கணினிக்கு ஓர் இணையதளம்!

உலகில் செயல்பட்டு வரும் அனைத்துத் துறைகளிலும் கணினியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது.
கணினிக்கு ஓர் இணையதளம்!

உலகில் செயல்பட்டு வரும் அனைத்துத் துறைகளிலும் கணினியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. எந்தவொரு பணிக்கும் கணினி தொடர்பான அறிவு அவசியம். மக்கள் தேவைகளுக்கேற்பக் கணினியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதனால், கணினி குறித்த அறிவை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கணினி குறித்த பல்வேறு தகவல்களை நாம் அறிந்து கொள்ள ஓர் இணையதளம் உதவுகிறது. 
1998 - ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற இந்த இணையதளத்தில் உதவி (Help), உதவிக் குறிப்புகள் (Tips), அகரமுதலி (Dictionary), வரலாறு (History), மன்றங்கள் (Forums) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 
உதவி எனும் தலைப்பில் சொடுக்கினால், அங்கு தேடுதல் (Search), மன்றங்கள், Chat, மின்னஞ்சல் என்று நான்கு துணைத்தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேடுதல் எனுமிடத்தில் ஒரு தேடுதல் பெட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் கீழாக, கேள்விகளும் பதில்களும், Basic troubleshooting, நிறுவனங்களின் தொடர்புத் தகவல், வன்பொருள் பட்டியல் - மென்பொருள் பட்டியல் (Hardware list - Software list), அகரமுதலி , இயக்கிகள் (Drivers), கணினி நம்பிக்கைக் கருவிகள் (Computer Hope tools), கணினி உதவிக் குறிப்புகள் (Computer tips) போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இப்பெயர்களில் சொடுக்கி, நேரடியாக அப்பக்கத்திற்குச் சென்று தேவையான உதவிகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இத்தலைப்புகளுடன் தொடர்பில்லாத தலைப்புகளாக இருப்பின், மேலுள்ள தேடுதல் பெட்டியில், தேவையான தலைப்பை உள்ளீடு செய்து இத்தளத்தில் இடம் பெற்றிருக்கும் கணினி பற்றிய உதவிச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். 
இதுபோன்று, மன்றங்கள் பகுதியில் நம்மை ஒரு பயனராக (User) இலவசமாகப் பதிவு செய்து கொண்டு, அதில் நம்மை இணைத்துக் கொண்டு உதவிகளைப் பெற்றிட முடியும். அரட்டை (Chat) எனும் பகுதியில் தரப்பட்டுள்ள அரட்டைக் குழுவில் இணைந்து அரட்டை வழியாகக் கணினி தொடர்பான உதவிகளைக் கேட்டுப் பெற முடியும். இதே போன்று, மின்னஞ்சல் முகவரிக்குக் கணினி தொடர்பான சந்தேகக் கேள்விகளை அனுப்பியும் பதில்களைப் பெற முடியும். 
டிப்ஸ் எனும் தலைப்பில் சொடுக்கினால், கம்ப்யூட்டர் வாங்குவதற்குத் தேவையான தகவல்கள் அதில் உள்ளன. பயன்படுத்திய கம்ப்யூட்டர்களை எவ்வாறு தூய்மையாக்குவது என்பதற்கான பல தகவல்கள் உள்ளன. கீ போர்டை எவ்வாறு தூய்மையாக்குவது? வன்பொருளை எவ்வாறு தூய்மையாக்குவது? ஹெட்செட்டை எவ்வாறு தூய்மையாக்குவது? மதர்போர்டு, மவுஸ், பிரிண்டர், ஸ்கேனர் என எல்லாவற்றையும் எவ்வாறு தூய்மையாக்குவது? தூய்மை செய்வதற்கு உதவும் பொருள்கள் எவை? என ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. பொதுவான கணினி உதவிக் குறிப்புகள், இணையம் தொடர்பான உதவிக் குறிப்புகள், கணினி மென்பொருள் உதவிக் குறிப்புகள், கணினி வன்பொருள் உதவிக் குறிப்புகள், பார்வையாளர்கள் விரும்பிய உதவிக் குறிப்புகள், மிக அண்மையில் சேர்க்கப்பட்ட உதவிக் குறிப்புகள் எனும் தலைப்புகளின் கீழ் பல்வேறு துணை உதவிக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் நமக்குத் தேவையான உதவிக் குறிப்புகளின் மேல் சொடுக்கி, பயனுடைய பல்வேறு உதவிக் குறிப்புகளை அறிந்து கொள்ள முடியும். இதுபோன்று அகரமுதலி, வரலாறு பகுதிகளைச் சொடுக்கி பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும். 
கணினி தொடர்புடைய பல்வேறு தகவல்களை அறிய விரும்புபவர்களுக்கும், கணினி தொடர்பான படிப்புகளைப் படித்து வருபவர்களுக்கும் பயனுடைய தகவல்களை அளித்து வரும் இந்தத் தளத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் அனைவரும் https://www.computerhope.com/ எனும் இணைய முகவரிக்குப் பயணிக்கலாம்.
மு. சுப்பிரமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com