இளைஞனை வளப்படுத்தும் விவசாயம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

நீரில் பூக்கும் தாமரையின் நீளம் அது நிற்கும் குளத்து நீரின் உயரத்தை ஒத்ததாக இருக்கும். அதுபோலவே மக்களின் ஊக்கத்தைப் பொருத்தே அவர்களின்வாழ்க்கையின் உயர்வும் இருக்கும்.
இளைஞனை வளப்படுத்தும் விவசாயம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

மிச்சமெல்லாம் உச்சம் தொடு - 22
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத் தனையது உயர்வு
- குறள் 595
நீரில் பூக்கும் தாமரையின் நீளம் அது நிற்கும் குளத்து நீரின் உயரத்தை ஒத்ததாக இருக்கும். அதுபோலவே மக்களின் ஊக்கத்தைப் பொருத்தே அவர்களின் வாழ்க்கையின் உயர்வும் இருக்கும். அதேபோன்று தான் நாம் முன்னெடுக்கும் காரியங்களின் நோக்கம் உயர்வுள்ளதாக இருந்தால், அதன் பலனும் அதே அளவிற்குக் கிடைக்கும். 
மழைத்தண்ணீரில் 70 சதவிகிதம் விவசாயத்திற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான உணவு உற்பத்திக்கு நீரின் பயன்பாடு அதிகரிக்கிறது; பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு, இரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது; களைக்கொல்லிகள் அதிக அளவில் பயன்படுத்தபடுகின்றன. இதன் பயன்பாட்டால் நிலமும், நீரூம் மாசுபடுகிறது. வண்டல் மண் களிமண்ணாக மாறுகிறது. எந்தத் தண்ணீரால் விவசாயம் பண்ணுகிறோமோ, நாம் பண்ணும் விவசாய முறைகளால் அதே தண்ணீரில் இராசாயனம் கலக்கிறது. மாசு ஏற்படுகிறது. 
இந்த நிலையை எப்படி மாற்றுவது? முதலாம் பசுமைப்புரட்சியினால் தான் விவசாய நிலம் மாசுபட்டு அழிந்து விட்டது. உணவுப் பொருள் நஞ்சாகிவிட்டது என்று சிலர் குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டுவிட்டது. நாம் பஞ்சத்தில் இருந்து, பட்டினிச்சாவில் இருந்து ஏழைகளை மீட்டெடுத்து உணவு உற்பத்தியில் 50 ஆண்டுகளில் தன்னிறைவு எய்திய பின் இப்படிச் சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 
ஒரு புறம் நஞ்சு கலந்த காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருள்கள், மறுபுறம் இரசாயன உரங்களின் பயன்பாட்டால், தொழிற்சாலை கழிவுகளால் நிலமும், நீரும் மாசுபட்டுவிட்ட நிலை. இப்படிப்பட்ட ஓர் அபாயகரமான நிலையில் நாம் இருக்கிறோம். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து மாசுபட்ட மண்ணைப் பக்குவப்படுத்த வேண்டிய நிலை ஒரு புறம் இருக்கிறது. அதேசமயம் இயற்கை விவசாயத்தால் மட்டும் நாம் உணவு உற்பத்தியை அதிகரிக்கமுடியுமா? உணவுப் பாதுகாப்பை நிலை நிறுத்தி பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவை உற்பத்தி செய்து கொடுக்க முடியுமா? பசிப்பிணியைப் போக்கமுடியுமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. 
இன்றைக்கு இந்தியாவில் 58 சதவிகிதம் மக்கள், விவசாயத்தைத் தங்களது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். 2018- இல் விவசாயம், மீன்
பிடித்தல், காடுகள் போன்றவற்றில் இருந்து மட்டும் ரூ 18.53 லட்சம் கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. உணவுப் பொருள் உற்பத்தி 2018-19- இல் 285.2 மில்லியன் டன். பால் உற்பத்தி 165 மில்லியன் டன். 2018-19- இல் 314.7 மில்லியன் டன் பழங்களை உற்பத்தி செய்து இந்தியா உலகத்தில் 2 வது பெரிய நாடாக மாறியிருக்கிறது. 
