இளைஞர்மணி

கட்டுப்பாடு ஒரு கவசம்! 11 - ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

DIN

விவேகானந்தரின் அமெரிக்க நாட்டு சொற்பொழிவுகள், அமெரிக்க மக்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டன. அதே வேளையில், ஓர் இருபது வயதுப் பெண்ணும் மயங்கினார். அவர் சுவாமி விவேகானந்தர் சென்ற அயோவா, டெட்ராய்ட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் போன்ற இடங்களுக்குச் சென்று, சுவாமி விவேகானந்தரைப் பின்தொடர்ந்தார். கடைசியாக, ஒரு நாள் அவர் சுவாமிஜியை அவர் தங்கியிருந்த அறையில் சந்தித்தார்.
"விவேகானந்தரே! அமெரிக்க இளைஞர்கள் பலர் எனது அழகில் மயங்கி என் பின் சுற்றி வருகிறார்கள்; ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். நாம் திருமணம் செய்துகொண்டால் எனது அழகோடும், உங்கள் அறிவோடும் ஒரு குழந்தை பிறக்கும். அக்குழந்தை இவ்வுலகையே ஆளும்'' என்றார், அப்பெண். 
அதற்கு சுவாமி விவேகானந்தர் புன்சிரிப்போடு, "தாயே! நான் பிரம்மச்சாரியம் கடைப்பிடிப்பவன், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். மேலும், அழகான பெண்ணும், அறிவான ஆணும் திருமணம் செய்துகொண்டால், பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்கும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வமான உத்திரவாதமும் இல்லை. உங்களுக்கு என்னைப் போன்ற குழந்தைதானே வேண்டும்? என்னையே உங்கள் குழந்தையாக ஏற்றுக் கொள்ளுங்கள், தாயே'' என்றார். "பறவைகள் உங்கள் தலைமேல் பறப்பதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவை உங்கள் தலையில் கூடுகட்டுவதைத் தடுக்க முடியும்' என்ற சீனப் பழமொழிக்கேற்ப, சுவாமிஜி தனக்கு வரவிருந்த இக்கட்டான சூழலைத் தவிர்த்தார். அப்பெண்ணும் தனது தவறை உணர்ந்து, சுவாமிஜியைக் கண்டு வியந்தார். 
"ஒருவர் கட்டுப்பாடின்றி இருப்பது, ஒரு நகரத்தின் கோட்டை மதிற்சுவர்கள் சிதிலம்அடைந்து இருப்பதைப் போன்றது' என கூறுகிறது பைபிள். உண்மையில் கட்டுப்பாடு, மனிதனின் கவசம். அது மனிதனைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றும். மனிதனின் ஆற்றல் அளப்பரியது. அது காட்டாற்று வெள்ளம்போல் ஒவ்வொரு மனிதனிடத்தும் தோன்றும். காட்டாற்றின் வேகத்தை வழிப்படுத்துபவை அணைகள். அணைகள், வேகத்தை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை; ஆற்றலைத் தேக்குகின்றன. தேக்கிய நீரால், வறண்ட நிலங்கள் வளம்பெறும்;
வறட்சிக் காலத்திலும் பயன்பெறும்; வற்றும் ஆறுகளை வற்றாத ஜீவநதியாக்கும்; மொத்தத்தில் நிலத்தை என்றென்றும் வளப்படுத்தும். அதைபோல, மனிதனிடமுள்ள ஆற்றலை வழிப்படுத்தவேண்டும்' என்கிறார் திருமூலர்.
"மனிதனிடத்தில் உள்ள மெய், வாய், கண், காது, மூக்கு என ஐம்புலன்களும், காட்டு மாடுகளைப்போல் யாருக்கும் கட்டுப்பட மறுக்கும். மாடுகளைச் சரியாய்க் கட்டுப்படுத்தினால் அவற்றிலிருந்து அதிகமான பாலைச் சுரக்க முடியும். அதுபோல மனிதனின் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தினால் அளப்பரிய பலன்களைப் பெற முடியும்' என்கிறார்.
இந்த உலகில் வாழ்கின்ற உயிர்களில் தனக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்து வாழ்கின்ற உயிர்கள் மட்டுமே இந்த மண்ணுலகில் நீண்ட நாள் வாழ்கின்றன. "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்' என்று திருவள்ளுவர் கூறியது போல், ஆமை தனது ஐந்து அவயங்களையும் அடக்கி வாழ்கிறது. ஆதலால், சுமார் 250 ஆண்டுகள் வரை அது உயிர் வாழ்கிறது.
சிறிய கட்டுப்பாடுகள் காலத்தினையும், ஆற்றலையும் சேமிக்கும். தவறுகளைத் தடுக்கும். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு. திருமாளிகைத் தேவர் என்பவர், மண்ணில் பிறந்த நாள் முதல் தனது எழுபத்தைந்து வயது வரை எவ்வித மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. மன்னர் அவரை வரவழைத்தார். "எப்படி இவ்வாறு நோயின்றி வாழ்ந்து வருகின்றீர்?'' என்று கேட்டார். அதற்கு அவர்,
"ஓரடி நடவேன்
ஈரடி கடவேன்
இருந்து உண்ணேன் 
கிடந்துறங்கேன்! '' - என்றார். 
