வாழ்வின் பரிசு... புகழ்! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். 

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு நிகழ்வு. உசீனர தேசத்தை ஆண்டு வந்த சோழ மன்னர், ஒருநாள் ஒரு சோலையில் அமர்ந்திருந்தார்.
வாழ்வின் பரிசு... புகழ்! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். 

தன்னிலை உயர்த்து! 29

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு நிகழ்வு. உசீனர தேசத்தை ஆண்டு வந்த சோழ மன்னர், ஒருநாள் ஒரு சோலையில் அமர்ந்திருந்தார். அப்போது அழகிய புறா ஒன்று அவர் மீது துடிதுடித்து விழுந்தது. அதன் உடம்பில் காயம்பட்டு ரத்தம் வழிந்ததைப் பார்த்து, அதைத் தன் மடியில் அரவணைத்து, தனது கைகளால் ஆறுதலாய்த் தடவி மருந்திட்டுக் கொண்டிருந்தார் மன்னர். அதே நேரத்தில் அச்சோலையினுள் ஒரு கழுகு வந்தது. மன்னரிடம், "ஐயா! இந்தப் புறா என்னுடையது. நான் இன்று இதை உண்ணுவதற்காக வேட்டையாடினேன். அது உங்களிடம் பறந்து வந்துவிட்டது. அதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்' என்றது கழுகு. "அப்படியா!, ஆனால், இப்புறா இப்பொழுது என்னிடம் அடைக்கலமாகிவிட்டது. அதனைக் காப்பாற்ற வேண்டியது எனது கடமை. இப்புறாவைத் தவிர, நீ உண்ணுவதற்கு எது வேண்டுமோ? கேள், நான் தருகிறேன்' என்றார் மன்னர்.
"அரசே! நான் தினமும் மாமிசம் உண்டு பழகியிருக்கிறேன். எனக்கு மிகவும் பசிக்கிறது. எனக்கு இப்பொழுதே மாமிசம் வேண்டும். அதுவும் இப்புறாவின் எடைக்கு எடை மாமிசம் வேண்டும்' என்றது கழுகு. 
ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்காக மற்றோர் உயிரைக் கொல்ல விரும்பாத மன்னர், "கழுகே! உனக்கு மாமிசம் தானே வேண்டும்! இதோ இந்தப் புறாவின் எடைக்குச் சரியாக எனது தொடையில் இருந்த சதையை வெட்டித் தருகிறேன். நீ உண்டு பசியாறலாம்' என்றார். உடனிருந்தவர்கள் மலைத்து நிற்க, மன்னர் தனது தொடையில் இருந்து சதையைக் கொஞ்சம் வெட்டித் தராசின் ஒரு தட்டில் வைத்தார். மறுதட்டில் புறா. மன்னரின் சதை வைக்கப்பட்ட தராசுத்தட்டு கீழே இறங்கவே இல்லை. மீண்டும் மீண்டும் தனது சதையை அறுத்து வைத்தார். கடைசியில் மன்னரே தராசுத்தட்டில் ஏறி நின்றதும், புறாவின் தராசுத்தட்டு மேலே உயர்ந்தது. அப்பொழுதுதான், அது ஒரு தெய்வீக நிகழ்வென்று உலகிற்குப் புரிந்தது. அந்த மன்னர் சிபிச் சக்கரவர்த்தி. தனது இரக்க குணத்தால், ஒரு புறாவிற்காக தன்னையே அர்ப்பணிக்கத் துணிந்தார். மானுட வரலாற்றில் புகழின் உச்சிக்கு உயர்ந்தார்.
தேடிப் பெறுவதில்லை, புகழ். அது தாமாகவே வந்து சேர்வது. அது நம் ஆத்மார்த்தமான செயல்பாடுகளுக்கு உலகம் தரும் மறக்காத பரிசு; ஒரு மகத்தான பரிசு. புகழ் அறவொழுக்கத்தின் அடையாளம்; மனிதனின் கலங்கரை விளக்கம். ஒவ்வொரு மனிதனும் காந்தம். உயர்ந்த குணங்கள் அவரது காந்தப் புலம். காந்தப் புலம் காந்தத்தின் சக்தியாவதைப்போல, உயர்ந்த குணநலன்களே ஒரு மனிதனின் மாபெரும் சக்தி. காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும் காந்தத் துகள்கள்தாம் அவரது புகழ். எனவே, குணங்கள் நிறைந்திருக்கும் மனிதனின் புகழும் விரிந்திருக்கும். 
மனிதப் பிறப்பின் சிறப்பே, புகழ் பெற்று வாழ்வதுதான். "நமது பிறப்பு வேண்டுமானால் ஒரு நிகழ்வாக இருக்கலாம். நம் வாழ்வின் முடிவு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்றார் நம் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். பிறப்பின் சிறப்பினை நிர்ணயிப்பது நம் செயல்பாடுகளே. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற பழமொழிக்கேற்ப, தீய செயல்கள் பழி என்னும் பாதாளத்தில் தள்ளும். நற்செயல்களே புகழை நோக்கி உயரப் பயணிக்க வைக்கும். 