இருந்தும், நமது மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாகவும், விவசாயம் குறைந்து கொண்டு வருவதாலும், நகரமயமாக்கலாலும், நதிகள் இணைக்கப்படாததாலும், தண்ணீர் மேலாண்மையில் ஏற்படும் பின்னடைவுகளாலும், பசுமைச்சூழல் குறைபாட்டால் மழையின் அளவு குறைவதாலும், பாசன நீர் பற்றாக்குறை ஏற்படுவதாலும், விவசாயத்திற்கு நம் நாடு கொடுக்கும் முக்கியத்துவம் குறைவதாலும் 1980 களில் 170 மில்லியன் ஹெக்டேராக இருந்த விளைநிலம் 2020 - இல் 100 மில்லியன் ஹெக்டேராக குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்கள் தொகை உயர்விற்கேற்ப உணவு உற்பத்தியை நாம் 2 மடங்கு அதிகரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் நீடித்த, நிலைத்த விவசாயம் இந்த இரண்டு சவால்களையும் சந்தித்து மக்களுக்கு ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்தாக வேண்டும். அதுவும் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். 
எனவே தான் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் சரியான அளவில் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், அதோடு இயற்கை வேளாண்மையை இணைத்து இரண்டையும் தேவையான முறையில் பயன்படுத்தியும் பிகாரில் 20 வருடங்களுக்கு முன்பு ஆரோக்கியமான உணவு உற்பத்தியை இரண்டு மடங்காக்கி நிரூபித்துக் காட்டினார். 
இஸ்ரேல் பயணத்திற்கு பின்பு 2009 இல் மண்ணில்லாத விவசாயத்தின் ஆராய்ச்சி எங்கெல்லாம் நடக்கிறது என்பதற்கான தேடலைத் தொடங்கினோம்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் டிஸ்னிலேண்டில் இருக்கும் எப்காட் (Experimental Prototype Community of Tomorrow - EPCOT)உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு 23 அக்டோபர் 2009- இல் டாக்டர் அப்துல் கலாமுடன், நானும், செரிடனும், கென்டகி டாக்டர் எம். எஸ். விஜயராகவனும் சென்றோம். இந்த எப்காட் ஆராய்ச்சி நிலையத்தில் 25 லட்சம் சதுர அடியில் பல்வேறு பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டு, அதில் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் நல்ல விதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திசு வளர்ச்சி முறையில் பல்வேறு பயிர்களாகப் பெருக்கப்பட்டு செடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்தப் பயிர்கள் ஹைட்ரோ போனிக்ஸ் (Hydroponics) முறையில் மண்ணில்லா விவசாயம் செய்யப்பட்டு, பயிர்களுக்குத் தேவையான சத்துகள் இரசாயனக் கலப்பில்லாத முறையில் நேரடியாக தண்ணீரில் கலந்து பைப்புகளில், தேங்காய் நார் மற்றும் கற்கள் கலந்த சிறு டப்பாக்களில் வளர்க்கப்படுகிறது. இந்தப் பயிர்களுக்கு பல்வேறு முறைகளில் தேவையான நேரத்தில் இடைவெளி விட்டு சத்தான தண்ணீராகப் பாய்ச்சப்படுகிறது மற்றும் காய வைக்கப்படுகிறது. இது பசுமைக்குடிலில் வளர்ப்பதால் பூச்சிக்கொல்லிக்கு அவசியமில்லாமல் போகிறது. எத்தகைய தட்ப வெட்ப சூழல் தேவைப்படுமோ, அதை அங்கு உருவாக்கி, நீரின் காரத்தன்மையை சரியான அளவில் வைத்து, பயிர்களை பல்வேறு அடுக்குகளில் செங்குத்து வேளாண்மை (Vertical Farming) முறையில் பலமடங்கு பெருக்கும் சூழலை நாங்கள் அங்கு பார்வையிட்டோம். 
உதாரணத்திற்கு எப்காட் ஹைட்ரோ போனிக்ஸ் முறையில் ஒரு தக்காளி செடியில் இருந்து ஒரு வருடத்தில் 522.464 கிலோ கிராம் தக்காளிப் பழங்களை
உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்து இருக்கிறது. மண்ணில் போடப்படும் இரசாயன உரங்கள் செடிக்குச் சென்று முழுமையாக சேர்வதில் இருக்கும் தடைகளை இல்லாமல் செய்து, செடிகளின் வேர்கள் மூலமாக முழுமையாகச் செடிகளுக்கு தாது சத்துகள் கலந்த தண்ணீர் சென்று சேர்வதால் இத்தகைய அபரிமிதமான விளைச்சலை இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறை கொடுக்கிறது. இந்த முறையில் தண்ணீர் மறு சுழற்சி செய்யப்பட்டு மீண்டும், மீண்டும் தாது சத்துகள் கலக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுவதால், தண்ணீர் உபயோகம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் நீரைச் சேமிக்கவும் முடிகிறது.