"அப்படியா! இதற்கு என்ன பொருள்?'' என்றார் மன்னர். 
"ஓரடி நடவேன் என்றால், எனது நிழல் என் காலடியில் இருக்கும் நேரம் அதாவது உச்சிப்பொழுதில் எப்பொழுதும் நடக்கவே மாட்டேன். "ஈரடி கடவேன்' என்றால் ஈரமுள்ள இடத்தில் படுத்து உறங்க மாட்டேன், இருந்து உண்ணேன் என்றால் முதலில் உண்ட உணவு செரிக்காமல் மேலும் உண்ண மாட்டேன், கடைசியாக "கிடந்துறங்கேன்' என்றால் உழைத்து அயராமல் வெறுமனே படுத்து உறங்க மாட்டேன்'' என்றார். இத்தகைய கட்டுப்பாடான ஒரு வாழ்க்கைதான் திருமாளிகைத் தேவரை மண்ணில் பிறந்தது முதல் விண்ணில் மறைந்தது வரை மருந்தே இல்லாமல் வாழச் செய்தது. 
மகாத்மா காந்திஜியின் மேசையை அலங்கரித்தது மூன்று குரங்கு பொம்மைகள். அவை, மனிதத்தின் மனதைப் பிரதிபலித்தவை. குரங்கு போலவே, தாவித் தாவி ஓடும் எண்ணத்தையும், அதனோடு பயணிக்கத் துடிக்கின்ற மூன்று புலன்களையும், உருவகப்படுத்திய பொம்மைகள். தீயதைப் பார்க்காமலும், தீயதைக் கேட்காமலும், தீயதைப் பேசாமலும் இருந்தால், தீயது ஒரு மனிதனுக்கு ஏற்படாது, அவரால் பிறருக்கும் தீயவை நடக்காது என்று புரிய வைத்தது. தீயவை அற்ற நிலையில் அங்கே நல்லவை மட்டுமே பூவாய் மலரும். அது நாற்புறமும் அற்புதமாய் நறுமணம் வீசும். 
"வெற்றிக்கு அடிப்படையான காரணி சுயகட்டுப்பாடு' என்கிறது ரிக்வேதம். 
2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரியோ ஒலிம்பிக் நடைபெற்றது. அதற்கு இந்தியாவில் இருந்து பேட்மிண்டன் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தவர் சிந்து. அதற்கு முந்தைய இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீனியர் போட்டியில், முதல் சுற்றிலேயே தோல்வியோடு வெளியேறினார். ஒலிம்பிக் கனவுகள் சிதைந்து விடுமோ என்று அச்சம். சிந்துவின் பயிற்சியாளர் ஆராய்ந்தார். சிந்துவின் கண்களிலும், கைகளிலும் விளையாடிய செல்போன்தான் கவனச்சிதைவுக்கு காரணம் என்று அறிந்தார். உணவுகட்டுப்பாடின்மை மற்றொரு காரணமாயிருந்தது. சிந்துவிடம், "ஒலிம்பிக்கில் பதக்கம் பெறவேண்டும் என்றால், இரண்டு கட்டுப்பாடுகள் அவசியம். ஒன்று செல்போனை மறந்துவிடு, மற்றொன்று உணவு முறையில் பிரியாணி, பீட்சா, ஐஸ்கிரீம் எதுவும் கூடாது'' என்றார் கோபிசந்த். அடுத்த வினாடியே சிந்து தனது செல்போனை பயிற்சியாளரிடம் கொடுத்தார். கட்டுப்பாடான உணவுமுறைக்குள் தன்னைக் கட்டுப்படுத்தினார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை தேடிதந்தார். 
கட்டுப்பாடு என்பது அடக்குமுறை அல்ல. அக்கறையோடு கூடிய ஓர் அணுகுமுறை. தவறுகளைத் திருத்தும்போது குழந்தைகள் வருத்தப்படுவர். சில நேரங்களில் கண்ணீர் விடுவர். அதற்காக தவறுகளைக் கட்டுப்படுத்த மறுத்தால், பிற்காலத்தில் பெற்றோர் வருத்தப்படுவர், கண்ணீர்விடுவர். குழந்தையின் கதறல்களையும், உதறல்களையும், கட்டுப்படுத்தி, சங்கினில் இருக்கும் மருந்தினை குழந்தையின் வாயின் ஒரத்தில் மெதுவாய் நிறுத்தி, உட்செலுத்தும் அன்னையைப் போல் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். அதைவிடுத்து, பழுத்த கம்பியால் தொடையில் இடும் சூடெல்லாம் குழந்தைகளின் மீது வெறுப்பு கொண்டதின் அடையாளமாக அமைந்துவிடும்.
