சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 31- தா.நெடுஞ்செழியன்

ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி வழியாக வந்து சென்னையை ஆளும்போது, சென்னையில் எண்ணற்ற மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து வந்தனர்.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 31- தா.நெடுஞ்செழியன்

ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி வழியாக வந்து சென்னையை ஆளும்போது, சென்னையில் எண்ணற்ற மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து வந்தனர். அப்போது (1852 ஆம் ஆண்டு) சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் தொடங்கப்பட்ட பள்ளிதான் இன்றைய இந்து உயர்நிலைப் பள்ளி. 1852-ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களுக்காக "திராவிட பாடசாலா' மற்றும் தெலுங்கு மாணவர்களுக்காக இந்து பலூரா பாடசாலா (HINDU BALURA PADHASALA) என இரு பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்னர் 1860-ஆம் ஆண்டு இரு பள்ளிகளும் ஒன்றாக ஆக்கப்பட்டு THE TRIPLICANE ANGLO-VERNACULAR HIGH SCHOOL என்றழைக்கப்பட்டது. அதன்பின் 1897-ஆம் ஆண்டு இந்து உயர்நிலைப் பள்ளி (HINDU HIGH SCHOOL) என பெயரிடப்பட்டது.
இப்பள்ளியின் தொடக்கக் காலத்தில் அதன் தலைமையாசிரியர் வெள்ளியம்பல உடையாரின் மாதச் சம்பளம் பத்து ரூபாய் மட்டுமே. அவருக்கு உதவிபுரிந்த இரு ஆசிரியர்களின் மாதச் சம்பளம் மூன்று ரூபாய் ஆகும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க 1868-ஆம் ஆண்டு தலைமையாசிரியரின் மாதச் சம்பளம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டது. எனினும் இப்பள்ளி நிர்வாகம் கொடுத்த நிதி நெருக்கடி காரணமாக பள்ளியை நடத்த மிகச் சிரமப்பட்டனர். 
அப்போது பள்ளி நிர்வாகம் ராவ்பகதூர் எம்.ஏ.சிங்கராச்சாரியாரின் உதவியை நாடியது. இவர் புகழ்வாய்ந்த மைசூர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். 1841-ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னை மாகாணத்தில் முதன் முதலில் ஆங்கிலக் கல்வியைத் தொடங்கும்போது மைசூரில் இருந்து சென்னைக்கு வந்து பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். இவருடைய தாத்தா பிரதான் திருமால் ராவ் முகமதியர்கள் மைசூரைக் கைப்பற்ற முயற்சிக்கும்போது மிக முக்கியமாக இராணுவ வீரர்களை வழிநடத்தியவர். எம்.ஏ.சிங்கராச்சாரியார் அரசுப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்து பின்னர் பிரசிடென்சி கல்லூரியில் பணியாற்றினார். இவர் 1864 ஆம் ஆண்டு ஆண்டர்சன் பள்ளியில் (தற்போது மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி) ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின் 1866 ஆம் ஆண்டில் MADRAS BANK (LATER KNOWN AS IMPERIAL
BANK) இல் Asst.Cash keeper- ஆக இருபது ஆண்டுகள் (1866-1886) வரை சிறப்பாகப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அதன் பின் அவர் 38 ஆண்டுகள் இந்து மேல்நிலைப் பள்ளி வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்தார். இவருடைய வாழ்க்கையில் கல்விக்காக இவர் அளித்த பங்கு, இவர் உருவாக்கிய அடித்தளம் கல்வி வரலாற்றில் எண்ணற்ற மாணவர்கள் இன்றும் - 150 ஆண்டுகள் கடந்தும்- இந்தப் பள்ளியில் பயின்று வாழ்வில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. 
1870-ஆம் ஆண்டு இப்பள்ளியில் ஆங்கில மொழி வாயிலாக மாணவர்கள் பயில வழிவகுத்தார். அதன் காரணமாக திருவல்லிக்கேணியில் பயின்ற மாணவர்களின் ஆங்கில அறிவு சிறந்து விளங்க உதவியது. 1873 -ஆம் ஆண்டு இடவசதி பற்றாக்குறை காரணமாக பெண்கள் பள்ளி விஜயநகர அரசரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் அரசு அதனை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியாக மாற்றி நடத்தி வருகிறது. இதுதான் தற்போது சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆகும். 
1885-ஆம் ஆண்டு இப்பள்ளிக்கான நிதி நிறுத்தப்பட்டது. 1889-ஆம் ஆண்டு இப்பள்ளிக்கான அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் இப்பள்ளி மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது. எண்ணற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியிலேயே சேர்க்க விரும்பினர். இப்பள்ளியின் தேர்வு முடிவுகளும், மக்கள் செல்வாக்கும் சிறந்து விளங்கியதைப் பாராட்டி Dr.David Dimcam- அப்போதைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் குறிப்பிட்டுள்ளதாகச் சான்றுகள் உள்ளன. பள்ளியில் நிதி நெருக்கடி இருப்பினும் பள்ளியின் பிரதான கட்டடம் (MAIN BUILDING) ரூ.57,637க்கு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் கட்ட முக்கிய காரணமாக இருந்த கட்ட ஒப்பந்தக்காரர் டி.நம்பெருமாள் செட்டி, பள்ளி தந்த நிதி தவிர, மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவர் தனது பணத்தை எந்த ஒரு எதிர்ப்பார்ப்புமின்றி கல்விக்காக அளித்து பிரதான கட்டடம் மட்டுமின்றி பல்வேறு கட்டடங்கள் கட்டி பள்ளி இட வசதி மேம்பட உதவினார். 1897-ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநர் சர் ஆர்தர் ஹேவ்லாக் இப்பள்ளியின் பிரதான கட்டடத்தைத் திறந்து வைத்தார். 1989- ஆம் ஆண்டு பள்ளியின் பெயர் மாற்றப்பட்டது. 