மனித வாழ்க்கை மூன்று வகை. வாழக்கூடாத வாழ்க்கை, வாழக்கூடிய வாழ்க்கை, வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கை. ஒரு மனிதன், பழி பாவங்களை அறியாது பிறருக்கு துன்பத்தைக் கொடுத்து வாழ்கின்ற வாழ்க்கை தவறான வாழ்க்கை. அது வாழ்வின் அர்த்தத்திற்கு எதிரான வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கை, எதிர்கால சந்ததியினருக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும். இரண்டாவது வாழ்க்கை, வாழ்க்கையைப் புரிந்தும், புரியாமலும் வாழ்வது. இன்பங்களில் மகிழ்ந்தும், துன்பங்களில் துவண்டும், வாழ்கின்ற வாழ்க்கை. இவ்வாழ்க்கை எவராலும் எளிதில் வாழ்ந்துவிடும் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கையே வாழ்வதற்கு எளியது. நிறைவாக, வாழ்வின் உட்பொருளை உண்மையாக அறிந்து, அல்லவை நீக்கி, அறம் புரிந்து ஆன்றோனாக வாழுகின்ற வாழ்க்கையை உலகம் வியந்து பார்க்கும். அத்தகையோர் கடந்த பயணத்தில் வருங்காலம் வாழத் துடிக்கும். அது ஓர் எடுத்துக்காட்டு வாழ்க்கை. புகழ் நிறைந்த வாழ்க்கையும் அதுவே. இத்தகைய வாழ்க்கையே வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கை. வாழக் கூடாத வாழ்க்கை ஓர் எச்சரிக்கை. வாழக் கூடிய வாழ்க்கை ஓர் எதார்த்தம். வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கை ஓர் ஏற்றம். 
இந்த உலகம் எல்லாருக்கும் பொதுவானது. பிறப்பும் அனைவருக்கும் பொதுவானவை. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் நம் திருவள்ளுவர். அவற்றில் உயரிய வாழ்கை அமைவது மனிதர்களுக்கே. கிடைத்தற்கரிய பிறப்பு மானுடப்பிறப்பு. அப்பிறப்பினை இழிவாக்குவதும், ஒளியாக்குவதும் அவரவரது நடத்தைகளே. இளவெளிமான் என்னும் மன்னர் ஆட்சி புரிந்தபோது பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பாடல் பாடி பரிசில் பெற வந்தார். அவரைக் காணாமலேயே சிறிது பொருள் கொடுத்து அனுப்புமாறு அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர். வாங்க மறுத்தார் புலவர். புலியிடமிருந்து யானை தப்பினாலும், தன் பசியை போக்க எலியை தின்னாது புலி. அது போல, இளவெளிமான் தந்த பொருட்களைப் பெறாது, தனது திறனை அறியும் முதிரமலை அரசனான குமணவள்ளலைக் கண்டு பாடினார். அவர் உள்ளம் மகிழ்ந்து யானைகளையும், பொற்குவியல்களையும் வழங்கினார். புலவர் யானை மீதேறிப் பயணித்து, அதில் ஒரு யானையை இளவெளிமானின் அரண்மனை வாயிலிலிருந்த புனிதமான கவண் மரத்தில் கட்டினார். அது அந்நாட்டிற்கு அவமானத்தைத் தந்தது. இளவெளிமானை மக்கள் பழித்தனர். ஆனால், மன்னரோ, மன்னர் மக்கள் மீதும், புலவர்மீதும் கோபம் கொண்டார். 
"புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை 
இகழ்வாரை நோவது எவன்'
என்ற வரிகளில், "புகழ்பட வாழாதவர்கள் தங்களைத் தாங்களே சாடிக்கொள்ளவேண்டுமே தவிர, தங்களைச் சாடுபவர்களை குறைக் கூற கூடாது' என்கிறார் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
செல்வம் சேர்த்து வைத்திருப்பவர் செல்வந்தர் அல்லர். பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டவரே செல்வந்தர். தன்னை விட எளியவர்களை மனம் உவந்து, முகம் மலர்ந்து உபசரிப்பவர் பெரும் செல்வந்தர். அவருக்கு தேவருலகம் கதவைத் திறந்து காத்துக் கொண்டிருக்கும் என்கிறார் நாலடியாரின் விளம்பி நாகனார். 
"இவ்வுலகிலிருந்து எடுத்துச் செல்வது புகழ். பிறருக்கு கொடுத்துச் செல்வது உமது பண்பு. இவ்வுண்மையை எப்பொழுது தெளிவாக அறிந்து கொள்கிறாயோ, அன்றுதான் ஓர் உன்னதமான வாழ்கையை நீ வாழ தொடங்குகிறாய்' என்றார் ஆங்கிலக் கவிஞர் பயார்டு டெய்லர். 
நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும் புகழ் கொண்டது இவ்வுலகம். இதில் உயிர்கள் நிலையில்லாவை. அதில் நிலைத்திருப்பதும் புகழே! விரிந்திருப்பதும், பரந்திருப்பதும் புகழே! புகழ் ஒரு காற்று. புவியில் மனிதன் வாழ்வதற்கு ஆதாரம் காற்று. மனிதன் புவியில் வாழ்ந்ததற்கு ஆதாரம் அவனது புகழ். "புகழ், வீரச் செயல்களின் நறுமணம்' என்கிறார் கிரேக்க மேதை சாக்ரடீஸ்.
தன்னைப் புகழ்வது மனிதம். பிறர் புகழை ஏற்க மறுப்பது மனிதனின் மடமை. பிறர் புகழை ஏளனப்படுத்துவது குற்றம். பிறர் புகழ் போற்றுவது ஞானம். பிறர் புகழ்பட வாழ்வது புனிதம். புகழும், மனித வாழ்வும் பின்னிப் பிணைந்தது. மண்ணில் வாழ்வது மட்டும் வாழ்க்கையல்ல, மக்கள் மனத்தில் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை. பண்டைய ரோமாபுரியில், ஒரு தந்தைக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், சிறந்த கவிஞர்; இளையவர் சிறந்த போர் வீரர். விதிப்பயனால் தந்தை ஒரு நாள் இறந்தார். அவரது நற்செயலால் சொர்க்கம் சென்றார். ஒரு நாள் அங்கிருந்த தேவதையிடம் தனது மகன்களைப் பற்றி அறிய ஆவல் கொண்டு கேட்டார்.
தேவதை, அத்தந்தைக்கு அவரது மகன்களின் செயல்பாடுகளை வானிலிருந்து காணச் செய்தது. அப்பொழுது ஒரு கிராமத்தில் அனைவரும் ஒரு கவிதையைக் கற்றுக் கொண்டிருந்தனர்."இது உங்கள் மகன் எழுதிய கவிதை. இது அண்டை நாட்டில் கற்பிக்கப்படுகிறது' என்றது தேவதை. தனது மகனின் கவிதை, அண்டை நாட்டிலும் கற்கப்படுவதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தார். "சரி! எனது இளைய மகன் போர் வீரன் என்ன செய்கிறான்?' என்ற கேள்விக்கு, "ஐயா! நான் இதுவரை அவரைப் பற்றிதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்' என்றது தேவதை: "எனது மகனான போர் வீரன் எப்படி கவிதை எழுதினான்?' என்று ஆச்சரியப்பட்டார் தந்தை.
"உங்களது மகன் கவிஞனின் கவிதைகள் ரோமாபுரியில் புகழ் பெற்று இருந்தது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் உங்களின் இரண்டாவது மகன் ராணுவத்தில் படிப்படியாக உயர்ந்து போர்ப்படைத் தலைவனானான். அப்பொழுது அவனது வீரர்களில் ஒருவன், உடல் நலம் குன்றி இறக்கும் தறுவாயில் இருந்தான். அவரைக் காப்பாற்றுவதற்கு கடவுளின் குமாரனால் மட்டுமே முடியும் என்றனர். உடனே அவரைக் காண உங்களுடைய மகன் புறப்பட்டார். கடுமையான பயணங்களை எதிர்கொண்டு அவரைச் சந்தித்தார்.
அவரது கண்களில் இறைவன் பிரசன்னமாவதைக் கண்டார்.
உங்களுடைய மகனின் விசுவாசத்தைக் கண்டு கடவுளின் குமாரர், போர் வீரன் இருக்குமிடத்திற்குச் செல்ல ஆயத்தமானார். அப்பொழுது படைத்தலைவனான உங்கள் மகன், "ஆண்டவரே! நீர் என் குடிசைக்குள் பிரவேசிக்குமளவிற்கு நான் தகுதியானவன் அல்ல. உமது ஒரு வார்த்தை போதும். அம்மந்திரத்தில் எமது வீரன் குணமாவான்' என்றார். இந்த வார்த்தைகள் தான் ரோமாபுரி கடந்து உலகெங்கும் உன்னதமாய் முணுமுணுக்கப்படுகிறது'' என்றாள் தேவதை.
கவிஞன் எழுதுவது கவிதை. ஆனால் உள்ளார்ந்த உணர்வோடு எழுதப்படுகின்ற ஒவ்வொரு வரியும் காவியம். அத்தகைய அழகான வரிகளே அமரத்துவம் பெறுகின்றன. அத்தகையோரே பேரோடும், புகழோடும் திகழ்கிறார்கள். அத்தகைய அமரத்துவம் வாய்ந்த வரிகளை எழுதுவதற்கு கவிஞர்களால் மட்டுமே முடிவதில்லை. ஆத்மார்த்தமான செயல்பாடுகளே ஒரு மனிதனையும் மகாகவியாக்குகிறது. 
தேடிச் சென்றால் அது விளம்பரம்;
தேடி வந்தால் அது புகழ்!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், 
நுண்ணறிவுப்பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com