ஒரு மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தார் ஒரு முனிவர். மரத்தின் மேலிருந்த சில பறவைகள், பயங்கரமாய் கூச்சலிட்டன. அமைதி காக்கச் சொன்னார் முனிவர். செவிசாய்க்க மறுத்தன பறவைகள். முனிவர் தனது மந்திரத்தால் எல்லா பறவைகளையும் பறக்கவிடாமல் முடிச்சுகளைப் போட்டு கட்டி வைத்தார். பறவைகள் செய்வதறியாமல் திகைத்தன. பின்னர் முனிவர், அங்கிருந்து கிளம்பி வேறு இடம் சென்றுவிட்டார். அவ்வழியே, வந்த மற்றொரு முனிவரைப் பார்த்த பறவைகள், "சுவாமி! முன் இருந்த முனிவர் போட்ட முடிச்சுகளை அவிழ்த்து விடுங்கள்'' என்று வேண்டின. முனிவர் தனது மந்திர சக்தியால் முன்னவர் போட்ட முடிச்சுகளின் அருகிலேயே வேறொரு இறுக்கமான முடிச்சைப் போட்டார். பறவைகள் எல்லாம் வலி தாங்காமல், "எங்களை காப்பாற்றிவிடுவீர்கள் என்று நினைத்தோம். ஆனால், இப்படி இறுக்கமாக கட்டி விட்டீர்களே'' என்றன. அதே, நேரத்தில் இறுக்கமான முடிச்சால், பழைய முடிச்சு மெதுவாக அவிழ்ந்தது. பின்னர், தான் போட்ட முடிச்சயையும் அவிழ்த்தார். பறவைகளெல்லாம் அவருக்கு நன்றி கூறின. "தாங்கள் ஏன் இப்படி செய்தீர்கள்?'' என்று கேட்டன பறவைகள். "என்னால் முனிவர் போட்ட முடிச்சுகளை அவிழ்க்க முடியவில்லை. அதனால் தான், அதை இலகுவாக்க, அதைவிட இறுக்கமாக உங்களைக் கட்டினேன். பின் நான் போட்ட முடிச்சுகளை அவிழ்த்து உங்களை விடுவித்தேன்'' என்றார்.
கட்டுப்பாடுகளை தகர்த்தெறிபவர், சமூகத்தின் எச்சரிக்கை. கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்பவர் சாதனையாளர். கட்டுப்பாடுகளோடு, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்பவர் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டு. 
"வாழ்வின் உயரங்களைத் தொட முக்கிய பத்து குணாதிசயங்களில் முக்கியமானது சுயகட்டுப்பாடு. நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளில் சுதந்திரமாக தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கு தன்னைச் செதுக்கிக் கொள்வது' என்கிறார் The Psychology of Winning என்ற புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் டென்னிஸ் வெயிட்லி.
குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தரிலிருந்த புத்திலிபாய் அம்மையார் தனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தார். அதில் சூரியன் தெரிகின்ற நாட்களில் மட்டுமே உணவு உண்பார். இல்லையெனில், அன்றைய நாளை அவர் விரதமாகவே கணக்கிடுவார். அவரிடம் அவரது மகன் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் பாரிஸ்டர் பட்டம் பெற, லண்டன் செல்ல விருப்பம் தெரிவித்தார். தனது மகன் வெளிநாடு சென்றால் கெட்டுப்போய் விடுவான் என்று அவர் அஞ்சினார். அனுமதிக்க மறுத்தார். காந்திஜி, காரணம் கேட்டார். அதற்கு, "வெளிநாடு சென்று வந்தவர்கள் மாமிசம் உண்கிறார்கள், மது அருந்துகிறார்கள் என்றார். மேலும், உனக்கு இப்பொழுதுதான் திருமணம் ஆகி உள்ளது; உன்னை பிரிந்து வாழும் கஸ்தூரிபாய்க்கு என்ன பதில் சொல்வது?'' என்றார். உடனடியாக காந்தி, "அம்மா நான் மாமிசம் உண்ணமாட்டேன், மது அருந்தமாட்டேன், மாதுவைத் தொடமாட்டேன்'' என சத்தியம் செய்தார். 
"நாம் எதைச் செய்யமுடியும் என்கிற சக்தியும், நாம் எதைச் செய்யக்கூடாது என்கிற சக்தியும்தான் ஒரு மனிதனின் சுய கட்டுப்பாட்டினை நிர்ணயிக்கிறது' என்ற அரிஸ்டாட்டிலின் வரிகளுக்கேற்ப, தனது சுய கட்டுப்பாட்டினால் மகாத்மாவாக உருவானார். காந்தியின் கட்டுப்பாடுகள், அவரது அன்னையைப் போலவே விரதங்களாலானது.
ஆகவே, கட்டுப்படுத்தத் தொடங்கினாலே வாழ்க்கை அழகாகும். சிதறிய பூக்களைக் கட்டுப்படுத்தினால் அழகிய மாலை; சிதறிய வார்த்தைகளைக் கட்டுப்படுத்தினால் ரசிக்கும் கவிதை; கட்டுப்படுத்தப்பட்ட நடை, அணிவகுப்பு; சிதறும் மனதைக் கட்டுப்படுத்துவதே அழகிய வாழ்க்கை.
கட்டுப்பாடு ஒரு கவசம்!
சுயகட்டுப்பாடு ஓர் ஆயுதம்!!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT