர்களே மனதிடம் சொல்லுங்கள். கம்பீரமாக கர்ஜியுங்கள் "முட்டாள் மனமே... நீ என் அடிமை. நான் உன் எஜமானன்' என்று உறுதி சொல்லுங்கள். அது கேட்காது... முரண்டு பிடிக்கும்... தாஜா செய்யும்.. தடுமாறத் தூண்டும். தவறுகள் செய்ய மனம் தூண்டும் போதெல்லாம் உரக்கச் சொல்லுங்கள்... "முடியாது.. முடியாது... முடியவே முடியாது' என்று. இவை ஒலித்தொகுப்போ.. வார்த்தையோ அல்ல. மனதை ஒடுக்கும் மகாமந்திரம், யோகானந்த பரமஹம்சர் சொன்னது. ""முடியாது... முடியாது... முடியவே முடியாது''  என்பதைத் தவறு செய்யத் தூண்டும் மனதிடம் சொல்லச் சொல்ல புலியாக உறுமிய மனம் பூனையாகி மீண்டும் எலியாகி கரப்பானாகி கொசுவாகி கரைந்து கரைந்து காணாமல் போய்விடும். விளையாட்டில்லை. நண்பர்களே... நச்சரிக்கும் மனதைப் பார்த்து உத்தரவிடப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கை மாபெரும் உயரம் தொடும். 

இளம் வயதில் ஆண் பெண் கவர்ச்சி தவிர்க்க முடியாதது தான். ஆனால் அதுவே முழுநேர வாழ்வாகாதே. சினிமாக்களில் பக்கத்துப் பக்கத்து பெஞ்சுகளில் இருக்கும் பையனும் பெண்ணும் புத்தகத்தை ஒரே நேரத்தில் கீழே போட்டு, ஒரே நேரத்தில் குனிந்து எடுக்க முற்பட்டு, ஒரே நேரத்தில் மண்டையை முட்டிக் கொள்வதும் உடனே நூறு காதல் பிசாசுகள் (தேவதைகள் என்ன தேவதைகள்) ஆடிப்பாடி ஏ.ஆர். ரஹ்மான் குழுவினர் இன்னிசையோடு பாடி ஆடத் தயாராகிற கோமாளித்தனங்கள் சமூக அவலங்கள். எத்தனைப் பள்ளியில் இப்படி நடக்கமுடியும்? நம் சினிமா டைரக்டர்களுக்குக் கல்லூரி ஆசிரியர்கள் எல்லாம் அசட்டுக் காமெடியன்களாகத் தெரிவது கேவலம் இல்லையா? காமெடியன்களையே கல்லூரிப் பேராசிரியர்களாகக் காட்டி கல்வியை ஏன் சினிமாக்காரர்கள் கீழ்மைப்படுத்துகிறார்கள்?,

தெருவில் ஒரு பெண் நாய் போனால்... ஏழெட்டு ஆண் நாய்கள் பயங்கரமாகக் குரைத்தபடி கூட்டமாகப் பின் தொடரும்...இதேபோல் ஒரு பெண் பின்னாலும் ஆறேழு ஆண்கள் அலைவது அருவருப்பாக இல்லையா? ஒரு பெண்ணை ஏன் பல ஆண்கள் துரத்துகிறார்கள் என்ற கேள்விக்கு  இறையன்பு அருமையான பதில் சொல்லி இருந்தார். உயிர்க்குல படைப்பிலேயே பெண்ணுள் இருக்கும் ஒற்றை கருமுட்டையை நோக்கி ஆயிரக்கணக்கான உயிரணுக்குள் பாய்வது தானே வழக்கம். பெண் இருப்பில் இருக்க ஆண் துரத்துவது படைப்பின் பெருநியதிதான். ஆனாலும் இதை வெல்ல வேண்டாவோ? தவறான ஆசைகள் வந்தால் ""முடியாது... முடியாது... முடியவே முடியாது'' என்று சொல்ல வேண்டாவோ?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com