வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 174: ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 174: ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா எனும் பெண்ணிடம் நட்பாகிறார்கள். நால்வரும் மருத்துவரின் அறையில் உரையாடுகிறார்கள். அப்போது நடாஷா 
ergophobia எனும் புதிய சொல்லொன்றை பயன்படுத்தி, கணேஷ் அதன் அர்த்தம் என்ன என வினவுகிறான்.
நடாஷா கணேஷிடம்: சொல்றேன் கேளு. வேலை போயிடுமோங்கிற பயம்.
சேஷாச்சலம்: இல்ல தப்பும்மா.
நடாஷா: நீங்களும் இங்கிலிஷ் டீச்சரா என்ன?
புரொபஸர்: ஆமா, சேஷாச்சலமும் என் கூட ஒரே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிச்சவன் தானே. Brilliant student. ஆனால் பிடிச்ச விசயத்தை வேலைக்காக படிக்கக் கூடாதுன்னு ஒரு கொள்கை வச்சிருந்தான். அதனால தனக்கு பிடிக்காத ஒண்ணை படிச்சு டாக்டராயிட்டான். 
சேஷாச்சலம்: ஆமா நான் பிடிக்காததை படிச்சேன், இவனோ படிக்காததை பிடிச்சிட்டிருக்கான். ஹா ஹா ஹா...
புரொபஸர்: இவன் பயங்கர கிரேஸி மோகன் விசிறி.
சேஷாச்சலம்: சரி அதை விடு, மேட்டருக்கு வரேன். Ergo என்றால் வேலை. Phobia என்றால் பயம். அதனால ergophobia என்றால் வேலை பற்றின பயம். வேலை போயிடுமோங்கிற பயமில்ல. அதாவது ரெண்டுக்கும் ஒரு நுணுக்கமான ஆனா முக்கியமான வித்தியாசம் இருக்கோல்லியா? 
நடாஷா: ஆமா. புரியுது. அதாவது பயம்; வேலை போயிடுங்கிற நிஜமான சூழலைப் பற்றின பயம் அல்ல இது. தாம் செய்யிற வேலையை சரியா செய்யாம போனா என்னாயிடுமோங்கிற பயம். சரியா?
சேஷாச்சலம்: Correct. Layoff பற்றின நிஜமான பயம் இல்லை. தன்னால் ஒரு வேலையை சரியா, முழுமையா பண்ண முடியுமாங்கிற பதற்றம், அழுத்தம், நெருக்கடியை சமாளிக்க முடியாத தத்தளிப்பு இதெல்லாம் தான் ergophobia. என் கிட்ட இன்னிக்கு சிகிச்சைக்கு வருகிற இளைஞர்களில் கணிசமானோருக்கு இது உண்டு. இதை மறைக்கிறதுக்காக தண்ணி, போதை மருந்து, பார்ட்டின்னு தங்களை அலைகழிக்கிறாங்க. ஒரு கட்டத்தில they break down.
கணேஷ்: Break down என்றால் காதலர்கள் பிரியறது இல்லையா?
புரொபஸர்: இல்ல அது break up.
சேஷாச்சலம்: Couples first break down and then break up.
கணேஷ்: புரியல.
சேஷாச்சலம்: Breakdown என்றால் மனரீதியாய் சீர்குலைவது. நிலநடுக்கத்தின் போது ஒரு கட்டடம் மளமளவென சரிவது போல. குறுகிய காலத்தில் ஒருவர் தன் வாழ்வின் இயல்பு
நிலையை இழந்து, மருந்து, சிகிச்சை, ஆலோசனை, குடும்ப ஆதரவு ஆகியவற்றை நம்பி வாழும் நிலை ஏற்படுவது. அதாவது, a sudden collapse in someone’s mental health.
ஆனால் break up என்றால் ஒரு காதல் ஜோடி பிரிவது. அதே போன்று ஒரு கூட்டத்துக்கு வந்தவர்கள் கலைவது, அதாவது disperse / disband ஆவதையும் break up என்பார்கள். The 50 of us, who gathered at the beach to protest against the ill-treatment of the stray dogs, broke up after ten minutes of sloganeering. அதாவது, தெருநாய்கள் அவலமாய் நடத்தப்படுவதை கடற்கரையில் எதிர்த்து போராட கூடிய நாங்கள் 50 பேர் பத்து நிமிடங்கள் கோஷம் இட்டபின் கலைந்து சென்றோம்.
கணேஷ்: ஓ! ஆனால் டாக்டர் தெருநாய்க்கு எல்லாம் கூடவா போராடுவாங்க?
சேஷாச்சலம்: Why not? மிருக உரிமைப் போராளிகளைப் பொருத்தமட்டில் நாய்ப்பிரச்சனை மனிதப் பிரச்னையை விட பெரிசு.
கணேஷ்: Sloganeering என்றால் கோஷமிடுவதா? 
சேஷாச்சலம்: ஆமா. 
புரொபஸர்: நானும் சேஷாச்சலமும் எங்க மாணவப் பருவத்தில் எம்.ஆர். ராதாவோட மேடை நாடகங்கள் பார்க்கப் போவோம். அப்போ ராதா மேடையில வந்து 
impromptuவாக எதையாவது கிண்டலாக சொல்லத் தொடங்கியதும் the people watching will just break up. அதாவது அவங்க கட்டுப்படுத்த முடியாம சிரிப்பாங்க.
கணேஷ்: அதென்ன இம்ப்ராம்ட்யூ?
புரொபஸர்: இம்பிராம்ட்யூ. அதாவது திட்டமிடாம தற்செயலா பேசறது, பண்றது. ராதா இம் பிராம்ட்யூவில் வித்தகர்.
சேஷாச்சலம்: பிரேக் அப்புக்கு இன்னொரு பொருள் பிரேக் டவுனுக்கு ரொம்ப பக்கத்தில வரும். அது ஒரு கொச்சை வழக்கு. After his boss reproved his project presentation, he broke up. அதாவது, அவனது பாஸ் அவனது பிராஜெக்ட் பிரசெண்டேஷன் நன்றாக இல்லை என விமர்சிக்க அவன் மனம் உடைந்து போனான். 
நடாஷா: டாக்டர், நீங்க புரொபஸராகவே ஆகியிருக்கலாம். சரி எனக்கு ஒரு டவுட்.
சேஷாச்சலம்: கேளும்மா. 
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com