அதுமட்டுமல்ல, குறைந்த இடத்தில் செங்குத்து வேளாண்மையால் அதிகப் பயிர்களை உருவாக்க முடிகிறது. இந்த முறையில் அதிகமாகத் தண்ணீரை உபயோகித்தாலும், தண்ணீரில் கலக்கும் இயற்கை தாது சத்துகள் அதிகமானாலும், காற்றில் கலக்கும் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கிறது. அதன் விளைவாக பாக்டீரியாக்கள் உருவாகி பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படித் தடுப்பது என்பதைப்பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எனவே இங்கும் உணவுப்பொருள்களை ஆரோக்கியமாக வளர்க்க சரியான அளவில் தண்ணீரையும், இயற்கை தாது சத்துக்களையும் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகிறது. 
இது மட்டுமல்ல, பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், கத்தரிக்காய், புடலங்காய், அவரைக்காய், மிளகாய் மற்றும் அனைத்து வகையான கீரைகள்,
லெட்டூஸ், ஸ்பினாச், பாக்சாய் போன்ற உணவுக் கீரைகள், செடிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு கற்றாழைச் செடி, வாழை மரம், தென்னை, பப்பாளி பழம், மாம்பழம், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை பழம் மற்றும் நெல்லும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம், இரசாயன உரம் தவிர்த்து, பூச்சிக்கொல்லி மருந்து தவிர்த்து முழுமையான இயற்கை விவசாயமாக உருவாக்கப்படுவதால், ஆரோக்கியமான உணவு உற்பத்தியைக் குறைந்த இடத்தில் பலமடங்கு பெருக்க முடிகிறது. 
இதோடு சேர்த்து நன்னீர் மீன்வளர்ப்பு, அதாவது ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் அக்வாகல்ச்சர் இணைந்து அக்வா போனிக்ஸ் முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மீன்களுக்கு போடப்படும் சத்துணவில் 14 வகையான தாதுப்பொருள்கள் இருக்கின்றன. இதில் மீன் மிச்சமாக வெளிப்படுத்தும் அம்மோனியா(NH4+), ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் நைட்ரோசோமனாஸ் பாக்டீரியா மூலம் நைட்ரைட் NO2+ உருவாக்குகிறது. அதை நைட்ரோஸ்பைரா NO3+ நைட்ரேட்டாக மாற்றுகிறது. இதை செடிகள் உறிஞ்சி Filtered H2O வை மீண்டும் மீன் தொட்டிகளுக்கு அனுப்புகிறது. இங்கு செடிகளும், மீன்களும் செழித்து வளர்கின்றன. இந்த தொடர்ச்சியான உயிரிச் சூழல் மண்ணில்லா விவசாயத்தையும், நன்னீர் மீன்வளத்தையும் பெருக்குகிறது. எப்காட் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தைச் சுற்றிப் பார்க்க, பார்க்க எப்படி உயிரி தொழில் நுட்ப அறிவியல் ஆராய்ச்சி அரோக்கியமான உணவை உற்பத்தி செய்யும் விவசாயத்தையும், ஆரோக்கியமான தண்ணீரில் வளரும் நன்னீர் மீன்வளத்தையும் குறைந்த இடத்தில் பன்மடங்கு பெருக்க முடியும் என்பதை விளக்குவதாக அமைந்தது. 
அடுத்து எங்களுக்குப் பரீட்சார்த்தமாக செய்யப்படும் ஏரோபோனிக்ஸ் (Aero phonics) தொழில்நுட்பத்தை சுற்றிக் காண்பித்தார்கள். இந்தப் பகுதியில் செடிகளை வரிசையாகச் சங்கிலிகளில் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். அது வரிசையாக மேலே இருக்கும் இணைப்பு ரயில் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது.
