பிளாஸ்டிக் பைக்கு மாற்று "ரிஜெனோ' பை!

ஏரி, குளம், கண்மாய், கிணறுகள், கடல், நிலம் காற்றினை மாசுபடுத்தியும், மனித உயிர்களுக்கும் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கும் எமனாகவும் மாறியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தும்
பிளாஸ்டிக் பைக்கு மாற்று "ரிஜெனோ' பை!

ஏரி, குளம், கண்மாய், கிணறுகள், கடல், நிலம் காற்றினை மாசுபடுத்தியும், மனித உயிர்களுக்கும் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கும் எமனாகவும் மாறியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
 வழக்கமான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியவர்களும், கடைக்கு துணிப் பை, பாத்திரங்கள் கொண்டு போகத் தயங்குபவர்களும் இனி என்ன செய்வார்கள் ? இவர்களுக்கு உதவ இருக்கவே இருக்கிறது "ரிஜெனோ' பைகள்.
 பார்க்க பிளாஸ்டிக் பை போல அச்சாக இருந்தாலும் "ரிஜெனோ' பைகளில் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் எந்தவித ரசாயனப் பொருளும் இல்லையாம். மக்கும் தன்மையுடன் இருக்கும் இந்தப் பை வெந்நீரில் போட்டால் கரைந்துவிடும். எரித்தால் காகிதம் போல் எரிந்து சாம்பல் உருவாகும். பை கிழியும் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ முதல் ஐந்து கிலோ எடையுள்ள பொருள்களை இந்தப் பையில் போட்டு கொண்டு வரலாம். ரசாயன பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக அமைந்திருக்கும் "ரிஜெனோ' பைகளை அறிமுகம் செய்திருப்பவர் கோவையைச் சேர்ந்த சிபி. "ரிஜெனோ' குறித்து சிபி பகிர்கிறார்:
 "பிளாஸ்டிக் பயன்பாடு, பிளாஸ்டிக் கழிவுகள் உலகுக்கும், மக்களுக்கும் விஷமாக மாறிவிட்டிருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவை விட சென்ற பத்து ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்களின் அளவு பல மடங்கு அதிகம். அதன் பின்விளைவுகள் மனித வாழ்க்கைக்கு அபாயமாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள் கிடைக்கும் இடங்களில் நிலத்தின் அடியில் மழை நீர் இறங்குவதில்லை. பிளாஸ்டிக் இன்று பிரபஞ்ச பிரச்னையாகி விட்டது. மக்களும் பிளாஸ்டிக்கை பல உருவங்களில் வடிவங்களில் பயன்படுத்தி பழக்கப்பட்டு விட்டார்கள். அதனால் அதன் பயன்பாட்டை எப்படி திடீரென்று நிறுத்துவது என்று திகைத்துப் போயிருக்கிறார்கள். மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்குகள் அளவு, மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் அளவில் வெறும் ஐந்து சதவீதம்தான். பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் மக்க ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும். ஆக நாளைய சந்ததிகளுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் பெரிய சவாலாக மாறியுள்ளது.

ரிஜெனோ பைகள் மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் மக்கி மண்ணோடு மண்ணாகும். மக்காச் சோளம், மரவள்ளிக் கிழங்கு, காய்கறி கழிவுகளிலிருந்து கஞ்சி தயாரித்து அதனுடன் காகிதம் , பிசின் கலந்து உருவாக்கப்படும் கலவையிலிருந்து "ரிஜெனோ' தயாரிக்கப்படுகிறது. இந்தக் கலவையில் எந்த ரசாயனப் பொருளும் சேர்க்கப்படாததால், சுற்றுப்புறச் சூழ்நிலையை இந்தப் பைகள் மாசு படுத்தாது.
 அமெரிக்காவில் படிக்கச் சென்ற எனக்கு அங்கேயே வேலையும் கிடைத்தது. சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். பிறகு வேலையை விட்டுவிட்டு கோவை திரும்பினேன். என்ன தொழில் செய்யலாம் என்று யோசனை செய்தபோது இயற்கையுடன் இணைந்து போகும், அடுத்த தலைமுறைக்கு பங்கம் விளைவிக்காத "ரிஜெனோ' பைகளைத் தயாரிப்பது என்று முடிவு செய்தேன்.
 வெளிநாடுகளில் இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பைகள் பிளாஸ்டிக் பை போலவே மெல்லியதாக இருக்கும். அவை அங்கே பயன்பாட்டில் உள்ளது. அந்த யுக்தியைக் கடைப்பிடித்து இங்கே உள்ளூரில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு பைகள் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான கருவிகளை இறக்குமதி செய்தேன். ஒரு பையின் விலை "அளவுக்கு' ஏற்ற மாதிரி ஒன்றரை முதல் ஐந்து ரூபாய் வரை விற்கலாம்.
 எனது "ரிஜெனோ பைகள் சந்தையில் அறிமுகமாகி ஓர் ஆண்டு ஆகிறது. சென்ற மாதம் வரை ஏதோ சுமாராக விற்பனை நடந்தது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை வந்த பிறகு ரிஜெனோ பைகளுக்கு ஆர்டர்கள் குவிகின்றன. ரிஜெனோ பையில் தண்ணீர் பட்டால் அதன் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்படாது. அதிக நேரம் தண்ணீர் கலந்த பொருள்களைக் கொண்டு போகும் போது, பை தண்ணீரில் ஊறி, கொஞ்சம் தொய்வடையும். அவ்வளவுதான். வெந்நீரில் மட்டும்தான் ரிஜெனோ கரையும். பைகளில் சேர்க்கப்படும் நிறங்களும் இயற்கையானவை. அதனால், தெரிந்தோ தெரியாமலோ, கால்நடைகள் ரிஜெனோ பையைத் தின்றுவிட்டாலும் எந்தவித உடல்நலப் பாதிப்பும் ஏற்படாது. பெங்களூருவில் இந்தவகை பைகள் பயன்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் முதன் முதலாகக் கோவையில் மட்டும்தான் அறிமுகமானது. தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் ரிஜெனோவைக் கொண்டு சேர்க்க எங்கள் குழு செயல்பட்டுவருகிறது'' என்கிறார் சிபி.
 - சுதந்திரன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com