வாங்க இங்கிலீஷ் பேசலாம் 158 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 158 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே வினி எனும் 12 வயதுச் சிறுமியும், அவளது பாட்டியும் இருக்கிறார்கள். அப்போது நடாஷா எனும் பெண் போனில் பேசுவதை கேட்க நேரும் கணேஷ், அவள் பயன்படுத்திய lose no time எனும் சொற்றொடரின் பொருள் என்னவென புரொபஸரிடம் கேட்கிறான். அப்போது குறுக்கிடும் நடாஷா, ஒருவரது தனிப்பட்ட உரையாடலில் மற்றவர் eavesdrop செய்வது, அதாவது ஒட்டுக்கேட்பது, நியாயமா என வினவுகிறாள். அதற்கு பதிலளிக்கும் கணேஷ் I didn't eavesdrop, I only overheard என்று நியாயப்படுத்துகிறான். தன் தரப்பு சரி தானே என புரொபஸரிடம் கேட்கிறான். 

புரொபஸர்: Eavesdrop என்றால் ஒட்டுக்கேட்பது. Overhearing என்பதும் அது தான். ஆயினும் இரண்டுக்கும் இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அடுத்தவரின் சொற்களை எதேச்சையாய், அவர்களுக்குத் தெரியாமலே ஒட்டுக்கேட்பது overhearing. வேண்டுமென்றே கேட்பது eavesdropping.
முன்பு நாங்கள் ஓர் ஒண்டுக்குடித்தன வீட்டில் வாழ்ந்தோம். பக்கத்து வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்குள் நடுவே ஒற்றைச்சுவர். அங்கே முனகினால் எங்களுக்கு இங்கே ஸ்பெஷல் எபக்டோடு கேட்கும். ஒருநாள் அங்கே ஒரு குழந்தை சத்தமாய் வீறிட்டழுகுகிறது. அதன் அப்பா சொல்கிறார், "இந்த ராடை எடுத்து உன் மண்டையை பொளக்க போறேன்'.' அதைக் கேட்டு என் மனைவி மீனுவுக்கு பதறிப் போயிடுச்சு. குழந்தை சத்தமா அழுவுது. திடீர்னு ஒரு சத்தம் - பளீர்னு அறையற சத்தம். அடுத்து, அந்த குழந்தை ஒரேயடியாய் அமைதியாயிடுச்சு. ரொம்ப நேரமா சத்தமே இல்ல. மீனுவுக்கு ஒரே பதற்றம். ""வாங்க போய் பார்க்கலாம். அந்த பாப்பாவுக்கு என்னவோ ஆயிடுச்சு''' என என்னை கெஞ்சுகிறாள். எனக்கோ எப்படி பக்கத்து வீட்டுக்குப் போய் விசாரிக்கிறது, அதுவும் "நீங்க பேசுறது, குழந்தையை அறைஞ்சது எங்களது வீட்டுக்குள்ள இருந்தால் கேட்குது' என சொல்ல தயக்கம். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் எங்க மேல தப்பில்ல. ஏன்னா இது eavesdropping இல்ல, overhearing, 
கணேஷ்: ரொம்ப தத்ரூபமா விளக்குனீங்க சார்.
நடாஷா: சரி, ஆனால் அந்த குழந்தைக்கு என்னாச்சு?
புரொபஸர்: இரவெல்லாம் நாங்க தூங்காம பிராத்தனை பண்ணிக்கிட்டு இருந்தோம். ஆனால் நாங்க அடுத்த நாள் அது தெருவில விளையாடுறதைப் பார்த்தோம். எந்த பிரச்னையும் இல்ல. 
கணேஷ்: சார் இந்த lose no time என்றால் என்ன?
புரொபஸர்: Didn't lose any time எனப் பொருள். இன்னும் சுருக்கமா சொல்றதுன்னா I will do it immediately. 
கணேஷ்: ஓ! ஆனா I will do it immediately இன்னும் சுலபமா புரியும்படியா இருக்கே? பிறகு ஏன் இந்த lose no time எல்லாம் பயன்படுத்தணும்?
புரொபஸர்: நல்ல கேள்வி. நடாஷா நீ என்ன சொல்றே?
நடாஷா: அது என்னோட ஸ்டைல். நான் அப்படி சொல்றதைத் தான் விரும்பறேன். குறிப்பா எந்த காரணமும் இல்ல. I have always said I shall lose no time in responding to you. ரொம்ப வருசமா இப்படித் தான் சொல்லி வரேன்.
புரொபஸர்: நான் அப்படி நினைக்கல. இதுக்குப் பின்னால் ஒரு காரணம் உண்டு. நீ ஒரு விசயத்தை நேரடியா சொல்ல விரும்பலைன்னா சுத்தி வளைச்சு மழுப்பலா பதில் சொல்லுவே. உதாரணமாக, உன் கிட்ட ரெண்டு சாக்லேட் பார் இருக்குது. உன் ஆத்ம தோழி ஒண்ணு கேட்கிறா. நீ அவளிடம் "இல்ல என்னால தர முடியாது. எனக்கு ரெண்டுமே வேணும்' என சொன்னால் அது முரட்டுத்தனமா, அநாகரிகமா இருக்கும். ஆனால் "எனக்கு தர விருப்பமே. ஆனால் எனக்கு ரொம்ப பசிக்குது. இன்னொரு சந்தர்ப்பத்தில் இது போல் நீ கேட்டால் உனக்கே ரெண்டு சாக்லேட்டையும் தந்திடுவேன்' என சொல்லலாம். ரெண்டுமே ஒரே விசயம் தாம், ஒன்று நேரடியாக "தர முடியாது' என சொல்வது, மற்றொன்று அதையே சுத்தி வந்து மூக்கைத் தொட்டு சொல்றது. இப்படி பேசுபவர்கள் தயங்குகிறார்கள் எனப் பொருள். இதை ஆங்கிலத்தில் amphibology என்பார்கள்.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com