இதை ஒரு படகில் உட்கார வைத்து வைத்து அந்த பசுமைக்குடிலில் உள்ள நீர் வழிப்பாதையில் அழைத்து சென்றார்கள், செடிகள் வெறும் வேரோடு ஒரு தாது
சத்தான தண்ணீரை பூ மழை போல் பீச்சியடிக்கும் ஒரு சேம்பருக்குள் செல்கிறது. அதில் இருக்கும் தண்ணீர் தெளிப்பான் (Sprinklers) பூப்போல் தண்ணீரைச் செடிகளின் வேரில் தூவுகிறது. அது சேம்பருக்கு வெளியே சென்று மீண்டும் அதே சேம்பருக்குள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வருகிறது. இப்படி ஏரோபோனிக்ஸ் முறையில் செடிகள் வளர்க்கப்பட்டு அதன் மூலம் அதன் உற்பத்தி பன்மடங்கு பெருக்கப்படுகிறது. இந்த முறையில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையை விட குறைந்த தண்ணீரே செலவாகிறது. ஆனால் உற்பத்தி பன்மடங்கு இருக்கிறது. 
இந்த முறை எங்கெல்லாம் மண் வளம் கெட்டுவிட்டதோ, எங்கெல்லாம் பாசன நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறதோ, எங்கெல்லாம் வறட்சியான சூழல் ஏற்படுகிறதோ, பாறைகள் கொண்ட மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு, பாலைவனப்பகுதிகள் போன்ற இடங்கள், நகரங்களில் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டடங்கள், மேல் மாடிகள் போன்றவற்றில் இந்த முறையில் பயிர் செய்யத் தகுந்த இடங்களாக இருக்கும். அனைவருக்கும் நஞ்சில்லா உணவு இதன் மூலம் கிடைக்கும். 
இந்த நவீன அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த இயற்கை விவசாய முறைகளில் பயிர் செய்யும் போது இன்றைய படித்த இளைஞர்கள் எந்தக் கல்வி படித்திருந்தாலும் அவர்கள் இந்த முறையில் விவசாயம் செய்ய அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. இதில் எப்காட் ஆராய்ச்சி நிலையத்தில் ஈடுபடும் அனைவரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், பொறியியல் படித்த மாணவர்கள் இந்த பசுமைக்குடில் அமைப்பிலும், தானியங்கி தாதுச் சத்துக்களை கலக்கும் இந்திரங்களை உருவாக்குவதிலும், எப்போது பயிர்களுக்கு தண்ணீர் தேவை, வெளிச்சம் தேவை, காற்று தேவை என்பதை சென்சார்களின் மூலம் கண்டறிந்து இயக்கும் எலக்ட்ரானிக்ஸ் இணைப்புகளை உருவாக்குவதிலும், செடிகளின் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஈடுபடுகிறார்கள். இதனை மேலாண்மை செய்வதிலும், சந்தைப்படுத்துதல் பணியிலும் மேலாண்மை மாணவர்களும், கலைப் படிப்பு படித்தவர்களும் ஈடுபடுகிறார்கள். அறிவியல் படித்த மாணவர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இந்த முறையில் புதுமையான தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து இந்த நவீன விவசாயத்தை ஒரே இடத்தில் மேம்படுத்துகிறார்கள். இங்கு மாணவர்கள் விவசாயம் செய்கிறார்கள். ஏனென்று சொன்னால், விவசாய உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உணவுப்பொருள் உற்பத்தியாகிறது. மக்களுக்கு அது நல்வாழ்வை அளிக்கிறது. அதன் விளைவாக ஒரு தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் வரும் வருமானத்தை விட பன்மடங்கு சம்பாதிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.
இந்த பயணத்தின் முடிவில் அனைத்து விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கும் இதைப்பற்றிய அறிக்கையை
அனுப்பியும், நேரடியாகச் சென்றும் இதைப்பற்றிய விழிப்புணர்வை ஊட்டி, இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்க வைத்தோம். 
நமது இலட்சியம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வைக் கண்டுபிடிப்பதில் இருந்தால், நமது கல்வி மற்றும் ஆராய்ச்சியின் பலன் நமது வருங்கால சந்ததிகளுக்கு சுத்தமான காற்று, சுற்றப்புறச் சூழல், நீர், உணவைக் கொடுப்பதில் நீடித்து நிலைக்கும். அறிவியல் ஆராய்ச்சி தொழில்நுட்பங்களைச் சரியாக விவசாயத்தில் செயல்படுத்துவதின் மூலம் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு கிடைக்கும் நிலையை நாம் எய்த வேண்டும். 
உங்கள் கனவுகளை, இலட்சியங்களைப் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்
- vponraj@gmail.com
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com