1906-ஆம் ஆண்டு இப்பள்ளி சென்னை மாகாணத்தின் சிறந்த பள்ளியாக விளங்கியது. அப்போது இப்பள்ளியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த எம்.ஏ.சிங்கராச்சாரியார் மறைந்தார்.
1920- ஆம் ஆண்டு இப்பள்ளி நிர்வாகம் திருவல்லிக்கேணி பெரிய தெருவின் அருகாமையில் உள்ள இடங்களை வாங்கி பள்ளியில் கூடுதலாக மாணவர்கள் பயில பள்ளியின் எல்லையை விரிவாக்கினர். பின்னர் 1948 ஆம் ஆண்டு தி இந்து குழுமத்தின் கே.ஸ்ரீனிவாசன் இப்பள்ளியின் நூற்றாண்டு விழாக்குழுத் தலைவராகப் பணியாற்றி இப்பள்ளிக்காக மிகப் பெரிய நிதியுதவி வழங்கினார். இதே போன்று வி.டி.ரெங்கசாமி ஐயங்கார் இப்பள்ளியின் நிர்வாகக் குழுவில் பணியாற்றி இப்பள்ளி நிர்வாகம் சிறப்புற அமைய தன் வாழ்நாளை முழுவதுமாக இப்பள்ளியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார். இதன் பின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரியார் ஏழு ஆண்டுகளுக்கு இப்பள்ளியைச் சிறப்புடன் நடத்தினார். 1916-ஆம் ஆண்டு முதல் 1938 வரை 22 வருடங்களாக பி.ஏ.சுப்பிரமணிய ஐயர் தலைமையாசிரியராகப் பணியாற்றி மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வண்ணம் கல்வி கற்பிக்கும் முறையில் எண்ணற்ற புதிய யுக்திகளைக் கையாண்டு மேன்
மேலும் சிறப்புற உதவினார். இவர் இப்பள்ளியில் பொறியியல் துறையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க பள்ளியின் சூழலை மாற்றினார். வெவ்வேறு பாடப்பிரிவுகளில் உள்ள வளர்ச்சிகளை மாணவர்களுக்குக் கொண்டு செல்வது, இலக்கியப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைத்தது, மாணவர்களைக் கல்விச் சுற்றுலாவிற்கு (1916 -38 இல்) பிற மாநிலங்களுக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க புகழ்பெற்ற இடங்களுக்கும் அழைத்துச் செல்வது, ஓவியம் மற்றும் கைத்திறன் பயிற்சிகள், என்சிசி, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்காக இந்தியா முழுவதும் செல்வது என பல்வேறு புதிய முறைகளைக் கையாண்டார். இவருடைய நற்செயல்களின் விளைவாக பின்னர் இவர் எம்எல்சி ஆக்கப்பட்டார். இவர் எம்எல்சி ஆகப் பணியாற்றியதை விட, பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றியதையே சிறந்ததாகக் கருதினார். இவர் பள்ளிக்குப் புகழ்தேடித் தருவதில் சிறப்பாகப் பணியாற்றியதால், இவருடைய புகழ் இன்றும் மங்காப் புகழாக உள்ளது. தமிழக அரசு மதிய உணவுத் திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே இப்பள்ளியில் புரவலர்களின் உதவியுடன் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இப்பள்ளி தனது 150 -ஆம் ஆண்டு நிறைவு விழாவை 2003-2004-ஆம் ஆண்டு நடத்தினார்கள்.
இப்பள்ளியில் தமிழகக்கல்வி பாடத்திட்டத்தின்அடிப்படையில் கற்பிக்கப்படுகிறது. இரண்டு துணைப் பள்ளிகள் சென்னை அடையாறில் உள்ள இந்திரா நகரிலும் மற்றொன்று திருவல்லிக்கேணியிலும் உள்ளன. 
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எண்ணற்ற துறைகளில் உலகமெங்கும் சிறந்து விளங்கி வருகிறார்கள். இவர்களில் 1983 -ஆம் ஆண்டு வானியற்பியல்துறையில் நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகரும் ஒருவர். தி இந்து பத்திரிகையின் உரிமையாளர் கஸ்தூரி ஸ்ரீனிவாசன், நடிகர் கமல்ஹாசன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் W.V.ராமன், கர்நாடக சங்கீதத்துறையைச் சேர்ந்த ஜிஎன்பி பாலசுப்பிரமணியம், நீதியரசர்கள் எம்.அனந்தநாராயணன், பி.ஆர்.கோபாலகிருஷ்ணன், சென்னை மாகாண முதலமைச்சர் டாக்டர் பி.சுப்பராயன் ஆகியோர் இப்பள்ளியில் படித்தவர்களே. 
4.9.1927-ஆம் ஆண்டு தேசத் தந்தை மகாத்மா காந்தி இப்பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் மத்தியில் உரையாற்றி உள்ளார். இதேபோன்று நோபல் பரிசு பெற்ற சுப்ரமணியன் சந்திரசேகரும் மாணவர்களிடையே உரையாற்றி உள்ளார். 
ஆனால் தற்போது மக்கள் மனநிலை அதிகப் பணம் கொடுத்தால்தான் சிறந்த கல்வி என வேறு பள்ளிகளுக்குச் செல்வதால் தற்போது இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 
இத்தகைய சிறந்த பள்ளியில் பயில கட்டணம் மிகக் குறைவாகவே உள்ளது. முன்னாள் மாணவர்கள் பலரால் கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படுகிறது. இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் எம்.ஏ. சங்கராச்சாரியார் போன்ற VISIONARY ACADEMIC LEADERSHIP வந்தால் மட்டுமே கல்வியில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும். 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com